தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 12
15.05.2020 மாலை 5.00 மணிக்குச் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிரலாளர் முனைவர் இரா. அகிலன் அவர்கள் “சங்க இலக்கியத் தொழில்நுட்பக் கருவிகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், சங்க இலக்கியத்திற்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் கருவிகள், அவற்றின் செயல்முறைகள், அக்கருவிகள் செயலாற்றுவதற்கான பொருண்மைகள் (Content) என்பது குறித்துப் பொழிவாற்றினார்.
மொழியை அடிப்படையாகக் கொண்டு மனிதனும் கணினியும் ஊடாடுவது மொழித் தொழில்நுட்பம் என்றும் இதற்குச் செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கியவியல் புலமை, மொழியியல், கணினியியல், தொழில்நுட்பவியல் போன்ற துறைசார் பங்களிப்புகள் இன்றியமையாதவை என்றும் புலப்படுத்தினார்.
குறியீடு (Annotated), குறியீடில்லாத் தரவகம் (Unannotated corpus) என்னும் இருவகைத் தரவகங்கள், தரவகங்களை உருவாக்கி வரும் நிறுவனங்கள், மூலபாடங்கள், சந்திபிரித்த பாடங்கள், சொற்கள் பிரித்த பாடங்கள் என மூன்று நிலையில் தரவுகள் உருவாக்குதல் குறித்தும் விளக்கினார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழித் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ள இணையவழி உ.வே.சா. செம்மொழித் தரவகம், அதில் பயன்படுத்துகின்ற தரவுகள்வழி மற்றும் விதிகள்வழி கருவிகள் உருவாக்கம் என்னும் சொல் பகுப்பு முறைகள், இணையவழியாகக் கிடைக்கும் சில சங்க இலக்கியம் சார்ந்த தரவுகள் போன்றவை குறித்தும் புலப்படுத்தினார்.
நிகழ்வின் முன்னதாக இணையதளம், சமூக ஊடகங்கள், வலைதளம், தானியங்கிப் பொறி அல்லது பணம்வழங்கி (ATM), வங்கிகள், திறன்பேசி போன்ற இயந்திரக் கருவிகளைப் புழங்கும்பொழுது கூடுமான வரையில் இடைமுக மொழியாக (Interface Language) தமிழ்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையையும் வைத்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment