தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 9
12.05.2020 மாலை 5.00 மணிக்கு இலண்டன் (UK) தமிழ்த்துறைத் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சிவாப்பிள்ளை அவர்கள் “கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், இலண்டனின் கோவென்றி, வட ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் கற்பித்தல் பள்ளிகள் செயலாற்றும் விதத்தை வெளிப்படுத்தினார்.
ஐக்கிய, கனடா, ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்றலைத் தூண்டுவதற்கும், தரப்படுத்துவதற்கும் ஏதுவாகப் பிரித்தானியத் தமிழ்த் தேர்வுவாரியத்திற்கு 2018 முதல் தமிழ்ப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதைப் பெருமைப்படுத்தினார்.
அனைத்து நாட்டிற்குமான ஒரே பாடத்திட்டம் என்பது சாத்தியமற்றது என்றும், தமிழகத்தைவிடப் பண்பாடு, உடை, பழக்கவழக்கங்கள், கருத்தாக்கங்கள், அரசியல், சமூகநிலை போன்றவற்றில் அயலகங்கள் மாற்றம் கொண்டுள்ளன என்றும் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டம் உருவாக்குதல் தேவையென்றும் புலப்படுத்தினார்.
பாட்டி வடை சுட்ட கதை, குரங்கு அப்பம் திருடிய கதை போன்றவை ஏமாற்றுக் கதைகளின் வரிசையில் அமைவதால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதையும், இவற்றைக் கற்பிக்கும் வழிமுறையில் புதிய மாற்றங்கள் நிகழ வேண்டியதையும், இலண்டனில் தமிழை இரண்டாம் மொழியாக, எளிமையாகக் கற்பிக்க ‘வாண்டு’ செயலியின் பங்கு போன்றனவற்றையும் சுட்டினார்.
புதிய கற்றல்-கற்பித்தலில் மாணவர்களுக்குச் சுய சிந்தனை, ஆற்றல், ஆக்கத்திறன், மதிப்பீடு போன்றனவற்றை வழங்குதல், மின்வழிக் கதைசொல்லல், மனப்பாடக் கல்விமுறையை விடுத்துப் பொருள்புரிந்த கற்றலை மேம்படுத்துதல், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மொழி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை முழுமையாகப் பின்பற்றுதல் மற்றும் மாறுதல், உலகத் தமிழர்கள் தமது தாய்மொழி நாடான தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருத்தல் என எடுத்துரைத்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 45-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment