/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, May 14, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் கணினித்தமிழ் உரை


தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 11
14.05.2020 மாலை 5.00 மணிக்குச் சென்னை, அண்ணா பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் மாலா நேரு அவர்கள் “செயற்கை நுண்ணறிவு (NLP)” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கைமொழி ஆய்வு ஆகியவற்றின் தேவை, உருவாக்கம், பயன்பாடு, எதிர்காலம் குறித்துப் பொழிவாற்றினார்.
செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவைப் போன்றது; சூழலுக்குத் தக்கவாறு பயனரின் மனப்போக்கிற்கு ஏற்பத் தன்னுடைய அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்னும் இலக்கைக் கொண்டுள்ளது.

இயந்திரங்கள், மனிதனைப் போன்ற சிந்திக்கும் ஆற்றல் பெறவில்லை என்றாலும்கூடத் தனக்குள் இருக்கும் கட்டளைகளைக் கொண்டு மனிதர்களுக்குத் தேவைப்படும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பது செயற்கை நுண்ணறிவியலின் முதன்மைக் கொள்கை.
சமூகவியல், மெய்யியல் (philosophy), உளவியல், நரம்பியல், உயிரியல், கணினி அறிவியல், கணிதவியல் போன்ற துறைசார் பங்களிப்புகள் இருந்தால் மட்டுமே செயற்கை நுண்ணறிவியல் சாத்தியம்.
காணொளி விளையாடல்களில் (Games) சிறார்களின் கவனத்தை ஈர்க்கும் செயற்கை நுண்ணறிவு ஆளுமை. மற்றும் மருத்துவம், இயந்திரவியல், நரம்பியல், திரைத்துறை மற்றும் அசைவூட்டவியல், இராணுவம், மனிந்திரன் (Robotic) உருவாக்கம் போன்ற துறைகளில் மிகுதியான பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவின் நன்மை இன்னல்கள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்கள் வழங்குகின்ற செயற்கை நுண்ணறிவிகள் (Chat box) என்னும் உட்கூறுகளைத் தாங்கி உரையாற்றினார்.

இயற்கைமொழி ஆய்வு, அதில் செயற்கை நுண்ணறிவு இணைந்து செயலாற்றும் விதம், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், இயற்கைமொழி ஆய்வின் குறிக்கோள், படிநிலைகள், எதிர்காலத்தில் இன்னும் எட்டவேண்டிய இலக்குகள் போன்றன குறித்தும் தெளிவாக்கினார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments: