தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 5
08.05.2020 மாலை 5.00 மணிக்குச் சிங்கப்பூர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறிஞர் திரு. பாலா அவர்கள் “தமிழ் விக்கிப்பீடியா” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் விக்கிப்பீடியா வழங்கும் பல்வகை அறிவுத் தொகுப்புகளான விக்சனரி, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்கிப்பயணம், விக்கிசெய்தி, விக்கிமேற்கோள், விக்கிப் பல்கலைக்கழகம், மீடியா விக்கி, விக்கிநூல்கள், பொதுவகம், விக்கியினங்கள், மேல்விக்கி என விக்கி சகோதரத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
விக்கியின் கொள்கைகளாகக் கட்டற்ற தன்மை, யாவரும் எளிதில் பங்களித்தல், நடுவுநிலைமை, இலாப நோக்கமின்மை போன்றவற்றைக் கூறினார்.
விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கம், மொழிபெயர்த்தல், பிழைதிருத்துதல், பல்லூடகம் (Multimedia) சேர்த்தல், விக்கிப்பீடியாவைப் பரவலாக்கம் செய்தல் போன்ற பங்களிப்புகளைத் தன்னார்வலர்கள் மேற்கொள்ளலாம் என்று விளக்கினார்.
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும்போது களஞ்சியத்திற்கு ஏற்ற எளிமையான நடை, மேற்கோள் சான்றுகள் தருதல், தற்சார்பின்மை, பிறமொழிச் சொற்கள் மற்றும் இலக்கணப் பிழை தவிர்த்தல், படித்தலுக்கேற்ற உட்தலைப்புகள் மற்றும் பத்திப் பிரிப்புகளை அமைத்தல், தொடர்புடைய கட்டுரைகள் அல்லது வெளி இணைப்புகளைச் சுட்டிக்காட்டுதல் போன்றனவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என வழிகாட்டினார்.
பின்பு சொற்பொழிவாளருக்கு ஏற்பட்ட இணையத் தொடர்பின்மையால் வாணி பிழைதிருத்தி உருவாக்குநர் திரு. ராஜாராமன் (எ) நீச்சல்காரன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு இணையம் வழியாகப் பயிற்சி அளித்தார்.
விக்கியில் தனிக்கணக்கைத் தொடங்கிப் புதிய கட்டுரைகளை எவ்வாறு எழுதுவது?, கட்டுரைகளில் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ளுதல், புதுமுகப் பயனர்கள் கட்டுரை எழுதும் பயிற்சிக் களமான மணல்தொட்டி, பிற பயனர்களுடன் கலந்துரையாடும் ஆலமரத்தடி என்னும் பகுதி, தன்னுடைய உரிமைக்குண்டான ஒளி, ஒலிக் கோப்புகளை விக்கிப்பீடியாவிற்கு வழங்கும்முறை போன்றவற்றைச் செயல்முறையாகப் பயிற்றுவித்தார்
இணையப் பொழிஞர்களின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என 55-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.