/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, September 29, 2015

தமிழ் இணைய வரலாறும் வளர்ச்சியும்


தமிழ் இணைய வரலாறும்        வளர்ச்சியும்

முன்னுரை
“கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்பது பழமொழி. இப் பழமொழிக்கேற்ப இன்று அறிவியலின் பரிணாமம் பல வழிகளில் வளர்ந்து வந்துள்ளன. காலத்தை வென்றவன் யார் என்றால் பதில்சொல்ல மனித இனம் எதுவுமே இல்லை. இயற்கை நம்மை வெற்றிக்கொண்டிருக்கிறது. காலத்தின் ஓடையில் நாம் கரைந்து வளர்ந்து வந்துள்ளோம். மனித இனம் ஒரு தொடர் போராட்டக் களத்திலிருந்து தன்னை மீட்டு எடுத்து வந்துகொண்டிருக்கிறது என்றால் அஃது உண்மையே.  தொடக்கத்தில் இயற்கையை நேசித்த மனித இனம் படிப்படியாக தன்னையும் தன் சுய இருப்பையும் வெளிக்காட்டிக்கொள்ள வளர்ச்சி என்ற போர்வையில் அறிவியல் தொழில்நுட்பங்களை தன்னோடு இணைத்துக்கொண்டது. விளைவு இன்று எதெற்கெடுத்தாலும் அறிவியல் அணுகுமுறைகள்.அதன பின்விளைவுதான் இன்று கணினி, இணையம்.

இணையம்
இணையம் என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும், நகரங்களிலும், நிறுவனங்களிலும் பரவியுள்ள வலையமைப்புகளை ஒன்றாக இணைக்கும் வலையமைப்பாகும். இதில் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் நாம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு அறிவுக்குவியல் என்றே நாம் சொல்லலாம்.

இணைய வரலாறு
1957ல் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை வெற்றிகரமாக
விண்ணில் ஏற்றி அழகு பார்த்ததுஉலகமே ருஷ்யாவைத் தலைமேல் வைத்துக் கொண்டாடியது. இஃது அமெரிக்காவிற்கு அறிவியல் ரீதியான மிகப்பெரிய பின்னடைவாகக் கருதபட்டது. இதன் விளைவு( எதிர்த்தவீட்டுக்காரிக்கு ஆம்பள பிள்ளைப் பிறந்தால் தா வீட்டுக்காரி வயித்தில குத்திக்காவாலம்- இது நம் பழமொழி)  அமெரிக்கா அரசு இதனைச் சாதரணமாக எடுத்துக்கொள்ளாமல் உலகமே வியந்து நம்மைக் கொண்டாடவேண்டும் என்ற எண்ணத்தில் ருஷ்யாவைவிட அறிவியல் துறையில் நாம் சாதிக்கவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தது. இறுதியில் அது வெற்றியும் கண்டது. அதுதான் இணையம் என்பதாகும். தொடக்கத்தில் பாதுகாப்பு பணிக்காகப் பயன்படுத்திவந்த கணினியை முதன் முதலில் இணைக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் காணுகின்றனர். அதற்காக  1960ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்கா அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கென்று  தனியாக ஒரு கணிப்பொறிகளின் வலையமைப்பு வேண்டுமென  முடிவு செய்கிறது.
      
அதனால் 1969- ல் இதை (Advance research project agency)என்ற பெயரில் இணையத்தைத் தோற்றுவிக்கிறது.  இதில் நான்கு கணிப்பொறியின் வலைப்பக்கத்தை இணைத்தது வெற்றிகரமாக தொடங்கியது. இது வளர்ச்சியடைந்து 1972- நவீன ஆராய்ச்சி பாதுகாப்புத் திட்டம் 37  ஹாஸ்ட் கணிப்பொறிக் கணினிகளின் வலைப்பக்கத்தை     இணைக்கிறது. மேலும் 1973- ஆம் ஆண்டு அமெரிக்காவை விட்டு இணையம் என்னும் அறிவுராணி அண்டைநாட்டுக்கு பயணம் ஆகின்றாள். 1984- ல் ஆயிரம் கணினிகளின் வலைப்பக்கம், 1987-ல் பத்தாயிரம், 1989- ல் ஒரு லட்சம், இன்று 1000 – கோடி கணினிகளை இணைத்து இன்று இணையம் ஒரு புது முயற்சியில் இயங்குகின்றன.
தமிழ் இணைய வரலாறு
     உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையப் பயன்பாடுகள் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அது தமிழ்மொழிக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் தமிழ்மொழி ஒரு மாநிலமொழியாக இருந்தது. பின்பு ஒருசில நாட்டுமொழியாக உருமாறின. இன்று இதன் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி. இதனைத்தான் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ்மொழி ஒரு குவளயத்தின் தாய்மொழி என்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் “ஒரு சமுதாயம் இன்றைய  பணிகளை, இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிக்கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க  முடியாதது”. இதனைக் கருத்தில்கொண்டுதான் தமிழ்மொழி இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துள்ளது.
இணையத்தில் தமிழ்
      இணையம் பயன்படுத்த முதலில் தமிழ் எழுத்துருக்கள் தேவை. தொடக்க காலங்களில் ஆங்கில குறியீட்டு முறையில் பயன்படுத்தி வந்த கணினிகள் தாய்மொழியில் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் உலகில் வாழும் தமிழ் அறிஞர்கள் பலர் முயற்சி எடுத்து வந்துள்ளனர். அவர்களில் கனடாவில் வசிக்கும் கலாநிதி சீனிவாசன் என்பவரால் 1984 – ல் ‘ஆதமி’, ’ஆதவின்’, ‘திருவின் என்ற தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.(தமிழ் விக்கிப்பீடியா) 1985 –ல் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த முனைவர் கு.கல்யாணசுந்தரம் உருவாக்கிய ‘மயிலை’,  அமெரிக்காவை சார்ந்த மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமி உருவாக்கிய ‘ அணங்கு’, பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் உருவாக்கிய ‘தமிழ் லேசர்’  பிறகு மலேசியாவைச் சார்ந்த முத்தெழிலன் எனபவரால் ‘அஞ்சல்’, ‘முரசு’ என்ற தமிழ் குறியீட்டுமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு பல்வேறு தமிழ் எழுத்துக் குறியீடுகள் தோன்றலாயின. இதனை அறிஞர் மனவை.முஸ்தபா, தம் ‘காலம்தேடும் தமிழ்’ என்னும் நூலில் “இந்தியாவில் உள்ள IBM நிறுவனம் பாரதி என்னும் தமிழ்ச்சொல் தொகுப்புச் சாதனைத்தைக் கண்டறிந்து வடிவமைத்தது. அதேபோன்று மலேசியாவிலுள்ள இரவீந்திரன் என்னும் தமிழ் இளைஞர் ‘துணைவன்’ என்னும் சொற்றொகுப்புச் சாதனத்தை கண்டறிந்துள்ளார். அதே நாட்டைச் சார்ந்த முத்தெழிலன்(முத்து நெடுமாறன்) என்னும் தமிழ் இளைஞர் ‘முரசு’ என்னும் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனத்தை வடிவமைத்துள்ளார். இவையனைத்தும் ஆங்கிலத்தோடு தமிழும் இயங்கு வண்ணம் அமைத்துள்ளனவாகும். இத் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனங்களில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தபோதிலும்  கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும் முயற்சியில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும்” என்கிறார்.
  இவ்வாறு பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் தோன்றியக் காலங்களில் தமிழ் இணையதளங்களும் தோன்றலாயின.  அவ்வாறு தோன்றிய இணையதளங்களில் முதலில் ஏற்றம் பெற்றது சிங்கப்பூர் என்று விக்கிப்பீடியா கூறுகிறது. அது கிட்டத்தட்ட என் ஆய்வின் படி உண்மையே. ஏனெனில் நான் இத்துறையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இயங்கி வருகின்றேன். அந்த அடிப்படையிலும் மேலும் பல தமிழ்க் கணினி அறிஞர்களின் கருத்துருவாக்கங்களின் அடிப்படையிலும் இதனை உண்மை என்று கூறுகின்றேன்.
      1995 ஆண்டில் சிங்கப்பூரைச் சார்ந்த அதிபர் ஓங்டாங் சாங் துவங்கிவைத்த (Journey words homenana nation – andhology of Singapore poetry lry 1984-1995) நான்கு தேசியமொழிக்கான கவிதை வலையகத்தில் தமிழ்மொழி ஏற்றம் பெறுகிறது. இதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் நா. கோவிந்தசாமி ஆவார். இவரே இணையத்தமிழ் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ் இணையதளங்கள்
தமிழில் தோன்றிய முதல் இணையதளம் “தமிழ் சினிமா”(www.tamilcinema) தான் என்று கூறுகின்றார் ஆசிரியர் மா.ஆண்டோபீட்டர். ஆனால் 1992-93 ஆண்டுகளில் எஸ்.டி.தமிழ் இலக்கிய மன்றம், “ஆ” என்ற ஒரு மின்னிதழை நடத்தியது என்று முனைவர் கு.கல்யாணசுந்தரம் குறிப்பிடுகிறார். எனவே தமிழில் தோன்றிய முதல் இணையதளம் எவையென்று இதுவரையும் தெரியவில்லை. அவரவர்களுக்குத் தெரிந்ததை முதலில் தோன்றியது என்று கூறி வருகின்றனர். நான் தேடிய மற்றும் தொகுத்த கருத்துக்கள் அடிப்படையில் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் குறிப்பிட்ட “ஆ” மின்னிதழே முதலில் தோன்றியதாகும்.
   ஆங்கிலத்தில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்குச் சொந்தக்காரர் www-வை அதாவது html- கண்டு பிடித்தTim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 என போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கீழ்கண்ட சுட்டி போய் அதை பார்க்கலாம்.
http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/WWW/TheProject.html
1990-
ல் இவ்வெளிப்  பக்கத்தை உருவாக்க உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் தான் பூமிப்பந்தை இணைய வலையில் சிக்கவைத்த ஜீனியஸ் சிலந்தியாய் இருந்திருப்பீர்கள். என்று pkr வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.(  சான்று-  http://pkp.blogspot.in/2008/06/blog-post_10.html)
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழ் இணையதளங்களை உருவாக்கி அதில் தமிழ் இலக்கியங்கள் , வரலாறு, கலை, பண்பாடுகளை எழுதத் தொடங்கினர்.

1995 ஆம் ஆண்டு
தமிழில் இணையப் பயன்பாடுகள் அதிக கவனம் செலுத்தப்பட்டக் காலக்கட்டத்தில் 1995 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து திரு.பாலாபிள்ளை அவர்களால் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது உலகில் இருக்கும் அனைத்துத் தமிழ் ஆர்வளர்களும் ஒன்றுகூடி கலந்து ஆலோசிக்கும் தளமாக விளங்கியுள்ளது. இக்காலக்கட்டத்தில். 1999 க்கு முன்பு சுமார் 300 தமிழ் இணையதளங்கள் இருந்துள்ளன என்று முனைவர் மு. பொன்னவைக்கோ தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும் எழுத்துரு பிரச்சனை தீராத விடயத்திலும் தமிழ் இலக்கிய நூல்களை இணையத்தில் இடும் பணியில் ஜெர்மன் நாட்டின் ‘கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் தாம்ஸ்மால்டன் எனபவர் செயல்பட்டுள்ளார். அடுத்து ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு சங்க இலக்கியங்களை இணையத்தில் வெளியிட்டவர் பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட், பேராசிரியர் தாம்ஸ் மால்டன் சென்னையில்  உள்ள ஆசியவியல் நிறுவனத்துன்  சேர்ந்து ‘பொங்கல் 2000’ என்ற திட்டத்தின் கீழ் தமிழ் இலக்கியங்களை இணையத்தில் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். 1995 –ஆம் ஆண்டின் தொடக்கத்தில்  சுவிட்சர்லாந்தின்  அறிவியலறிஞர் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவார்களால் 1998 –இல் ’மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம்’ (www.tamil.net/projectmadurai) தொடங்கப்பட்டது.  பேராசிரியர் வாசு.ரெங்கநாதன், ஹெரால்டு ஷிஃப்மேன் ஆகியோர் www.sas.upenn.edu என்ற வலைப்பக்கத்தை நிறுவி தமிழ் வழிக் கல்வியை அமெரிக்காவில் வழங்கி வருகின்றனர். இன்று இதுபோல பல்வேறு இணையதளங்களில் தமிழில் தொடங்கப்பட்டுச் செயல்படுத்தி வருகின்றனர். அரசு சார்ந்த இணையதளங்கள், பல்வேறு வகையான தனி நபர்கள் தமிழ் இணையதளங்கள்  தொடங்கப்பட்டு வருகிறது. இன்று சுமார் ஆயிரம் தமிழ் இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன.
                   
வலைப்பூக்கள்
வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் (Blog) என்கிறார்கள். இதன் மூலம் வெப்பிளாக் (Webblog) என்பதாகும். 17-12-1997-ல் ஜார்ன் பெர்கர் (John Barger) என்பவர்தான் வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார். இதன் பின்பு இதன் சுருக்க வடிவமான Blog எனும் பெயரை பீட்டர் மெர்ஹால்ஸ் (Peter Merholz) என்பவர் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது வலைப்பதிவின் பக்கப் பட்டையில் Webblog எனும் சொல் இரண்டாக உடைக்கப்பட்டு We blog என்று பிரித்துக் கையாளத் தொடங்கினார். இப்படியே வலைப்பூவிற்கு Blog எனும் பெயர் நிலைத்து விட்டது.

தமிழில் வலைப்(பதிவு)பூக்கள்
        இந்த blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் மற்றும் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினர். இன்று தமிழில் இதை வலைப்பூ அல்லது வலைப்பதிவு என்று அழைக்கின்றனர்.

வலைப்பூ சேவை

     வலைப்பூ வசதிக்கான சேவையை முதன்முதலாக 1996 ஆம் ஆண்டில் எக்ஸான்யா (Xanya) எனும் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டில் சுமார் 100 நாட்குறிப்பேடுகள் இடம் பெற்றன. அதன் பிறகு சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியைச் செய்து கொடுத்தன. இந்நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.காம் எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்து அதிகமான வலைப்பூக்களை அமைக்க வாய்ப்பளித்தது. இதன் மூலம் ஆங்கிலத்தில் பலர் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சியைக் கண்ட கூகுள் (Google) நிறுவனம் இந்நிறுவனத்தை விலைக்குப் பெற்றது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை அளிக்கப்பட்டது. 

முதல் தமிழ் வலைப்பூ

        தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும்,(www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

     கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.com/archive/21.html)

தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி

      தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கியது. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் வரையே தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் .துரையரசன் எழுதிய இணையமும் இனிய தமிழும்என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்து தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 12000-ஐத் தாண்டிவிட்டது. இது இன்னும் பன்மடங்காக உயரக் கூடும். 

எப்படி இலக்கிய வரலாற்றில் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம் என்கின்றோமோ அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக்கணினியுகக் காலம்அல்லதுதமிழ் இணையக் காலம்எனலாம்.புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. iஇதனால் பலவகைப்பட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு அளப்பரியாத் தொண்டினைச் செய்து வருகிறது எனலாம்.  இன்று இணையத்தில் எதை தேடினாலும் தேடிக்கொடுக்கும் தளம் முதலில் விக்கிப்பீடியா, அடுத்த நிலையில் இருப்பது  வலைப்பதிவுகளும் வலைப்பக்களும் என்பதை நம்மால் மறுக்கமுடியாது. அந்த அளவிற்கு இன்று வலைப்பதிவில் எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகம்.
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மின் ஊடகங்களில் வெளி வருகின்றன. இதற்காக உழைத்த உத்தமர்கள் பலர். அவர்களில் முனைவர் மு.பொன்னவைக்கோவும் ஒருவர் ஆவார். இவர் கணினி மற்றும் தமிழ் இணையதளங்களில், தொழில்நுட்பங்களில் ஆழமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். இவரின் அறிய முயற்சியால் 17-02-2001-ல் உருவானதுதான் தமிழ் இணையப் பல்கலைக்கழகம். (தற்பொழுது தமிழ் இணையக் கல்விக்கழகம் www.tamilvu.org).இவ் வலைப்பக்கத்தில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை இடம் பெற்றிருக்கிறது. மேலும் பல்வேறு தமிழ் அகராதிகள், உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ்க் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் முறையில் மின்னம்பலத்தில் வெளியிட்டு வருகிறது. மேலும் தமிழ் பாரம்பரிய கலை, பண்பாடுகள் மற்றும் விளையாட்டுக்களை ஒலி, ஒளி அமைப்பில் வெளியிட்டு வருகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழ் இணையக் கல்விக்கழகத்தை நிறுவுவதற்கு முழுநேரமாக உழைத்த முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களை தமிழ் இலக்கியம் இருக்கும் வரை பேசும். 
                      
தமிழ் விக்கிப்பீடியா

        இணையத்தில் தரவு தளங்களில் குறிப்பிட்டுச் சொல்வோமானால் அது விக்கப்பீடியாவாகத்தான் இருக்க முடியும்.  எந்த தலைப்புகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் தகவல்களை நமக்குக் கொடுக்கும் சிறந்த தளம் விக்கிப்பீடியாவாகும். இந்த தளம் இன்றைய ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் செய்தியாளர்களுக்கும் கிடைத்த செய்திப் புதையல் என்றே கூறலாம். 267 மொழிகளுக்கு மேல் இடம் பெற்றிருக்கும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் ஒன்று.

விக்கிப்பீடியா பொருள் விளக்கம்

      உலகிலுள்ள எந்தப் பொருள் குறித்தும் அறிந்து கொள்ள உதவும் ஒரு புத்தகம் என்சைக்ளோபிடியா என்கிற கலைக்களஞ்சியம். இந்தப் புத்தகத்தை இணைய வழியில் கொடுக்க முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த கணினி மென்பொருள் வல்லுனர் ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஜ்ஞ்சர் ஆகியோர் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் விக்கிபீடியா (Wikipedia). ஹவாய் மொழியில் விக்கி (Wiki) என்ற சொல்லுக்குவிரைவுஎன்ற பொருள். விரைவாக அறிவு சார்ந்த தகவல்களை பயன்பாட்டாளர்களுக்குத் தருவதால் இந்த இணைய என்சைக்ளோபீடியாவிற்குவிக்கிப்பீடியாஎனப் பெயரிட்டுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
 தோற்றம்
        2001 ஆம் ஆண்டில் இணையதளம் அமைப்பதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) மற்றும் தத்துவ ஆசிரியரான திரு.லாரி சாஞ்சர் (Larry Sanger) ஆகியோர் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். இந்த தளத்திற்கான இடத்திற்காக இணையத்தில் விக்கிப்பீடியாவின் பதிவை 2001 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று www.wikipedia.com என்ற இணைய முகவரியையும், ஜனவரி 13-ஆம் தேதியன்று www.wikipedia.org என்ற இணைய முகவரியையும் பதிவு செய்தனர். ஆங்கிலத்தில் முதலில் செயல்படத் தொடங்கிய இத்தளம் பிற மொழிகளிலும் செயல்படுத்த இலாப நோக்கமற்ற தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாக விக்கிப்பீடியாவிற்கென ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. விக்கிப்பீடியா அமைப்பானது 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சு மொழியிலும், மே மாதத்தில் ஜெர்மன் மொழியிலும் தனி விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. இத்துடன் வேற்று மொழிகளுக்கான விக்கிப்பீடியாவை உருவாக்கிக் கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டன. இவ்வாறு விருப்பமுடையவர்கள் அவரவர் மொழிகளுக்கேற்ப விக்கிப்பீடியாவை அமைத்துக் கொண்டனர்உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வரும் சுமார் 267 க்கும் மேற்பட்ட மொழிகளில் விக்கிப்பீடியா செயல்பட்டு வருகிறது.

        இந்த 267 மொழிகளிலான விக்கிப்பீடியாக்களில் தர வரிசையில் முதலில் ஆங்கிலம், அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரெஞ்சு, போலீஷ் (Polish), ஜப்பான், இத்தாலி, டச்சு, ஸ்பானிஷ், போர்ச்சுக்கல், ரஷ்யா, சுவிஸ், சீனா, நார்வே, பின்னிஷ் (Finnish), கட்டாலன் (Catalan), உக்ரேனியன் ஹங்கேரி, செக் (Czech) துர்கீஸ், ரோமானியன், எஸ்பரண்டோ (Esperanto) வோலாபக் (Volapuk), கொரியன், டேனிஷ் (Danish), இந்தோனேசியா, சுலோவக் (Slovak), அராபி, வியட்நாம் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org)
     தமிழ் மொழியில் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியில்மனித மேம்பாடுஎன்ற தலைப்புடன் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடங்கியவர் தனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்கிற கருத்து உள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இது ஒரு விளம்பரமாக இருந்ததால் அதை பிற்காலத்தில் ஒரு பயனர் நீக்கி விட்டார். இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் .மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) தமிழில் உருவாக்கியுள்ளார். இவையன்றி விக்கிப்பீடியாவும் அதன் பிற இணையத்திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ள மீடியா விக்கி என்னும் மென்பொருளின் அனைத்துப் பக்கங்களையும் அதற்குரிய இடைமுகத்துக்குத் தேவையான தகவல்களையும் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார். என்று தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

      இதனால் தமிழில் விக்கிப்பீடியாவின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வைக்குச் சென்றது. இன்று பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் முயற்சியால் 14000 க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு 63,437 -க்கும் அதிகமான கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியா அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில்  62     வது இடத்தில் உள்ளது. பிற இந்திய மொழிகளான இந்தி – 53 வது இடத்திலும், தெலுங்கு 69 வது இடத்திலும், வங்காளம்,  உருது, குஜராத்தி, கன்னடம் 108, பஞ்சாபி, பீகாரி, ஒரிசா, காஷ்மீர், சிந்தி, அஸ்ஸாமி போன்ற மொழிகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா தோன்றியதற்குப் பிறகு தோன்றிய பல மொழிகளிலான விக்கிப்பீடியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ் மொழியில் முன்னேற்றம் சற்று குறைவாகவே உள்ளது. இதனைப் போக்க தமிழர்கள் பலருக்கு இணைய அறிவும், தமிழ் தட்டச்சு செய்ய முடியாமையும் குறைபாடுகளாக உள்ளன. இது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். இதில் யார் வேண்டுமானாலும் தன்னார்வத்துடன் எந்த தலைப்பிலும் கட்டுரையை உருவாக்கலாம். முழுக்க முழுக்க இலவசமாக செயல்படும் தன்னார்வ நிறுவனமாகும்.
இதில் கட்டுரைகளின் உட்கருத்தைக் கொண்டு ஒன்பது முக்கியத் தலைப்புகளாகப் பிரித்து வரிசைப்படுத்தியுள்ளனர். அவை முறையே, தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமுகம்,  நபர்கள். மேலும் தமிழ் விக்கிப்பீடியாவில் 12 உட்தலைப்புகளையும் கொண்டு விளங்குகிறது. 
தமிழ் மரபு அறக்கட்டளை  (Tamil Heritage Foundation-www.tamilheritage.org/)
      வாழ்க்கையின் மரபுகளைத் தொகுத்து வெளியிடும் தரவுதளமாக இந்த தமிழ் மரபு அறக்கட்டளை விளங்குகிறது. காலத்தின் ஓட்டம் நெடுந்தொலைவுடையது. அதன் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், இன்றும் நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் மரபு பற்றிய எண்ணங்களை மக்களிடம் தக்க வைத்திருப்பதே ஆகும். மரபுகளை வாய்வழிச் சொல்லும் பழங்கதைகள், புராணக்கதைகள், சித்திரங்கள், ஓலைச்சுவடிகள், பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் காணமுடிகின்றது. இவைகளைப் பாதுகாக்கும் முயற்சியிலும் மீண்டும் மக்களிடம் இவற்றை அறிமுகப்படுத்தும் முனைப்புடனும் இந்த தமிழ்மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்மரபு அறக்கட்டளை உலகம் தழுவிய ஒரு அறக்கட்டளையாக விளங்குகிறது. பல்லாயிரம் ஆண்டு தொன்மையுள்ள தமிழ்மரபு இலக்கியம், கலைகள் எனப் பலவகைப்படுகிறது. இந்த மரபுச் செல்வங்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஏனைய புலம் பெயர் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் தமிழ்மரபு அறக்கட்டளை பழைய ஓலைச்சுவடிகளையும் அவற்றில் புதைந்துள்ள தமிழ் மரபுசார் வளங்களையும் பாதுகாத்து உலக மக்களுக்கு வழங்கும் பணியையும் செய்து வருகின்றது.
       இச்செயல்பாடுகள் கணினி சார் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை இலகுவாக பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. ஒலி, ஒளி எழுத்து வடிவ முறைகளில் அவற்றை இலக்கப் பதிவாக்கி வெளியிட்டு வருகிறது. இன்றுள்ள இணையவசதியால் இக்கருத்து, காட்சிப் படங்களாக இருப்பதால் உலகத்தாரோடு மிக இலகுவாகப் பகிர்ந்துக்கொள்ள முடிகிறது.

உருவாக்கம்
    “
ஒரு முறை பின்பனிக்காலப் பொழுதில் நானும் முனைவர். கல்யாணந்தரமும் (மதுரைத் திட்டம்) சுபாஷினி ட்ரெம்மல் மரபு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். புதிதாக மலர்ந்திருக்கும் இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்ப் பூங்கா ஒன்று அமைக்க திட்டமிட்டோம். அதுவொரு பிரமாண்டமான திட்டம். தமிழின் அனைத்து மரபு செல்வங்களையும் இலக்க வடிவில் கொண்டுவந்து விடுவது என்பது திட்டம் (Digitization of Tamil Heritage Materials) இப்படிச் செய்யும் போது ஒரு சொடுக்கில் தமிழ் செல்வங்களை நுகர விரும்புபவர்களுக்கு அளித்த விடா முயற்சி. அஃது ஒரு கனவு. மெகா கனவு சந்திரனுக்கு இலக்கு வைத்தால்தான் வீட்டுக் கூரையாவது ஏறமுடியும் என்பது ஒரு கணக்கு. நாங்கள் இன்னும் சந்திரனில் கால் வைக்கவில்லை, கூரை ஏறி இருக்கிறோம், எல்லோரும் தோள் கொடுத்தால் ஒரு நாள் சந்திரனில் கால் வைக்கலாம்.”
என்று தமிழ் மரபு அறக்கட்டளை 2001-ல் தோன்றிய நிகழ்வை அதன் தலைவர் முனைவர். .கண்ணன் குறிப்பிட்டுள்ளார். 
தமிழ் எழுத்துரு மாற்றிகள்

       கணிப்பொறியும் இணையமும் அறிமுகமானக் காலச்சூழலில் உலகில் இருக்கும் தமிழ் அன்பர்கள் ஏதாவதொரு எழுத்துருவில் கருத்தைப் பதிவு செய்ய தொடங்கினார்கள். அன்று அஃது அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் பலர் ஒன்று கூடிக் கொண்டாடியுள்ளனர். நாளடைவில்  பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் நண்பர்கள் அவர்களுக்கு விருப்பப்பட்ட எழுத்துருவில் எழுதத் தொடங்கினர். இவ்வாறு எழுதியவர்கள் அவர்களுக்குள்ளேயே கருத்தைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு உலக நாடுகளில் இருக்கும் பலரும் அவர்களுக்குத் தெரிந்த பலவகையான எழுத்துருவை உருவாக்கினர். இது சுமார் 1250 எழுத்துருவாக இன்று உள்ளன. 

எழுத்துருப் பிரச்சனை
       தொடக்கத்தில் தமிழ்மொழியில் பலவகையான எழுத்துரு தோன்றுவது தமிழுக்குப் பெருமையாக இருந்தது. அதுவே சில வேளையில் சிக்கலையும் தந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கச்சமங்கலம் என்னும் சிற்றூரில் பிரபாகரன் என்பவர் கணினியில் தட்டச்சு செய்து அதனை கலிபோர்னியாவில் வசிக்கும் நண்பருக்கு அனுப்புகிறார். அங்கு அவர் கணினியின் முன் அமர்ந்து நண்பர் அனுப்பிய மின் அஞ்சலை ஆர்வத்துடன் பார்க்கிறார். செய்தி அனைத்தும் கோடு கோடாக, கட்டம் கட்டமாக என்னவென்று திகைக்கின்றார; என்ன சிக்கல் என்றால் கச்சமங்கலத்திலிருந்து அனுப்பியச் தமிழ்ச் செய்தியானது ஒரு வகை உள்ளூர் எழுத்துரு (எடுத்துக்காட்டு. இளங்கோ, கம்பன்) இந்த எழுத்துரு கலிபோர்னிய நண்பர் கணிப்பொறியில் இல்லை. அவர் வேறொரு எழுத்துருவைப் பயன்படுத்துகிறார். இப்போது கலிபோர்னியா நண்பர் ஒரு செய்தியை பிரபாகரனுக்கு அனுப்புகிறார். இவர் தன் கணிப்பானைத் திறந்து பார்த்தால் அவருக்குத் தோன்றியது கட்டம் கட்டமாக, கோடு கோடாகத் தெரிகிறது. 
     இதற்குத் தீர்வு என்ன என்று யோசிக்கும் போதுதான் உலகத்திற்கெல்லாம் பொதுவான எழுத்துருவை நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே இதற்குத் தீர்வு என்று இருவரும் முடிவிற்கு வருகின்றனர். சரி இனி இருவரும் ஒரே எழுத்துருவில் கதைக்காலம், எழுதலாம். இதற்கு முன் அனுப்பிய வந்த செய்திகளைக் காண என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த வினா இருவருக்கும் தோன்றுகிறது. இதுபோன்று உலகில் இருக்கும் அனைத்துத் தமிழுருக்கும் தோன்றுகிறது. விளைவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு பொதுவான எழுத்துரு தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை (Unicode Font) உருவாக்குகின்றனர். இந்த ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு உலகம் முழுவதும் தமிழுக்கான எழுத்துரு பிரச்சனை ஓரளவு தீர்ந்தது. 
 அந்த வகையில் தமிழ் எழுத்துரு மாற்றிகளாக பொங்குதமிழ், (www.suratha.com/reader.htm) அதியமான், (www.higopi.com/adhiyaman/)சிலம்பம், இஸ்லாமியக் கல்வி,( www.islamkalvi.com) என்,எச்,எம், கண்டுபிடி (http://kandupidi.com/converter/) எழுதி (http://www.tamillexicon.com/uc/bamini-unicode) போன்றவையாகும்.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் - http://www.infitt.com/)

         தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. 
தோற்றமும் பெயர் உருவாக்கமும்

       பேராசிரியர் மு,பொன்னவைக்கோ உத்தமம் - உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்று தமிழுலும், Infitt – International Fourm For Information Technology in Tamil என்று ஆங்கிலத்தில் பெயரிட்டதாக  அவர் எழுதிய இணையத் தமிழ் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்.60) தமிழ் இணையம் 2000 மாநாடு இலங்கையில் போர் காரணமாக சிங்கப்பூரில் ஜுலை மாதம் 22-லிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் 23-07-2000 அன்று உத்தமம் தோற்றம் பெற்றது.
மாநாடுகள்
    இவ்வாறாக இதுவரை 14-தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக
1. 1997 -
சிங்கப்பூர்
2. 1999 -
சென்னை, தமிழ்நாடு
3. 2000 -
சிங்கப்பூர் 
4. 2001 -
கோலாலம்பூர் (மலேசியா) 
5. 2002 -
சான் பிரான்சிஸ்கோ, கலியோர்னியா, 
6. 2003 -
சென்னை, தமிழ்நாடு
7. 2004 -
சிங்கப்பூர், 
8. 2009 -
கொலோன் பல்கலைக்கழகம் ஜெர்மனி, 
9. 2010 -
கோயம்புத்தூர், தமிழ்நாடு
10. 2011 – 
சான் பிரான்ஸ் அமெரிக்கா
11. 2012 சிதம்பரம்
12. 2013 மலேசியா
13. 2014  புதுச்சேரி
14. 2015 சிங்கப்பூர்
15. 2016 திண்டுக்கல்( நடைபெற உள்ளது)
இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இம்மாநாடுகளில்  வழியாக தமிழ்க்கணிமைக்கான வளர்ச்சித்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 
முடிவுரை
பாதுகாபிற்காகத் தொடங்கபட்ட  இணையம் இன்று பல நாட்டுப் பண்பாடுகளைக் காக்கும் பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சொல்லுக்கு இன்று இணையம் மூலம் நாம் பொருள் உணர்ந்து கொண்டோம். தமிழில் இணையம் தோற்றம் முதல் அது வளர்ந்த விதம் அதனால் நாம் தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழ் விக்கிப்பீடியா உத்தமம் என தமிழ் இணையப் பரப்பு விரிந்தாலும் நாம் இந்த இணையத்தளப் பரப்பில் கடக்க வேண்டியப் பயணம் வெகுதூரம் உள்ளன அதில் கணிப்பொறியே நாம் பேசினால்  எழுதவேண்டும், ரோபோக்கள் நாம் நினைப்பதை நிறைவேற்ற வேண்டும். அனைத்து நம் தாய்மொழியில் இருக்கவேண்டும். அதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம் இல்லை. மிக விரைவில். 
ஆய்வுக் கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள் மற்றும் இணையதளங்கள்.
1.   முனைவர் மு.பொன்னவைக்கோ, இணையத்தமிழ் வரலாறு, பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு, 2010.
2.   வா.செ.குழந்தைசாமி, அறிவியல் தமிழ், பாரதி பாதிப்பகம், சென்னை.
3.   முனைவர் துரை.மணிகண்டன், இணையமும் தமிழும், நல்நிலம் பதிப்பகம், சென்னை. 2007.
4.   முனைவர் துரை.மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், கவுதம் பதிப்பகம், சென்னை, 2010.
5.   முனைவர் துரை.மணிகண்டன், இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள், கவுதம் பதிப்பகம், சென்னை, 2011
6.   முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி, தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், கச்சமங்கலம், தோகூர் வழி, தஞ்சை மாவட்டம். 2012.
7.    தேனி.எம்.சுப்பிரமணி, தமிழ் விக்கிப்பீடியா, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010.
8.    முனைவர் க.துரையரசன், இணையமும் இனிய தமிழும், இசை பதிப்பகம், கும்பகோணம், 2009.
9.   முரசு நெடுமாறன், மலேசியத் தமிழுரும் தமிழும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007.
13.  www.tamilvu.org

இக்கட்டுரை எமது முயற்சியால் பல ஆதாரத் தகவல்களுடன் எழுதப்பட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் 2015” க்காக எழுதப்பட்டது என்று உறுதியளிக்கின்றேன். மேலும் இந்தப் படைப்பு இதற்குமுன்பு எதிலும் வெளியிடபடவில்லை என்று உறுதியளிக்கின்றேன்.
இப்போட்டிக்கான முடிவு வெளிவரும் வரை வேறு எதிலும் வெளியிடமாட்டேன் என்று உறுதியளிக்கின்றேன்.


































0 comments: