/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, July 20, 2015

முனைவர் மு. இளங்கோவன்

முனைவர் மு. இளங்கோவன் … தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி என்று கணினித்தமிழ் உலகில் அனைவராலும் பாராட்டப்படுகிற ஒரு இளம் தமிழாய்வாளர். மாணவப் பருவத்திலேயே மாணவராற்றுப்படை என்ற இலக்கியத்தைப் படைத்தவர். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். திருப்பனந்தாள் காசி மடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் தமிழில் பி.லிட்.,(1987-90) முதுகலை (1990-92) பட்டங்களையும் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் (1992-93) , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (1993-96) பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்கும் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பிலும் ஆய்வை மேற்கொண்டார். பின்னர் ஓராண்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தமிழியல் ஆவணம்’ என்னும் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றினார். 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ‘தமிழிசைக் கலைக்களஞ்சியம்’ என்னும் திட்டத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் கலவை ஆதிபராசக்தி கலைக்கல்லூரியில் 1999 முதல் 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2005-இல் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுவை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட தமிழாய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அயலகத் தமிழறிஞர்கள் ‘ ‘ இணையம் கற்போம்’, ‘ நாட்டுப்புறவியல்’ ‘செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்’ போன்ற பல சிறப்பான நூல்கள் இவற்றில் அடங்கும். நாட்டுப்புறவியல் ஆய்வுத்துறையில் சிறப்பாகப் பங்களித்துள்ள இவர், நாட்டுப்புறக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார். கேரள, ஈழத்து நாட்டுப்புறப் பாடல்கள்பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ‘ இளம் தமிழ் அறிஞர்’ விருதை (2006-2007 ஆண்டுக்குரியது) 2010 ஆம் ஆண்டு பெற்றார். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும்போதே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ்த் தகவல் கருவூலம்’ என்ற ஒரு இணையதளத்தையும், வேர்ட்பிரஸ்.காம் என்ற இணையதளத்தையும், மு. இளங்கோவன் என்ற பெயரிலான வலைப்பூ ஒன்றையும் உருவாக்கித் தொடர்ந்து, தமிழ், தமிழர் பற்றிய அரிய பல செய்திகளைத் தமிழுலகத்திற்கு அளித்துவருகிறார். உலக, தேசிய, தமிழக அளவிலான தமிழ் அறிஞர்கள் பலர்பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் அளித்துவருகிறார். திருச்சி வானொலிநிலையத்தின் வழியே தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்பற்றிய இவரது சிறப்பு இலக்கியப் பேருரைகள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன. தனது பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகம் , பாரதிதாசன் உயராய்வு மையம், புலவர் ந. சுந்தரேசனார் நூலகம் ஆகியவற்றை நிறுவி நடத்திவருகிறார். சிங்கப்பூர், மலேசியா, இலண்டன் போன்ற பல அயல்நாடுகளுக்குக் கல்விப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கணினியில் வலைப்பூ உருவாக்கம்பற்றிப் பயிலரங்குகள் பலவற்றைத் தொடர்ந்து நடத்திவருகிறார். மேலதிக விவரங்களுக்கு - http://muelangovan.blogspot.in/
https://ta.wikipedia.org/s/662 http://www.muelangovan.com/https://muelangovan.wordpress.com/ . மின்னஞ்சல் முகவரி muelangovan@gmail.com
தொலைபேசி - 9442029053

நன்றி பேராசிரியர் தெய்வசுந்தரம்.

2 comments:

  • அணில் says:
    October 31, 2015 at 1:07 PM

    கணித்தமிழ் முன்னோடி ஆர்வலர்களைப் பற்றி உங்கள் வலைப்பூவில் எழுதியிருப்பதை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. எனவேதான் இவரைப் பற்றி எழுத உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். கணித்தமிழை குறித்து அறிந்து கொள்ள முனையும் எவரும் இவரை அறியாது கடந்துவிட முடியாது. புதுவையில் MCA பயிலும்போது இவரைப்பற்றி நண்பர்கள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறேன். எளிதில் அணுகக்கூடிய அறிஞர். இவரோடு தொலைபேசியில் உரையாடிருக்கிறேன். உங்களை பதிவர் விழாவில் நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

  • மணிவானதி says:
    November 1, 2015 at 3:41 PM

    மிக்க நன்றிங்க திரு. ராஜ்குமார்