பேரா. இரா. சீனிவாசன் … எனது தொடரில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த இளம் ஆய்வாளர் . ஆனால் ஆய்வில் மிகுந்த முதிர்ச்சி உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத் துறையின் உருவாக்கம். தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். எழுத்தாளர் ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்த சிறுகதைகள்பற்றிய ஆய்வை ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக மேற்கொண்டார். தனது முனைவர் பட்டத்திற்கு ‘ தமிழ் இலக்கண மரபுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். நாட்டார் வழக்காற்றியல் பட்டயப் படிப்புக்காக ‘ மண்சிற்பங்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆய்வேடு ஒன்றையும் அளித்துள்ளார். பின்னர் திருத்தணி அரசுக் கல்லூரியிலும் தற்போது சென்னை மாநிலக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். நாட்டார் வழக்காற்றியல், இலக்கணம், இலக்கியம், தெருக்கூத்து போன்ற பல துறைகளில் தனது பங்களிப்புகளை அளித்துவருகிறார். தமிழ் இலக்கண மரபுகள்பற்றிப் பல சிறப்பான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பயிற்சிபெற்றுள்ளார். ‘பன்முக நோக்கில் திரௌபதி’ என்னும் ஆய்வைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராய்வுக்கான நிதியுதவியைப் பெற்று, முழுமையாக முடித்துள்ளார். இந்த ஆய்வுக்காக இவர் வடநாடுகளில் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களிலும் ஆந்திராவிலும் பரந்த அளவில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளார். பழங்குடி மக்களின் வாழ்வைப்பற்றிய ஆய்விலும் பேராசிரியருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இருளர் பழங்குடி மக்கள், ஏலகிரியில் உள்ள மலையாளப் பழங்குடி மக்கள், தேக்கடி மலையடிவாரத்தில் உள்ள பழியர் பழங்குடி மக்கள் ஆகியோரைப்பற்றிக் கள ஆய்வு அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாரதம், இராமாயணம் ஆகியவற்றில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றும் சொற்பொழிவாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து விழாக்கள் எடுத்துவருகிறார். அவர்களுக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கி ஊக்குவிக்கிறார். இவருடைய மிகப் பெரிய சாதனை, ‘ நல்லாப்பிள்ளை பாரதத்தைப்’ பதிப்பித்துள்ளதாகும். இந்நூல் தமிழிலேயே அளவில் மிகப் பெரியதாகும். பதினெட்டு பருவங்களைக்கொண்ட இந்நூலைச் சந்தி பிரித்தும், பொருளடைவு கொடுத்தும் இவர் பதிப்பித்துள்ளது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய அரும்பணியாகும். இரண்டு பாகங்களாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்தப் பெரும்பணிக்காக இவருக்குக் கும்மிடிப்பூண்டி தமிழ்ச்சோலை என்ற இலக்கிய அமைப்பு ‘பாரதச் சுடர்’ என்ற விருதை அளித்துள்ளது. மேலும் ‘ தமிழ் இலக்கண மரபுகள்’, ‘ ஐந்திலக்கணம்’, ‘தமிழகத்தில் பாரதம் – வரலாறும் கதையாடலும்’, ‘மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்’, ‘தொல்காப்பியச் செய்யுளியல் – புலநெறி இலக்கிய வழக்கு’, ‘சுப்பிரமணிய ஐயரின் பாரத நாடகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘புதிய பனுவல்’ என்ற ஒரு மிகச் சிறந்த ஆய்வு இதழைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார். சிங்கப்பூர், மலேசிய ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ள கருத்தரங்குகள், பயிரலங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தற்போது பாரதக் கதைகள் முழுவதையும் இசைப்பாடல்களாகப் பாடியுள்ள ‘மகாபாரதம் நாடகம்’, வசன வடிவத்தில் 19- ஆம் நூற்றாண்டில் த. சண்முகக்கவிராயர் இயற்றிய ‘ பாரத வசன காவியம் ‘ ஆகிய நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். நான் பேரா. இரா. சீனிவாசனிடம் நேரடியாகத் தொடர்பு உடையவன். அவருடைய ஆய்வுத் திறனையும் அயராத உழைப்பையும் நேரில் பார்த்து வருபவன். தமிழாய்வில் நம்பிக்கை நட்சத்திரங்களாகப் பல இளம் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்குப் பேரா. இரா. சீனிவாசன் ஒரு எடுத்துக்காட்டு. அவர் இதுவரை செய்துள்ள பணிகளுக்குப் பாராட்டுதல்களும் மேலும் அவர் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துகளும்.இவருடைய மின்னஞ்சல் முகவரி - panuval@gmail.com
நன்றி முனைவர் தெய்வசுந்தரம்.
0 comments:
Post a Comment