/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, December 14, 2022

அரசியல் பேசாத! வரலாற்றுச் சிறப்புமிக்க காசி தமிழ்ச்சங்கம்

 

இந்திய  அரசாங்கமும் உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து நவம்பர் 17 முதல் டிசம்பர் 17 வரை ஒரு மாதம் காலம் நடத்தும் காசி தமிழ்ச்சங்க நிகழ்வில் ஆறாவது குழுவில் 216 பேர் 29-11-2022 அன்று செவ்வாய் காலை 9 – மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து பயணித்தோம்.  உத்தரபிரதேச நகரம் செல்லும் வழியில் விஜயவாடா, ஜபல்பூர், நாக்பூர் என அனைத்து தொடர்வண்டி நிலையங்களிலும் தமிழர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கினார்கள். இரண்டு பகல் ஓர் இரவு என்று ஒன்றரை நாள் பயணம் 30-11-2022 அன்று இரவு வாரனாசியில் தீனதயாள் உபாத்தியாய  தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றோம். உள்ளே நுழைந்தபோது அந்த மாவட்ட ஆட்சித்தலைவர், எஸ்.பி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தது எங்கள் ஒவ்வொருவரையும் பிரமிக்க வைத்தது.


அன்று இரவு காசியில் நட்சத்திர விடுதியில் அறைக்கு இருவர் மூலம் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

1-12-2022 அன்று காலையில் காலை காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று பக்தியுடன் வழிபாடு செய்தோன். அங்கு எங்களுக்கு நெறியாளராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வெங்கடரமண கணபாடி அவர்கள் ஆவர். இவர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் ஆவார். மேலும் அந்த கோயிலில் தலைமை அதிகாரி சுனில் குமார் வர்மாவும் கோயிலின் அமைப்பு, கட்டுமானம், திட்டமிடல் குறித்து எங்களுக்கு விவரித்தார்.



 இதை அடுத்து காரைக்குடி நகரத்தார் நிர்வகிக்கும் காசி விசாலாட்சி கோயில், அன்னபூரணி கோயில், அம்பாள் தரிசனம் செய்தோம். பிறகு காசி பைரவரை வழிபாடு,  காலபைரவர் வழிபாடு முடிந்தவுடன்


 காசிவிஸ்வநாதர் ஆலயத்திலேயே அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மணிக் கர்ணிகா மற்றும் அரிச்சந்திரன் காடு போன்ற இடங்களையும் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

அன்று சொகுசு படகுமூலம் மாலை சிற்றுண்டியுடன்  கங்கை மாதா ஆரத்தி நிகழ்வை பார்க்கின்ற புண்ணியத்தை இந்தப் பயணம் எங்கள் குழுவினருக்கு வழங்கியது. 




அனைவருடைய மனதிலும் மகிழ்ச்சியையும் பல தலைமுறைகளாக இதை நாம் காண்போமா? காண்போமா? காசிக்கு செல்வோமா? என்று ஏங்கிக் கிடந்த பலருக்குச் சொல்லமுடியாத இன்பம்.

அடுத்து நாள் 2-12- 2002 காலை கங்கையில் நீராட  அனைவரும் சென்றோம். காலையில் நீராடி விட்டு வருகின்ற வழியில் முண்டாசுக் கவிஞன் பாரதியின் வீட்டை நாங்கள் ஒரு நிமிடம் நின்று ரசித்தோம். 


அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம்  என்ற இந்த இரண்டையும் பார்த்துவிட்டுப் காலை 11 மணிக்குப்  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் கலந்துகொண்டோம்.

பயணம் செய்த 216  பெயர்களில் 15 பேரைத் தேர்வு செய்து, அவர்களை உரை வழங்க அழைத்தார்கள். அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம்  அரசு கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியாற்றிவரும், இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள்        



 இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி என்ற தலைப்பில் உரை வழங்கினார்.  உண்மையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உரை வழங்கியதை நான் பூர்வ ஜென்ம புண்ணியமாகவே கருதுகின்றேன்.

அதனைத் தொடரந்து  இந்திய மத்திய கல்வி இணை அமைச்சர் மாண்புமிகு சுபாஷ் சர்க்கார் அவர்கள் தமிழின் பெருமைகளை உணர்வுபூர்வமாக மேடையில் வழங்கினார். குறிப்பாக சோழ சாம்ராஜியத்தையும், தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பையும் தொடர்ந்து கல்லணையை  கட்டிய கரிகாலன் அரசனின் சிறப்பையும் அணையின் அமைப்பு முறைகளையும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டிட அழகையும், 

தமிழுக்கும் வாரணாசிக்கும் இடையே இருக்கும் பழங்கால தொப்புள்கொடி உறைவுயும்,  கலாச்சார பண்பாடுகளையும் மிகத் தெளிவாக தனது உரையில் முன்வைத்தார். தொடர்ந்து அருகில் இருக்கின்ற புத்த விகாரம் சென்று தரிசனம் செய்தோம் சாரநாத் கல்தூணைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்வை முடித்தவுடன் மாலை பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



இந்தக் கலை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சார்ந்த வளப்பக்குடி சங்கர் அவர்கள் நாட்டுப்புற பாடல் பாடி அசத்தினார். எங்களுக்கு அங்கு தமிழ் மொழியை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது என்றே கூற வேண்டும்.

அதனைத் தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கலாச்சார நிகழ்வில் பல்வேறுபட்ட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தமிழ் சார்ந்த பண்பாடு, ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், மற்றும் கலைப்பொருட்களை பார்க்கின்றனர் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.






இவை மட்டுமல்லாமல் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் சென்னை சார்பாகவும் இந்திய நடுவண் நிறுவனம் மூலமாகவும் நூலக்கக் கண்காட்சி நடை பெற்றது. கண்காட்சியில் இந்தியில் மொழியில் மொழிபெயற்கப்பட்ட நூல்களை ஆர்வமுடன் அங்கு வந்திருந்த அன்பர்கள் வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

3 -12 -2022 அன்று காலை குளிர்சாதன பேருந்து மூலம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்றன கங்கா நதியில் நீராட சென்றோம்.


 அங்கு படகு மூலமாக சென்று ஒவ்வொருவரும் கங்கை யமுனை சரஸ்வதி சங்கமிக்கும் இடத்தில் அனைவரும் நீராடினார்கள்.

தொடர்ந்து பிரயகராஜ் (அலகாபாத்தில்) உள்ள சந்திரசேகர ஆசாத் அவர்களுடைய நினைவிடத்திற்குச் சென்றோம். சந்திரசேகர ஆசாத் சிலையை கண்டவுடன் நாங்கள் மெய்சிலிர்த்துப்போனோம்.





இந்திய உணர்வை இங்கு இருக்கின்றது ஒவ்வொரு மாணவனும் பெற வேண்டும் என்பதற்காக அனைத்து பள்ளி குழந்தைகளும் அங்கு வந்து பார்த்து செல்கின்றார்கள். உள்ளே வரும்போதே ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்! வந்தே மாதரம்! என்று கூறியபடி உள்ளே வந்ததது எங்களைச் சுதந்திர இந்தியாவிற்கு அழைத்துச் சென்றது.

இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு நேராக அயோத்தி மாநகருக்கு சென்றோம் இரவு அயோத்தியில் தங்கினோம்.




ரயில் நிலையத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் இந்த கலை நிகழ்ச்சியில் வடநாட்டை சேர்ந்த மாணவர்களும் மாணவிகளும் தங்கள் கலாச்சார நடனத்தை ஆடிக்காட்டினார்கள்.  அந்த நடனத்தில் தமிழகத்திருந்து சென்றவர்களும் சேர்ந்து நடனமாடியது அங்கே ஒரு கலாச்சார ஒற்றுமையைக் காண முடிந்தது.

04- 12- 2022 காலை அயோத்தியில் இருக்கின்ற அனுமர் கோவில் சென்று வழிபாடு செய்தோம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இடத்தை தக்க பாதுகாப்புடன் உள்ளே சென்று கண்டு வியந்து போனோம்.


குறிப்பாக அந்த கட்டடத்தை கட்டும் பொறியாளர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த கௌதம் என்பவர் ஆவார் என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தோம்.

ராமர் கோயில் கட்டுவதற்கான காரணம், அதை பழமை மற்றும் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டுவதாக எங்களிடம் விளக்கம் அளித்தார்..

அயோத்தியில் இருந்து மதியம் ஒரு மணிக்கு வாரணாசிக்குப் பேருந்து மூலம் திரும்பினோம் நேராக வாரணாசியில் உள்ள தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து இரவு பயணத்தை தமிழகம் நோக்கி பயணித்தோம்.  எங்கள் எண்ணத்தை எல்லாம் அயோத்தியில் விட்டுவிட்டு, மீண்டும் இந்தக் கோயில் கட்டி ஒரு குடமுழுக்கு விழா நடந்தால் அந்த விழாவிற்கும் நாங்கள் வரவேண்டும் என்று  எண்ணத்தோடு அனைவரும் வாரணாசியை விட்டு கனத்த இதயத்தோடு தமிழகம் திரும்பினோம்.

எப்படி இங்கிருந்து புறப்பட்டு சென்ற போதெல்லாம் எங்களுக்கு வரவேற்புகள், பூமாலையோ, அங்கு வஸ்திரங்கள் வழங்கப்பட்டதோ அதைப்போல மீண்டும் திரும்பி சென்னை வருகின்ற வரை எங்களுக்கு தகுந்த மரியாதையையும் தொடரந்து வழங்கி வந்தார்கள். நிரைவாக 06-12-2022 அன்று காலையில்  9 மணிக்குச் சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தோம்.  தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்கிய பொழுது தமிழகத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் வந்து எங்களை ஆரத்தி எடுத்து தழுவிக் கொண்டார்கள்.

இந்த காசி தமிழ்சங்க நிகழ்வானது இரு மாநிலத்துக்கும் உள்ள ஒரு உறவை புதுப்பித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, எந்த அரசியல் உள்நோக்கம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. குறிப்பாக அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்களே தவிர, அரசியல் பற்றி ஒருவர் கூட பேசவில்லை என்பது சாலச் சிறந்ததாகும. மேலும் இந்த நிகழ்வு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்த்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிள்ளையார் சுழிப்போட்ட  பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், எங்களுக்கு எங்கு சென்றாலும் தக்க காவல் பாதுகாப்பு வழங்கிய உத்திரபிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்தியனாருக்கும் எங்கள் குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பனராஸ் இந்து பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஜெகதீசன் மற்றும் நூலகத்துறையில் பணியாற்றும் முனைவர் பரமேஸ்வரன் இருவரிடமும் நான் எழுதிய இணையத்தமிழ் நூலகளின் ஒரு பிரதியை நூலகம், தமிழ்த்துறைக்கும் வழங்கினேன்.



பேராசிரியர் முனைவர் ஜெகதீசன், நூலகர் முனைவர் பரமேஸ்வரன் உடன் முனைவர் துரை.மணிகண்டன்.

 

0 comments: