காலம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இணையத்தமிழ் துறைக்கு நான் வந்து கடந்த 15 ஆண்டுகள் ஆகின்றன. 2005ஆம் ஆண்டில் இத்துறையில் நுழைந்த போது ‘கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்று’ இருந்தது. நானும் இத்துறைத் தொடர்பான விடயங்களை ஒரு சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். இருந்தாலும் முழுமையாக இல்லை. எனக்கு தேவையானதை கூகுளில் தேடுவேன் இருக்காது. உடனே அது தொடர்பான செய்திகளைத் தொகுத்து எனது வலைப்பதிவான மணிவானதியில் இடுவேன்.
மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி? வலைப்பூ உருவாக்குவது எப்படி? தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்றெல்லாம் பதிவிடுவேன். இணையம் தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள நான் நூல்களையும் தேடி உள்ளேன். அப்பொழுது எனது கண்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான நூல்கள் 2008 வரை கிடைக்கவில்லை.
இதனை போக்கும் விதமாக ஏன்? நாம் ஒரு நூலை எழுதி வெளியிடக்கூடாது என்று எண்ணி “இணையமும் தமிழும்” என்ற நூலை 2008 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டேன்.
இந்த நூலை வெளியிட சென்னையை சேர்ந்த நன்னிலம் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டேன். அதன் நிர்வாக இயக்குனர் திரு கோவிந்தசாமி அவர்கள் இந்த தலைப்பில் நூல் வெளியிட்டால் யார் இந்த நூலை வாங்குவார்கள்? என்று என்னை கேட்டார்? இணையம் தொடர்பான நூல்கள் தமிழில் வெளிவரவில்லை எனவே இந்த நூலை வெளியிட்டோம் என்றால் நன்றாக இருக்கும் என்றேன். அப்படி நூலை வெளியிட்டோம் என்றால் இந்நூலை கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்கள் தமிழ் கணினி இணையப் பயன்பாட்டைத் தெரிந்து கொள்வார்கள் என்றேன்.அதற்காக இந்த நூலை வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். மேலும் நூலின் பயனை இப்பொழுது அறியமாட்டார்கள் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என்றேன். அவரும் சம்மதம் தெரிவித்து இந்நூலை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இந்த நூல் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. அதன் விளைவாக 2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ஈவேரா அரசு கலைக்கல்லூரித் தமிழ் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர் மோரிஸ் ஜாய்ஸ் அவர்கள் இணையமும் தமிழும் என்ற நூலைப் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்களுக்குக் கணினிப் பற்றிய அறிமுகத்தை வழங்கினார்.
இன்று பல பல்கலைக்கழங்களிலும் பலநூறு கல்லூரிகளிலும் பாடமாக வைத்து பல ஆயிரம் மாணவ-மாணவிகள் இணையத்தமிழைத் தெரிந்து கொள்கின்றனர். இதற்கு எமது நூலைப் பாடத்திட்டத்தில் வைப்பதற்குப் பரிந்துரை செய்த பாடத்திட்டக் குழுவில் பங்காற்றிய பேராசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
இந்த நூலை இரண்டாவது பதிப்பாக 2022 இல் நானே எனது கமலினி பதிப்பகம் மூலம் சில திருத்தங்கள் செய்து
வெளியிடுகின்றேன்.
அவைகளில் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் கணினித்
தமிழ் விருது பட்டியலும், ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்
கலைச்சொல்லாக்கம், உத்தமம் மாநாடு 2021 ஆம் ஆண்டுவரை எங்கு நடைபெற்றது என்ற செய்தியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
எனவே தமிழ் ஆய்வுலகம் இந்நூலை ஏற்று வரவேற்க வேண்டுமென்று அன்புடன்
கேட்டுக் கொள்கின்றேன்.
முனைவர் துரை.
மணிகண்டன்
இணையத்தமிழ் ஆய்வாளர்
9486265886 - 7010058174
0 comments:
Post a Comment