/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, October 14, 2015

தமிழ் இணையப் பயிலரங்கம் - பூண்டி வாண்டையார் கல்லூரி

|4 comments
தஞ்சாவூர் பூண்டி வாண்டையார் திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக 13-10-2015  செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ”தமிழ்க்கணினிப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முதலில் தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.சிவபாதம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். அடுத்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.உதயகுமார் அவர்கள் கணினிப்பொறியின் வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கினார். உலகில் வளர்ந்த மொழிகளாக இருக்கும் சீனா, ஜெர்மனி, ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் அவரவர் தாய்மொழியில்தான் தொழில்நுட்பத்தைக் கற்று மேலோங்கி உள்ளனர். அதைபோல நம் தாய்மொழியான தமிழில் தொழில்நுட்ப அறிவுகளை கற்கவேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் சோ.உதயகுமார் அவர்கள்.



தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் நா.சிவாஜிகபிலன் அறிமுகம் செய்துவைக்கின்றார்.  வரிசையில் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர்முனைவர் வீ.சிவபாதம், கல்லூரி முதல்வர் சோ.உதயகுமார், பேராசிரியர் இராபர்ட் அலைக்சாண்டர் மற்றும் நான்(Dr.Durai.Manikandan.)

அடுத்து முன்னிலை உரையாற்றி அறிவியல் புலத்தலைவர் முனைவர் இராபர்ட் அலைக்சாண்டர் அவர்கள் கணிப்பொறியின் இன்றையப் பயன்பாட்டையும் தமிழ் இணையதளங்களில் பேரா.நா.கோவிந்தசாமியின் பங்களிப்பையும் எடுத்து விளக்கினார்.
நிகழ்வில் என்னை அறிமுகம் செய்து பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைபாளர் பேராசிரியர் நா. சிவாஜிகபிலன் அவர்கள் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ்த்துறைச் சார்ந்தவர். இவர் கணினித்தமிழுக்கும் இணையத்தமிழுக்கு ஆற்றிய தொண்டாக நான்கு நூல்களை எழுதி வெளியிட்டு உலக மக்களுக்கு வழங்கியிருப்பது நமக்கெல்லாம் வியப்பே என்றார். நூல் விபரங்களையும் கூறினார்.( இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள், தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்) அடுத்து நான் உரை நிகழ்த்தினேன்.  சுமார் 40 நிமிடம் மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கினேன்.

இரண்டு மணிநேரம் மாணவர்களுக்குப் பயிற்சிமுறையில் விளக்கினேன். பயிற்சியில் 100 மாணவிகள் மற்றும் 15 மாணவர்கள் 20 மேற்பட்ட பல்வேறு துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டன்ர். இதில் சுமார் பத்து மாணவிகள் தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்து தேடுதலில் தேடினார்கள்.  பல மாணவர்களும் இப்பயிற்சியை மேற்கொண்டனர். மிகச்சிறப்பாக மாணவார்களும் மாணவிகளும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 மாணவி தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தமிழில் வலைப்பதிவை உருவாக்கி எழுதும் காட்சி

ஒரு மாணவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தச்சன்வயல் என்ற அவனது ஊரைப்பற்றி எழுதினார். 

ஒரு சிறப்பாக அங்கு பணிபுரியும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சிவாஜிகபிலன் அவர்கள் மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்து வைத்துள்ளார். அஃது இப்பயிற்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. ஒரு மாணவனுக்கு அவனது ஊரான தச்சன்வயல் என்ற ஊரைப்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதினார். மற்றவர்களும் எங்கள் ஊரைப் பற்றி எழுதுகின்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
                   நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இப்பயிற்சியும் எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. விழாவினை ஏற்பாடு செய்திருந்த பேரா. சிவாஜிகபிலன் அவர்களுக்கும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், கணினித்துறை, பொருளாதாரத்துறைப் பேராசிரியர் என அனைவரும் கலந்து பயன்பெற்றனர். இவர்களுக்கு என நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்த்துறையில் பேரா.சிவாஜிகபிலனின் முயற்சியால் பல மாணவிகள் ஒருங்குறியில் தட்டச்சு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். நன்றி திரு சிவாஜிகபிலன் அவர்களே

சிறந்த கட்டுரைக்குப் பரிசும் பாராட்டும்.

|2 comments
புதுக்கோட்டையில் நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா வெகு சிறப்பாக 11/ 10/ 2015 அன்று நடைபெற்றது.  இவ்விழாவில்  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா அவர்கள், தமிழ் இணையக்கல்விக் கழக உதவி இயக்குநர் மா.தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா அ. இரவிசங்கர், வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன். எழுத்தாளர் எஸ்.இரமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில்   கட்டுரை, கவிதை, மரபுக்கவிதை, சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளிக்கு விருது வழங்கி சிறப்பித்தனர். அதில்  தமிழ்க்கணனி சார்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை (ரூ.5000, மற்றும் நினைவுப் பரிசும்) எனக்கு வழங்கினார்கள். நான் அதை பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன். 

முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் தனது வலைப்பதிவைப் பற்றி விளக்கும்போது. அருகில் கவிஞ்சர் தங்க.மூர்த்தி, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்.




விருதை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதியிடமிருந்த (Dr.Durai.Manikandan) பெறும் காட்சி. அருகில் காரைக்குடி பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ.சுப்பையா,  வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்

Monday, October 12, 2015

திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர். -தமிழ்க் கணினி பயன்பாடுகள்

|4 comments
ஐந்து நூற்றாண்டுகள் அசைக்க முடியாத ஆட்சிப்புரிந்த சோழனின் தஞ்சை மண்ணில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த பூண்டி வாண்டையார்  அவர்களால் திரு புட்பம் தன்னாட்சி  கல்லூரியில் தமிழ்க் கணினிப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.  தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் புது முயற்சியில் 12/10/2015 திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு இனிதே தொடங்க இருக்கிறது. அனைவரும் வாரீர். தமிழ் இணையத்தை அறிந்துகொள்வீர்கள்.


Thursday, October 1, 2015

Roever college tamil internet seminar

|2 comments
1-10-2015, வியாழக்கிழமை பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் தமிழ் இணையம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் காலை 9.30 மணிக்கு கல்லூரி குளிர்மை அரங்கில் இனிதே தொடங்கியது.
தொடக்க அமர்வில் தேனி எம்.சுப்பிரமணி அவர்கள் இணையத்தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 இணையம் அறிமுகம், தமிழ் எழுத்துரு பிரச்சனை, தமிழ் இணைய இதழ்களில் எழுதுவது எப்படி, தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய நிலை என்ன? இந்திய அளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே உள்ளது என பல புள்ளி விபரங்களுடன் விளக்கம் தந்தார். இறுதியில் மாணவரகள் கேட்ட வினாக்களுக்குத் தக்க பதிலும் தந்து உதவினார்.
                                                       பயிற்சியில் மாணவிகள்
தேனி எம் சுப்பிரமணியத்திடம் வினா எழுப்பும் கல்லூரி ஆசிரியர்.


அடுத்த அமர்வில் நான் (Dr.Durai.Manikandan) உரை நிகழ்த்தினேன். அதில் தமிழ் எழுத்துருவை எவ்வாறு கணினியில் பதிவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்வது என்பதை செய்முறைப் பயிற்சியுடன் விளக்கினேன். அதில் ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் செய்முறையில் கலந்துகொண்டனர். மேலும் தமிழ் வலைப்பதிவையும் மூவரும் உருவாக்க கற்றுக்கொடுத்தேன். மிக அருமையாக இருந்தது. இப்பயிலரங்கம் நான் பேசிய இடங்களுள் சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் சுமார் 59 மாணவ மாணவிகள் தமிழில் தட்டச்சு செய்வதற்குக் கற்றுக்கொண்டனர். இதுவே  இப்பயிலரங்கத்தின் வெற்றி என்றே சொல்லாம்.


பயிலரங்கில் தமிழ் எழுத்துருவையும், தமிழ் வலைப்பதிவையும் உருவாக்கும் மாணவர்கள்.


கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சியில்

இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் அயோத்தி அவர்கள் உரை நிகழ்த்தினார். மிக் அருமை. அவர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களையும் பேராசிரியர்களையும் பார்த்து இந்த ஆண்டு நமது கல்லூரி தமிழ்த்துறையில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து ஆய்வாளரும் இணைய இதழைப் பற்றி ஆய்வுக்கட்டுரை  வழங்க வேண்டுமென்று கூறினார். அப்பொழுதுதான் இந்தப் பயிலரங்கம் வெற்றியடைந்ததாக இருக்கும். இதை அனைத்துப் பேராசிரியர்களும் கடைபிடிக்கவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். பயிற்சி வழங்கிய எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வை தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.ரஜ்ஜனி  தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் இப்பயிலரங்கில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் என எழுபது மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, September 30, 2015

தமிழ் இணையத்தின் வளர்ச்சி

|23 comments
 தமிழ் இணையத்தின்  -  வளர்ச்சி 

                                                                              முனைவர் துரை.மணிகண்டன்
                                           
முன்னுரை
கற்றது  கைமண்ணளவு கல்லாதது உலகளவுஎன்பது பழமொழி. இப் பழமொழிக்கேற்ப இன்று அறிவியலின் பரிணாமம் பல வழிகளில் வளர்ந்து வந்துள்ளன. காலத்தை வென்றவன் யார் என்றால் பதில்சொல்ல மனித இனம் எதுவுமே இல்லை. இயற்கை நம்மை வெற்றிக்கொண்டிருக்கிறது. காலத்தின் ஓடையில் நாம் கரைந்து வளர்ந்து வந்துள்ளோம். மனித இனம் ஒரு தொடர் போராட்டக் களத்திலிருந்து தன்னை மீட்டு எடுத்து வந்துகொண்டிருக்கிறது என்றால் அஃது உண்மையேதொடக்கத்தில் இயற்கையை நேசித்த மனித இனம் படிப்படியாக தன்னையும் தன் சுய இருப்பையும் வெளிக்காட்டிக்கொள்ள வளர்ச்சி என்ற போர்வையில் அறிவியல் தொழில்நுட்பங்களை தன்னோடு இணைத்துக்கொண்டது. விளைவு இன்று எதெற்கெடுத்தாலும் அறிவியல் அணுகுமுறைகள்.அதன பின்விளைவுதான் இன்று கணினி, இணையம்.
தமிழ் இணைய வரலாறு
     உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையப் பயன்பாடுகள் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அது தமிழ்மொழிக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் தமிழ்மொழி ஒரு மாநிலமொழியாக இருந்தது. பின்பு ஒருசில நாட்டுமொழியாக உருமாறின. இன்று இதன் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி. இதனைத்தான் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ்மொழி ஒரு குவளயத்தின் தாய்மொழி என்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் “ஒரு சமுதாயம் இன்றைய  பணிகளை, இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிக்கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க  முடியாதது”. இதனைக் கருத்தில்கொண்டுதான் தமிழ்மொழி இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துள்ளது.
இணையத்தில் தமிழ்
      இணையம் பயன்படுத்த முதலில் தமிழ் எழுத்துருக்கள் தேவை. தொடக்க காலங்களில் ஆங்கில குறியீட்டு முறையில் பயன்படுத்தி வந்த கணினிகள் தாய்மொழியில் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் உலகில் வாழும் தமிழ் அறிஞர்கள் பலர் முயற்சி எடுத்து வந்துள்ளனர். அவர்களில் கனடாவில் வசிக்கும் கலாநிதி சீனிவாசன் என்பவரால் 1984 – ல் ‘ஆதமி’, ’ஆதவின்’, ‘திருவின் என்ற தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.(தமிழ் விக்கிப்பீடியா) 1985 –ல் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த முனைவர் கு.கல்யாணசுந்தரம் உருவாக்கிய ‘மயிலை’,  அமெரிக்காவை சார்ந்த மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமி உருவாக்கிய ‘ அணங்கு’, பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் உருவாக்கிய ‘தமிழ் லேசர்’  பிறகு மலேசியாவைச் சார்ந்த முத்தெழிலன் எனபவரால் ‘அஞ்சல்’, ‘முரசு’ என்ற தமிழ் குறியீட்டுமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு பல்வேறு தமிழ் எழுத்துக் குறியீடுகள் தோன்றலாயின. இதனை அறிஞர் மனவை.முஸ்தபா, தம் ‘காலம்தேடும் தமிழ்’ என்னும் நூலில் “இந்தியாவில் உள்ள IBM நிறுவனம் பாரதி என்னும் தமிழ்ச்சொல் தொகுப்புச் சாதனைத்தைக் கண்டறிந்து வடிவமைத்தது. அதேபோன்று மலேசியாவிலுள்ள இரவீந்திரன் என்னும் தமிழ் இளைஞர் ‘துணைவன்’ என்னும் சொற்றொகுப்புச் சாதனத்தை கண்டறிந்துள்ளார். அதே நாட்டைச் சார்ந்த முத்தெழிலன்(முத்து நெடுமாறன்) என்னும் தமிழ் இளைஞர் ‘முரசு’ என்னும் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனத்தை வடிவமைத்துள்ளார். இவையனைத்தும் ஆங்கிலத்தோடு தமிழும் இயங்கு வண்ணம் அமைத்துள்ளனவாகும். இத் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனங்களில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தபோதிலும்  கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும் முயற்சியில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும்” என்கிறார்.
  இவ்வாறு பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் தோன்றியக் காலங்களில் தமிழ் இணையதளங்களும் தோன்றலாயின.  அவ்வாறு தோன்றிய இணையதளங்களில் முதலில் ஏற்றம் பெற்றது சிங்கப்பூர் என்று விக்கிப்பீடியா கூறுகிறது. அது கிட்டத்தட்ட என் ஆய்வின் படி உண்மையே. ஏனெனில் நான் இத்துறையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இயங்கி வருகின்றேன். அந்த அடிப்படையிலும் மேலும் பல தமிழ்க் கணினி அறிஞர்களின் கருத்துருவாக்கங்களின் அடிப்படையிலும் இதனை உண்மை என்று கூறுகின்றேன்.
      1995 ஆண்டில் சிங்கப்பூரைச் சார்ந்த அதிபர் ஓங்டாங் சாங் துவங்கிவைத்த (Journey words homenana nation – andhology of Singapore poetry lry 1984-1995) நான்கு தேசியமொழிக்கான கவிதை வலையகத்தில் தமிழ்மொழி ஏற்றம் பெறுகிறது. இதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் நா. கோவிந்தசாமி ஆவார். இவரே இணையத்தமிழ் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ் இணையதளங்கள்
தமிழில் தோன்றிய முதல் இணையதளம் “தமிழ் சினிமா”(www.tamilcinema) தான் என்று கூறுகின்றார் ஆசிரியர் மா.ஆண்டோபீட்டர். ஆனால் 1992-93 ஆண்டுகளில் எஸ்.டி.தமிழ் இலக்கிய மன்றம், “ஆ” என்ற ஒரு மின்னிதழை நடத்தியது என்று முனைவர் கு.கல்யாணசுந்தரம் குறிப்பிடுகிறார். எனவே தமிழில் தோன்றிய முதல் இணையதளம் எவையென்று இதுவரையும் தெரியவில்லை. அவரவர்களுக்குத் தெரிந்ததை முதலில் தோன்றியது என்று கூறி வருகின்றனர். நான் தேடிய மற்றும் தொகுத்த கருத்துக்கள் அடிப்படையில் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் குறிப்பிட்ட “ஆ” மின்னிதழே முதலில் தோன்றியதாகும்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழ் இணையதளங்களை உருவாக்கி அதில் தமிழ் இலக்கியங்கள் , வரலாறு, கலை, பண்பாடுகளை எழுதத் தொடங்கினர்.
முதல் தமிழ் வலைப்பூ(பதிவுகள்)
        தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும்,(www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
     கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.com/archive/21.html)
தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி
      தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கியது. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் வரையே தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் .துரையரசன் எழுதிய இணையமும் இனிய தமிழும்என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்து தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 12000-ஐத் தாண்டிவிட்டது. இது இன்னும் பன்மடங்காக உயரக் கூடும். 
தமிழ் இணையக் கல்விக்கழகம்.
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மின் ஊடகங்களில் வெளி வருகின்றன. இதற்காக உழைத்த உத்தமர்கள் பலர். அவர்களில் முனைவர் மு.பொன்னவைக்கோவும் ஒருவர் ஆவார். இவர் கணினி மற்றும் தமிழ் இணையதளங்களில், தொழில்நுட்பங்களில் ஆழமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். இவரின் அறிய முயற்சியால் 17-02-2001-ல் உருவானதுதான் தமிழ் இணையப் பல்கலைக்கழகம். (தற்பொழுது தமிழ் இணையக் கல்விக்கழகம் www.tamilvu.org).இவ் வலைப்பக்கத்தில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை இடம் பெற்றிருக்கிறது. மேலும் பல்வேறு தமிழ் அகராதிகள், உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ்க் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் முறையில் மின்னம்பலத்தில் வெளியிட்டு வருகிறது. மேலும் தமிழ் பாரம்பரிய கலை, பண்பாடுகள் மற்றும் விளையாட்டுக்களை ஒலி, ஒளி அமைப்பில் வெளியிட்டு வருகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழ் இணையக் கல்விக்கழகத்தை நிறுவுவதற்கு முழுநேரமாக உழைத்த முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களை தமிழ் இலக்கியம் இருக்கும் வரை பேசும்.       
தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org)     
   இணையத்தில் தரவு தளங்களில் குறிப்பிட்டுச் சொல்வோமானால் அது விக்கப்பீடியாவாகத்தான் இருக்க முடியும்.  எந்த தலைப்புகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் தகவல்களை நமக்குக் கொடுக்கும் சிறந்த தளம் விக்கிப்பீடியாவாகும். இந்த தளம் இன்றைய ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் செய்தியாளர்களுக்கும் கிடைத்த செய்திப் புதையல் என்றே கூறலாம். 267 மொழிகளுக்கு மேல் இடம் பெற்றிருக்கும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் ஒன்று
      தமிழ் மொழியில் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியில்மனித மேம்பாடுஎன்ற தலைப்புடன் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடங்கியவர் தனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்கிற கருத்து உள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இது ஒரு விளம்பரமாக இருந்ததால் அதை பிற்காலத்தில் ஒரு பயனர் நீக்கி விட்டார். இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் .மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) தமிழில் உருவாக்கியுள்ளார். இவையன்றி விக்கிப்பீடியாவும் அதன் பிற இணையத்திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ள மீடியா விக்கி என்னும் மென்பொருளின் அனைத்துப் பக்கங்களையும் அதற்குரிய இடைமுகத்துக்குத் தேவையான தகவல்களையும் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார். என்று தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.
      இதனால் தமிழில் விக்கிப்பீடியாவின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வைக்குச் சென்றது. இன்று பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் முயற்சியால் 14000 க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு 63,437 -க்கும் அதிகமான கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியா அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில்  62            வது இடத்தில் உள்ளது.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் - http://www.infitt.com/)
         தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. இந்த உத்தமம் அமைப்பான  இதுவரை 14-தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக
1. 1997 –
சிங்கப்பூர், 2. 1999 - சென்னை, தமிழ்நாடு, 3. 2000 – சிங்கப்பூர், 4. 2001 - கோலாலம்பூர் (மலேசியா), 5. 2002 - சான் பிரான்சிஸ்கோ, கலியோர்னியா, 
6. 2003 -
சென்னை, தமிழ்நாடு, 7. 2004 - சிங்கப்பூர், 8. 2009 - கொலோன் பல்கலைக்கழகம் ஜெர்மனி, 9. 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு, 10. 2011 –  சான் பிரான்ஸ் அமெரிக்கா
11. 2012 சிதம்பரம், 12. 2013 மலேசியா, 13. 2014  புதுச்சேரி, 14. 2015 சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆகும். இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள்  ஆண்டுவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுயிருகிறது. இம்மாநாடுகளில்  வழியாக தமிழ்க்கணிமைக்கான வளர்ச்சித்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முடிவுரை
பாதுகாபிற்காகத் தொடங்கபட்ட  இணையம் இன்று பல நாட்டுப் பண்பாடுகளைக் காக்கும் பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சொல்லுக்கு இன்று இணையம் மூலம் நாம் பொருள் உணர்ந்து கொண்டோம். தமிழில் இணையம்  வளர்ந்த விதம் அதனால் நாம் தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணையக் கல்விக்கழகம்,  தமிழ் விக்கிப்பீடியா, உத்தமம் என தமிழ் இணையப் பரப்பு விரிந்தாலும் நாம் இந்த இணையத்தளப் பரப்பில் கடக்க வேண்டியப் பயணம் வெகுதூரம் உள்ளன. அதில் கணிப்பொறியே நாம் பேசினால்  எழுதவேண்டும், ரோபோக்கள் நாம் நினைப்பதை நிறைவேற்ற வேண்டும். அனைத்து நம் தாய்மொழியில் இருக்கவேண்டும். அதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம் இல்லை. மிக விரைவில்

இக்கட்டுரை எமது முயற்சியால் பல ஆதாரத் தகவல்களுடன் எழுதப்பட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் 2015” க்காக எழுதப்பட்டது என்று உறுதியளிக்கின்றேன். மேலும் இந்தப் படைப்பு இதற்குமுன்பு எதிலும் வெளியிடபடவில்லை என்று உறுதியளிக்கின்றேன்.
இப்போட்டிக்கான முடிவு வெளிவரும் வரை வேறு எதிலும் வெளியிடமாட்டேன் என்று உறுதியளிக்கின்றேன்.