/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, February 26, 2017

புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்


பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

 27/02/2017 அன்று ஒருநாள் தமிழ்த்துறையில்
“ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிற்சர்லாந்து.
27-02-2017 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9 தமிழ்த்துறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழா இனிதே காலை 10 மணிக்குத் தொடங்கியது.
விழாவில் தொடக்கமாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன்  வந்திருந்த விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பேரா.அய்யம்பிள்ளை தலைமயுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினாரக கலந்துகொண்ட  சுவிஸ்ர்லாந்து நாட்டைச் சேர்ந்த  சூரிச் மாநில மாநில கலாச்சார ஒருங்கிணைப்பாளர் திருமதி மதிவதினி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்என்ற தலைப்பில் சிறப்புக் கருத்துரை வழங்கினார். அதில் மதிவதினி உரை

உலக நாடுகளை ஆசிய நாடு ஐரோப்பிய நாடு என்று பிரிவுபடுத்தி பேசிய காலங்கள் மாற்றமடைந்து "புலம்பெயர்ந்த நாடுகள்"என்றவொரு நாடு தனக்கான இடத்தை உலகநாடுகளின் மையத்தில் தக்கவைத்துள்ளது.
புலம்பெயர்தல் என்பது 18 -19 ஆம் நூற்றாண்டுகளில் புலம்பலுடனே ஆரம்பித்துவிட்டது எனலாம்.
ஆரம்பகாலங்களில் தமது வாழ்வாதார அடிப்படை வசதியை மேம்படுத்துவதற்காக கூழித்தொழிலாளியாக இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து எண்ணற்ற தமிழர்கள் தமது தாய் நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்தனர்.
அதனைத்தொடர்ந்து 1980 இல் இருந்து இந்த நிமிடம் வரையில் இடம்பெறுகின்ற புலம்பெயர்வுகள் உயிரை தக்கவைப்பதற்கானப் புலம்பெயர்வாக உள்ளதென சமூக ஆய்வாளர்கள் கருத்துக்கணிப்பு செய்துள்ளனர்.
தமது தாயக மண்ணின் வாசத்தையும் உறவுகளின் சுவாசத்தையும் தொலைத்து புலம்பெயர்ந்த மக்கள் தமது அடையாளமான மொழி கலைகலாச்சார விழுமியப்பண்பாடுகளைத் தமது புலம்பெயர்ந்த நாடுகளில் இழக்கவோ அல்லது இருட்டடிப்பு செய்யவோ இன்றுவரை எத்தணிக்கவில்லை.மாறாக அடையாளப்படுத்துவதற்கான போராட்டத்தில் முனைப்பாக இயங்கத்தொடங்கினர்.
இதற்கான ஊடகமாக "வாழ்வியல் நாட்டின் மொழியே "ஊடகமாக செயல்பட முடியுமென ஊகித்த தமிழர்கள் தமது வாழ்வியல் நாட்டு மொழியில் சிறப்புற்று அவற்றின் ஊடாக தமது செம்மொழியாம் தமிழ்மொழிக்குரிய அங்கீகாரத்தை உலக நாடுகளில் நிலைநாட்டி வருகின்றனர் என்றால் மிகையாகாது.
முதல்கட்ட வேலைத்திட்டமாக தமது புலம்பெயர் நாடுகளில் தமிழ்பள்ளியை நிறுவத்தொடங்கினர்.தமது வருவாயில் ஒருபகுதியை ஒதுக்கி தமிழ் சங்கங்கள் நிறுவி அதனூடாக தமது தலைமுறையினருக்குத் தமிழைக் கற்றுக்கொடுக்கத்தொடங்கினர்.
இச்சங்களின் பணிகள் நாளடைவில் மொழியோடு நின்றுவிடாது தமிழரின் கலைகலாச்சார பண்பாடுகளைக் கட்டியெழுப்புவதாக அமைந்தது.
மொழியை கற்க முனைந்த தமிழ் சிறார்கள் நாளடைவில் முத்தமிழையும் பயிலத்தொடங்கினர்.
இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மொழி அண்மைக்காலமாக ஆலமரம் போல கிளைகள் பரப்பி பன்னாட்டு உறவுகளுக்கிடையே உறவுப்பாலத்தை வலுவடையச்செய்துள்ளது.உலக நாடுகளில் வாழ்கின்ற பல்லினத்தவரும் தமிழன் என்றொரு இனத்தின் அடையாளத்தை உணர்வுபூர்வமாக உள்வாங்கிவருகின்றனர்.சுவிற்சர்
லாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு மொழியாக தமிழ்மொழி பள்ளி மட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரச பாடசாலைகளில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மூன்று மணிநேரம் தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. மேலும் தமிழ்பள்ளியில் நடைபெறும் வருடாந்த இறுதிப்பரிட்சைப் புள்ளிகள் சுவிற்சர்லாந்து அரசபாடசலையின் பெறுபேறு அட்டையில் பதிவுசெய்யப்படுகிறது.
அமெரிக்கா,கனடா,இலண்டன்,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தமிழுக்கான அங்கீகாரம் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளது என்பதனைப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஒரு பாடமாக அங்கீகாரம் பெற்றதை இந்த இடத்தில் குறிப்பிடுவது சிறப்பு என கருதுகின்றேன்.
மேலும் சங்கம் வைத்து தமிழ்வளர்த்த புலம்பெயர் நாடுகளில் தமிழ்கல்விப்பணிமனைகளாக விரிவாக்கம் பெற்றதோடு வாழ்வியல் நாட்டு அரச பாடசாலை ஆசிரியர்களிடமும் "தமிழ் "என்ற மொழி குறித்து விழிப்புணர்வை உண்டு பன்னியுள்ளது எனலாம்.
தமிழ் பள்ளி மட்டங்களில் நடைபெறும் ஆண்டு விழாக்கள், கலைவிழாக்கள், நாட்டிய மயில் ,இசைக்குயில் போன்ற நிகழ்வுகள் மாணவர்களைக் கேட்டல் ,பேசுதல், படித்தல் எழுதுதல் என்ற திறன்களில் வளர்ச்சியடையச் செய்துள்ளதுடன் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களும் மேன்மையடைந்து வருகிறது எனலாம்.
"கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பதை தமிழன் மறக்கவில்லை என்பதற்குச் சான்றாகப் பல புலம்பெயர் மாநிலங்களில் கோயில்கள் கோபுரங்களுடன் வான் உயரந்து சாட்சியப்படுத்துகிறது தமிழனை.
கோயில் திருவிழாக்கள் குடமுழுக்கு விழா ,அன்னதானம் போன்ற நிகழ்வில் எண்ணற்ற தமிழர்கள் இன்றுவரை கலந்து தமக்கான உறவுப்காலத்தை வலுவடையச் செய்து வருகின்றனர்.
அத்துடன் கோயிலை அண்டி திருக்குறள் போட்டி,தேவார திருவாசகம் போட்டி ,பேச்சுப்போட்டி போன்றவையும் காலத்துக்கு காலம் தேவைகருதி நடாத்தப்படுகிறது.
இதனால் தமது இரண்டாம் தலைமுறையினர் தமது அடையாளத்தை ஆளுமையுடன் வெளிப்படுத்வேண்டுமே அன்றி தமிழன் என்ற அடையாளம் வெட்கப்படவேண்டிய ஒன்றல்ல என்ற உளவியல் நோக்கில் சிந்திக்க வாய்பளிக்கப்படுகிறது .
தமது வேற்று கலாச்சார மொழி நண்பர்களும் தமது உணவை ,உடையை ,கலையை இரசிப்பதை இரண்டாம் தலைமைறையினர் பெருமையாக கருதுகின்றனர்.இதனால் இந்தியா மற்றும் ஈழம் போன்ற தமிழர்களின் தாயகப்பூமியின் வாசம் வேற்று நாட்டவர்களையும் ஈர்க்கின்றது என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் தலைமுறையினர் தமது தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வியை கற்கச் செல்கையில் தமது தாய்மொழியை கற்க வேண்டுமென சிந்திக்கின்றனர்.காரணம் புலம்பெயர் நாடுகள் ஒவ்வொன்றிலும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றனர்.அவர்களது தேவைகளும் எண்ணற்றவை .இவ்வேளையில் இவர்கள் குறித்த விடையங்களை தெளிவுற தாய்மொழியாம் தமிழ் மட்டுமே சிறப்பானதாக அமையும்.மூலமொழி மட்டுமே உண்மைத்தன்மையை உள்ளபடி நயத்துடன் சிதைக்காது உணர்விக்கும்.மொழிபெயர்ப்பு,சட்டம்,வைத்தியம்,தமிழில் கணனி இவ்வாறான துறைகளை நாடிச்செல்லும் மாணவர்கள் தமிழைக் கற்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் மொழி தரமான ஆசிரியர்களால் மாணவர்களின் நேரவசதிக்கேற்ப கற்பிக்கப்படுகிறது.
இதற்காக சிறப்பு பயிற்சிகள் ஆசிரியர்களுக்குப் புலம்பெயர் வாழ்வியலை கருத்தில் கொண்டு நடாத்தப்படுகினது.
குறிப்பாக எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சுவிஸ், தென்ஆபிரிக்கா ,போன்ற நாடுகளில் அயலக ஆசிரியப்பட்டயப்படிப்பு என்னும் சான்றிதழ் கல்வியை நடாத்திவருகின்றது.
இன்று தமிழ் மொழியின் அருமை பெருமைகள் பிறந்தகத்தில் ஓரங்கட்டப்பட்டு ஏளனமாக பார்க்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்கள் வேற்று இனத்தவரையும் ஆய்வு செய்யச் தூண்டும் மொழியாகத் தமிழை அடையாளப்படுத்தி வருவது நமக்கெல்லாம் பெருமையே. என்று தமது உரையில் புலம்பெயர்ந்த வாழ்வியலையும் தமிழ் மொழியின் பெருமையையும் விரிவாக வழங்கினார்.

 மாணவ மாணவிகளோடு கலந்துரையாடல் நிகழ்வு நடைபேற்றது.

இறுதியாக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பொ.அன்பானந்தன் நன்றி கூறினார்.
0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்