தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், நவலூர்குட்டப்பட்டுவில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 17-2-2017 அன்று நடத்தும் ”தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம்” நிகழ்வில் முனைவர் துரை. மணிகண்டன் “இணையத் தமிழ் அறிமுகம்” எனும் தலைப்பிலும், தேனி மு.சுப்பிரமணி ”மின்னஞ்சலும் மின்குழுமங்களும்” எனும் தலைப்பிலும், நண்பர் செல்வமுரளி “தமிழ்க் குறுஞ்செயலிகளின் பயன்பாடுகள்” எனும் தலைப்பிலும் பயிற்சியளிக்க இருக்கிறார்கள்..
நிகழ்வின் தொடக்கமாகப் பேரா.கண்ணன் வரவேற்புரை
வழங்கினார். அடுத்துக் கல்லூரி முதல்வர் பேரா.அய்யம்பிள்ளைத் தலைமையுரை வழங்கினார். தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்
தமிழியல் துறைத் தலைவர் பேரா.உ.அலிபாவா
தொடக்க உரை வழங்கினார். தொடக்கவுரையில் இன்றைய காலக்கட்டத்திற்கு
ஏற்பத் தமிழைத் தொழில் நுட்பத்தின்
அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இந்தப் பயிலரங்கம் அமையும் என்றார்.
முனைவர் துரை.மணிகண்டன்
தலைப்பு: இணையத்தில் அறிமுகம்
இணையத்தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் இணையம் முதன்முதலில் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக 1969 இல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதன்
வளர்ச்சி 1972, 73 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவைவிட்டு இங்கிலாந்து,
நார்வே நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
பின்பு படிப்படியாக உலகில் பல்வேறு நாடுகளுக்கு இணைய இணைப்பு
கிடைத்துள்ளது. பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தபட்டு வந்த இணையம்
இன்று பல்வேறு வகையான ஏன் நாம் நினைத்துப் பார்க்க இயலாத பணிகளைச் செய்யும் தகவல் ஊடகமாக வளர்ந்து நிற்கின்றன.
வலைப்பின்னல்:
இணையம் என்பது உலகில் பயன்படுத்தப்படும் கணிப்பொறி, அலைபேசி, தட்டைக்கணினி அனைத்தையும் ஒன்றோடு
ஒன்று இணைக்கப்பட்டவையாகும். இதில் கணினிகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ள
தகவல்கள், படங்கள், ஆகியவற்றைப் பொதுவான
கணினிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய அங்கீகாரம் பெற்றவர்கள் பயன்படுத்திக்
கொள்வதே வலைப்பின்னல் என்பதாகும்.
இந்த வலைப்பின்னல் வழியாக இணையம் இந்தியாவில் குறிப்பாகத் தமிழில் சிங்கப்பூரைச்
சார்ந்த முனைவர் நா.கோவிந்தசாமி அவர்களால்
1995 ஆம் ஆண்டு,சிங்கப்பூர் அதிபர் ஓங் டாங் சாங்
முன்னிலையில் தமிழ் இணையத்தில் வலையேற்றம் பெற்றுள்ளது. இது நாளடைவில்
வளர்ந்து இன்று பல்வேறு தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள்,
தமிழ் மின்குழுமங்கள், தமிழ் விக்கிப்பீடியா தமிழின்
பரப்பு விரிந்துள்ளது.
இன்றைய அடிப்படைத் தேவையாகத் தமிழில் இணையத்தைப் பயன்படுத்தத் தேவையான சில குறிப்புகளும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் முதன் முதலாகத் தமிழில்
தட்டச்சுப் பயிற்சியைப் பேராசிரியர்களுக்கு வழங்கினார். அடுத்துத்
தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள் மற்றும் நூலகம் சார்ந்த
இணையப்பக்கங்களைப் பார்வையிட்டு எவ்வாறு தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கி ஒவ்வொருவரும்
பயன்படுத்த முடியும் என்ற பயிற்சியை வழங்கினார். அடுத்துத் தமிழ்
விக்கிப்பீடியாவில் அவரவர்களுக்குத் தெரிந்த இலக்கிய வரலாற்று நிகழ்வை எவ்வாறு பதிவு
செய்வது என்ற பயிற்சியையும் வழங்கினார். இணையத்தமிழ் மூலம் புதிய
இலக்கிய ஆய்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் தமிழில் சொற்பிழைத்திருத்தி சந்திப்பிழைத்திருத்தியின் பயன்பாடுகளையும்
அதனைப் பயன்படுத்தும் முறையையும் எடுத்து விளக்கினார். எழுத்துரையைப் பேச்சுரையாகவும், பேச்சுரையை எழுத்துரையாகவும்
மாற்றும், மொழிபெயர்ப்பு மென்பொருள்களும் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.
இறுதியாக இணையக் (கணினித்) தமிழ் துறை மேலும் வளரவேண்டுமென்றால் பல்வேறு வகையான தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட
வேண்டும். அதற்குக் கணிப்பொறித்துறை, தமிழ்த்துறை,
மொழியியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப நண்பர்கள் இணைந்து
செயல்பட வேண்டும்.
தேனி மு. சுப்பிரமணி -
தலைப்பு:மின்னஞ்சலும் மின் குழுக்களும்
இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளும் மின் ஆட்சிக்கு
மாற்றமாகி வருகின்றன. இதற்கு அலைபேசி எண்ணும்,
மின்னஞ்சலும் அவசியமாகி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் முடியப் பயன்பாட்டிலுள்ள மின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை
4337 மில்லியன்கள் என்று இருக்கின்றன. இந்த எண்ணிக்கை
ஆண்டுக்கு 16% அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் 192.2 பில்லியன் மின்னஞ்சல்கள்
பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு மின்னஞ்சல் மூலம் 25 எம்.பி அளவிலான படம், கோப்புகளையும்
இணைத்து அனுப்பி வைக்க முடிகிறது. மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரிப்புக்குப்
பின்னர், சாதாரண அஞ்சல் எனும் கடிதப் போக்குவரத்து குறைந்து போயிருக்கிறது.
முகநூல், சுட்டுரை போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு
தொடங்குவதற்கும் மின்னஞ்சல் அவசியமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையை இலவசமாக வழங்கி
வருகின்றன. இந்த மின்னஞ்சல் சேவை நிறுவனங்களின்
தள முகவரியுடன் சேர்த்து நாம் விரும்பும் பெயர்களில் மின்னஞ்சல் முகவரியைப் பெற முடிகிறது.
மின்னஞ்சல் சேவை அமைப்பின் தள முகவரி இல்லாமல், தொழில், இசை, நாடு, தொழில்நுட்பம், ஆன்மிகம் போன்ற 200 வகையான பெயர்களிலும் மின்னஞ்சல் முகவரியினைப் பெற முடியும்.
இது போல், மிக நீளமான
பெயரில் அல்லது மிகக் குறைவான பெயரில் மின்னஞ்சல் முகவரிகளையும் பெற முடியும்.
இது போல் 10 நிமிடங்கள், ஒரு மணி நேரம், ஒரு நாள் பயன்பாட்டிற்கான தற்காலிக மின்னஞ்சல்
முகவரியையும் பெறலாம். அதிக அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கான
மின்னஞ்சல் முகவரியையும் பெற முடியும். தமிழ் மொழியிலும் மின்னஞ்சல்
முகவரியினைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் தமிழ் மின்னஞ்சல்
முகவரியினைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.
மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பவர்கள், மின் குழுக்களாக இணைந்து செயல்பட முடியும். கூகுள், யாகூ போன்ற நிறுவனங்கள் மின் குழுக்கள் அமைத்துக்
கொள்வதற்கான வசதிகளை இலவசமாகச் செய்து கொடுத்திருக்கின்றன. மின்
குழுக்களாகச் செயல்படும் போது, தங்களுக்கிடையிலான கருத்துகளை
உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியிலும் பல்வேறு
மின் குழுக்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இந்த மின் குழுக்களின் வளர்ச்சியே இன்று முகநூல், சுட்டுரை போன்ற புகழ்பெற்ற சமூக வலைத்தளங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக்
காரணமாக இருக்கிறது. இந்தச் சமூக வலைத்தளங்களிலும் குழுக்கள்
அமைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இணையக் குழுக்களைப் போல், இணையம் வழியில் மன்றங்களும் தொடங்க முடியும். இதன் மூலம்
எளிதில் கலந்துரையாடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இணைய மன்றங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கின்றன.
தமிழ் மொழியிலும் சில இணைய மன்றங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இவைகள், தமிழ் வலைப்பதிவுகளில் செய்யப்பட்டும்
பதிவுகளுக்கான கருத்துகளைப் பதிவு செய்யும் வகையிலேயே இருந்து கொண்டிருக்கின்றன.
திரு.செல்வமுரளி
தலைப்பு: தமிழ் குறுஞ்செயலிகளின் பயன்பாடுகள்
21 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சியடைந்த நிலையில்
உள்ளது. இந்தத் தொழில்நுட்பங்களைக்
கொண்டு கல்வியை எவ்வாறு கற்க வேண்டும், கற்பிக்கப்பட வேண்டும்
என்ற அடிப்படையில் குறுஞ்செயலிகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு
உருவாக்கப்பட்ட குறுஞ்செயலிகளை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதுவரை உள்ள குறுஞ்செயலிகளைவிட கற்றல் கற்பித்தலில் பல புதுமைகளைப் புகுத்தி
உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு இங்குப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள
பேராசிரியர்கள் முன்வரவேண்டும் என்றார்.
நிறைவு விழாவில் முனைவர்
சா.சேகர், (ஆட்சிமன்றகுழு உறுப்பினர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்.) இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரியைச்
சார்ந்த 45 மேற்பட்ட பேராசிரியர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
பிறகு தனது உரையில் இங்குப் பயிற்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் அவரவர் கல்லூரிக்குச்
சென்று இங்கு நடந்த தமிழ் இணையப் பயன்பாடுகள் குறித்த செய்தியை மாணவர்களுக்கு விளக்கமாக
எடுத்துக் கூறுங்கள். இதுபோன்ற பயிலரங்கை உங்களது கல்லூரியில் நடத்துங்கள். அதற்குப் பயிற்சியாளராக முனைவர் துரை.மணிகண்டன் அவர்களை
அழையுங்கள் என்றார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் நன்றியுரை
வழங்கினார்.
சிறப்பாக நிகழ்வு இடம்பெற வாழ்த்துகள்.
பயனுள்ள தகவல். நன்றி.