செவ்வியல்
இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள்
முனைவர் துரை.மணிகண்டன்
தலைவர், தமிழ்த்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி
நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.-9.
இன்றையக்
கல்விமுறையில் மேலாண்மை என்ற துறை அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. வணிகம்,
பொருளாதாரம், கணிப்பொறி, அறிவியல், மருத்துவம் என பரந்து விரிந்து மேலாண்மைத் துறை
இன்று மொழியியல் நூக்கிலும் கால் பதித்துள்ளது. இத்தகு சிறப்பு பொருந்திய மேலாண்மை
துறையின் கூறுகளாக செவ்வியல் இலக்கியங்களில் பல்வேறு உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் செவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் இவ்வாராய்ச்சிக்
கட்டுரையில் கருத்துக்களைக் காணலாம்.
மேலாண்மை என்றால் என்ன
மேரி பார்க்கர் ஃபாலட் (Mary Parker Follet)
(1868–1933), என்பவரே மேலாண்மை என்பதற்கான
முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார். இவரின் கருத்தின்படி மேலாண்மை என்பது "ஊழியர்களை கொண்டு செயல்களை ஆற்றுவிப்பது தொடர்பான
செயற்பாடாகும்" ("the art of getting things
done through people"). இவரை தொடர்ந்து பலரும் மேலாண்மை என்ற சொல்லிற்குப் பலவித
வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர். இறுதியாக "மேலாண்மையாளர்கள் என்ன செய்கின்றாரோ
அதுவே மேலாண்மை" என பொருள்படுத்தியுள்ளனர்.
இவற்றுக்கு காரணம் நடப்புக் காலங்களில் மேலாண்மை
வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, மேலாண்மை என்பது செயல்படும்
பணிகளுக்குத் தக்கவாறு வேறுபாடுகிறது.
பொதுவாக
நடைமுறையினில் நிருவாகமும் (administration) மேலாண்மையும் ஒரே
கருத்தினில் புழங்கப்படுகின்றது, ஆயினும்
நிருவாகம் என்பது உண்மையில் மேலாண்மைக்குள்
அடங்கும் ஒர் பணியாகும்(www.ta.wikipedia.org)
செவ்வியல் மொழிகள்
உலகச்
செம்மொழிகள் என்று கி.பி. 18 ஆம் நூற்றாண்டுவரை கிரேக்கம், இலத்தினும் மட்டுமே கருதப்பட்டு
வந்தன. ஐரோப்பிய நாகரிகத்தின் ஆணிவேர்களாகத் திகழ்ந்த கிரேக்க நாட்டிலும் உரோம் நாட்டிலும்
முகிழ்ந்தெழுந்த இவ்விரு மொழிகளிகளும் ஐரோப்பியப் பண்பாட்டு ஆதிக்கம் மேலோங்கியிருந்த
கால கட்டங்களில் உலகச் செம்மொழிகள் என்னும் தகுதிப்பாட்டினைப் பெற்றன. இவ்விரு பண்பாடுகளின்
தாக்குரவு பெற்றன. இவ்விரு பண்பாடுகளின் தாக்குரவு பெற்ற கலைகள் அனைத்தும் செவ்வியற்
கலைகள் (Classical
arts) ஆயின.
ஆசிய செம்மொழிகளிகளாக
எபிரேய மொழி, அரபி மொழி, பார்சி மொழி, சீன மொழி, ஜப்பானிய மொழி திகழ்கிறது.
இந்தியாவில்
உள்ள செம்மொழிகளாக தமிழும் சமஸ்கிருதமும் திகழ்கிறது. தமிழ்மொழி
இந்திய மொழிக் குடும்பங்களுள் மிகப் பெரிய மொழிக் குடும்பமாகத் திகழும் திராவிட
மொழிக் குடும்பத்தின் தலைமை வாய்ந்த மொழியாக வளர்ந்து வந்துள்ளது. பாணினியின் படைப்பையும்
விஞ்சும் திறன்கொண்ட இலக்கணப் பண்பாட்டு நூலாக விளங்கும் தொல்காப்பியமும், கிரேக்கச்
செம்மொழிக் கவிதைகளை விஞ்சும் சங்கப் படைப்புகளும், தன்னேரில்லாத தமிழ் மறையான திருக்குறளும்,
புரட்சிக் காப்பியங்களான சிலம்பும் மேகலையும் ஏனைய பிற இலக்கண, இலக்கியக் குவியல்களும்
தமிழை உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக இணைத்து ஏரளமான அயல்நாட்டு அறிஞர்களைக் காணச் செய்துள்ளன.
கிரேக்க மொழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மீலிகர் என்பவரால் Anthology என்று
கூறப்படும் தொகை நூல் தொகுக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுவர். மிகப் பழங்காலத்திலேயே யாப்பு, பொருள் போன்ற வகைகளால்
தொகுக்கப்பெற்ற தனிப்பாடல் தொகுதிகளாய் – இலக்கியக் கொத்துக்களாக நூல்கள் அமைந்துள்ளமை
தமிழ் இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும். இத்தகு
சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியில் சங்க கால மக்களின் வாழ்வியல் விழுமியங்கள் மற்றும் தமிழர்களின்
போர் முறைகளை விரிவாக இவ்வாய்வுக் கட்டுரையில் காண்போம்.
போர் பற்றிய குறிப்புகள்
போர் என்பது, ஒரு பன்னாட்டுத் தொடர்புகள் சார்ந்ததும், நாடுகளின் படைகளிடையே நடைபெறும்
ஒழுங்கமைந்த வன்முறைகளால் வெளிப்படுவதுமான பிணக்கு ஆகும். கார்ல் வொன் குளோசவிட்ஸ் என்பார் தனது போர்தொடர்பில் (On War) என்னும் தனது நூலில், போர் என்பது "வேறு
வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு" எனக்
குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுப் போர் என்னும்போது, அது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் நிலவும் பிணக்கு ஆகும்.
இது ஆட்சி குறித்து நிகழ்வது.இறைமை குறித்தது அல்ல. இதன்
ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான படைத்துறைப் பங்களிப்புக் காரணமாகப் போர் என்பது கொலை அல்லது இனப்படுகொலை என்றாகிறது.
போர் என்பது ஒரு பண்பாட்டுக் கூறாகும். இது ஒரு குறிப்பிட்ட வகை
அமைப்பினாலோ, சமூகத்தினாலோ
மட்டும் நடத்தப்படுவது அல்ல. ஜான் கீகன் என்பவர், தனது போர்களின் வரலாறு (History Of Warfare) என்னும் நூலில், போர் என்பது, ஒரு உலகளாவிய தோற்றப்பாடு
என்றும், அதை
நடத்தும் சமூகத்தைப் பொறுத்து, அதன் வடிவமும், வீச்செல்லையும் வரையறுக்கப்
படுகின்றன என்றும் கூறுகிறார். போர் செய்தல் என்பது ஒரு தொடராக வருகிறது.
வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே தொடங்கிவிட்ட இனக்குழுக்கள் இடையேயான போரில்
தொடங்கி, நகர அரசுகள், நாடுகள், பேரரசுகள் என்பவற்றுக்கு இடையிலான போர்கள் வரை இது இடம் பெற்று
வருகிறது.
ஒரு குழுப் போராளிகளையும்
அவர்களுடைய பின்னணித் துணைகளையும், அவை நிலத்தில் செயல்படும்போது தரைப்படை என்றும், கடலில் செயல்படும்போது கடற்படை என்றும், வானில் செயல்படும்போது வான்படை என்றும் அழைக்கப்படுகின்றன.
போர் ஒரே நேரத்தில் பல அரங்குகளில் நடைபெறலாம், ஒன்றுக்கு மேற்பட்ட படை
நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும் இடம்பெறலாம். ஒரு படை நடவடிக்கை என்பது சண்டை
செய்தல் மட்டுமல்ல. இது, உளவறிதல், படைகளை நகர்த்தல், வழங்கல்கள், பரப்புரை போன்ற பல கூறுகளைக்
கொண்டிருக்கும். (Www.ta.wikipedia.org)
சங்ககால போர்முறைகள்
தமிழர்களின்
போர்முறை அறப்போர்முறை ஆகும். அவர்களின் முறை வஞ்சகம். சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல்
அற்றதாக நேரானதாக இருந்துள்ளது. ‘அடுத்துக் கெடுத்தல்’ அற்றதாக
நேர்மையானதாக இருந்துள்ளது. காலையில் முரசு அறையத் தொடங்கினால் போர் தொடக்கம் என்று
பொருள். மாலையில் முரசை அறைந்தால் அன்றைய போர் முடிவிக்கு வருகிரது என்று பொருள். முழு இரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்த நாள்
காலையில் போர் தொடங்கும். இது அவர்களின் போர்முறைக்குக்
கிடைத்த பரிசு. இந்த போர் முறைகள் எதிரிகளுக்கு
இரங்கும் நெஞ்சம் உடையதாகவும், எதிகரிகளுக்குத் தக்க வாய்ப்பளிப்பனவாகவும் அமைந்திருந்துள்ளது.
‘இன்று போய் போருக்கு நாளை வா’ என்ற எண்ணம் அன்றைய தமிழர் போர்
நெறிமுறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.
எதிர்க்
குழுவினைரையும் தம்மோடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர்.
அவர்கள் தன் இரத்தம் வெளிப்படுத்தும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும்
துன்பத்தைக் கண்டுள்ளனர். இதன் மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல்
துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது. முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத்
துன்புறும் மன்னனின் செயல் இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். (முல்லைப்பாட்டு
68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்களத்தை இரங்கும்
களமாக கண்டுள்ளது.
செவியல் இலக்கியங்களில் போர் மேலாண்மை
சங்க கால
அரசர்கள் பிற நாட்டின் மீது போர் தொடுப்பது தங்களின் செயலாகக் கொண்டிருந்தனர். ஒரு
மன்னர் வேற்றுநாட்டு மன்னரை வெற்றிக்கொள்வது, வேற்று நாட்டு மன்னனின் வீரத்தைச் சிதைப்பது
தனது வீரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்துவது போன்றவற்றிற்காகவே அக்கால போர்கள்
நடைபெற்றுள்ளன.
அவ்வாறு
நடைபெற்ற போர்கள் அறம் தவறாமல் நடைபெற்றுள்ளது எனபதுதான் சிறப்பான ஒன்றாகும்.
போர் எவ்வாறு
நடைபெற வேண்டும் என்ற இலக்கண கோட்பாட்டை முழுமையாகத் தொலகாப்பியர் குறிப்பிடுகிறார்.
அவை முறையே
“அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறம்பட கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே” (தொல்- பொருள்- பாடல்:59.)
என்று
ஏழு நிலைகளாகப் போர் மேலாண்மைகளைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படிதான் போர்கள் பெரும்பாலும்
நடைபெற்று இருக்கின்றன.
குறிஞ்சித்
திணைப்புறம் நிரைகோடலும் நிரை மீட்டலும் வெட்சி, கரந்தை எனப்படும். (போருக்கு முன்பு
அங்கிருக்கும் பசுகூட்டங்களைக் கவர்ந்து வருதல்) அடுத்து
மண்ணாசையால்
போருக்குச் செல்லும் வீரார்களின் வஞ்சின மொழிகளாக
கூறும் நிலை வஞ்சி என்றும், அவ்வாறு சென்ற வீர்ர்கள் எதிரிநாட்டினை அழித்தலும், உள்ளே
விடாமல் தடுத்துக் காத்தலும் உழிஞை எனவும் நொச்சி எனவும் அழைத்துள்ளனர்.
“வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே” (தொல்- பொருள்- பாடல்:64.)
“உழிஞை
தானே மருதத்துப் புறனே
முழுமுதல் அரணம் முற்றலும்
கோடலும்
அனைநெறி பரபிற்று ஆகும்
என்ப (தொல்- பொருள்- பாடல்:66.)
இரண்டு மன்னர்களும் போர் செய்துகொள்ளும்
இடம் தும்பை ஆகும். இதனை,
“தும்பை தானே நெய்தலது புறனே
மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை அழிக்குஞ் சிறப்பிற் றென்ப” (தொல்- பொருள்- பாடல்:70.)
என்று
கூறுகிறது தொலாப்பியம்.
அரசர்களிம்
போர் வெற்றிக் குறித்துக் கூறுவது வாகை என்பதாகும்.
“வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” (தொல்- பொருள்- பாடல்:73.)
இந்த
போர்களினால் என்ன நன்மை ஒன்றுமே இல்லை. இவையெல்லாம் நிலையானது இல்லை என்பதைக் குறிப்பிட,
“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி
யானும்
நில்லா உலகன் புல்லிய நெறித்தே” (தொல்- பொருள்- பாடல்:76.)
வெற்றிப்பெற்ற
மன்னனைப் புகழ்ந்து பாடும் பகுதியாக பாடாண் திணைப் பகுதியாகும். இதனை
“ பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல்- பொருள்- பாடல்:78.)
என்று தொல்க்காப்பியம் போர் மேலாண்மைகளாக்க் குறிப்பிடுகிறது.
பின்னர் வந்த புறப்பொருள் வெண்பாமாலை,
“ஆங்ஙனம் உரைப்பின் அவற்றது
வகையால்
பாங்குறக் கிள்ந்தனர் எனப
அவைதாம்
வெட்சி கரந்தை வஞ்சி நொச்சி
உட்குவரு சிறப்பின் உழிஞை
நொச்சி
முரண்மிகு சிறப்பின் தும்மஒயுள்
ளிட்ட
மரனுடை மரபின் எழே ஏனை
அமர்கொள் மரபின் வாகையும்
சிறந்த
பாடாண் பாட்டொடு பொதுவியல்
என்ப”
பன்னிரண்டு
என்று கூறியுள்ளது.
அரசர்களின் போர் மேலாண்மை
சங்ககால
மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மேலாண்மை என்ற படிப்பு இல்லையென்றாலும் அவர்களுக்கு நிர்வாகம்
செய்ய போதுமான கல்வியறிவை அன்றையச் சான்றோர்கள் அல்லது குடிவழி வந்தவர்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றனர்.
எனவேதான் அவர்கள் மக்களைக் காத்து அரசு ஆற்றியதும், வேறு நாட்டு மன்னர்களிடம் நட்பு
பாராட்டியதும், திறமையான முறையில் மற்ற நாடுகளுடன் போர் செய்து வெற்றிப்பெற்றதும் பாராட்ட
வேண்டிய ஒன்றாக உள்ளது.
அதிலும்
போர் என்றால் மன்னன்ர்களு அதிகமான பணிச்சுமை வந்துவிடும். அந்த வேளைகளில் மன்னர் மேலாண்மை
செய்வதில் திறமையானவராக இருத்தல் வேண்டும்.
பாண்டிய
நெடுஞ்செழியனின் போர்த்திறத்தைப் பாடும் கபிலர் பாசறையில் போர்விரர்கள் விழுப்புண்பட்டுக்
கிடக்கும்போது அவர்களை நடு இரவில் உறங்காமல் மன்னன் சென்று பார்க்கும் விதம் நெடுநல்வாடையில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மன்னனின் போர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
“ஓடையோடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக்கை நிலமிசைப் புரள
களிறு களம் படுத்த பெருஞ்சேய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்பு காணிய புறம் போந்து
வடந்தை தண் வளி எறிதொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல்
பாண்டில் விளக்கில் பரூஉச் சுடர் அழல
வேம்பு தலையாத்த நோன்கால் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்
மணிபுறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா…..( நெடுநல்வாடை – பா.வரி -169 to 179)
புலவர்களின் போர் மேலாண்மை
அன்றையக்
காலத்தில் போர் புரியும்போது பலரை பலவாறு துன்புறுத்தியது கிடையாது. போர் புரியும்போது
மன்னன் தோல்வியுற்றாலோ அல்லது புறமுதுகிட்டுச் சென்றாலோ தாக்குதல் என்பது இல்லை. அவ்வாறு
போர் மேலாண்மையைக் கடைபிடித்துள்ளனர். அதற்குச் சான்றாக பாண்டியன் பல்யாகச் சாலை முதுகுடுமி
பெருவழுதியை நெட்டிமையார் என்ற புலவர் பாடுகிறார்.
உனது அம்பு
அல்லது போர் கருவிகள் இவர்கள் மீது விழாது போர் செய்த ஆற்றலை உடையவனே,
“ஆவும் மானியற் பார்ப்பன மக்களூம்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மாண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடிமி தங்கோர்” (புறம் – 9)
என்று
அன்றைய போர் மேலாண்மைச் செய்திகளாக நாம் இதனைப் பார்க்கலாம்.
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற அரசன்
பாரதபோர் நடைபெற்ற காலத்தில் போரில் இரு நாட்டுப் படைவீரர்களுக்கும் உணவு வழங்கி சிறபித்துள்ளான்
என்ற செய்தியை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலில் பதிவு செய்துள்ளார். போரின்போது உதவி
செய்வது மிகப் பெரிய புன்னியம். அதனை அன்று இந்த அரசன் செய்துள்ளது எத்துனைப் பெரிய
செயல். இதனை அவன் ஒருவனே செய்யவில்லை. அவனால் ஆளப்பட்ட படைவீரர்கள் செய்துள்ளனர். படை
வீரர்களை வழி நடத்துவது என்பது அன்றையக் கால மன்னர்களுக்கு ஒரு ஆளுமைப் பயிற்ச்சியே
தேவைப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் இது போன்ற மேலாண்மைப் பணியைச் செய்வது என்பது
மிக கடினமாக இருந்திருக்கும்.
“ஈரைம் பதின்மரும் பொருதுகளத்
தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது
கொடுத்தோய்
பா அல்புளீப்பினும் பகலிருளினும்
நா அல்வேத நெறிதிரியினும்…..(புறம்
– 2)
என்ற புறநானூற்று பாடல் மூலம் காணலாம். இதனையே சிலப்பதிகார வாழ்த்துக்காதைச் செய்யுள் புலப்படுத்துகிறது.
“ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது
தானளித்த
சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்
கார்செய் குழலாட வாடாமோ
வூசல்
கடம்பெறிந்த வாபாடி யாடாமோ
வூசல்”
சோழன்
நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கு இடைடே நடைபெற இருந்த போரை தன் தெளிவான கருத்தால்
சந்து செய்விக்கும் நிகழ்வை கோவூர் கிழார் என்ற புலவர் தன் பாட்டினால் புலப்படுத்துகிறார்.
இருவரும் ஒரே குடியைச் சார்ந்தவர்கள் உங்கள் ஒருவருக்குள்ளும் போர் நடைபெற்று வெற்றிப்பெற்றால்
ஒருவர் வெற்றியடைவீர். மற்றொருவர் தோழ்வியடைவீர். இருந்தாலும் தோற்பது உமது சோழர்குடியே
எனவே இருவரும் போரை கைவிடுங்கள் என்று குறிப்பிடுகிறார்.
“ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே
இருவீர் வேற வியற்கையு மன்றே. அதனால்
குடிப்பொரு
ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யும்மிவ் விகலே” புறம் – 45.
மலையமான் மன்னின் குழந்தைகளை யானையின் கால்களில்
இடரச்செய்து கொள்வதற்குத் தயார் நிலையில் இருந்த சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவனின்
செயலைக் கண்டித்து இதுபோன்ற செயல் செய்தீர் என்றால் உலகம் இருக்கும் வரை உன்னை இகழ்ந்து
பேசும். குழந்தையைக் கொன்ற பாவம் சும்மாவிடாது? இது போர் நெறியும் அல்ல எனவே அக்குழந்தைகளை
விட்டுவிடு. பார் யானையைப் பார்த்து அழவேண்டிய குழந்தை சிரிக்கிறது. ஒருகுற்றமும் செய்யாத
குழந்தையைக் கொன்று பாவத்தை ஏற்கதே என்று அறிவுரை பகரும் கோவூர்க்கிழார் பாடல் இதோ.
“நீயே புறவி நல்ல லன்றியும்
பிறவும்
-------------
---------- ---------- -------------
களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு
நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டத்து
செய்ம்மே”
(புறம்-
46.)
துணை நூற்பட்டியல்
1. இளம்பூரணனார்
உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை-5.
2. சங்க இலக்கியக்
கட்டுரைகள், கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1984.
3. முனைவர்
மு.பழினியப்பன், செம்மொழிக் களம், மீனாட்சி நூலகம், புதுகோட்டை, 2010.
4. திரு.பொ.வே.சொமசுந்தரனார்,
விளக்கவுரை, புறப்பொருள் வெண்பாமாலை, சவை சிந்தந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18,
2004.
5. சங்கம்
ஓவியஉரை, சங்கம் வெளியீடு, மதுரை – 7, 2011.
6. டாக்டர்
இரா.பாஸ்கர சேதுபதி, மனிதவள மேலாண்மை மற்றும் மனிதவள மேம்பாடு, பாவை ப்ப்ளிகேஷன்ஸ், சென்னை 14, 2006.
7. டாக்டர்
உ.வே.சாமிநாதையர், புறநானூறு மூலமும் உரையும், சென்னை லா ஜானல் அச்சுக்கூட வெளியீடு,
1935.