/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, April 5, 2014

மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதி நல்கையில்
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி - தமிழாய்வுத் துறை நிகழ்த்தும்
மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள்
நேரடி (on-line) செயல்விளக்கப் பயிலரங்கம் (03.03.2014 முதல் 12.03.2014 வரை)
பயிலரங்கம் - அறிக்கை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையில் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரிதமிழாய்வுத் துறையின் சார்பில் 03.03.2014 முதல் 12.03.2014 வரையிலான 10 நாள்கள் மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்னும் பொருண்மையில் நேரடி செயல்விளக்கப் பயிலரங்கம் நடைபெற்றது. இப் பயிலரங்கம் தொடர்பான விரிவான அறிக்கை :
பயிலரங்கின் தொடக்கவிழா 03.03.2014 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்குத் தூய வளனார் கல்லூரி நூலக வளாகத்தில் உள்ள SAIL அரங்கில் நடைபெற்றது. இத் தொடக்க விழாவிற்குத் தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் . இராசு தலைமை தாங்கினார். பயிலரங்கின் இயக்குநர் முனைவர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர்கள் முனைவர் .சாமிமுத்து, முனைவர் .அந்தோனிகுருசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்திரு முனைவர் சூ. ஜான்பிரிட்டோ அவர்கள் ஆசியுரை வழங்கினார். இத்தொடக்கவிழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் பதிவாளர், தமிழியல் துறைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் இராதா செல்லப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழாய்வுத் துறையின் உதவிப் பேராசிரியர் திரு. ஆரோக்கியத் தனராஜ் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிகளைத் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நாட்டு பண்ணுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் இனிதே நிறைவடைந்தன. விழாவில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டனர். அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.
               பயிலரங்கில் 40 எண்ணிக்கையில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் பயிற்சியாளர்களாகக் கலந்துகொண்டனர். காந்திகிராமியப் பல்கலைக்கழகம் சார்ந்த 5 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்ந்த 6 முனைவர் ஆய்வாளர்கள், கேரளப் பல்கலைக்கழகம் சார்ந்த 2 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், அழகப்பா பல்கலைக்கழகம் சார்ந்து ஒரு முனைவர் பட்ட ஆய்வாளர், அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் 3 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பாரதிதாசன் பல்கலை கழகத்திற் குட்பட்ட தஞ்சை வீரையா வாண்டையார் பூண்டி புட்பம் கல்லூரி, திருச்சி பெரியார் கல்லூரி, தேசியக் கல்லூரி, பிஷ ஹீபர் கல்லூரி இவற்றிலிருந்து தலா ஒரு முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என 21 ஆய்வாளர்களும், தூய வளனார் தமிழாய்வுத் துறை முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 12 பேர், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் 7பேர் என 19 எண்ணிக்கையில் மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர். இதில் தூய வளனார் கல்லூரி ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர் திரு. ஜெயராஜ் என்பவர் பார்வைத் திறனற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முற்பகல் 11.30 மணியளவில் நூலக வளாகத்தில் உள்ள JCICT, e-Class room அறையில் செயல்விளக்கப் பயிலரங்கம் தொடங்கியது. பயிற்சியாளர்கள் அனைவருக்கும் முனைவர் இராதா செல்லப்பன் அவர்கள் குறிப்பேடு, எழுதுகோல் அடங்கிய தோள் பைகளை வழங்கினார். ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும் இணைய இணைப்புடன் கூடிய கணிப்பொறி வழங்கப்பட்டுப் பயிற்சி பெறத் தொடங்கினர். முதல் அமர்வில் கணினி அறிமுகம் என்னும் தலைப்பில் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரிக் கணினித் துறை உதவிப் பேராசிரியர் திரு. விமல் ஜெரால்டு உரையாற்றி, கணினியின் பல்வேறு பாகங்கள் குறித்து உரையாற்றினார். பிற்பகல் 1.30 – 3.00 மணிவரை 2-ஆம் அமர்வு நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் விமல் ஜெரால்டு கணினியின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றிக் கணினியை எவ்வாறு இயக்குவது அதை எவ்வாறு பராமரிப்பது போன்ற பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார். மாலை 3.00 – 4.30 வரை விண்டோஸ் அறிமுகம் என்னும் தலைப்பில் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் ஞா. பெஸ்கி விளக்கி உரையாற்றிப் பின்னர்ப் பயிற்சிகளைக் கொடுத்தார்.
04.03.2014 செவ்வாய் காலை 9.30 – 12.30 வரை 4 மற்றும் 5ஆம் அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வில் தமிழ் மென்பொருள்வகையும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்தின் உதவிப் பேராசிரியர் திரு. இல. சுந்தரம் உரையாற்றினார். தமிழில் எழுதுவதற்கு மென்பொருள்கள் உருவாக்கப்பெற்ற வளர்ச்சிகளை விவரித்தார். தமிழ் உள்ளீட்டிற்கான மென்பொருள்களின் செயல்பாடுகள் குறித்துப் பயிற்சி அளித்தார். 6ஆம் அமர்வு இணைய வளங்கள் குறித்து நடைபெற்றது. தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி கணினித் துறை இணைப்பேராசிரியர் திரு.ஜெயபாலன் அவர்கள் உரையாற்றினார். இணையத்தில் உள்ள வளங்களை வகைப்படுத்திக் கூறினார். குறிப்பாகத் தமிழ் வளங்களைப் பெறுவது குறித்துச் செயல்விளக்கங்களைச் செய்து காட்டி, பயிற்சியாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினார். 7ஆம் அமர்வு மாலை 3.00 – 4.30 மணி வரை நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் திருச்சி இனாம்குளத்தூர் உறுப்புக் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் துரை. மணிகண்டன் இணையம் + வலைப்பூ அறிமுகம் என்னும் தலைப்பில் உரையாற்றி, இணையத்தின் செயல்பாடுகள், வலைப்பூவின் செயல்பாடுகள் குறித்துப் பயிற்சிகள் வழங்கினார்.


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன். மற்றும் முனைவர் துரை.மணிகண்டன்



05.03.2014 புதன் 8 மற்றும் 9ஆம் அமர்வுகள் காலை 9.30 – 12.30 வரை நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி விஷுவல் மீடியா நிறுவனம் சார்ந்த திரு. செல்வ முரளி கணினியில் தமிழ் + தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் குறித்து உரையாற்றினார். ஒருங்குறி எழுத்துருவின் சிறப்புகளை விளக்கினார். தமிழ் எழுத்துருக்களை நாமே எவ்வாறு உருவாக்கிக் கொள்ளலாம் என்பது குறித்துப் பயிற்சிகளை அளித்தார். கணினியின் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளைப் பயிற்சியாளர்களுக்குத் தன் உரையில் தெரிவித்தார். தமிழ் தட்டச்சு முறையை எவ்வாறு வேகமாகக் கற்றுக்கொள்வது என்பதற்குப் பயிற்சி அளித்தார். பிற்பகல் 10 ஆம் அமர்வு பிற்பகல் 1.30-3.00 வரை மின்-நூல்+ஆக்கம் என்னும் தலைப்பில் நடைபெற்றது. இந்த அமர்வில் உரையாற்றிட வேண்டிய மைசூரில் கணினி நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் திரு. .குணசேகரன் வருகை தரவில்லை. இதனைத் தொடர்ந்து, பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மின்-நூல்கள் குறித்தும் அவை எவ்வாறு படக்கோப்பாக, பிடிஎ கோப்பாக, ஒருங்குறி எழுத்துரு கோப்பாக உருவாக்கப்படுகின்றது என்பதைச் செயல்விளக்கம் மூலம் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார். மின் நூல்களின் பயன்கள் குறித்தும் செய்திகள் தெரிவித்தார். 11ஆம் அமர்வு மின்-நூலகம் என்னும் தலைப்பில் மாலை 3.00-4.30 வரை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி நூலகர் முனைவர் கே.செந்தில்நாயகம் மின் நூலகம் குறித்துப் பல்வேறு செய்திகளைத் தெரிவித்தார். நூல்களை எவ்வாறு தேடுவது? குறிப்பாகப் பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்கள் மின்னாக்கம் செய்யப்பெற்று எந்தெந்த மின் நூலகங்களில் இடம் பெற்றுள்ளன என்பதை விளக்கிக் கூறினார். அதன் தொடர்பான இணையத் தளங்களைப் பயிற்சியாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பயிற்சியாளர்கள் அது தொடர்பான இணையத் தளங்களுக்குச் சென்று மின்-நூலகங்களைப் பார்வையிட்டனர்.
06.03.2014 ஆம் நாள் வியாழக்கிழமை 12ஆம் அமர்வு காலை 9.30-11.00 வரை நடைபெற்றது. தகவல் பரிமாற்றத்தில் e-text என்னும் தலைப்பில் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி நூலகம் மற்றும் தகவல் மைய இயக்குநர் முனைவர் .துரைராஜன் உரையாற்றினார். மின்-உரைகள் என்பது எழுத்து, ஒலி, ஒலி&ஒளி வடிவக் கோப்புகள் என்ற 3 வகையில் அமைந்துள்ளன என்பதைத் தன் உரையில் சுட்டிக்காட்டினார். மின் உரைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை ஆங்கில மொழி அளவிலும், தமிழ்மொழி அளவிலும் நடைபெற்ற முயற்சிகளைக் குறிப்பிட்டார். மின் உரைகளின் தேவையினையும், அவை இணையம் வழி வேகத்துடன் பரிமாறப்படுவதையும் எடுத்துரைத்தார். மின்-உரைகள் குறித்த நம்பகத்தன்மை மற்றும் அதன் நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டினார். மின்-உரைகள் தொடர்பான இணையத் தளங்களைப் பயிற்சியாளர்கள் தேடுபொறியின் மூலம் கண்டறிந்து செய்திகளை அறிந்தனர். 13ஆம் அமர்வு முற்பகல் 11.00-12.30 வரை நடைபெற்றது. இந்த அமர்வில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூலோகரம்பை அவர்கள் கலந்துகொண்டு அலைபேசியில் இணையம் தொடர்பான ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் வழியாக அலைபேசி வழியாக இணையத்தின் செயல்பாட்டினைப் பெறலாம் என்றும் அதன் வழி மிகப்பெரிய பொருட்செலவில் கணினியை வாங்கவேண்டிய தேவையில்லை என்பதையும் விளக்கினார். அலைபேசியில் இணையத்தை இயக்கி நமக்குத் தேவையான மின் உரைகளை மிக எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதைச் செயல்விளக்கங்கள் மூலம் விளக்கினார். 14 மற்றும் 15ஆம் அமர்வு பிற்பகல் 1.30-4,30 வரை நடைபெற்றது. இந்த இரு அமர்வுகளிலும் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர், விக்கிபீடியா அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான தேனி மு.சுப்பிரமணியம் கலந்துகொண்டு இணையத்தில் உள்ள விக்கிபீடியா என்னும் கட்டற்ற மின் களஞ்சியத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். தமிழில் விக்கிபீடியா என்னும் கலைக்களஞ்சியம் எவ்வளவு கட்டுரைகளைத் தாங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட்டார். தமிழில் எந்தப் பொருளில் வேண்டுமானாலும் விக்கிபீடியாவில் தேடிச் செய்திகளைப் பெறலாம் என்று குறிப்பிட்டார். விக்கிபீடியாவில் நாமும் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதைச் செயல்விளக்கம் மூலம் விளக்கிப் பேசினார். அதற்கான கணக்கினைத் தொடங்கும் முறையினைப் பயிற்சியாளர்களுக்கு இணையம் வழி செயல்படுத்திக் காட்டினார். விக்கிபீடியா இணையத் தளம் சென்று பயிற்சியாளர்கள் தமிழின் பல்வேறு தளங்களைப் பார்வையிட்டனர்.
07.03.2014ஆம் வெள்ளிக்கிழமை 16ஆம் அமர்வு காலை 9.30 – 11.00 நடைபெற்றது. இந்த அமர்வில், தொல்காப்பியத் தரவுகள் என்னும் தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் உமாராஜன் உரையாற்றினார். தொல்காப்பியம் தொடர்பான தரவுகள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்பனவற்றைப் பட்டியலிட்டார். இந்தத் தரவுகளை ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும் விளக்கினார். பயிற்சியாளர்கள் தொல்காப்பியத் தரவுகளை இணையத் தளங்கள் மூலம் கண்டறிந்தார்கள்.  17ஆம் அமர்வு 11.00 – 12.30 வரை நடைபெற்றது. இந்த அமர்வில் திண்டுக்கல், காந்தி கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சிதம்பரம் அவர்கள் கலந்துகொண்டு சங்க இலக்கியத்தில் உள்ள எட்டுத்தொகை நூல்கள் குறித்த இணையத் தளத் தரவுகளை விவரித்தார். எட்டுத்தொகை நூல்களின் சிறப்பினையும் விளக்கினார். தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் உள்ள எட்டுத்தொகை நூல்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்றும், அந்த இலக்கியத்தில் உள்ள மரம், செடி, கொடி போன்ற பல்துறை செய்திகளை அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை விளக்கினார். பயிற்சியாளர்கள் அந்த இணையத் தளம் சென்று பார்வையிட்டனர். பிற்பகல் 1.30 – 4.30 வரை 18,19ஆம் அமர்வுகள் நடைபெற்றன. இந்த இரு அமர்வுகளிலும் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு கலந்துகொண்டு பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் குறித்த இணையத் தளத் தரவுகளை விவரித்தார். ஆற்றுப்படை நூல்களின் சிறப்பினையும், ஆய்வு உலகத்தில் குறைவான அளவிலே ஆற்றுப்படை நூல்கள் ஆராயப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். பயிற்சியாளர்கள் ஆற்றுப்படை நூல்கள் தொடர்பான தரவுகளை இணையத்தில் தேடினர்.
08.03.2014 சனிக்கிழமை காலை 9.30 – 12.30 வரை 20 மற்றும் 21ஆம் அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பழனியப்பன் கலந்துகொண்டு பத்துப்பாட்டில் உள்ள அகநூல்கள், புறநூல்கள் குறித்து உரையாற்றினார். அவை குறித்த தரவுகள் மின்னாக்கம் செய்யப் பெற்று எந்தெந்த இணையதளத்தில் உள்ளன என்பது பற்றி விளக்கினார். இலங்கையிலிருந்து வெளிவரும் நூலகம் என்னும் மின்நூலகம் குறித்த செய்திகளைப் பயிற்சியாளர்களோடு பரிமாறிக்கொண்டார். 22ஆம் அமர்வு பிற்பகல் 1.30 – 3.00 மணிவரை நடைபெற்றது. இந்த அமர்வில், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறைப் பேராசிரியர் முனைவர் . பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி உரையாற்றினார். அறநூல்கள் குறித்த செய்திகளை விவரித்தார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியது என்றாலும் அவை சமூக ஒழுக்கம் குறித்துப் பேசியவை என்று குறிப்பிட்டார். மேலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தரவுகள் இணையத்தில் உள்ளவைகளைச் சுட்டிக்காட்டினார். பயிற்சியாளர்கள் அந்தந்த இணையத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். 23ஆம் அமர்வு பிற்பகல் 3.00-4.30 வரை நடைபெற்றது. இந்த அமர்வில் மின்-அகராதிகள் குறித்து உரையாற்றிட வேண்டிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் .அன்பழகன் வருகைதரவில்லை. இந்த அமர்வில் மின்-அகராதிகள் குறித்த செய்திகளைப் பயிலரங்க இயக்குநர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பயிற்சியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். ஆய்வாளர்களுக்கு அகராதிகளின் தேவையை எடுத்துரைத்தார்.
09.03.2014ஆம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 – 12.30 வரை 24, 25ஆம் அமர்வுகள் நடைபெற்றன. இந்த இரு அமர்வுகளிலும் சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் டேவிட் பிரபாகரன் அவர்கள் சங்க இலக்கிய இலக்கணக் குறிப்புகளும் விரிதரவுகளும் (corpus) என்னும் தலைப்பில் உரையாற்றினார். சொல்லாராய்ச்சியில் இந்த விரிதரவுகள் எங்ஙனம் பயன்படுகின்றது என்பதை விளக்கினார். எந்தவொரு சங்க இலக்கியப் பாடல்களின் இலக்கணக் குறிப்பையும் எளிதாக அறிந்துகொள்ளலாம் என்பதைச் செயல்விளக்கம் மூலம் பயிற்சியாளர்- களுக்குப் பயிற்சியளித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையத் தளத்தில் உள்ள விரிதரவுகளின் செய்திகளைப் பயிற்சியாளர்களோடு பகிர்ந்துகொண்டார். 26ஆம் அமர்வு பிற்பகல்1.30 -3.00 மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் மணிமேகலை காப்பியம் குறித்துக் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.வேலம்மாள் உரையாற்றினார். ஐம்பெருங்காப்பியங்களில் மணிமேகலையின் சிறப்பிடத்தைப் பல்வேறு இலக்கியச் சான்றுகளுடன் விரித்துரைத்தார். பின்னர் மணிமேகலை காப்பியம் எந்தெந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன என்று பட்டியலிட்டு விளக்கினார். பயிற்சியாளர்கள் அவற்றை முறையாக அறிந்துகொண்டனர். 27ஆம் அமர்வு பிற்பகல் 3.00 – 4.30 மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் கோயமுத்தூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் மோ.செந்தில்குமார் தொல்காப்பியம் காணொளி உரை உருவாக்கம் (வீடியோ டெக்ஸ்ட்) குறித்து உரையாற்றினார். இணையத்தில் விசும்பு என்னும் இணையதளத்தில் இவர் தயாரித்து உரையாற்றிய தொல்காப்பியம் குறித்த வீடியோ இடம் பெற்றுள்ளமையைப் பயிற்சியாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். மேலும் எழுத்து, குரல் என்னும் உரையமைப்பைவிடவும் காணொளி உரை மக்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது என்று விளக்கிக்கூறினார். மேலும் காணொளி உரை உருவாக்கம் எவ்வாறு நிகழ்கின்றது என்பதையும் அதற்குத் தேவைப்படும் மென்பொருள்கள் குறித்தும் விளக்கினார். மேலும் தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு காணொளி உரைகளைப் பயிற்சியாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். இவரின் முயற்சி பயிற்சியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது.
10.03.2014 திங்கள்கிழமை காலை 9.30-11.00 மணி வரை 28ஆம் அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் சிலப்பதிகாரம் காப்பியம் குறித்துக் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் .துரையரசன் உரையாற்றினார். சிலப்பதிகாரத்தின் பெருமைகளையும், தமிழ் இலக்கியத்தின் முதல் காப்பியம் என்பதையும் பல்வேறு ஆதாரங்களுடன் உரையாற்றினார். சிலப்பதிகாரம் தொடர்பான இலக்கியத் தரவுகள் உள்ள இணையதளங்களைப் பயிற்சியாளர்களுக்கு அறிமுகம் செய்தார். பயிற்சியாளர்கள் சிலப்பதிகாரம் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளைப் பதிவிறக்கம் செய்துகொண்டனர். சிலப்பதிகாரம் தொடர்பான அறிஞர் பெருமக்களின் உரைகளை Youtube இணையதளத்தில் காணலாம் என்று பட்டியல் தந்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மட்டுமே மூலமும் அதற்குரிய உரைகளையும் வெளியிட்டிருப்பதாய்ப் பயிற்சியாளர்களுக்குத் தெளிவுபடுத்தினார். 29ஆம் அமர்வு 11.00-12.30 வரை நடைபெற்றது. இந்த அமர்வில் திருக்குறள் தொடர்பான செய்திகள் உரையாற்றிட வேண்டிய கருத்தாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் வருகைதரவில்லை என்பதால் பயிலரங்க இயக்குநர் முனைவர் தி.நெடுஞ்செழியன் திருக்குறள் தொடர்பான பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். உலக அளவில் திருக்குறள் பெற்றுள்ள சிறப்புகளைக் கூறினார். திருக்குறள் தொடர்பான இணையதளங்களைப் பயிற்சியாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். மேலும் உரை வடிவிலும், காணொளி வடிவிலும் இணையத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு திருக்குறள் தொடர்பான பல்வேறு தரவுகளைப் பயிற்சியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துப் பயிற்சி வழங்கினார். 30ஆம் அமர்வு பிற்பகல் 1.30-3.00 மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் முத்தொள்ளாயிரம் பற்றி சென்னை, விவேகானந்தா கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் . இளங்கோவன் உரையாற்றினார். சேர,சோழ,பாண்டியர் என்னும் மூன்று அரசர்களைப் பற்றிய வரலாற்று சிறப்புகளை எடுத்தியம்பினார். பின்னர் முத்தொள்ளாயிரம் குறித்த இணையதரவுகள் குறித்து விளக்கினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முத்தொள்ளாயிரம் குறித்து வெளியிட்டுள்ள காணொளிகளைக் காட்சிப்படுத்தினார். தமிழர்களின் வீரம், பண்பாடு, நாகரிகம், மக்களின் வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்களைப் பயிற்சியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். 31ஆம் அமர்வு பிற்பகல் 3.00-4.30 வரை நடைபெற்றது. இம் அமர்வில் வீரசோழியம் குறித்துத் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் . சூசை உரையாற்றினார். வீரசோழியம் கூறும் இலக்கணங்கள் குறித்துப் பயிற்சியாளர்களுக்கு விளக்கினார். வீரசோழியம் குறித்த இணையத் தரவுகள் மிகவும் குறைவாகவே இருப்பதைப் பேராசிரியர் .சூசை சுட்டிக்காட்டினார். இலக்கண வரலாற்றில் வீரசோழியத்தின் பங்கினை எடுத்துரைத்தார். பயிற்சியாளர்கள் வீரசோழியம் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்துகொண்டனர்.
11.03.2014 செவ்வாய் காலை 9.30-11.00 வரை 32ஆம் அமர்வு நடைபெற்றது. இம் அமர்வில் அரியலூர் அரசுக் கலைக்கல்லூரித் தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் . இளையராஜா கலந்துகொண்டு பழந்தமிழ் இலக்கியங்களில் பிறதுறைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். பழங்கால இலக்கியங்களில் கல்வியியல் சிந்தனைகள், மருத்துவச் சிந்தனைகள், பொறியியல் சிந்தனைகள் போன்றவற்றை முன்வைத்தார். மேலும் திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் தனிநபர் ஆளுமை, கால மேலாண்மை, தர மேலாண்மை, மேலாண்மை தொடர்பான கோட்பாடுகள் போன்ற பல்வேறு தகவல்களைப் பயிற்சியாளர்களுடன் பரிமாறிக்கொண்டார். நவீன காலத்தில் பேசப்படும் பல்வேறு மேலாண்மை கோட்பாடுகளுக்குத் திருக்குறள் முன்னோடியாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டினார். இணையத்தில் பிறதுறை தொடர்பான செய்திகளைப் பயிற்சியாளர்கள் தேடி அறிந்தனர். 33ஆம் அமர்வு முற்பகல் 11.00-12.30 வரை நடைபெற்றது. இந்த அமர்வில் இசைப் பேராசிரியர் இராச. கலைவாணி அவர்கள் கலந்துகொண்டு பழந்தமிழ் இலக்கியங்களில் கலைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இசை, பாடல், நடனம், கவின் கலைகள், நிகழ்த்து கலைகள், பழங்கால இலக்கியத்தில் பேசப்பட்ட இசைக் கருவிகள் குறித்த பல செய்திகளைக் காட்சி வடிவில் வெளிப்படுத்தினார். சங்க இலக்கியப் பாடங்களை இசைக்கூட்டி பாடித்தான் நடத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார். திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றை இசையோடு எப்படிப் பாடவேண்டும் என்பதைப் பாடிக் காட்டினார். இணையத் தளத்தில் சங்க இலக்கியத்தோடு தொடர்புடைய இசை, நாட்டியம் குறித்த தகவல்களைப் பயிற்சியாளர்களோடு பரிமாறிக் கொண்டார். 34ஆம் அமர்வு பிற்பகல் 1.30-3.00 மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் பழந்தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்னும் தலைப்பில் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர் முனைவர் .அந்தோனிகுருசு உரையாற்றினார். சங்க இலக்கியங்களுக்கு இதுவரை வெளிவந்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் சுட்டிக்காட்டினார். மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களையும் அதனைத் தீர்க்கும் முறைகளையும் தெளிவுபடுத்தினார். ஒரே பாடல் மூவரால் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது எடுத்துக்காட்டுகளைக் கூறினார். சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் தொடர்பான இணையத் தளங்களைச் சுட்டினார். பயிற்சியாளர்கள் மொழிபெயர்ப்பின் தேவைகளையும் அதன் அடிப்படைக் கூறுகள், கொள்கைகள், கோட்பாடுகள் எனப் பலவற்றையும் அறிந்தனர். 35ஆம் அமர்வு பிற்பகல் 3.00-4,30 வரை நடைபெற்றது. மின்-ஆளுகை குறித்து வல்லமை மின்இதழ் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் உரையாற்றினார். தகவல் தொடர்பில், குறிப்பாக இணையம் வழியிலான மின் ஆளுகையின் தேவை, பயன் இவற்றைக் குறிப்பிட்டார். மின் ஆளுகை மூலம் மத்திய,மாநில அரசுகளின் செயல்பாடுகளை விவரித்தார். தனி மனிதர்களும் தங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இணையத்தில் இணைத்துவைத்து மின் ஆளுகை என்றளவில் நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இணையம் வழியாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி எடுத்துரைத்தார். மின் ஆளுமை குறித்த பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள இணையதளங்களை அறிமுகப்படுத்தினார்.
12.03.2014 புதன்கிழமை காலை 9.30-11.00 மணிவரை 36ஆம் அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் வலைப்பூ உருவாக்கம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் கல்பனா பயிற்சியாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கினார். வலைப்பூ என்றால் என்ன? இணையத் தளத்திற்கும் வலைப்பூவிற்கும் உள்ள வேறுபாடுகள் யாது? வலைப்பூவை எங்ஙனம் உருவாக்குவது? உருவாக்கிய வலைப்பூவில் எழுத்து வடிவிலான உரைகளை எவ்வாறு தட்டச்சு செய்து உள்ளீடு செய்வது? ஒலிக் கோப்புகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது? காணொளிகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது போன்ற பல்வேறு செய்திகளைப் பயிற்சியாளர்களுக்கு விளக்கி நேரடி செயல்விளக்கம் அளித்தார். அதன் அடிப்படையில் பயிற்சியாளர்கள் வலைப்பூவை உருவாக்கிக் கொண்டனர். 37ஆம் அமர்வு முற்பகல் 11.00-12.30 மணி வரை நடைபெற்றது. இம் அமர்வில் இணையத்தில் உள்ள பல்லூடகம் குறித்துப் பயிலரங்க இயக்குநர் முனைவர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றினார். gtalk மூலம் இணையம் வழி பேசுதல், skype மூலம் நேருக்குநேர் பார்த்துக்கொண்டு உரையாடுதல், MP3 ஒலிவடிவக் கோப்புகளை உருவாக்கப் பதிவு கருவி, பதிவில் ஏற்படும் குறைகளைக் களையப் பயன்படும் MP3 Cutter, வீடியோ கட்டர் போன்ற பல்வேறு மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் நேரடி செயல்விளக்கங்கள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. 38ஆம் அமர்வு பிற்பகல் 1.30-3.00 மணி வரை நடைபெற்றது. தமிழ் பிழைதிருத்தும் மென்பொருளான மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளரை அறிமுகம் செய்து முனைவர் . தெய்வசுந்தரம் உரையாற்றினார். பிழைதிருத்தி எவ்வாறு உருவாக்கப்பட்டது? கணினிக்குத் தமிழ் இலக்கணம் தொடர்பான செயற்கை அறிவூட்டம் செய்வது எவ்வாறு என்பன போன்ற பல்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்.
12.03.2014ஆம் நாள் மாலை 3.00 மணிக்கு பயிலரங்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரிக் கணினித்துறைத் தலைவர் முனைவர் எஸ்.டி.இராஜன் தலைமை தாங்கினார். தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் . இராசு முன்னிலை வகித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர் பி. செல்வக்குமாரன் வரவேற்புரையாற்றினார். பயிலரங்கில் கலந்துகொண்ட 40 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள், தமிழ்க்கணினி தொடர்பான நூல்கள், தமிழ் மென்பொருள்கள், ஒருங்குறி எழுத்துருக்கள் அடங்கிய குறுவட்டு ஆகியவற்றை வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர் சூ.ஜான்பிரிட்டோ அவர்கள் வழங்கி ஆசியுரை நல்கினார். கணினி மொழியியல் வல்லுநர் முனைவர் . தெய்வசுந்தரம் சிறப்புரையாற்றினார். பயிற்சி தொடர்பான பின்னூட்ட உரையை கருத்தாளர்கள் சார்பில் முனைவர் ஞா. பெஸ்கி வழங்கினார். பயிற்சியாளர்கள் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்ந்த லெனின், காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்ந்த ராஜேஷ்கண்ணா, கேரளப் பல்கலைக்கழகம் சார்ந்த செல்வி விஜி ஆகியோர் உரையாற்றினர். “இப் பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்திருந்தது என்றும் ஆய்வுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்னும் பயிற்சியாளர்கள் குறிப்பிட்டார்கள். மேலும் இந்த 10 பயிலரங்கம் வாயிலாக தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்ய முழுமையாகக் கற்றுக்கொண்டோம். தேடுபொறிகளில் எங்களுக்குத் தேவையான தரவுகளை நாங்களே தேடிக் கொள்ளும் இணைய பயிற்சியைப் பெற்றோம்என்று குறிப்பிட்டார்கள். பயிலரங்க இயக்குநர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றி கூறினார். தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் செல்வி பாக்கிய செல்வரதி நிகழ்ச்சித் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் பயிலரங்கின் நிகழ்வுகள் மாலை 05.15 மணிக்கு நிறைவு பெற்றன. நிறைவு விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள், பயிற்சியாளர்கள், தமிழ்த்துறை மற்றும் கணினித் துறை மாணவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பெற்றது. தமிழுக்கு இந்தப் பயிலரங்கம் முன்னோடி முயற்சியாக முதல் முயற்சியாக அமைந்திருந்தமை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
******


0 comments: