/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 24, 2011

செம்மொழித்தமிழ் தரவுகள்

|0 comments
செம்மொழித் தரவுகள்

.கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி
தமிழ்குடி. என்ற பொய்யா வாக்கிற்கிணங்க உலகமொழிகளில்
தமிழ்மொழியும் செம்மொழியாகி தனக்குரிய இடத்தைப் பெற்றுத்
திகழ்கிறது. உலகச் செம்மொழிகளாக தமிழ், கிரேக்கம் (Greek),
இலத்தீன் (Latin), அரேபியம் (Arabic), சீனம் (Chineese),ஹீப்ரூ
(Hebrew), பாரசீகம் (Persian), சமஸ்கிருதம் (Sanskrit) போன்றவைத்
திகழ்கின்றன



செம்மொழித் தகுதிகள்

செம்மொழித் தகுதிக்கு மொழியியலார் பதினொரு
தகுதிப்பாடுகளை வகுத்துள்ளனர். அவை முறையே,

1. தொன்மை (Antiquity)
2. தனித்தன்மை (Individuality)
3. பொதுமைப் பண்பு (Common Character)
4. நடுவுநிலைமை (Neutrality)
5. தாய்மைத் தன்மை (Parental Kingsitd)
6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
7. பிறமொழித் தாக்கமிலா தனித்தன்மை
8. இலக்கிய வளம் (Literary Prowess)
9. உயர் சிந்தனை (Noble Ideas and Ideals)
10. கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11. மொழிக் கோட்பாடு (Linguistic Principles)

என்பனவாகும். இந்த தகுதிப்பாடுகளை அளவுகோளாகக் கொண்டு
உலக இலக்கியங்களைச் செம்மொழித் தகுதிக்கு கொண்டு வருகின்றனர்.
இவ் அளவுகோள் தமிழுக்கும், தமிழ்மொழிக்கும் முழுக்க முழுக்கப்
பொருந்துவனவாக உள்ளன என்பதுதான் உண்மையாகும்.

தமிழ்மொழி

உலகப் பண்பாட்டிற்கு உயரிய வழிகாட்டியாக விளங்கும்
கிரேக்கம், இலத்தீன் மொழிகளைப் போல இந்தியப் பண்பாட்டிற்கும்
ஏன் உலகப் பண்பாட்டிற்கும் அணிகலன்களாக விளங்கும்
மொழிகளாகத் தமிழ் மற்றும் தமிழ் வழி வந்த சமஸ்கிருதம் திகழ்கிறன.

தமிழின் தொன்மையை நாம் காண வேண்டுமாயின்”கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி” என்ற பாடல்
அடியால் காணலாம். எல்லை வரையரை என்பது ”வடவேங்கடம்
தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியப் பாயிரம்
தமிழ்மொழி பேசப்பட்டநிலப்பகுதியைச் சுட்டுகிறது. உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை என்றுரைக்கலாம். ஒரு சில நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக விளங்குகிறது. பி.பி.சி. தனது அலைவரிசையில் தமிழ்ச் செய்தியையும் வெளியிட்டு வருகிறது. அத்தகையச் சிறப்புடன் வாழும் தமிழ்மொழி இணையத்திலும் நல்ல வளர்ச்சி நிலைப் பெற்று வருகிறது.
செம்மொழித் தகுதிகள் என்ற தகுதிப்பாட்டு அடிப்படையில்
இணையத்தில் இத்தகுதிபாடுகளைத் தமிழ்மொழி எத்தகைய வகையில்
பெற்றுத் திகழ்கிறது? அவை எந்தெந்த இணைய முகவரியில்
கிடைக்கின்றன? என்பதனைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

தொன்மை

தமிழர்களின் தோற்ற வரலாறு சுமார் மூவாயிரம் மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே
சென்று மொழியியலார்களின் ஆராய்ச்சிப்படி தமிழின் தோற்ற
வரலாற்றைக் கணக்கிட இயலவில்லை. ஆகையால் இதனை
தொன்மைமிகு மொழி என்றே குறிப்பிடுகின்றனர்.
குமரிக் கண்டத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி
ஆதிமொழி தமிழ் என்றே கூறிச் செல்கின்றனர். மேலும் கடல் கோள்கள்
(சுனாமி) ஏற்படும் முன் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்த
குமரிக்கண்டப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள்
பேசிய மொழி தமிழ்மொழி. இது மட்டுமின்றி தமிழை வளர்க்க இரண்டு
தமிழ்ச்சங்கங்களைத் தோற்றுவித்ததாக இறையனார் களவியல் உரை
கூறுகிறது.

கடல்கோள்களினால் தமிழர்கள் வெவ்வேறு நிலங்களுக்குச்
சென்றதால் அங்கு அவர்கள் இனக் குழுவாக பல கிளை மொழிகளில்
பேசியுள்ளனர். இன்று எஞ்சிய இந்திய நிலப்பகுதியில் மட்டும்
தமிழர்கள் வாழ்வதை,

”ப•றுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”

என்ற சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் உண்மைக்
கூற்றாகும்.

உலகில் தோன்றிய முதன்மையான, மிகத்தொன்மையான
இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இது 2600 ஆண்டுகளுக்கு
முன்பே இயற்றப்பட்டு இருக்கிறது.
இலக்கண நூலைப் போன்று அது தோன்றுவதற்கு ஆதாரமான
இலக்கியங்கள் அம்மொழியில் பெருமளவில் உருவாக்கியிருக்க
வேண்டும். அந்த வகையில் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை விளங்குகிறது.

இந்நூல் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் பல புலவர்களால்
பலப் பகுதிகளிலிருந்து தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் ஆகும்.
எனவே உலகிலேயே முதல் தொகுப்பு நூல் என்ற பெருமை நம்
தமிழ்மொழிக்கு உண்டு. எனவே காலத்தால் இலக்கணத்தால்
இலக்கியத்தால் மிகவும் தொன்மை வாய்ந்ததாக தமிழ் மொழி
திகழ்கிறது.
இச்செய்திகளையும் மற்றும் தரவுகளையும்
1. www.tamilvu.org
2. www.tamishinzhchi.blogspot.com
3. www.kaniyatamil.com
4. www.varalaaru.com
5. www.ta.wikibooks.org
6. www.ta.cict.in
7. www.tamilthottam.in
போன்ற இணையதளங்கள் மற்றும் வளைப்பூக்களில்
கிடைக்கின்றன.

2. தனித்தன்மை

உலகமொழிகளில் செம்மொழித் தகுதியைப் பெற்ற மொழிகளிடம்
இல்லாத தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கே உண்டு. அந்த வகையில் தமிழ்
மொழி மட்டுமே உலகில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற
முத்தமிழாக வளர்ந்து, வளம் பெற்று வந்துள்ளது. இதனைச்
சிலப்பதிகாரம்,
”இயலிசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள்” என்று கூறி உறுதிப்படுத்துகிறது.
சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் ஒட்டு மொத்த மனித வாழ்வையும்
அகம்-புறம் என்ற அடிப்படையில் பிரித்து இலக்கியம்
படைத்துள்ளனர். சமுதாய வாழ்க்கையில் காதலை, அன்பை அகம்
என்றும், வீரம், கொடை சார்ந்த வாழ்க்கையைப் புறம் என்றும் பெரும்
பிரிவாகப் பிரித்து இலக்கியம் படைத்துள்ளனர். மேலும் அகத்தை,
திருமணத்திற்கு முன்பு நடந்த வாழ்வை களவியல் என்றும் திருமணத்திற்குப்
பின்பு வாழ்ந்த வாழ்வை கற்பியல் என்றும் தமிழர் வாழ்க்கை
நெறிகளை பகுத்து வாழ்ந்ததை இலக்கியங்கள் மூலம் பதிவு
செய்துள்ளனர். இது தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகத் திகழ்கிறது.
தமிழின் தனிச்சிறப்பாக உலகே வியக்க வைக்கும் அடுத்த கட்ட
பெருமை நிலத்தைப் பிரித்து அந்நிலத்திற்குரிய இலக்கியங்கள்
பாடியவையாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெல்லை, பாலை என்ற
ஐந்து வகை நிலப்பகுப்புகளாகும்.
1 www.tamilvu.org
2. www.muthukamalam.com
3. www.mintamil.com
4. www.thamizulagamviza.blogspot.com
5. www.tamil.chennaionline.com
போன்ற இணைய தளங்கள் மற்றும் வலைப்புக்கள், மின்
குழுமங்களில் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன்.

3. பொதுமைப் பண்புகள் (Common Character)

தமிழ் இலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்) பொதுவாக தனி
மனித கருத்தையோ, ஒரு சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையோ
அல்லது ஒரு குறிப்பிட்ட இனக் குழுக்களுக்காகவோ இலக்கியம்
படைக்கவில்லை. உலகமயமாக்களின் நன்மைகளைக் கருத்தில்
கொண்டே உலகில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும்
வகையிலும், இலக்கியத்தின்படி வாழ்ந்து உலக மக்கள் இனம்
செழித்தோங்கும் விதத்தில் பொதுமைத் தகுதிகளைப் பெற்ற
இலக்கியமாக இன்றும் தமிழ் விளங்குகிறது. இதனை உணர்ந்த காலக்
புலவன் கணியன் பூங்குன்றனார்,

”யாதும் ஊரே யாவரும் கேளீர்....”
என்ற உன்னத வைர அடியை பாடிச் சென்றுள்ளார். உலகப்
பொதுமறையாகவும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட
நூலாகவும் திகழும் திருக்குறள் இன்றளவும் பொதுமைப் பண்புகளைப்
பெற்றுத் திகழ்கிறது. எனவே உலகமே வியப்பாக காணும் வகையில்
கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை ஒன்றும் உள்ளது. நாடு,
மொழி, இனம், சமயம் அனைத்து கடந்த நிலையில் மனித குல
நலன்களை மட்டுமே கருத்திற் கொண்டு படைக்கப்பட்ட
நீதிக்களஞ்சியமாக திருவள்ளுவர் பொதுமைப் பண்போடு
படைத்துள்ளார். இதுபோன்ற அறிய இலக்கியச் செய்திகள் பொதுமைப்
பண்புகளைப் பெற்றுத் திகழ்கிறது. இதனை,
1. www.tamilvu.org
2. www.tamilheritage.org
3. www.koodal.com
போன்ற இணையதளங்களில் காணமுடிகின்றன.

4. நடுவுநிலைமை (Neutrality)

உலக இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒரு மதத்தைச் சார்ந்தோ,
அல்லது அந்நாட்டு மக்களுக்குக் கூறும் அறிவுரையாகவே தான்
அமைந்துள்ளன. (எ.கா. §.¡மரின் இலியட், ஒடிசி, சமஸ்கிருதத்தில்
மகாபாரதம், இராமாயணம்) ஆனால் தமிழ்மொழியில் அமைந்த சங்கத்
தொகுப்புப் பாடல்கள், அல்லது நீதி நூல்கள் அனைத்தும் நடுவு
நிலைமையோடு படைக்கப்பட்ட இலக்கியங்கள் ஆகும்.
புறநானூற்றில் ஔவையார் நல்ல வளர்ச்சிப் பெற்ற நாடாக
இருக்க வேண்டுமெனில் அது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள்
அனைத்திற்கும் நடுநாயகமாக விளங்கும் பாடலைப்

”எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்-187)
என்று பாடியுள்ளார்.

அல்பர்ட் .ஸ்வைட்சர், ஏரியல் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள்
திருக்குறளை உலக மக்களின் ஒரே மறை நூல் என்று கூறி
வியக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அனைத்து
வேறுபாட்டுணர்வுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் மனித குலத்தை
மட்டும் மனதிற் கொண்டு நடுநிலைமையில் நெறி வகுத்துச்
சொல்வதுதான் காரணமாக அமைகின்றது.
1. www.kuralamutham.blogspot.com
2. www.thinnai.com
3. www.muthukamalam.com
4. www.tamilkalanjiyam.com
5. www.santhiran.com
போன்ற இணையதளங்களில் அதிகமான நடுநிலையான தமிழ்
இலக்கியச் செய்திகள் கிடைக்கின்றன.

5. தாய்மைத் தன்மை (Parental Kingship)

இன்று உலகெங்கிலும் பேசப்படும் பல்லாயிரக்கணக்கான
மொழிகளுக்கும் தாய்மொழி என்ற ஒன்று இருக்க வேண்டும். காலம்
செல்லச் செல்ல ஒலிகளின் கூறுபாட்டால் மாறி மருவி இன்று திரிந்தும்
பேசப்படுகிறது. இத்தகைய சூழலில் ஆதி மொழியாகப் பல்வேறு
மொழிகள் இருந்திருக்க வேண்டும். எ.கா. கிரேக்கம், ரோம், இத்தாலி,
போன்றவைகள். அதன் வரிசையில் தமிழும் இடம்பெற்றிருக்கிறது.
ஒரு காலத்தில் பூமி ஒரு பகுதியாக இருந்துள்ளது. இது அறிவியல்
உண்மை. பின்பு கடல்கோள்களால் பூமிப்பந்து பிளவுப்பட்டதால் பல
பாகங்களாகப் பிரிந்துள்ளன. இவற்றில் ஆசியா கண்டத்திலிருந்து
பிரிந்து ஐரோப்பா, அமெரிக்கா, ஆ.திரேலியா எனப் பெயர் பெற்று
விளங்குகிறது. இன்று கிரேக்க மொழி உலக மொழிகளில்
முதன்மையானது என்று கூறும் போக்கில் மறுப்பேதும் இல்லை.
அப்படியானால் கி.மு.484ல் கிரேக்க வரலாற்று நூலை எழுதிய
.ரிடோ. என்பவர் தமது நூலில் கிரேக்க இலக்கியத்தில் பல தமிழ்ச்
சொற்கள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக்
கொண்டு நோக்கும் போது கிரேக்கத்துடன் தமிழ்மொழி நல்ல
இணக்கத்துடன் இருந்துள்ளது என்பது உண்மையாகின்றன.

இன்றும் இந்திய மொழிகளில் திராவிட மொழிக் குடும்பம்
என்பதற்குத் தலைமையாக, தாய்மையாக விளங்கும் மொழி
தமிழ்மொழியே என்று திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை
எழுதிய அறிஞர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளதையும் ஆராய்ந்தால்
தமிழ்மொழி பல மொழிகளுக்குத் தாயாக விளங்கியது தெற்றெனப்
புலப்படும். இவைப் போன்ற இன்னும் பல அறியச் செய்திகளும்
இணையத்தில் அதிகமாகக் கிடைக்கின்றன.

1. www.kaniyatamil.com
2. www.koodal1.blogspot.com
3. www.tamilanbargal.com
4. www.palkalaikazhakam.com
5. www.facebook.com

6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு.
(Arts and Culture)

இலக்கியங்கள் எழுதப்பட்ட அல்லது தோன்றிய காலக்
கட்டங்களில் வாழ்ந்த மக்களின் போக்கை முழுமையாக உணர்த்தும்
இலக்கியமே தலைசிறந்த இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ள முடியும்.
அவ்வகையில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கிய
படைப்புகள் அனைத்திலும் மக்களின் பண்பாடும், கலை அனுபவமும்,
பட்டறிவும் வெளிப்பட்டு நிற்கின்றன.

சங்க இலக்கியங்களில் பண்பாடு என்பது ஒரு மரபாகவே
கையாண்டுள்ளனர் சங்கப் புலவர்கள். தமிழரின் விருந்தோம்பல் பண்பு,
அனைத்து மக்களும் நல்லவர்களாக வாழும் எண்ணம், குறைவாகப்
பொருள் கிடைப்பின் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சமதர்ம
மனநிலை, ஆடை அணிகலன்கள் என பண்பாட்டை உறுதிப்படுத்தும்
போக்கில் உள்ளன.

கலைகள், தமிழ் மக்கள் மற்றும் புலவர்களின் இலக்கியங்களால்
பரவலாகவும், மிகுதியாகவும் காணப்படுகின்றது. அந்தக் காலக்¡யகமாக விளங்கும் பாடலைப்
கட்டடக் கலையினை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் வெளிக்
கொணர்கின்றன. மேலும் இயல், இசை, நாடகம் என்ற மூன்று
கலைகளும் ஒருங்கே பெற்று வளர்ந்து வந்துள்ளன. சிறியாழ்,
பேரியாழ், சடங்கோட்டு யாழ் என யாழ் அமைப்பும், அழகும்
வெகுவாக தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத்
திகழ்ந்திருக்கின்றன.

பட்டறிவு என்றால் புலவர்கள் தான்கண்ட, கேட்ட பல
செய்திகளையும் பாடல்களாகப் பதிவு செய்துள்ளனர்.
இருவேந்தர்களையும் சந்து செய்வித்து கோவூர்கிழார் பாடுகிறார். மூன்று
நிலப்பரப்பு மன்னர்கள் (சேர, சோழ, பாண்டியர்கள்) தங்களுக்குள்
போரிட்டுக் கொள்வதைத் தடுக்க இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம்
இயற்றப்படுகிறது. இவை போன்று எண்ணற்ற இலக்கியங்கள்
பட்டறிவின் வெளிப்பாடாக விளங்கி தமிழைத் தலை நிமிர்த்தி
நிற்கின்றன. இவைகள் பற்றிய மேலும் பல தகவல்களை

1. www.uyirmmai.com
2. www.thirutamil.blogspot.com
3. www.ta.wikipedia.org
4. www.ulakatamizhchemmozhi.org
5. www.tamilauthors.com

போன்ற இணைய தளங்களில் காணமுடிகின்றது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித்தன்மை

தமிழ்மொழி பிறமொழித் தாக்கமில்லாத மொழியாக தொடக்க
காலத்தில் இருந்து வந்துள்ளன. சங்க இலக்கியம் இதற்குச் சான்றாகத்
திகழ்கின்றது. மேலும் உலக இலக்கண ஆசிரியரான தொல்காப்பியரின்
தொல்காப்பியத்தில் பிறமொழிக் கலப்பு இல்லை. இருந்தாலும்
பிறமொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டு மீண்டும் அதனைத்
திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஒரு சிலவர் இவற்றில் பிறமொழிக் கலப்பு இருக்கிறது என்பர்.
ஆனால் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவம் பெற்ற போது சில
இடைச்செருகல்கள் நடந்துள்ளன.
தமிழ் மொழியில் பிறமொழிக் கலப்பில்லாமல் புது சொல்லை
உருவாக்க முடியும். ஆனால் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு
மொழியில் புதிய சொல்லை உருவாக்க வேண்டுமானால் கிரேக்க
இலத்தீன், .ஹீப்ரூ, சமஸ்கிருத மொழிச் சொற்களைத்தான் நாடும் நிலை
உள்ளது.இச்சொல் ஆராய்ச்சியை ஆராய்ந்த எமனோவும், ப்ரோவோம்
”உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச்சொற்களையுடைய
மொழியாகத் தமிழ் திகழ்கிறது” என்று கூறியுள்ளதே உண்மை
யாகின்றன.

இன்று விக்கிப்பீடியாவில் 175 மொழிகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் தமிழ் மொழியைச் சார்ந்த கலைச் சொற்கள் உலகமொழிகளின்
வரிசையில் முதல் 10 இடத்தில் உள்ளது என்பது உண்மை. எனவே
தமிழ்மொழி பிறமொழிக் கலப்பு இல்லாமல் பன்னெடுங்காலம்
வாழ்ந்து வரும் செம்மொழியாகும்
.
1. www.kaniyatamil.com
2. www.tamilanbargal.com
3. www.infit.org
4.www.ta.wikipidia.org

8.இலக்கிய வளம் (Literary Prowy)

தமிழ் மொழி இந்தியாவில் தோன்றிய இந்திய மண்ணிற்கு
மட்டுமே தனிச்சிறப்பான இலக்கிய மரபினைக் கொண்டது. இந்த
இலக்கிய மரபு சமகிருதத்திலிருந்து பெறப்பட்டது அல்ல.
தென்னிந்தியாவில் சமஸ்கிருதமொழி செல்வாக்குப் பெறுவதற்கு
முன்னரே தமிழ்மொழியும் தமிழ் இலக்கியங்களும் தோன்றியுள்ளன.
அதிகமான இலக்கியங்கள் தோன்றிய காலத்தையே செம்மொழிக் காலம்
என்பர். அந்த வகையில் சங்க இலக்கிய காலம் மிகுதியான
இலக்கியங்களைப் பெற்ற காலம் எனலாம். இதனை செக் நாட்டு
அறிஞரும், ஆழ்ந்த தமிழ்ப்புலமையுடையவரான கமில் சுவலபில்
சங்க இலக்கியத்தை ஆய்ந்து 26,350 வரிகளில் அமைந்திருப்பதைக்
கணக்கிட்டு கூறியுள்ளார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ஜார்ஜ்
எல்.ஹார்ட் அவர்கள் .உலக இலக்கிய வரலாற்றையும்
பலமொழிகளின் இலக்கியங்களையும் படித்துள்ளேன். ஆனால் தமிழ்
மொழியில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுக் கூறுகள் உலக
மொழிகளில் எங்குமே காணப்படவில்லை என்று தமிழ் மொழியின்
இலக்கிய வளத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறார்.
மக்களைப் பற்றிப் பாடிய இலக்கியம், குடிமக்களைப் பற்றிப்
பாடிய குடிமக்கள் இலக்கியம் எனப் பெயர் பெற்ற சிலப்பதிகாரம்
மணிமேகலையும் இலக்கிய வளத்திற்குத் தக்க சான்றாக விளங்குகிறது.

9.உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)

செம்மொழித் தகுதிகளில் குறிப்பிடத்தகுந்தன உயர்சிந்தனைகள்
ஆகும். இலக்கியங்களில் உயர்சிந்தனைகளாக புலவர்கள் முன் வைக்க
காரணம் அவர்கள் நிகழ்கால மக்களுக்காக இலக்கியங்கள்
படைக்கவில்லை. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு
வரும் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்ற உயர்சிந்தனைகளால்
படைத்துள்ளனர். அவைகளில் முடிமணியாய்த் திகழ்வன, ”யாதும்
ஊரே யாவரும் கேளீர்” என்ற கோட்பாடும், ”ஒன்றே குலம், ஒருவனே
தேவன்” என்ற வாழ்வியல் நெறியுமாகும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் எந்த
மொழியிலாவது, எந்த இலக்கியத்திலாவது இத்தகைய உயர்
சிந்தனைகள் பதிவாகி உள்ளனவா என்றால் இதுவரை இல்லை என்றே
கூறலாம்.

மேலும் உலக ஆசான் திருவள்ளுவரின் திருக்குறளும் ஒரு
மணிமகுடம். தமிழ் தமிழ்நாட்டில் எழுதப்பட்டிருப்பினும் தமிழன்
என்னும் சொற்கள் அறவே இடம் பெறவில்லை. அ•து உலகியலின்
உயரிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது
.
1. www.kaniyathamil.com
2. www.duraiarasan.blogspot.com
3. www.muthukamalam.com
4. www.tamilanbargal.com
5. www.infit.org
6. www.ta.wikipedia.org

போன்ற இணையதளங்கள் வலைப்பூக்கள் மூலம் இதன்
தரவுகளைக் காணலாம்.

10.கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு-
பங்களிப்பு

உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு தனித்தன்மை
தமிழுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றதாக உள்ளது. அவையே
முத்தமிழ் என்ற தனிச்சிறப்பு ஆகும்.

உலக இலக்கியங்களை ஒரே பார்வையில் ஆராய்ச்சியாளர்கள்
அணுகுவார்கள். தமிழ் மொழியை மட்டும் இயற்றமிழ், இசைத்தமிழ்,
நாடகத்தமிழ் என மூவகையாகக் காணும் போக்கு உயரிய
தனித்தன்மையாக விளங்குகிறது.

இம் முத்துறைகளும் ஒரே இலக்கியப் படைப்பில் இணைந்த
நிலையில் உருவாக்கப்பட்ட காப்பியமே தமிழில் முதன்முதலாக
உருவாக்கப்பட்ட சிலப்பதிகாரம் ஆகும். இதனைச் சிலப்பதிகாரப்
பாயிரத்திலேயே ஆசிரியர் இளங்கோவடிகள்

”இயலிசை நாடகப் பொருட் டொடர்
நிலைச் செய்யுள்”
எனக் கூறியிருப்பதைக் கொண்டு மூன்று தமிழும் ஒன்றிணைந்த
நிலையில் உருவாக்கப்பட்ட காம்பியமாக திகழ்கிறது.

11.மொழிக் கோட்பாடுகள் (Linguistic Principles)

செம்மொழித் தகுதிகளில் மொழிக் கோட்பாடுகளும் ஒன்று.
சாதாரணமாக .மொழி நூல். (Philology) அடிப்படையில் மொழியியல்
கோட்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அளவுகோளாகக்
கொண்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. திராவிட ஒப்பிலக்கண
ஆய்வு நூல் எழுதிய கால்டுவெல் போன்றோர்கள் இந்த அடிப்படையில்
மொழியை ஆய்வு செய்தவர்களே ஆவார்.

இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முறையிலும் அதன்
அடிப்படையிலும் மொழியியல் கொள்கையும் கோட்பாடும் மாற்றம்
பெற்றது. மொழியியல் (Linguistic) என்ற அடிப்படையில் மொழி
வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்ய முனைந்தனர்.

மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் திரு எமனோ
அவர்கள் தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து வியந்து
போகின்றார். காரணம் தற்பொழுது வகுக்கப்பட்ட மொழியியலில்
கூறியுள்ள விதிகள் அச்சு மாறாமல் தொல்காப்பியர் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதுதான்.

எழுத்ததிகாரத்தில் சொற்கள் (சொல்) பிறப்பியலில் எப்படி
எழுத்துக்கள் பிறக்கின்றன, அதன் உச்சரிப்பு ஒலிகள், போன்றவைகளை
அறிவியல் பூர்வமாக அமைத்துள்ளார். இ•து இன்றைய மொழிக்
கோட்பாடுகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கிய மொழி தமிழ் மொழி
என்பதில் பெருமையே ஆகும். மேலும் இது தொடர்பான தரவுகளை,

www.kaniyatamil.com
www.tamilnool.com
www.ta.wikipedia.com
www.akshayapaathram.blogspot.com
www.youtube.com
போன்ற இணையதளங்களில் காணலாம். மேலும் செம்மொழித்
தமிழ்த் தரவுகளாகப் பல இணையதளங்கள் உள்ளன. அவைகளில்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளையும், அதில்
வாசிக்கப்பட்ட கட்டுரைகளையும் www.wctc2010.org என்ற
இணையதளத்தில் காட்சிப் படம் மூலம் நாம் கண்டு கருத்தைப்
பெறலாம்.இவைபோன்று வலைப்பூக்கள், இணையதளங்களின் வாயிலாக தமிழில்
தரவுகள் கிடைக்கின்றன. இது பல வகையான ஆராய்ச்சிகளுக்கும்
தமிழ் மொழியின் தரவுகளுக்கும் பெரிதும் பயன்படுகின்றன.

Tuesday, July 19, 2011

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் .

|0 comments
தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சகாயம் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள்


தொடக்கத்தில் திரு.லதானந்த அவர்கள் மின் அட்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவரைத்தொடர்ந்து திரு.தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொற்றம் அதன் வளர்சி மற்றும் பங்களிப்புப் பற்றி விவரித்துக்கூறினார்.

திரு.லதானந்த,திரு.மாயவரத்தான்,திரு. தேனி.எம்.சுப்பிரமணி,பேராசிரியர் சரவணன்.

வலைப்பூக்களின் தொடக்கம், அதன் வகைகள் பற்றி திரு.மாயவரத்தான் உரை நிகழ்தினார். அதனைத் தொடர்ந்து முனைவர் துரை.மணிகண்டன் கணினித்தமிழும்,தமிழில் தட்டச்சுப்பயிற்ச்சிகுறித்த கருத்துக்களை தெளிவுபட எடுந்துக் கூறினார்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சிமன்ற எழுத்தர்கள்,மற்றும் கிராம தன்னார்வ தொண்டர்கள்.


நிகழ்ச்சியில் முனைவர் துரை.மணிகண்டன்
மதுரை ஆட்சியருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.விஜயகுமார் திரு.மணிகண்டன், திரு.நாகமணி,திரு.வி.பி.மணிகண்டன்,திரு.செல்வமுரளி,திரு.லதானந்த.



மதியம் 2-மணிக்கு ஊராட்சி அலுவலர்களும் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும்
தொடுவானம் வலைப்பாதிவில் எவ்வாறு மக்களின் குறைகளை பதியவேண்டும்,என்பது குறித்து திரு, செலவமுரளி, திரு.நாகமணி.முனைவர் துரை.மணிகண்டன்.விளக்கம் அளித்தனர்.
இறுதியாகா ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தொடுவானம் நிகழ்ச்சியின் பயன்களைத் தொகுத்து விளக்கினார்.
. அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து 62 ஆயிரத்து 279 பேர் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மட்டும் 11 லட்சத்து 29 ஆயிரத்து 28 பேர் உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்கள் 13, கிராம ஊராட்சிகள் 431, பேரூராட்சிகள் 10, நகராட்சிகள் 3, மூன்றாம் நிலை நகராட்சிகள் 3 உள்ளன. தொடுவானம் என்ற இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் புதிய முயற்சி. இது முதற்கட்டமாக 25 கிராமங்களில் செயல்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் 5 பேருக்கு வழங்கப்படுகிறது. தொலை தூர கிராமங்களில் இருப்போர் கலெக்டரை சந்திக்க வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவற்றை சந்திக்கின்றனர்.

கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கை குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கொடுப்பதற்காக தொலைதூரங்களில் இருந்து இங்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கவே இந்த தொடுவானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கிராம மக்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள கணினிகளில் இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கோ நேரடியாக அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் கடிதமும் கொடுக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 431 கிராம ஊராட்சிகள் உள்ளன. முதல் கட்டமாக 25 ஊராட்சிகளில் இந்த தொடுவானம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இந்த மாவட்ட நிர்வாகத்தின் ஓர் புதிய முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தை ஊராட்சியில் உள்ள அலுவலர்கள் திறம்பட செயல்படுத்தி கிராமப்புறத்துக்கும், நகர்ப்புறத்துக்கும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

வாழ்க தொடுவானம் வளர்க மதுரை மக்கள்

Friday, July 15, 2011

தொடுவானமும் மதுரை மாவட்ட நிர்வாகமும்

|0 comments
தொடுவனமும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் இணையத்தமிழ் கருத்தரங்கிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Thursday, July 14, 2011

மதுரையில் தொடுவானம் கணினி மற்றும் இணையப்பயிலரங்கம்

|0 comments
மதுடை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை 16-7-2011 அன்று கணினி மற்றும் இணையத்தமிழ் குறித்த கருத்தரங்கு நடைபெறுகின்றது.
இநிகழ்வில்
மதுரை மாவட்டம் முழுக்க இந்தத் திட்டத்தை அமல்படுத்த எண்ணி அதற்கு முன்னோடியாக மதுரைமாவட்டத்தின்
கடைக்கோடியில் அமைந்துள்ள 26 கிராமங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் வகையில் 130 தன்னார்வலர்களுக்கும்,
25 கிராமநிர்வாக அலுவலர்களுக்கும்,26 ஊராட்சி எழுத்தர்களுக்கும் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப்
பயிற்சி முடிந்த பின் அடுத்தடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் இந்தப்
பயிற்சி விரிவுபடுத்தப்படும். தமிழ் உலகம் அறக்கட்டளை மாவட்ட ஆட்சியருடன் கலந்துபேசி இதற்கான
ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயிற்சி மற்ற மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் ஒரு
எடுத்துக்காட்டாக அமையும் என்பது திண்ணம்.

தொடுவானம்....

இந்தப் பயிற்சிக்கு ”தொடுவானம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதிகம் படிக்காத, பள்ளி இறுதிவகுப்புவரை
பயின்றவர்களையே பெரும்பாலும் தேர்வு செய்து தன்னார்வலர்களாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். 40விழுக்காடுக்கு
மேல் பெண்கள் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பார்வையற்ற,
குறைபாடுள்ளவர்களும் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களும் கணினியைப் பயன்படுத்தி தங்கள்
கிராமக் குறைகளை மனுவாக அனுப்ப இந்தத் தொடுவானம் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்றுநர் பட்டாளம்....

இந்தப் பயிற்சித்திட்டத்தில் மென்பொறியாளர் தகடூர் கோபி அவர்கள் முதன்மைப் பயிற்றுநராக இருந்து வழி நடத்தவுள்ளார். இவருக்கு உறுதுணையாகக்
களமிறங்கி நம் தமிழ் உலகம் உறுப்பினர் திரு.செல்வமுரளி அவரது குழுவினருடன் பயிற்சியளிக்கவும் தொழில்நுட்பப்
பணிகளையும்,அவருடன் விண்மணி இணையத்தள நிறுவனர் நெல்லை மென்பொறியாளர்.திரு.நாகமணிஅவர்களும்
கவனிக்கிறார். தன்னார்வலர்களுக்கான பயிற்சியை அளிப்பதில் நம் தமிழ் உலகம் உறுப்பினர்கள் முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பிலும், தேனி.எம்.சுப்பிரமணி விக்கிப்பீடியா பற்றியும் உரை நிகழ்த்த உள்ளனர்

Thursday, July 7, 2011

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

|0 comments
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனைவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. இந்த அமைப்பின் தோற்றம், தோன்றக் காரணம், இதன் பயன்கள், பங்களிப்புகள், இதனால் தமிழ் தரவு தளங்கள் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதைக் பற்றி இங்கு பதிவு செய்துள்ளேன்.

தோற்றம்

உலக்ததமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் உத்தமம் சிங்கப்பூரில் ஜுலை மாதம் 24-ஆம் தேதி 2000த்தில் தோற்றம் பெற்றது. இரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்த நிலையில் 2000 ஆண்டில் முன்றாவது தமிழ் இணைய மாநாடு இலங்கையில் நடைபெற இருந்தது. இந்த மாநாடு நடைபெற முன்னேற்பாடுகள் செய்ய 2000-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12, 13, 14 தேதிகளில் இலங்கையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், இந்நாள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் துணைவேந்தருமான முனைவர் மு.பொன்னவைக்கோவும், முன்னைய துணை வேந்தரும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவரும் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் சிங்கப்பூரிலிருந்து அருண்மகிழ்நனும், மலேசியாவிலிருந்து முத்து நெடுமாறனும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆகஸ்டு 13-ஆம் தேதி மாலை 6-00 மணியளவில் இதுபற்றிப் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, துணைவேந்தர். மு.பொன்னவைக்கோ, பேராசிரியர் மூ.ஆனந்தகிருஷ்ணன், திரு. அருண்மகிழ்நன், முத்துநெடுமாறன், சிவதாசன், சோமசுந்தரம், முத்து நெடுமாறன், குமாரதாசன் போன்றோர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர் அப்போது அருண்மகிழ்நன் ‘International Steering Committee On Tamil Inaiyam’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டு என்று முனைவர் கலியாணசுந்தரம் வரைந்தனுப்பிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அது தொடர்பாக நீண்டநேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக முனைவர் கலியாணசுந்தரத்தின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அதில் சில சிக்கல் இருந்துள்ளன Steering Committee என்று பெயரிடுவதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. காலம் கடந்து கொண்டிருப்பதால் அனைவரும் இரவு ஏதாவது ஒரு பெயருடன் வருவோம் என்று விவாதம் களைக்கப்பட்டு அவரவரின் அறைக்குச் உறங்கச் சென்று விட்டனர்.
துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களுக்கு விடியற்காலம் 4-00 மணிக்கு விழிப்புத் தட்ட விடியற்காலையில் ஏதாவது ஒரு தலைப்பு வேண்டுமே என்று நன்கு சிந்தித்து “International Fourm For Information Technology in Tamil – Infitt” என்றும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் - உத்தமம் என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். இதனைக் காலை அனைவரும் ஒன்று கூடி யார் யார் என்ன என்ன பெயர்களைக் கொணடு வந்துளளர் என முனைவர் பொன்னவைக்கோ வினவ யாரும் இதுபற்றி சிந்திக்கவில்லை என்பது புலனாகிறது. உடனே தான் சிந்தித்த உத்தமம் - உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்று தமிழுலும், Infitt – International Fourm For Information Technology in Tamil என்று ஆங்கிலத்தில் பெயரிடுவது என்று கூற அனைவரும் அதனை வரவேற்று அப்பெயரை ஏற்றுக் கொண்டனர் என்று அவர் எழுதிய இணையத் தமிழ் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்.60) தமிழ் இணையம் 2000 மாநாடு இலங்கையில் போர் காரணமாக சிங்கப்பூரில் ஜுலை மாதம் 22-லிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் 23-07-2000 அன்று உத்தமம் தோற்றம் பெற்றது.

உத்தமத்தின் திட்டபணிகள்

உத்தமத்தின் முதன்மைப் பணியாக இணையத் தமிழின் ஆய்விற்காக எட்டு ஆய்வுப் பணிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. 5 பணிக்குழுக்கள் தமிழ் இணையம் 2000 மாநாட்டிலும் எஞ்சிய 3 பணிக்குழுக்கள் பிற்காலத்திலும் நிறுவப்பட்டுள்ளன.

பணிக்குழு-1 : தமிழ்க்கலைச்சொல் தொகுப்பு.
பணிக்குழு-2 : ஒருங்குறித் தமிழ் [Unicde Tamil] ஆய்வு
பணிக்குழு-3 : இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல்.
பணிக்குழு-4 : தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு
பணிக்குழு-5 : ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரபாடும்
பணிக்குழு-6 : தமிழ் எழுத்துரு படிவத்தறிதல்
பணிக்குழு-7 : லினக்ஸிஸ் தமிழ் (Tamil in Linux)
பணிக்குழு-8 : தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம்.

என்ற எட்டு பணிக்குழுவிலும் உலகில் பல்வேறு நாடுகளைச் சோர்ந்த தமிழறிந்த கணிப்பொறி வல்லுனர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

பங்களிப்பும் பணிகளும்

உத்தமம் குழு அமைக்கப்பட்ட பின் தமிழ் இணையம் 2001 என்ற தலைப்பில் மலேசியா நாட்டில் கோலாலம்பூரில் ஆகஸ்டு மாதம் 26-28 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருளாக “வளர்ச்சிக்கான வழிகள்” என்ற ஆய்வுப் பொருண்மையில் நடத்தப்பட்டது. மின்வணிக மொழியைத் தமிழாக்கித் தமிழை வணிக மொழியாக்கல் என்ற கணிப்பொறிக் கல்வித்திட்டத்தை உருவாக்கியுள்ளனர். மலேசிய தமிழர்கள் பார்த்து பயன்பெறுமாறு தகவல் தொழில் நுட்பக் கண்காட்சியும் மாநாட்டில் நடத்தப்பட்டது. இதில் 30,000க்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இணையம் 2002 மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் செப்டம்பர் மாதம் 27-29 தேதிகளில் நடைபெற்றுள்ளது. ‘மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைத்தல் என்ற கருத்துக்களை முன் வைத்தது. இந்த இணைய மாநாட்டின் போதுதான் மாநாட்டுத் தலைவர் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்’ அமெரிக்காவில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி சிக்கல்கள் தொடர்பாக ஒருங்குறிக் குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டியும் இடம் பெற்றன. இம்மாநாட்டில்தான் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ Tamil Heritage Foundation தொடங்கப்பட்டது.

தமிழ் இணையம் 2003 மாநாடு சென்னையில் ஆகஸ்டு மாதம் 22-24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. ‘தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில் நுட்பம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கப்பூரில் டிசம்பர் மாதம் 11,12 ஆம் நாளில் நடைப்பெற்றது இதில் நாளைய தமிழ் தகவல் தொழில் நுட்பம் என்னும் கருப்பொருளில் தொழில் நுட்ப வளர்ச்சிப் பணிகள் பற்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.

2005-லிருந்து 2008 வரையிலான 4-ஆண்டுகள் தமிழ் இணைய மாநாடு எதுவும் நடைபெறவில்லை. அதன் பின்பு 2009-ல் ஜெர்மனியில் அக்டோபர் மாதம் 23 முதல் 25 ஆம் தேதிகளில் கொலோன் பல்கலைக் கழத்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘கணினிவழிக் காண்போம் தமிழ்’ என்ற கருப்பொருளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சூன் திங்கள் 23 முதல் 27ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் வரலாறு காணாத வகையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இங்கு கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997-ல் தமிழ் இணையத்தமிழ் முன்னோடி, தமிழ் இணையத்தின் தந்தை போராசிரியர் நா.கோவிந்தசாமியால் சிங்கப்பூர் மே திங்கள் 17,18 ஆம் தேதியில் நடைபெற்றது. இதில் ஒருமித்த தமிழ் எழுத்துரு தீர்வு முன் வைக்கப்பட்டது.
இரண்டாவது இணைய மாநாடு 1999-ல் தமிழ்நாட்டில் சென்னை நகரில் பிப்ரவரி 7,8,9-ஆம் நாட்களில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதற்குத் ‘தமிழ் இணையம் 99’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எழுத்துருவிற்குத் தீர்வு காணப்பட்டது. உலகம் முழுவதும் தமிழ் கணினியைப் பயன்படுத்துபவர்கள் Tam, Tab என்ற இரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிமுகப்படுத்தினர்.

இவ்வாறாக இதுவரை 10-தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக
1. 1997 - சிங்கப்பூர்
2. 1999 - சென்னை, தமிழ்நாடு
3. 2000 - சிங்கப்பூர்
4. 2001 - கோலாலம்பூர் (மலேசியா)
5. 2002 - சான் பிரான்சிஸ்கோ, கலியோர்னியா,
6. 2003 - சென்னை, தமிழ்நாடு
7. 2004 - சிங்கப்பூர்,
8. 2009 - கொலோன் பல்கலைக்கழகம் ஜெர்மனி,
9. 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு
10. 2011 - அமெரிக்கா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டு




2011ல் நடந்த மாநாட்டின் தொடக்கவிழா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


உத்தமம் – தரவுகள்

தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.
இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.


தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.

இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.