/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, July 7, 2011

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனைவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. இந்த அமைப்பின் தோற்றம், தோன்றக் காரணம், இதன் பயன்கள், பங்களிப்புகள், இதனால் தமிழ் தரவு தளங்கள் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதைக் பற்றி இங்கு பதிவு செய்துள்ளேன்.

தோற்றம்

உலக்ததமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் உத்தமம் சிங்கப்பூரில் ஜுலை மாதம் 24-ஆம் தேதி 2000த்தில் தோற்றம் பெற்றது. இரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்த நிலையில் 2000 ஆண்டில் முன்றாவது தமிழ் இணைய மாநாடு இலங்கையில் நடைபெற இருந்தது. இந்த மாநாடு நடைபெற முன்னேற்பாடுகள் செய்ய 2000-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12, 13, 14 தேதிகளில் இலங்கையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், இந்நாள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் துணைவேந்தருமான முனைவர் மு.பொன்னவைக்கோவும், முன்னைய துணை வேந்தரும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவரும் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் சிங்கப்பூரிலிருந்து அருண்மகிழ்நனும், மலேசியாவிலிருந்து முத்து நெடுமாறனும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆகஸ்டு 13-ஆம் தேதி மாலை 6-00 மணியளவில் இதுபற்றிப் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, துணைவேந்தர். மு.பொன்னவைக்கோ, பேராசிரியர் மூ.ஆனந்தகிருஷ்ணன், திரு. அருண்மகிழ்நன், முத்துநெடுமாறன், சிவதாசன், சோமசுந்தரம், முத்து நெடுமாறன், குமாரதாசன் போன்றோர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர் அப்போது அருண்மகிழ்நன் ‘International Steering Committee On Tamil Inaiyam’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டு என்று முனைவர் கலியாணசுந்தரம் வரைந்தனுப்பிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அது தொடர்பாக நீண்டநேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக முனைவர் கலியாணசுந்தரத்தின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அதில் சில சிக்கல் இருந்துள்ளன Steering Committee என்று பெயரிடுவதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. காலம் கடந்து கொண்டிருப்பதால் அனைவரும் இரவு ஏதாவது ஒரு பெயருடன் வருவோம் என்று விவாதம் களைக்கப்பட்டு அவரவரின் அறைக்குச் உறங்கச் சென்று விட்டனர்.
துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களுக்கு விடியற்காலம் 4-00 மணிக்கு விழிப்புத் தட்ட விடியற்காலையில் ஏதாவது ஒரு தலைப்பு வேண்டுமே என்று நன்கு சிந்தித்து “International Fourm For Information Technology in Tamil – Infitt” என்றும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் - உத்தமம் என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். இதனைக் காலை அனைவரும் ஒன்று கூடி யார் யார் என்ன என்ன பெயர்களைக் கொணடு வந்துளளர் என முனைவர் பொன்னவைக்கோ வினவ யாரும் இதுபற்றி சிந்திக்கவில்லை என்பது புலனாகிறது. உடனே தான் சிந்தித்த உத்தமம் - உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்று தமிழுலும், Infitt – International Fourm For Information Technology in Tamil என்று ஆங்கிலத்தில் பெயரிடுவது என்று கூற அனைவரும் அதனை வரவேற்று அப்பெயரை ஏற்றுக் கொண்டனர் என்று அவர் எழுதிய இணையத் தமிழ் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்.60) தமிழ் இணையம் 2000 மாநாடு இலங்கையில் போர் காரணமாக சிங்கப்பூரில் ஜுலை மாதம் 22-லிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் 23-07-2000 அன்று உத்தமம் தோற்றம் பெற்றது.

உத்தமத்தின் திட்டபணிகள்

உத்தமத்தின் முதன்மைப் பணியாக இணையத் தமிழின் ஆய்விற்காக எட்டு ஆய்வுப் பணிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. 5 பணிக்குழுக்கள் தமிழ் இணையம் 2000 மாநாட்டிலும் எஞ்சிய 3 பணிக்குழுக்கள் பிற்காலத்திலும் நிறுவப்பட்டுள்ளன.

பணிக்குழு-1 : தமிழ்க்கலைச்சொல் தொகுப்பு.
பணிக்குழு-2 : ஒருங்குறித் தமிழ் [Unicde Tamil] ஆய்வு
பணிக்குழு-3 : இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல்.
பணிக்குழு-4 : தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு
பணிக்குழு-5 : ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரபாடும்
பணிக்குழு-6 : தமிழ் எழுத்துரு படிவத்தறிதல்
பணிக்குழு-7 : லினக்ஸிஸ் தமிழ் (Tamil in Linux)
பணிக்குழு-8 : தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம்.

என்ற எட்டு பணிக்குழுவிலும் உலகில் பல்வேறு நாடுகளைச் சோர்ந்த தமிழறிந்த கணிப்பொறி வல்லுனர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

பங்களிப்பும் பணிகளும்

உத்தமம் குழு அமைக்கப்பட்ட பின் தமிழ் இணையம் 2001 என்ற தலைப்பில் மலேசியா நாட்டில் கோலாலம்பூரில் ஆகஸ்டு மாதம் 26-28 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருளாக “வளர்ச்சிக்கான வழிகள்” என்ற ஆய்வுப் பொருண்மையில் நடத்தப்பட்டது. மின்வணிக மொழியைத் தமிழாக்கித் தமிழை வணிக மொழியாக்கல் என்ற கணிப்பொறிக் கல்வித்திட்டத்தை உருவாக்கியுள்ளனர். மலேசிய தமிழர்கள் பார்த்து பயன்பெறுமாறு தகவல் தொழில் நுட்பக் கண்காட்சியும் மாநாட்டில் நடத்தப்பட்டது. இதில் 30,000க்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இணையம் 2002 மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் செப்டம்பர் மாதம் 27-29 தேதிகளில் நடைபெற்றுள்ளது. ‘மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைத்தல் என்ற கருத்துக்களை முன் வைத்தது. இந்த இணைய மாநாட்டின் போதுதான் மாநாட்டுத் தலைவர் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்’ அமெரிக்காவில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி சிக்கல்கள் தொடர்பாக ஒருங்குறிக் குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டியும் இடம் பெற்றன. இம்மாநாட்டில்தான் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ Tamil Heritage Foundation தொடங்கப்பட்டது.

தமிழ் இணையம் 2003 மாநாடு சென்னையில் ஆகஸ்டு மாதம் 22-24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. ‘தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில் நுட்பம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கப்பூரில் டிசம்பர் மாதம் 11,12 ஆம் நாளில் நடைப்பெற்றது இதில் நாளைய தமிழ் தகவல் தொழில் நுட்பம் என்னும் கருப்பொருளில் தொழில் நுட்ப வளர்ச்சிப் பணிகள் பற்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.

2005-லிருந்து 2008 வரையிலான 4-ஆண்டுகள் தமிழ் இணைய மாநாடு எதுவும் நடைபெறவில்லை. அதன் பின்பு 2009-ல் ஜெர்மனியில் அக்டோபர் மாதம் 23 முதல் 25 ஆம் தேதிகளில் கொலோன் பல்கலைக் கழத்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘கணினிவழிக் காண்போம் தமிழ்’ என்ற கருப்பொருளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சூன் திங்கள் 23 முதல் 27ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் வரலாறு காணாத வகையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இங்கு கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997-ல் தமிழ் இணையத்தமிழ் முன்னோடி, தமிழ் இணையத்தின் தந்தை போராசிரியர் நா.கோவிந்தசாமியால் சிங்கப்பூர் மே திங்கள் 17,18 ஆம் தேதியில் நடைபெற்றது. இதில் ஒருமித்த தமிழ் எழுத்துரு தீர்வு முன் வைக்கப்பட்டது.
இரண்டாவது இணைய மாநாடு 1999-ல் தமிழ்நாட்டில் சென்னை நகரில் பிப்ரவரி 7,8,9-ஆம் நாட்களில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதற்குத் ‘தமிழ் இணையம் 99’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எழுத்துருவிற்குத் தீர்வு காணப்பட்டது. உலகம் முழுவதும் தமிழ் கணினியைப் பயன்படுத்துபவர்கள் Tam, Tab என்ற இரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிமுகப்படுத்தினர்.

இவ்வாறாக இதுவரை 10-தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக
1. 1997 - சிங்கப்பூர்
2. 1999 - சென்னை, தமிழ்நாடு
3. 2000 - சிங்கப்பூர்
4. 2001 - கோலாலம்பூர் (மலேசியா)
5. 2002 - சான் பிரான்சிஸ்கோ, கலியோர்னியா,
6. 2003 - சென்னை, தமிழ்நாடு
7. 2004 - சிங்கப்பூர்,
8. 2009 - கொலோன் பல்கலைக்கழகம் ஜெர்மனி,
9. 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு
10. 2011 - அமெரிக்கா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டு




2011ல் நடந்த மாநாட்டின் தொடக்கவிழா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


உத்தமம் – தரவுகள்

தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.
இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.


தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.

இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.

0 comments: