/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, May 31, 2021

கணினித்தமிழின் தந்தை பேரா.மு.அணந்தகிருஷ்ணன் அவர்களுக்குப் புகழஞ்சலி






பத்மஶ்ரீ பேரா. ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். கான்பூர் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், .நா. அறிவியல் துறை, அமெரிக்காவில் இந்தியத் தூதரகம், இந்திய உயர்கல்வித்துறை என்று அவர் தடம்பதித்த இடங்கள் மிக உயர்ந்தவை.

 வாணியம்பாடியில் பிறந்த அவரது மாபெரும் சாதனைகளை இந்தியாவின் தாமரைத்திரு (பத்மஸ்ரீ), பிரேசில் நாட்டு அதிபர் விருது, அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக விருது, இந்திய பொறியிலாளர்கள், அறிவியலாளர்கள் அமைப்புகளின் சிறப்பு உறுப்பியம் என்ற பல்வேறு விருதுகளின் உலகெங்குமுள்ள அறிவுலகம் மூலம் போற்றியது.


சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கிண்டி பொறியியற்கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக்கல்லூரி, மதராசு தொழில்நுட்பக்கழகம் ஆகியவற்றைப் பிரித்து அறிஞர் அண்ணாவின் பெயரால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி அதை ஒரு முன்னணிப் பல்கலைக்கழகமாக மாற்றிய முன்னோடிகளில் பேரா. ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.

இந்திய மாநிலங்களில் 1997 இல் முதன்முறையாகத் தமிழ்நாடு தகவல்தொழில்நுட்பத்துக்கு என்று ஓர் அரசுத்துறை அமைத்தபோது முதலமைச்சரின் அறிவுரைக்குழுவில் ஆனந்தகிருஷ்ணன் இணைந்தார். அப்போதே கணித்தமிழுக்கு ஒரு கட்டமைப்பு தேவை என்ற அடிப்படையில் இயங்கத் தொடங்கினார்.

கணித்தமிழுக்கென்று முதல் மாநாடு சிங்கப்பூரில் 1997 இல் நடந்த பிறகு அடுத்த மாநாடு 1999 இல் சென்னையில் நடக்கத் திட்டமிட்டு அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கணினித் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருந்த உலகளாவிய தமிழர்களைக் கலந்து பேசித் திட்டமிடத் தொடங்கிய அமைப்பில் முதன்மை வகித்தார்.


தமிழிணையம் 1999 மாநாட்டில் கணினியில் தமிழை இடுவதற்கான 8-பிட்டுக் குறியீடுகள், விசைப்பலகை, மென்பொருள்கள், கலைச்சொற்கள் போன்றவற்றைத் தரப்படுத்துதல், கணித்தமிழ் மென் பொருளாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, பயிற்சி அமைப்பு, தமிழக அரசில் கணித்தமிழைப் பரவலாக்குவதற்கான திட்டமிடல், உலகளாவிய மென்பொருள் நிறுவனங்கள் எழுதிய மென்பொருள்களில் தமிழைக் கொண்டுவருதல், உலகத்தரமாக அமைந்து கொண்டிருந்த யூனிக்கோடு அமைப்பில் இணைந்து தமிழ்க்குறியீடு பற்றிய தரப்பாட்டுக் கூட்டங்களில் பங்கேற்றல் போன்ற முயற்சிகளில் அவரது பங்கு அளப்பரியது.

இரண்டு தமிழர்கள் கூடினால் அங்கே மூன்று முரண்பட்ட கருத்துகள் இருக்கும்என்று நகைச்சுவையாகச் சொல்லுவார்கள். தமிழ் இணையம் 1999 மாநாட்டிலும் அப்படிப் பட்டகருத்து வேறுபாடுகள் மாநாட்டு நிறைவு விழாவுக்குள் முதலமைச்சர் அறிவிக்க முடியாத அளவுக்கு முரண்பட்டிருந்த போது, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு தரப்பாட்டைக் கொண்டுவருவதில் பேரா. ஆனந்தகிருஷ்ணனின் பெருமுயற்சி இன்றும் பேசப்படுகிறது.

கணித்தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை நிறுவித் தமிழ்நாட்டின் கணித்தமிழ் வல்லுநர்களை ஒருங்கிணைத்தார். அந்த மாநாட்டில்தான் உலகளாவிய தமிழர்கள் வலைவழியே தமிழைக் கற்று முனைவர் பட்டம் வரை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார்கள். கூடவே கணித்தமிழ் தரப்பாடு, கலைச்சொல்லாக்கம் போன்றவற்றுக்கும் த... பொறுப்பேற்றுக் கொண்டது. தமிழ் இணையக் கல்விக்கழகம் இன்றும் அந்தப் பணிகளைத் தொடர்கிறது. அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் பேராசிரியர். ஆனந்தகிருஷ்ணன்.

பேரா. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் – International Forum for Information Technology – INFITT) என்ற அமைப்பு சிங்கப்பூரில் 2000இல் நடந்த இணைய மாநாட்டில் உருவானது. அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு தமிழ் இணைய மாநாட்டிலும் பேரா. ஆனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டு வழிநடத்தினார். முதலமைச்சர்களோடு பேசி அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அலுவலர்களுக்கும் கணித்தமிழின் தேவைகளை எடுத்துச் சொல்வதில் பேராசிரியர்கள் ஆனந்தகிருஷ்ணனும், வா. செ. குழந்தைசாமியும் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது.

பேரா. ஆனந்தகிருஷ்ணன் எட்டி நின்று தலைமை தாங்கியவரல்லர். யூனிக்கோடு நுட்பக்குழு கூட்டங்களிலும், உத்தமம் நுட்பக்குழுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். தொழில்நுட்பச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு அரசுக்குப் பரிந்துரை செய்வதில் வல்லவர். தம்மோடு முரண்பட்ட கருத்துகளையும் பொறுமையுடன் கேட்பார். .நா. அமைப்பில் பணிபுரிந்த பட்டறிவைக் கொண்டு முரண்களைக் களைந்து இணைந்து முன்னேறும் பாதை அமைப்பதில் வல்லவராக இருந்தார் பேரா. ஆனந்தகிருஷ்ணன். அவரது மறைவு கணித்தமிழ் உலகுக்குப் பேரிழப்பு

நன்றி - நீயூஸ்18.


 

0 comments: