கட்செவி
(வாட்சாப்- whats app)
“வாயிருந்த வாழச் சொன்னாங்க இல்லைன்னா வந்திரச் சொன்னாங்க”
என்பது முதுமொழி. அதைப்போல ‘வாட்சப் இருந்த
வாழச்சொன்னாங்க இல்லைன்னா வந்திரச் சொன்னாங்க’
என்பது புது மொழி. இன்று அனைவரும் உச்சரிக்கும் இரண்டு மந்திரம் ஒன்று முகநூல்,
மற்றொன்று வாட்சப் என்ற .கட்செவி’ ஆகும்.
வாட்சாப் என்பது
ஆன்லைனில் செய்திகளை இலவசமாக வழங்கும் ஒரு செயலி. இஃது அலைபேசிகளில் இருந்து செய்திகள்,
குறுஞ்செய்திகள், முழுப்படங்கள், புகைப்படங்கள்
என நண்பர்களுக்கு உடனுக்குடன் சுடச்சுட வழங்கும் ஒரு செயலியாகும். இது மேலும்
நண்பர்கள் குழுவாக இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் உதவும். சுறுக்கமாகச்
சொன்னால் இன்றைய இளைய தலைமுறை, இல்லை, பழைய தலைமுறையையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
வாட்சப் வரலாறு
ஜேன் கோம்,(JAN
KOUM) பிரையன் ஆக்டன் (BRIAN ACTON) இருவரும் வாட்சபின் நிறுவனர்கள். ஜேன் கோம், உக்கரைன்
நாட்டைச் சார்ந்தவர். அந்நாட்டில் வறுமையில் பிறந்தவர் சொந்த நாட்டில் வாழத் தகுதியில்லாமல்
தனது பதினாறாவதுவயதில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா
மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்திற்கு தனது தாயுடன் வந்தவர். அமெரிக்க அரசாங்கம்
தரும் இலவச உணவுக்காக காத்திருந்து உணவை வாங்கிப் பங்கிட்டு உண்டுள்ளனர். அந்த அளவிற்கு
வறுமையின் பிடியில் இருந்தவர் ஜேன் கோம்.
கோமுக்கு தனது பத்தொன்பதாவது வயதில் சொந்தமாக ஒரு
கணிப்பொறிக் கிடைத்துள்ளது. அதோடு இணைய இணைப்பும் கிடைத்துள்ளது. கோம் எந்நேரம் கணினி,
இணையம்தான். இவர் தொடக்கத்தில் இணைய உலகில் ஹேக்கிங்கில் கில்லாடியாக இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் இருக்கும் ஹேக்கிங்
குழுவுடன் இணைந்து பணியாற்ற தொடங்குகிறார். பிறகு பெரிய நிறுவனங்கள் இவரது ஹேக்கிங்
தொடர்பான உதவிகளுக்கு நாட ஆரம்பித்தன. (குறிப்பு- ஹேக்கிங் என்பது இதுவரை கெட்டதற்கு
என்று இக்கட்டுரையைப் படிக்கும் வரை நினைத்தேன். இல்லை பெரிய நிறுவனங்களுக்கு இது பல நன்மைகள் செய்கின்ற ஒரு தொழில்நுட்பம் என்பதை
உணர்ந்தேன்.) எர்னஸ்ட் & யங் என்ற நிறுவனத்தில்
மென்பொருள் பாதுகாப்பு சோதனையில் பணியாற்றிக் கொண்டே கல்லூரியில் கணினி அறிவியலை படித்து
வந்துள்ளார். பிறகு யாஹூ நிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ஃபைல் தங்கள் நிறுவனத்தில்
பணியாற்ற அழைத்தபோது தன் படிப்பை பாதியில் விட்டு விட்டு பணியில் சேர்கிறார்.
இங்குதான் நண்பரும்
வாட்சாப் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பிரையன் ஆக்டனைச் சந்திக்கின்றார். 1996 இருவரும்
சந்தித்துக்கொள்ள நட்பு மலர்கிறது. இருவரும் இணை பிரியாத வாட்சாப் நண்பர்களாகின்றனர்.
பிரைன் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஸ்டாண் ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில்
கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராகப்
பணியாற்றியவர்..
ஜேன் கோம், எர்னஸ்ட்
யங் கில் பணியாற்றியபோதே அவர் யாஹூ நிறுவனத்திற்கு வருவது தொடர்பாக பிரையன் சந்திக்கிறார்.
அப்பொழுது கோமுடை புத்திக்கூர்மையும் நேர்மையும் ஆக்டனைக் கவர்கிறது. இருவரும் அடிக்கடிச்
சந்திக்கின்றனர். பின்பு ஆக்டைன் 1996 ல் யாஹூ நிறுவனத்திற்குப் பணிக்கு வருகிறார்.
ஆக்டைன் பணியில்சேர்ந்த
நாள்முதல் இருவரும் இரட்டையர்களாக வளம் வந்தனர். 2007 ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே
யாஹூ நிறுவனத்திலிருந்து வெளியேறுகின்றனர். பிறகு இருவரும் தென் அமெரிக்காவிற்குப்
புறப்பட்டனர்.
வாட்சாப் பிறந்தது
இருவரும் முகநூல் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்து
காத்திருந்தனர். ..ஏனோ இருவரையும் முகநூல் நிறுவனம் பணிக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
மனம் தளராமல் இருவரும் இருந்துள்ளனர். ஏற்கனவே யாஹூவில் வாங்கி ஊதியம் மெல்ல மெல்ல
செலவாகத் தொடங்கியது. இப்படி இருக்கும் போது ஒருநாள் ஜனவரி 2009 -ல் நண்பர் வீட்டில்
கோம் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஆக்டைனுடன் பல நண்பர்களும் உடன்
இருந்துள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் குறுஞ்செய்தி
அனுப்பிக் கொண்டிருந்தனர். அலைபேசியிலிருந்து செய்தியை அனுப்பும்போது சில தொழில்நுட்பப்
பற்றாக்குறை இருப்பதை ஊகிக்கின்றார் கோம். மேலும் அன்றையச் சூழலில் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும்
பணம் செலவளிக்க வேண்டி இருந்தது. ‘இணையத்தில்
மெயில் பார்க்க இணையம் வசதி இருந்தால் போதும்.
ஏன் அதனைப் பயன்படுத்தி காசு இல்லாமல் செய்தி அனுப்பும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே
என்ற எண்ணம்’ கோமுக்கு சட்டென்று தோன்றுகிறது. இது தொடர்பாக நண்பர் ஆக்டைனிடம் பேசுகிறார்.
பிறகு இருவரும் கலந்து ஆலோசித்து வேறு சில
இணைய வடிவமைப்பாளர்களுடன் இது தொடர்பாக பேசுகின்றனர். அப்பொழுது தான் புதியதாக உருவாக்க
இருக்கும் குறுஞ்செயலிக்கு (application) வாட்சாப்( கட்செவி- whatsapp) என்று கோம்
பெயரிடுகிறார். யாராவது இருவர் அல்லது மூவர் பேசும்போது அப்புறம் என்ன என்று கேட்போம்
அல்லவா? அதைதான் whats app என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.
ஜேன் கோம் பிறந்த
நாளான பிப்ரவரி 24, 2009 அன்று வாட்சாப் நிறுவனத்தைத்
தொடங்கினார். தொடக்கத்தில் வாட்சாப் சரிவர இயங்கவில்லை. பயணர்களிடமிருந்தும் ஆதரவு
கிடைக்கவில்லை. பலர் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் முறை இருக்க இது எதற்கு என்று
பலர் நினைத்தனர்.
இதனால் இருவரும்
இதை விட்டுவிட்டு மீண்டும் வேறு பணிக்குச் செல்லலாமா? என்று யோசித்த கோம் இதுபற்றி ஆக்டனிடம் கேட்க ஆக்டையன்
பொறுமையாக இருப்போம். இஃது ஒரு பெரிய நிறுவனமாக வளரும் என்று எனக்குத் தோன்றுகிறது
என்று கூறினார். நண்பனின் பேச்சிற்கு மறுப்புக் கூறாமல் கோம் அமைதி காத்தார்.
இதற்கிடையில் கோம்,
ஆக்டையன் இருவரும் டிவிட்டரில் வேலைக்குச் சேர விண்ணப்பம் போட்டனர். பலனில்லை. அந்த
நிறுவனம் இருவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் தாம் உருவாக்கிய
வாட்சப் செயலியில் இருக்கும் குறைகளை அவ்வப்போது மேன்மைப்படுத்திக் கொண்டே இருந்தார்.
அப்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஆப்பிள் பயனாளிகள் பலர் இந்த வாட்சாப் செயலியைப்
தங்களது அலைபேசியில் தரவிறக்கம் செய்யத் தொடங்கினர். இரவும் பகலும் வாட்சாப்பில் செய்தியை
அனுப்பியவாறு இருந்தனர். சில நாட்களில் சுமார்
இரண்டரை லட்சம் பேர் வாட்சாப் பயனாளிகளனார்கள். மேலும் பல நண்பர்களிடம் இது தொடர்பாக
பேசி ஒருகோடி ரூபாய் திரட்டி நிறுவனத்தை பெரிய அளவில் செயல்பட முனைந்தனர். தற்பொழுது
ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெரி அலைபேசிகளுக்கும்
வாடசாப் வசதியை நீட்டித்தனர். பலன் பலர் தரவிறக்கம் செய்யத் தொடங்கினார்கள்.
தற்பொழுது வாட்சாப் சாதிக்கத் தொடங்கிவிட்டது எனலாம்.
பயன்பாடு
2009 ல் தொடங்கப்பட்ட
வாட்சாப் செயலியில் இன்று ஒவ்வொரு நாளும் சுமார்
பத்து லட்சம் பேர் புதிதாக இணைகிறார்கள். நாளொன்றுக்கு
4000 கோடி புகைப்படங்கள் பரிமாற்றம் நடைபெறுகிறது. நம்பமுடியாத கணக்காக இருக்கலாம்.
இதுதான் இன்றைய உண்மை. வாட்சாப்பின் பயன்பாடு பிப்ரவரி 2013 ல் 200 மில்லையன், டிசம்பர்
2013 ல் 400 மில்லியன், 2014 ல் 600 மில்லியன்,
ஏப்ரல் 2015 ல் 800 மில்லியன், பிப்ரவரி 2016 ல் 900 மில்லியன் நூல் ஆச்சாகும்
தேதிவரை( ஜூலை 2016 வரை ) சுமார் 1000 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்குகிறது.
வாட்சாப்பில் குழு
உருவாக்கி அக்குழுவில் கலந்துரையாடும் ஒரு செயல்பாட்டை வெளியிட்டது தொடக்கத்தில் இக்குழுவில்
உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. பின்பு 100. அடுத்து 125 என இருந்தது தற்பொழுது
256 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைத்து உரையாடலாம் என்று வாட்சாப் அறிவித்திருக்கிறது. வாட்சாப்பும்
கணினியில் இன்று இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு சிறப்பு
வாய்ந்த வாட்சப் நிறுவனத்தை முகநூல் நிறுவனம் பிப்ரவரி 2014 லில் 19 பில்லியன் டாலருக்கு
விலைக்கு வாங்கியது. (நமது பணத்திற்கு சுமார் 99,584 கோடிக்கு “ஒரு லட்சத்து இருபதாயிரம்
கோடிக்கு” விலை கொடுத்து வாங்கியுள்ளது.)
இத்தகு சிறப்பு
வாய்ந்த வாட்சாப் நிறுவனத்தை முகநூல் வாங்கியிருந்தாலும் தற்பொழுது வாட்சாப் நிறுவனத்தினைத்
தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோம், பிரையன் ஆக்டன் இருவரும்தான்.
கோம் வாட்சாப் தொடர்பான மென்பொருளைக் கவனித்துக் கொள்கிறார். ஆக்டன் தொழில் தொடர்பானவையைப்
பார்த்துக் கொள்கிறார். பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல் இதுதான்
No Ads! No Games! No Gimmicks! என்பதுதான் வாட்சாப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.
அவர்கள் இருவரும்
சொன்ன தாரக மந்திரம் இதுதான் “ சிலிக்கான் பள்ளத்தாக்கில் எங்கள் வாட்சாப் நிறுவனத்தைப் போல நீங்கள் வேறெந்த
நிறுவனத்தையும் பார்க்க முடியாது. பெரியதாக மிகப்பெரியதாக வளரவேண்டும் என்று நினைப்பதைவிட எங்களது அவ்வப்போதைய வெற்றியை தக்கவைத்துக் கோள்ளவே நாங்கள் கடுமையாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டால்,அதுவே நம்மை மிகப்பெரிய
வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும். எங்கள் தயாரிப்பை முன்னிலைப் படுத்திக் கொண்டு
எங்களை பின்னணியில் மறைத்துக் கொள்கிறோம்.
இதைத் தவிர எங்களுக்கு வேறெந்த தொழில் ரகசியமும் இல்லை என்கிறார்கள் இருவரும். தற்பொழுது
குழந்தைகள் பயன்படுத்தும் விதமாக வாட்சாப்பை கொண்டுவரும் முயற்சியில் இருவரும் முனைப்புடன்
செயல்படுகிறார்கள். ஏன் நம் நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் இவர்களைப்
போல உருவாகக் கூடாது. காலம் வெகுவிரைவில் இதற்குப் பதில் சொல்லும்.
பயனுள்ள பகிர்வு. பல புதிய செய்திகளை அறிந்தேன்.
மிக்க நன்றிங்க ஐயா.
மொபைலில் வாட்சப் லாக் அவுட் செய்யும் போது கனினி ஆப் ல் இருந்தால் லாக் அவுட் ஆகுமா
மொபைலில் வாட்சப் லாக் அவுட் செய்யும் போது கனினி ஆப் ல் இருந்தால் லாக் அவுட் ஆகுமா