பயன்பாட்டு நோக்கில் தமிழ்க்
குறுஞ்செயலிகள்
முனைவர்
துரை.மணிகண்டன்
தமிழ்த்துறைத்
தலைவர்
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இனாம்குளத்தூர்,
திருச்சிராப்பள்ளி.
முன்னுரை
”யாதும்
ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழிக்கு நிகராக
இன்று உலகில் இருக்கும் அனைவரும் உறவினர்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர்.
காரணம் இணையம். இணையம் இன்று பல்துறைப்பணிகளையும் செய்யும் அன்புக் கடவுள்.
இணையம் முதலில் பாதுகாப்பிற்காகப்
பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பிறகு அது பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும்
ஆற்றலுடன் வலம் வந்தது.
இணையத்தில் நாம் ஒரு செய்தியைத் தேடி எடுக்க
வேண்டுமென்றால் அதற்குப் பல இணைய முகவரிகளோயோ, வலைப்பதிவு முகவரிகளையோ, பொது
தளங்களையோ சென்று நாம் காண வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் அதிகமான நேரத்தையும்,
பொருள்செலவையும் இழக்க நேரிடுகிறது. ஆனால் செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில்
என்ன செயலுக்கு எந்த வலைமுகவரியோ அதைவிட
அதிகமான, மிகத் துல்லியமானச் செய்திகளை நமக்குத்தரும் தமிழ்க் குறுஞ்செயலிகள்
இன்று ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.
குறுஞ்செயலி – விளக்கம்
கையடக்கக்
கணினிகளிலும் செல்பேசிகளிலும் பயன்படுத்தப்படும் சிறிய மென்பொருளையே
குறுஞ்செயலிகள் என்று அழைக்கலாம். மேலும் நவீனத் தொலைபேசிகளில் ஒரு குறிப்பிட்ட செயலைச் (Action) செய்துமுடிக்க மனிதர்களால் பல கட்டளைகளைப் பிறப்பித்து உருவாக்கப்படும் நிரல் தொகுப்பை குறுஞ்செயலி (Apps) என்று அழைக்கப்படுகிறது. கணினியில் பல செயல்களைச் செய்யும் செயலிகளை, மென்பொருள் (Applications -
Software)
என்றும், குறுகிய நிலையில் செய்யக்கூடியதை குறுஞ்செயலி என்றும் வழங்கப்படுகிறது. மென்பொருள் என்பது திரைப்படம் போன்றது குறுஞ்செயலிகள் என்பது குறும்படம் போன்றது.
பயன்பாடுகள்
இந்த குறுஞ்செயலிகள் அதிகமாக ஆப்பிள் ஐ.ஓ.எஸ்,
ஆண்ட்ராய்டு செல்போன்களிலும், கையடக்க கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் பயன்படுத்தப்படும் தமிழ்க் குறுஞ்செயலிகள் ஆப்பிள் செல்பேசி மற்றும் கையடக்க
கணினிகளில் அறநூறும் (600), ஆண்ட்ராய்டு செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில்
ஆயிரத்திற்கும்(1000) மேலும் உள்ளன.
செல்பேசிகளிலும் கையடக்கக் கணினிகளில் தமிழ்க்
குறுஞ்செயலிகள் ஆயிரத்திற்கும் மேல் இருந்தாலும் பலருக்குத் இதன் பயன்பாடுகள்
தெரியவருவதில்லை. எனவே அதன் பயன்பாட்டை எடுத்து விளக்கும் முறையில்
I-Kural என்ற திருக்குறள் செயலி,
தமிழ்ஸ் கோட்ஸ்(Tamil Quotes), தமிழ்க் காப்பியம்(Tamil ebic), tamil Indian-news
papper, தேவாரம், மின் இதழ்கள், சுவாமி விவேகநந்தர், கவிஞர்கள் (Tamil poet bio),
ஜெயகாந்தன் (tamil story), செல்லினம், பூங்கா, தமிழ் குர் ஆன், தமிழ் பைபிள், பகவத் கீதை, இந்து மந்திரங்கள், என்ற இதுபோன்ற எண்ணற்ற தமிழ்க் குறுஞ்செயலிகளின் பயன்பாடுகளை இக்கட்டுரை எடுத்து விளக்கவுள்ளது.
I-குறள்(I-kural)
இந்த குறுஞ்செயலியை வடிவமைத்தவர் திரு.அரவிந்த
என்பவர். கல்வி என்ற பாகுபாட்டில்
இதில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற திருக்குறள் இயல் அமைப்பில்
பிரித்துக் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு
குறளுக்கும் உரை மிகத்தெளிவாக அமைந்திருப்பது சிறப்பு. மணக்குடவர், பரிமேழலகர், G.U.போப்,
போன்றோரின் உரை விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்புடன் இடம்பெற்றிருக்கிறது.
மு.வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பயா போன்றோரின் உரைகளும் இதில்
உள்ளன. இந்த குறுஞ்செயலி உலகப் பொதுமறைக்குக் கிடைத்த புதுமையான வரவேற்பு என்று
கூறலாம். இந்த உரை விளக்கம் பழைய உரையாசிரியர்களின் உரையோடு புதிய உரையாசிரியர்களின்
உரையைப் பொருத்திப் பார்க்கவும் இந்த குறுஞ்செயலி பயன்படுகின்றது.
தமிழ்ஸ்
கொட்ஸ் (Tamil Quotes)
இந்த குறுஞ்செயலியில் தமிழ்மொழியில் உள்ள
முதுமொழிகள் என்று கூறப்படுகின்ற புகழ்பெற்ற ஒருசில பழமொழிகள் இடம்பெற்றுள்ளன.
ஐந்தில்
விளையாதாது
ஐம்பதில்
விளையுமா
போன்ற பழமொழிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த
செயலியில் பல இடங்களில் ஒற்றுப்பிழை உள்ளன. அவற்றை நீக்கி இந்த செயலியை
வெளியிட்டால் தமிழ் வளத்திற்குப் பெருமை சேர்க்கும்.
தமிழ்
நூலகம் (Tamil Library)
அமுத ரஞ்சனி இரகசியங்கள் தொடங்கி சப்தகிரி
தமிழ் முடிய 1000 த்திற்கும் மேற்பட்ட பழமையான நூல்கள் மின்புத்தகமாக இந்த
குறுஞ்செயலியில் உள்ளன. இவற்றில் இடம்பெற்றுள்ள மின்புத்தகங்கள் 100 முதல் 400
பக்கத்திற்கு மிகாமல் உள்ளன. இந்த குறுஞ்செயலியில் நூல்களை தரவிறக்கம் செய்து
படிப்பது மிகப்பயனுள்ளதாக இருக்கிறது. இந்தச் செயலியில் நூல்களைத் தரவிறக்கம்
செய்வதில் கால அதிகமாகப் பிடிக்கிறது. இதனைப்போக்கும் விதமாக பக்கத்தை இயலாகப்
பிரித்து 30 பக்கமாக கொடுக்க முன்வந்தால் இந்த செயலி பயன்பாட்டாளர்களுக்கு மிகப்
பயனுள்ளதாக அமையும்.
தமிழ்க்காப்பியம்(Tamil
Ebic)
அவ்வையாரின் நல்வழித் தொடங்கி சிலப்பதிகாரம்,
பாரதிதாசன் படைப்புகள், கல்கியின் பொன்னியின் செல்வன்(1145 பக்கம்), திருமந்திரம்,
திருக்குறள் வாசகம் போன்ற காலத்தால் அழியாதா தமிழ்ப்படைபுகள் இந்த செயலியில்
இடம்பெற்றுள்ளன. சுஜாதாவின் விஞ்ஞானப்பார்வையிலிருந்து மிகப்பழமையான நூல்களும்
உள்ளன. இந்த செயலியில் மதுரைத் திட்டத்திலிருக்கும் ஒருசில மின் நூல்களை இணைத்துள்ளார்கள். இந்தச் செயலியில் உள்ள
நூல்கள் அனைத்தையும் மற்ற நண்பர்களுக்கு மின்னஞல் மூலமாக அனுப்பலாம். கணினியிலும்
இதனைப் பார்க்கலாம். திரையில் வாசிக்கும்போது இடையில் நிறுத்தி மீண்டும்
படிக்கலாம். நாம் எந்த பக்கத்தில் இடையில் நிறுத்தியுள்ளோம் என்பதைக்
குறித்துக்கொள்ளும் வசதியும் இந்த செயலியில் இடம்பெற்றிருப்பது மற்ற தமிழ்க் குறுஞ்செயலியிலிருந்து
முற்றிலும் மாறுபட்ட வடிவில்
வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
தேவாரம்
திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தர் பாடிய (மூவர்தேவாரம்) தேவாராப் பதிகங்கள் பொழிப்புரை மற்றும்
ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த செயலி சைவை அடியார்களின்
விருப்பத்தேர்வாக அமைந்துள்ளது. மேலும் பலரும் இதனை பயன்படுத்தும் எளிமையான
முறையில் இந்த செயலி வடிவமைப்பட்டுள்ளது.
ஜெயகாந்தன்
(Tamil Story)
Tamil Story என்ற குறுஞ்செயலியில்
ஜெயகந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பிற
தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல தமிழ்க் குறுஞ்செயலிகளாக உருவாக்கப்பட
வேண்டும்.
கவிஞர்கள்(Tamil
poet Bio)
Tamil poet Bio- என்ற
தமிழ்க்குறுசெயலியில் அகத்தியர், நக்கீரர், ஒட்டக்கூத்தர், கம்பர், சேக்கிழார்,
சிவப்பிரகாச சாமிகள், வள்ளலார்,
பாரதியார், பாரதிதாசன், சுப்பிரமணிய சிவா, திரு.வி.கல்யாணசுந்தரம், கவிமணி
தேசிய விநாயகம்பிள்ளை, மறைமலை அடிகள், புதுமைபித்தன், செய்குதம்பி பாவலர், கண்ணதாசன்,
வாலி, வைரமுத்து, போன்றோர்களின் தன்விபரக்
குறிப்புகள் தமிழ், ஆங்கில இருமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன.
மின்
இதழ்கள்
விகடன் குழுமம்
தனித்தனியாக ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு செயலியை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தியடுடே தமிழ், நக்கீரன், பெரியார்
இதழ் போன்ற தனி இதழ்களும் தங்களுக்கான தமிழ்க்குறுஞ்செயலிகளை உருவாக்கி
வெளியிடுகின்றன.
Tamil,Indian News paper
Tamil,Indian News paper+ என்ற பெயரில் தமிழ்
ஆங்கிலம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் அமைந்துள்ள 31 நாளிதழ்கள் இந்த செயலியில்
இடம்பெற்றிருக்கின்றன. தினகரன்,தினமலர், தினத்தந்தி நாளிதழ்கள் தமிழ்மொழியில் இடம்பேற்றவைகள். இவை மட்டுமின்றி
முன்னனி செய்தித்தாளகள் தனித்தனியாகத் தமிழ்க்குறுஞ்செயலிகளை வடிவமைத்து
வெளியிட்டுள்ளனர். எ.கா தினமணி, மாலைமலர், காலைக்கதிர் போன்றைவையாகும்.
செல்லினம்
முரசு முத்துநெடுமாறன் அவர்களால் செல்பேசிகளில்
தமிழ் எழுத்துருக்களைத் தட்டச்சு செய்வதிற்குப் பயன்படும் செல்லினம் என்ற தமிழ்
குறியீட்டு முறையை அறிமுகம் செய்து அதனை உலகப்புகழ்பெற்ற செல்பேசி நிறுவனங்களில்
கொடுத்துள்ளார். அவரின் செல்லினம் குறுஞ்செயலியில் மலேசிய, சிங்கப்பூர் தமிழ்
எழுத்தாளர்களின் படைப்புகளை உலகத்தமிழ்ர்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
இதுபோன்று இன்னும் பல வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஆர்வளர்கள் அந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களைக்கொண்ட
தமிழ்க் குறுஞ்செயலிகளை உருவாக்கி வெளியிட்டால் தமிழ் உலகத்திற்குப் பெருமை
சேர்க்கும்.
சுவாமி
விவேகநந்தர்
சுவாமி
விவேகனந்தர் செயலியில் சிக்காக்கோ சொற்பொழிவுகள், வரலாறு, ஆன்மீக வரலாறு,
பொன்மொழிகள், ஐயாவின் அனுபவங்கள் அடங்கிய கருத்துப்பேழை தமிழ்க்குறுஞ்செயலியாக
செல்பேசியில் கிடைக்கின்றன. இதுபோன்ற இன்னும் பல அறிஞர்களின் படைப்புகள்,
வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட தமிழ்க்குறுஞ்செயலிகள் தமிழில் உருவாக்கப்படவேண்டும்.
தமிழ்க்குறுஞ்செயலியால்
பயன்பெறுவோர்
தமிழ்க்
குறுஞ்செயலியால் பயன்பெறுவோர் செல்பேசி வைத்திருப்பவர்கள் மற்றும் தமிழ்
ஆர்வளர்கள்தான். இது மேலும் வளர்ந்து அனைத்து மக்களையும் சென்ன்றடைய வேண்டும்.
அதற்கு இந்த உத்தமம் நடத்தும் மாநாடு வழிவகை செய்யும் என்பதில் எமக்கு நம்பிக்கை
உள்ளது.
கட்டுரையின்
நோக்கம்
- தமிழ்க் குறுஞ்செயலிகளில் எவை எவை
எந்தெந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறன.
- தமிழ்க்குறுஞ்செயலிகளின்
பயன்பாடுகள் இன்று எந்த அளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளன.
- இதனால்
பயன்பெரும் பயனாளர்கள் யார்? யார்?
- இந்த
குறுஞ்செயலிகளைப் பயன்படுத்துவதால் காலவிரயம் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
- தற்பொழுது
இருக்கும் தமிழ்க் குறுஞ்செயலிகள் மட்டும்மின்றி புதிய தமிழ்க்
குறுஞ்செயலிகள் உருவாக்கப்படவேண்டும்
- உலகில் உள்ள
பெரிய வீரர்களின் கதைகளை உள்ளடக்கியும், இராமயணம், மகாபாரத கதைத்தலைவர்களின்
வீரதீரச் செயல்களை குறுஞ்செயலிகளாக உருவாக்கியுள்ளனர். அதுபோல நமது
மன்னர்களான சேர,சோழ, பாண்டியர்களின் வீரதீர விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்க்
குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட வேண்டும்.
- இணையப்பயன்பாட்டிலும்
மென்பொருள் வளர்ச்சியிலும் ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக சீனா
இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்களின் இணையதளமென்பொருள்கள் வடிவமைப்பு
அனைத்தும் ஒரே குறியீட்டுமுறையில் அமைந்திருப்பதால்தான். அதுபோல இனி
உருவாக்கும் தமிழ்க்குறுஞ்செயலிகள் அனைத்தும் ஒரே குறியீட்டு முறையில்
அமைந்தவையாக இருக்கவேண்டும்.
- பயன்பாட்டில்
உள்ள ஒருசில தமிழ்க்குறுஞ்செயலிகளில் எழுத்துப் பிழைகள் வாக்கியப்பிழைகள்
உள்ளன (தமிழ்ஸ் கோட்ஸ்(Tamil Quotes) அவற்றை நாம் போக்க வேண்டும்.
முடிவுரை
இதுவரை தமிழ்க் குறுஞ்செயலிகள் பற்றிய சிறிய
அறிமுக நிலையில் இக்கட்டுரை அமைந்திருக்கும். இது வருங்காலத்தில் வளர்ந்த நிலையை
அடைய வேண்டும். அதற்கு நாம் புதிய புதிய தமிழ்க் குறுஞ்செயலிகளை உருவாக்கம் செய்ய
வேண்டும். அவ்வாறு உருவாக்கும் குறுஞ்செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டும். எதையும்
பயன்படுத்தினால்தான் அதன் பயன்பாடு தெரியவரும்.
.
.
.
தேவையான ஆய்வுப் பொருள். அருமையான கட்டுரை.
நன்று முனைவரே.
மிகவும் பயன் மிக்க கட்டுரை, குறும் செயலிகள் பற்றி அறிந்துகொண்டேன், நன்றிகள்.
ஐயா பேராசிரியர் திரு.குணா மற்றும் நிரஞ்சன் தம்பி அவர்களுக்கு எமது நன்றி. நல்ல பயனுள்ள பின்னூட்டம். இந்தக் கட்டுரை மலேசியாவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்காக எழுதியது. அங்கு சென்று வாசிக்க இயலவில்லை.அதனால் இங்கு வெளீயிட்டேன்.
அன்புடன்
முனைவர் துரை.