உலகத்தமிழ்த்
தகவல் தொழில் நுட்ப மன்றமும்
அண்ணாமலைப்
பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும்
11ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, சிதம்பரம்
மார்கழி
13-15, 2043
திசம்பர் 28- 30,2012
மக்கள்
அரங்கம்: மார்கழி 14/திசம்பர் 27 உரை
இணையத் தமிழ் - நிறையும்
குறையும்
- இலக்குவனார் திருவள்ளுவன்
thiru2050@gmail.com
அன்புசால்
அமர்வுத் தலைவர் முனைவர் சிதம்பரம் அவர்களுக்கும் மக்கள்
அரங்கப் பொறுப்பாளர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்
துரை.மணிகண்டன் அவர்களுக்கும் இணையத்தமிழின் வளர்ச்சிக்காகச் சிறப்பாக
உரையாற்றி வரும் கட்டுரையாளர்களுக்கும்அவையோருக்கும் வணக்கம். நான், ‘இணையத்தமிழ் - நிறையும் குறையும்’ என்னும் தலைப்பில்
பேச வந்துள்ளேன். ஆனால், மக்கள் அரங்கத்தில் பேசப்பட்டு வரும் எல்லா உரைகளுமே இத்தலைப்பில் அடங்கும்
வண்ணம் சிறப்பாக உள்ளன. இவை யாவும், படிப்பாளிகளுக்கு
மட்டுமல்லாமல் படைப்பாளிகளுக்கும் உதவும் வகையில் உள்ளன. ஆனால், உத்தம மாநாட்டு மலரில் இவ்வரங்கத்தில் நிகழும் உரைகள் யாவும்
சேர்க்கப்படவில்லை. எனவே, இவற்றைத் தொகுத்துத் தனி மலராக
வெளியிட அல்லது இணையத்தில் வெளியிட உத்தமம் தலைவர் அவர்களை வேண்டுகின்றேன்
இணையத்தில்
தமிழ் என்பது ஒரு புறம் நமக்குக் கிடைத்த அருந்தவப்பயன் என மகிழும்
வகையில் சிறப்பாக உள்ளது. மறுபுறமோ அதில் நடைபெறும் மொழிக் கொலைகளைப் பார்க்கும்
பொழுது தமிழுக்குப் பெருந்தீங்கு இழைக்கும் அருங்கேடாக விளங்குகின்றது. இவற்றைச் சுருக்கமாகக் காண்பதே இக் கட்டுரையின்
நோக்கம்.
நோக்கம்
இணையத்தமிழின் நிறைகளையும் குறைகளையும் காண்பதன்
மூலம் இணையம், வலைப்பூக்கள், முகநூல் முதலான இணையத் தளங்களின் தற்போதையதமிழ் நிலை, அவற்றில் பிழையின்றித் தமிழில் எழுத வேண்டியதன் தேவை, பிழை திருத்தி ஆக்குநர்களுக்கான வழிகாட்டித்தேவை, அலைபேசி,
பல்வகைக் கணிணிகள் ஆகியவற்றில் தமிழை முழுமையாகப்
பயன்படுத்துவதற்குரிய கணியன்களை உருவாக்குநர்களுக்கு உரிய பணித்தளங்களை அடையாளம்
காட்டுதல் முதலியவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
பதிவர்களின்
தமிழ்நடை வகை
பதிவர்கள்
பொதுவாகப் பின்வரும் வகைகளில் அடங்குவர்.
1. எல்லா இடங்களிலும் நல்ல தமிழையே
பயன்படுத்துபவர்கள்.
2. அறிந்த வரை நல்ல தமிழையே
பயன்படுத்துபவர்கள்.
3. அறியாமையின்
காரணமாக எழுத்துப் பிழைகளுடனும் சொற்பிழைகளுடனும் பதிபவர்கள்.
4. தமிழைக் குற்றுயிரும்
குறையுயிரும் ஆக ஆக்குவதே நோக்கம் என்பதுபோல் பேச்சு வழக்கில் எழுதுவதாகக்
கூறிக்கொண்டு மிகவும் பிழையான நடைகளைப் பயன்படுத்துபவர்கள்.
5.பார்வைக்குறைபாட்டின்
காரணமாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அறியாமையால் தமிழில் பிழைபடப் பதிபவர்கள்.
திருத்து
முறைகள்
முதலிரு வகையினரின் பதிவுகளைப் பிறர் படித்து
அறிவதன் மூலமும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள இயலும். இவ்வகையினரும் இயன்ற வரையில் பிறரது எழுத்துத் தவறுகளைத் திருத்தலாம்.
அறியாத் தவறுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:-செந்தமிழ்(<http://wiki.senthamil.org>)என்னும்
தமிழ் ஆர்வம் மிக்க இணையத் தளத்தில் இனையத்தில்,
கீழ்கன்டவை , தனிக்கை
முதலான சொற்களில் ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் வந்துள்ளமையையும் கீழ்க்கண்ட என ஒற்று வரவேண்டிய
இடத்தில் ஒற்றுஇல்லாததையும் அறியலாம். மேலும், இனிமேல்
காணப்போவதைக் கண்ட எனக் கடந்த காலத்தில் குறிக்கக்கூடாது. எனவே, கீழ்க்காணும் என்றுதான் எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலோர் தவறாகக் கீழ்க்கண்ட
என எழுதுவதுபோல் இங்கும் கீழ்க்கண்ட எனக் குறிக்கப்பட்டுள்ளது. தமிழார்வம் என்பது
தமிழ் பற்றிய செய்திகளைப் பகிர்வதில் மட்டுமல்லாமல் நல்ல தமிழை
வெளிப்படுத்துவதிலும் உள்ளது என்பதைப் புரிந்து
கொண்டு இத்தகையோர் திருத்தமாக எழுத வேண்டும்.இவ்வாறுஅறியாமையால்
தவறிழைக்கும் மூன்றாம்வகையினர் சரியான பிழை திருத்திகளைப் பயன்படுத்துவதன் மூலமும்
பதிவிற்குச் செலவழிக்கும் நேரத்தில் ஒரு பகுதியைத் தவறில்லாமல் எழுதுவது பற்றிய
நூல்களை அல்லது கட்டுரைகளைப் படித்து அவற்றை அறிந்து கொள்வதன் மூலமும் செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.
தம்
வாழ்க்கையின் பயனே தமிழ்க்கொலை என்பது போலும் இதனையே பெருமையாகவும் கருதும் நாலாம் வகையினர், சங்கத் தமிழுக்குக்கூட சென்னைத்
தமிழில் விளக்கம் அளித்துத் தமிழன்னைக்கு அழியாக் களங்கம் ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இத்தகையோரை
நாம் திருத்த முற்படுவதைவிடப் புறக்கணிப்பதன் மூலம்தான் இத்தரப்பு எண்ணிக்கையைக்
குறைக்க முடியும்.
பார்வைக்குறைபாட்டின்
காரணமாகத் தாங்கள் தவறாக எழுதுகிறோம் என்பதை உணராமல் பிழையுடன் பதியுநருக்குத், தக்க வழிகாட்டி மூலம் நாம் திருத்த இயலும். இத்தகையோருக்கு எவை சரி?
எவை தவறு? எனப் பயிற்றுவிப்பதைவிட, எவ்வாறு எழுதினால் சரி அல்லது தவறு என்ற முறையில் விளக்க வேண்டி உள்ளது.
சான்றாகக் ‘குளு’ என்பது
தவறு ‘குழு’ என எழுத வேண்டும் என்பதை
விளக்குவதாயின் “தமிழுக்கு என்னும் இடத்தில் வரும் ‘ழு’ எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்” என அறிவுறுத்த வேண்டும். இதற்கேற்ற முறையில் கணியன்களை(softwares)
உருவாக்கித், தமிழ் ஆர்வத்துடன் பல்வகைப்
பதிவுகளை மேற்கொள்ளும் இத்தகையோரை, நாம் நன்னடைக்கண் திருப்ப
இயலும். கட்புலன் குறைந்தோருக்கான ஒலிப்பு உணர்த்திக் கணியன்கள் நற்றமிழ் ஒலிப்பை
உடையதாக இருக்க வேண்டும். இவர்களுக்கெனச் சிறப்பான ஒலிவழித் திருத்திகள்
உருவாக்கப்பட வேண்டும்.
பயன்பாட்டுநிலை
இணையத்தில்
தமிழின் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பதை நோக்குதல் நலம். இந்தியத் துணைக்கண்ட
மொழிகளில் இணையத்தில் தமிழின் பயன்பாடுதான் முதல்நிலையில் உள்ளதாகக்
கூறுகின்றனர். உண்மையில் இணையத்தளமொழிகளில்
தமிழ் 18ஆவது இடத்தில்தான் உள்ளது என்கின்றனர் வேறு சிலர். புள்ளி விவரம்
எவ்வாறிருப்பினும் தமிழ் ஆக்கநிலைப் பயன்பாட்டில் முழுமையாக இல்லை என்பதே
உண்மை. விக்கிபீடியாவில் உலக அளவில் தமிழ்
61ஆவது இடத்திலும் இந்தியத் துணைக்கண்ட அளவில்
மூன்றாவது இடத்திலும் உள்ளது. அப்பயன்பாடும் தமிழின் வளர்ச்சிக்கு
எழுச்சி ஊட்டும் வகையில் இல்லை. தமிழ்ஈழம்,
தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் போன்ற ஈழம் சார்ந்த தமிழ்ப்பதிவுகள்
உள்ளமையாலும் செய்திகளில் அமைப்புகளின்
பெயராலும் பிறவற்றாலும் தமிழ் என்னும் சொல் இடம் பெறுவதாலும் எண்ணிக்கை
மிகுதியாகத் தெரிகின்றது. ஆனால், தமிழ் சார்ந்த படைப்புகள்
என்னும் பொழுது பிற மொழியினருடன்ஒப்பிட இயலா அளவு மிகக் குறைவாகவே உள்ளது.
மடலாடலிலும் பிற பகுதிகளிலும் கொச்சையாக எழுதப்படுவதில் காட்டும் ஆர்வம், தமிழ் இலக்கிய இனிமைகளையோ கலை, பண்பாட்டு நயங்களையோ
தொன்மைச் சிறப்புகளையோ வெளிப்படுத்துவதில் இல்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. இணையத்தில்தமிழ்
என்னும் பொழுது, இணையத்தில் தமிழின் பயன்பாடு குறித்துப்
பார்க்கும்பொழுதே இணையத்தில் பிற மொழிகளில் தமிழ் பற்றிய பதிவுகளைப் பற்றியும் அறிதல் வேண்டும்.
பதிவுகளின் வகைகளை அறிவதன்மூலம் இந்த உண்மை புரியும். பேசப்படாத மொழியாகிய
சமசுகிருத இலக்கியம் குறித்த பதிவுகள்,
தமிழ் இலக்கியம் குறித்த பதிவுகளைப் போல் மூன்று மடங்கு
உள்ளன
.
தமிழ்
வலைப்பூக்களை விட இரு மடங்கிற்கும் மிகுதியாக இந்தி வலைப்பூக்கள் உள்ளன.
தமிழில்
சிலமொழி இலக்கியங்கள் பற்றிய பதிவுகள்
வருமாறு: -
வ.எண்
|
மொழி வகை
|
சொற்பதிவுகள்
|
1.
|
சமசுகிருத இலக்கியம்
|
31,80,000
|
2.
|
மராத்தி இலக்கியம்
|
11,60,000
|
3.
|
தெலுங்கு இலக்கியம்
|
4,24,000
|
4.
|
மலையாள இலக்கியம்
|
1,99,000
|
5.
|
கன்னட இலக்கியம்
|
1,53,000
|
6.
|
தமிழ் இலக்கியம்
|
3,15,000
|
ஆங்கிலத்தில்
உள்ள மொழி இலக்கியப்பதிவுகள் சில வருமாறு:-
வ.எண்
|
மொழி வகை
|
சொற்பதிவுகள்
|
1.
|
கன்னடம் (kannada literature)
|
3,66,00,000
|
2.
|
தெலுங்கு (telugu
literature)
|
3,59,00,000
|
3.
|
மலையாளம் (malayalam
literature)
|
1,29,00,000
|
4.
|
மராத்தி (marathi)
|
99,10,000
|
5.
|
தமிழ் (tamil
literature)
|
45,20,000
|
பின்வரும்
பட விளக்கங்கள் இலக்கியப் பதிவுகளில்
தமிழின் வருந்தத்தக்க நிலையை விளக்கும்.
இவற்றைப்
பார்க்கும் பொழுது தமிழிலும் ஆங்கிலத்திலும் (தமிழை
விடப்) பிற மொழி சார்ந்தஇலக்கியப்பதிவுகள்
மிகுதியாக உள்ளன எனப்புரிந்து கொள்ளலாம். எனவே, இணையத்தில்
தமிழின்பயன்பாடு குறித்துப் பெருமை கொள்ள ஒன்றும் இல்லை. ஆனால், வெட்கமும் வேதனையும் உற்று நாம் தமிழ் பயன்பாட்டைப் பெருக்க
வேண்டும்.இணையத்தில் தமிழின் பயன்பாடும் மிகுதியாக இருக்க வேண்டும்; பிற மொழிகளிலும் தமிழ் பற்றிய பதிவுகள் மிகுதியாக இருக்க வேண்டும்
என்பனவே நம் இலக்குகளாக இருக்க வேண்டும்.
இலக்கிய
வகையி்ல் பார்த்தாலும் உலகின்மூத்த இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறித்தும் உலகப்
பொதுநூலான திருக்குறள் குறித்தும் பிற தமிழ் இலக்கியங்கள் குறித்தும் குறைவான
பதிவுகளே உள்ளன.
இணையத்தில் திருக்குறள்என்னும் சொல் இடம் பெறும்
(திருக்குறள் 29,90,000 + thirukkural 5,08,000 + thirukural 4,78,000 ) 39,76,000 பதிவுகள் உள்ளன. வேதம்இடம்
பெறும் (வேதம் 6,70,000 + ரிக் வேதம் 27,400 + ரிக்வேதம் 5,630 + ரிக் 1,19,000 + சாம வேதம் 14,900
+ யசுர் வேதம்5,770
+ யசுர்வேதம்161 + அதர்வணவேதம் 699
+ அதர்வண வேதம் 11,800
+ வேதங்கள் 1,42,000
+ rig veda 18,00,000 +
sama veda 27,30,000 + yajur veda 3,92,000 + atharvana veda 3,97,000 )
63,16,360 இணையப் பதிவுகள்
உள்ளன. வேதிக்கு(vedic) என்ற சொல்லோ 37,80,000 இடங்களில் வருகின்றது.
தொல்காப்பியர்
குறித்துத் தமிழில் 65,500 பதிவுகளும்
தொல்காப்பியம் குறித்து 94,900 பதிவுகளும் உள்ளன.
ஆங்கிலத்தில் தொல்காப்பியர் குறித்து (tholkappiyar
7,270 +tholkappiar 38,300) 45,570
பதிவுகளும் தொல்காப்பியம் குறித்து
(tolkappiam 30,300 + tholkappiam 17,700 + tholkaappiyam 8,280) 56,280 பதிவுகளும் உள்ளன. ஆனால்,
தொல்காப்பியருக்குப் பிற்பட்ட பாணினி பற்றி (பாணினி 5,570 + பாணிணி 352
+ panini 4,17,00,000) 4,17,05,922 பதிவுகளும் பாணினி எழுதிய இலக்கண
நூலான அட்டாத்தியாயி பற்றி (அட்டாத்தியாயி 5,570 + அச்(ஷ்)டாத்யாயி 222 + Aṣṭādhyāyī
47,000 + ashtadhyayi 43,400 + अष्टाध्यायी 17,500 ) 1,13,692 பதிவுகளும் உள்ளன.
வால்மீகி குறித்துத் தமிழில் 79,500 (ஆங்கிலத்தில் 26,40,000)
பதிவுகள் உள்ளன. ஆனால், தொல்காப்பியர் குறித்து இந்தியில் 8
பதிவுகளும் திருவள்ளுவர் குறித்து 18,900 பதிவுகளும் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியில்
வேதம்(वेद) இடம்
பெறும் 12,40,000 பதிவுகள் உள்ளன.
சிலப்பதிகாரம்
குறித்து 2,71,000 பதிவுகளும் மணிமேகலை
குறித்து 6,860 பதிவுகளும் தமிழில் உள்ளன.ஆனால், இராமாயணம் குறித்து (கம்ப இராமாயணம் 8,990 + ராமாயணம்
3,48,000 + இராமாயணம் 80,700) 4,37,690 பதிவுகள் உள்ளன.
தமிழ்சார்ந்த இலக்கியப்பதிவுகளை விட ஆரியம்சார்ந்த இலக்கியப் பதிவு மிகுதியாக
உள்ளதை இது காட்டுகின்றது. அதே நேரம்,
தமிழில் கம்பரைப் பற்றி 96,700பதிவுகளும்வால்மீகி குறித்து 79,500 பதிவுகளும்
உள்ளன. ஆனால், ஆங்கிலத்தில்
வால்மீகி குறித்து 26,40,000 பதிவுகளும் கம்பர் குறித்து 8,82,000
பதிவுகளும் உள்ளன.எனவே, தமிழில் மிகுதியாகப்
பதிவுகள் உள்ள இலக்கியம்கூட, ஆங்கிலத்தில் சமசுகிருத இலக்கியத்தை விட மிகக் குறைவான பதிவுகள் உடையதாகவே
உள்ளதை அறியலாம்.
தமிழ்
குறித்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இம்மொழிகள்
குறித்துத் தமிழிலும் உள்ள பதிவுகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
பிற மொழிகளில் தமிழ் பற்றிய பதிவுகள்
வரிசை
எண்
|
மொழிவிவரம்
|
எண்ணிக்கை
|
1.
|
இந்தியில்
தமிழ்பற்றி
(तमिल 8,14,000;तमिऴ् 4,250)
|
8,18,250
|
2.
|
தெலுங்கில்
தமிழ்பற்றி
(తమిళ్ 1,78,000; తమిళ 14,00,000; తమిళం 2,84,000; తమిళంలో 3,94,000)
|
22,56,000
|
3.
|
கன்னடத்தில்
தமிழ்பற்றி
(ತಮಿಳ್ 95,800 ; ತಮಿಳ 1,430 ; ತಮಿಲ್ 66 )
|
97,296
|
4.
|
மலையாளத்தில்
தமிழ்பற்றி
(തമിള് 3,94,000 തമിഴ് / തമിഴ21,30,000 ; തമില് 639 ; റ്റമില്9 )
|
25,24,648
|
தமிழ் மொழியில் பிற மொழி பற்றிய பதிவுகள்
வரிசை
எண்
|
மொழிவிவரம்
|
எண்ணிக்கை
|
1.
|
இந்தி
(இந்தி 12,80,000
; ஃகி(ஹி)ந்தி 16,80,000)
|
29,60,000
|
2.
|
தெலுங்கு
(தெலுங்கு 15,70,000 தெலுகு 30,300)
|
16,00,300
|
3.
|
மலையாளம்
(மலையாளம் 7,93,000 மலயாளம் 6,46,000)
|
14,39,000
|
4.
|
கன்னடம்
(கன்னடம் 2,60,000 கன்னட 5,68,000)
|
8,28,000
|
தமிழ்மொழிபற்றிய
இந்தி,
கன்னடம் ஆகியவற்றில் உள்ள பதிவுகளையும் இந்தி, கன்னட மொழிகள் தொடர்பாகத் தமிழில்
உள்ள பதிவுகளையும் பார்க்கும் பொழுது, நாம், நம்மவர்களிடமும் அயலவர்களிடமும் நம்மைப்பற்றி அறியச் செய்யும் முயற்சிகளை
விட அயலவர்கள் அவரவர் மொழிசார் பதிவுகளில் எட்டாத் தொலைவிற்குச் சென்று
கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரலாம்.
கூகுளில்
மிகுதியாகத் தேடப்படும் சொல் தமிழ்
என்னும் காணுரை <http://www.youtube.com/watch?v=KG3c-CJx8AM>உள்ளது. புள்ளி விவரங்கள் நாளும் மாறிக் கொண்டே உள்ளன. எனினும், ‘‘மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்பதால் ஆராய்ந்த பொழுது
74ஆம் இடத்தில் தமிழ்க்கதைகள் (Tamil stories)என்னும்
சொல் உள்ளது என்பதை அறிய முடிந்தது.தேடுதலுக்குரிய
பொருண்மைகளைப் பார்த்தால் பெரும்பான்மை தகாப்பாலுறவுக் கதைகள். இதைக் குறிக்கவே வேதனைப்படும்
பொழுது, இருக்கின்ற தமிழ்த்தேடலும் எந்தப்பாதையில் உள்ளது
என்பதை நாம் புரிந்து கொண்டால் சரி.
தமிழில்
இணையப் பயன்பாடு என்பது குழுக்கள், மின்னஞ்சல்
வாயிலாகப் பேச்சுத்தமிழ் என்ற போர்வையில் அழிவுநடையாகத்தான் மிகுதியும் உள்ளது.
எனவே, பிற மொழிகள் போல் தமிழ் பற்றிய ஆக்கமுறையிலான பதிவுகள்
மிகுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் இலக்கியம் ஒவ்வொன்றைப் பற்றியும்
கருத்தாடல்கள் நிகழ வேண்டும். இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் தமிழில்தான்
கலைச்சொற்கள் மிகுதியாக உள்ளன. எனவே, பிற எல்லா மொழிகளையும்
விடத் தமிழில் சிறப்பாக முதல்நிலை பெறும்
வகையில் படைப்புகளை இணைய வழிப்பரப்புதல் எளிது.
பிழைகளா?
கொலைகளா?
இணையத்தில் நிகழும் தமிழ்ப்பிழைகளைச்
சுட்டிக்காட்ட இயலாது.ஏனெனில் அவை எண்ணிலடங்கா.
சொல்லப்போனால் அவை பிழைகள் அல்ல; கொலைகள். இருப்பினும்
அடிப்படையான சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
இணையம்
என்பதை ‘இனையம்’ எனக் குறிப்பிடும் தவறான
பதிவுகள் 2,68,000
உள்ளன. நெருடல் ‘இணயம்’, மின் ‘இணயம்’, தகவல்
‘இணயம்’ எனத் தவறாகப்
பெயர்கள் உள்ளனவும் இருக்கின்றன. ஒற்றின்றித் தவறாக ‘வலைபூ’ என 14,000 பதிவுகளும் ‘வலைதளம்’ என 56,700
பதிவுகளும் ‘வலைத்தலம்’ என
ளகரம் லகரமாக மாறிய 410 பதிவுகளும் ‘வலைதலம்’ என 116
பதிவுகளும் உள்ளன. இவற்றில்
பெரும்பான்மையன அறியாமையால் நேர்ந்த தவறாகப் படுகின்றன. அறியாமைத் தவறுகளில்
குறிக்கத்தக்கது எண்களை எழுத்து வடிவில் தவறாகவே மிக மிகப் பெரும்பான்மையர் குறிப்பதுதான்.இவற்றில்
எல்லாம் கருத்து செலுத்தி இணையப்பதிவர் ஒவ்வொருவரும் முன்மாதிரி நடையையே
பயன்படுத்த வேண்டும்.
எழுத்துப்பிழைகளுக்கு
மட்டுமல்லாமல் கருத்துப்பிழைகளுக்கும் இடம் தரக்கூடாது. அலைபேசியில்
கலைச்சொல்லாக்கம்குறித்துக் கட்டுரை அளித்துள்ள கல்லூரி
ஒன்றின்தமிழ்த்துறைத்தலைவர் ஒருவர் தவறான சொல்லாக்கங்களைக் குறிப்பிட்டு இருந்தார். சொல்லாக்கங்கள்
வெவ்வேறு வகையாகக் குறிக்கப்படலாம். ஆனால், முற்றிலும்
தவறான சொற்களைப் பதிவதும் பகிர்வதும் தவறு.
அப்பேராசிரியர் அளித்த கட்டுரையில் copy -ஒட்டு ;
effects -கேட்பு இனிமை; history- முகவரிகள்;
driving - வாகனநேரம்;என்பன போன்ற
பிழைச்சொற்கள் இடம் பெற்றிருந்தன.
கலைச்சொற்கள் அளிப்போர் எழுத்துப்பிழைகளுக்கும்பொருட்பிழைகளுக்கும்
இடமின்றிச் செம்மையாகத் தராவிட்டால் தவறானவையே நிலைக்கும். எனவே,கருத்தூன்றி நோக்கிஎதையும்தெரிவிக்க வேண்டும்.
ஆற்ற
வேண்டுவன
தமிழ் சிறக்கவும் தமிழ்ப்படைப்புகள்பெருகவும்
என்றுமுள நன்மொழியாகத் தமிழ் நிலைக்கவும்
இணையப்பதிவர்கள் பின்பற்ற வேண்டியன பல உள. அவற்றுள் முதன்மையானவற்றைப் பார்ப்போம்.
பிழையே
இழிவு
பிழையாக எழுதுவதை இழிவாகக் கருத வேண்டும். எனவே
இவ்விழிவைத் துடைக்க பிழையின்றி எழுதுவது பற்றிய கட்டுரைகள்,
நூல்கள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். ஓரளவே உதவக்கூடியனவாய்
இருப்பினும் உதவக்கூடிய தமிழ்ச்சொல் திருத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
தேடுதல்
தேவை
எழுதினால்
உடனே இணையத்தில் ஏற்ற வாய்ப்பு உள்ளது என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் எப்படி
வேண்டுமென்றாலும் எழுதலாம் என எண்ணக் கூடாது. வழிவழியாக உள்ள நல்ல கருத்துகளைப்
புரிந்து கொள்ளாமல் குற்றம் கண்டு பிடிக்கும் தவறான போக்கை நிறுத்த வேண்டும்.
ஒன்றை எழுதும் முன்னர் அது பற்றிய பிற விவரங்களை
அறிந்து அதன் பின்பே எழுத வேண்டும். தேடுதல் முயற்சியும் உண்மையை அறியும்
ஆர்வமும் அடிப்படைத் தகுதிகளாகக் கொள்ளப்பட வேண்டும்.
கெடுவினைக்கு
முற்றுப்புள்ளி இடுக
திருவள்ளுவர் காலம் ஈராயிரத்தைத் தாண்டிய
பின்னரும் போலி ஆய்வாளர்கள் சிலர் பரப்பிய தவறான கொள்கையை உண்மைபோல் பரப்புவது
கூடாது. சான்றாதாரம் இல்லாமல் எக் கருத்தையும் பரப்பக்கூடாது. மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம்
குறித்த நல்லாராய்ச்சி நூல்கள் இருக்கும்
பொழுது அதன் காலத்தை மிகவும் பிற்பட்டதாகக் காட்டுவது,
தமிழ் இலக்கியங்களை ஆரியத்தின் தழுவலாக வேண்டுமென்றே காட்டுவது
போன்ற தவறான கெடுவினைகளுக்கு
முற்றுப்புள்ளி இட வேண்டும். அவ்வாறு யாரேனும் அத்தகைய கருத்துகளைப் பதிய
முற்படும் பொழுது குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் அதை ஏற்காமல் விலக்க வேண்டும்.
முன்னோர் கருத்தை மறுக்கக் கூடாது என்று இல்லை. ஆராய்ந்து தெளிந்த முடிவுகளைப்
புறக்கணித்தும் அறியாமலும் நச்சுக் கருத்துகளைப் பரப்பக்கூடாது. நடுநிலை எனக்
காட்டுவதற்காக ஏதேனும் ஓர் உண்மையை
மட்டும் கூறியுள்ளதை எண்ணி ஒட்டு மொத்தமான தமிழ்ப்பகைக்கருத்துகளைத் தளங்களில்
பார்க்கும் பொழுது அவற்றை மேலனுப்பிப்
பரப்பும் தீவினையில் இறங்கக்கூடாது.
எழுதுவதாலேயே
மேதைமை உள்ளதாக எண்ணிக்கொண்டு படிக்கும்பொழுது
தோன்றுவதை எல்லாம் எழுத வேண்டும் என்பது அறிவு முதிர்ச்சி அற்ற செயல்
என்பதை உணர வேண்டும். தவறான கருத்து ஒன்று அறிஞர்களால் மறுக்கப்பட்டது என அறியாமல்
முழுப் படிப்பாளியாக எண்ணிக் கொண்டு
தமிழுக்குக் கேடு தரும் தவறான செய்திகளை மேற்கோளாகக் குறிப்பிடுவதையோ
பிறருக்கு மேலனுப்புவதையோ கைவிட வேண்டும்.
ஒரு பொருண்மை குறித்த முழுமையான கருத்துகளை
அறியாமல் ஆராயாமல், மேலோட்டமாகப்படித்து
ஏற்பதும் மறுப்பதும் தவறு. இணையத் தேடுதலைப் பயன்படுத்தியாவது முழு விவரங்களையும்
அறிந்த பின்னரே உரிய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். தவறான கருத்துகள் பதியப்படும்
பொழுது அதனை மறுப்பதற்கு நேரமின்றியோ முதன்மை கொடுக்க வேண்டா என எண்ணிப்
புறக்கணித்தோ மறுப்பு கருத்து உண்மை அறிந்தவர்களால் பதியப்படுவது இல்லை. ஆனால்,
இத் தவறான கருத்து கருத்தைப் பதிந்தவர் அல்லது தெரிவித்தவர் போன்ற
உண்மை அறியவாதவர்களால் சிறந்த கருத்து என்ற எண்ணத்தை ஏற்படுத்தி பரப்பவும்
மேற்கோளாகக் காட்டவும் படும். இதனால்
தமிழுக்குக் கேடுதான் வரும் என்பதை உணர வேண்டும்.
சான்றாகச்
சொல்வதானால் நேற்றைய அமர்வு ஒன்றில் நல்ல மேற் கோள்களுடன் தமிழ் வளர்ச்சி குறித்த
கட்டுரையை அளித்த பேராசிரியர் ஒருவர்,தமிழில் ஐகாரமும் ஔகாரமும் 12 ஆம் நூற்றாண்டில்தான் வந்தது எனவும் இன்றைய
தமிழ் வரிவடிவங்கள் அதற்குப்பின்னர்தான் ஏற்பட்டன என்றும் உரையாற்றினார். ஐகாரமும்
ஔகாரமும் தொல்காப்பியராலேயே குறிப்பிடப்படும்பொழுது அதனை அறியாமல் தவறான கருத்துகளைப்
பரப்பலாமா? கல்வெட்டுகள் அடிப்படையில் தமிழ் வரிவடிவங்களில்
நூற்றாண்டுதோறும் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். கல்வெட்டாளர்களின் தவறான
கருத்துகள் அடிப்படையிலேயே அவர் இவ்வாறுதெரிவித்து இருந்தார். நூற்றாண்டுதோறும்
தமிழ் வரிவடிவங்கள் மாற்றம் உற்றிருந்தன எனில் எத்தனை வகையான ஓலைச்சுவடிகள் நமக்குக்
கிடைத்து இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கிடைக்கவில்லையே! “இன்றைய சுருக்கெழுத்துகளின் அடிப்படையில்வரிவடிவங்கள் மாற்றம் உற்றது எனக்
கூற மாட்டோம் அதுபோல் படிப்பறிவில்லாதவர்களால் எழுதப்பெற்ற கல்வெட்டு அடிப்படையில்
எழுத்துஆராய்ச்சி மேற்கொள்ளக் கூடாது” எனப் பேராசிரியர்
முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். இலக்கண நூல்களும் எழுத்து
வடிவங்கள் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளன எனக் குறிப்பிட்டு உள்ளன. எனவே,
இரு தரப்புக் கருத்துகளையும் ஆராயாமல் தவறான கருத்துகளைப் பரப்பக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நிகழ்வில் கலந்துகொண்ட உத்தமம் தலைவர் மு.மணி மணிவண்ணன் அவர்களுடன் நாங்கள்
கேடு
தரும் கலப்பு
ஆங்கில எழுத்து வடிவிலேயே தமிழ்க்கருத்துகளைப்
பதியாமல் தமிழில் கணியச்சிடும் முறையை
அறிந்து தமிழிலேயே பதிவுகள் மேற்கொள்ளப்பட
வேண்டும். பேச்சுத் தமிழில்
எழுதுவதுதான் தமிழ் வாழும் வழி எனத் தவறாக
எண்ணுவோர் உள்ளனர். இவர்களுள் பலர் நல்ல தமிழில் எழுதத் தெரியாமையால்
அந்தமுடிவிற்கு வந்தவர்கள். எவ்வாறிருப்பினும் பேசுவது போல் எழுத்து நடையை
மாற்றியதும் அயல்மொழிச் சொற்களைக் கலந்ததும் பிற மொழி எழுத்து வடிவங்களையும்
கிரந்த எழுத்துகளையும் பயன்படுத்தியதும் தமிழ் மொழியைச் சிதைத்ததால் தமிழ்பேசும்
பரப்பளவு குறைத்து விட்டது என்ற வரலாற்று
உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அயல்மொழிக்கலப்பால் தமிழ் நிலம் தேய்வது
குறித்து,
“ஒரு நாடு தன் மொழியை இழக்குமேல் மீண்டும் பெறல் அரிது. எடுத்துக்
காட்டுக்கு வேறு எங்கும் செல்ல வேண்டா. நம் நாடே தக்க சான்றாகும். ஒரு காலத்தில் இமயம் முதல் குமரி வரை நம் செந்தமிழ்
வழங்கியது. பின்னர் விந்தியம் முதல் குமரி வரை தமிழே மக்கள் மொழியாக இருந்தது. ஏன்
பத்தாம் நூற்றாண்டு வரை மலையாளம் எனப்படும் சேரநாட்டில் செந்தமிழே ஆட்சி
புரிந்தது. இப்பொழுது காண்பது என்ன? செந்தமிழ்ப்
பகுதிகளெல்லாம் வேற்று மொழி நாடுகளாக மாறுபட்டு விளங்குகின்றன. இனி மீண்டும்
அவற்றைத் தமிழ் வழங்கும் நாடாகக் காணல் கூடுமா? ” [குறள்நெறி
(மலர் 1 இதழ் 15: ஆடி 31
1995:15.8.1964] எனத் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
அன்றே வருந்தியும் பெரும்பான்மைத் தமிழர் உணர்ந்தாரில்லை. இனியேனும் எழுத்தையும்
மொழியையும் காத்து இனத்தைக் காக்க
கலப்புப் போக்கை அடியோடு கைவிட வேண்டும்.
அகராதிகள்
மூலமாகவோ பிற நூல்கள் வாயிலாகவோ நல்ல தமிழில் எழுத வாய்ப்பிருந்தும் சோம்பலின்
காரணமாகப் பிற மொழிச் சொற்களை அவ்வாறே கையாளும் போக்கினையும் நிறுத்த வேண்டும்.
தெளிவானவற்றையே
பதிய வேண்டும்
பாடல் வரிகளை உரிய புலவர்கள் பெயரைக் குறிப்பிடாமல்
தவறாகவே குறிப்பிடும் போக்கே நிலவுகிறது.அஃதாவது,எப்புலவர் பாடலாக இருப்பினும் பாரதியார், பாரதிதாசன்,
கண்ணதாசன் முதலானவர்கள்
பெயரைக் குறிப்பிடுவது யாருடைய மேற்கோள் என அறியாமலேயே தமக்குத் தெரிந்தவர்
பெயர்களைக் குறிப்பிடுவது என்பது மிகுதியாக நடைமுறையில் இருக்கிறது. அதனைத்
திருத்துமாறு குறிப்பிட்டாலும் மிகச் சிலர்தான் திருத்துகின்றனர். இவ்வாறில்லாமல்
பாடல்வரிகளைக் குறிப்பிடும் முன்னர் ஊகத்தின் அடிப்படையில் முடிவெடுக்காமல் யார் என அறிந்து உரிய
புலவர்களின் பெயர்களைக் குறிப்பிடும் பதிவுகளே தேவை. இல்லையேல் தவறான பதிவுகள்
இளந் தலைமுறையினரால் அல்லது அறியாதவர்களால் அவ்வாறே பரப்பப்படும். எனவே, மேற்கோள் கருத்து எதைப் பதிவதாக இருந்தாலும் சரியானதை உறுதிப்படுத்தி
அதனையே பதிய வேண்டும்.
எழுத்தின் நிலைப்புத்தன்மைக்குப்பதிவிற்கு
உரியன சரியான கருத்தாகவும் இருக்க வேண்டும். அதனைச் சரியான முறையில்
வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தவறான கருத்துகளையும்
அல்லது சரியான கருத்துகளைப் பிழையாகவும்,
எழுதுவதும் பதிவதும் பெருங்கேடு
விளைவிக்கும் என்பதை உணரவேண்டும்.
தூயதமிழ்ச்
சொல் திருத்திகள் தேவை
பிழைதிருத்தி உருவாக்குநர்கள் கிரந்தம் முதலான அயல் எழுத்துகளை அகற்றித்
திருத்தவும் பிற மொழிச் சொற்களைக் களையவும் உதவும் சொல் திருத்திகளை உருவாக்க
வேண்டும். வழக்கில் உள்ள பேனா போன்ற
சொற்களை எல்லாம்தமிழாக இப்போதைய சொல்
திருத்திகள் காட்டுகின்றன. இவற்றை எல்லாம்
அயற் சொற்கள் என உணரும் வகையில் சாய்வெழுத்தில் அல்லது ஒற்றை மேற்கோளில்
குறிக்கவும் மை எழுதி அல்லது தூவல் என நற்றமிழ்ச்சொல்லை அளிக்கவும் சொல்திருத்திகள்
உதவ வேண்டும்.
அலைபேசியிலும்
அன்னைத் தமிழே வேண்டும்
அலைபேசி
என்பது கைக்கணிணியாகும். அலைபேசி பெரும்பாலும் தமிழ்ப்பயன்பாட்டுடன் கிடைக்காமையால் ஆங்கில எழுத்துகளைப்
பயன்படுத்தித் தமிழ்ச் செய்திகளை அனுப்பும்
அவலம் ஏற்படுகின்றது. முன்னர்க்
கூறியவாறு, அன்றாடப் பயன்பாட்டில் ஒலி
பெயர்ப்பு முதன்மை இடத்தை வகிப்பின் நாளை, தமிழ் வடிவம் சிதையும்.
நேற்றைய அமர்வு ஒன்றில் தமிழ் இணையப் பயன்பாட்டில் கல்லூரிமாணவர்கள எதிர்கொள்ளும்
சிக்கல்கள் குறித்த கட்டுரை அளித்த முனைவர் தமிழ்ப்பரிதி மாரி அவர்கள், சேலம் பெரியார்பல்கலைக்கழகத்தில்
எடுத்த புள்ளி விவரத்தின்படி 80% மாணாக்கர்கள் ஆங்கில
வரிவடிவில் தமிழ்ச் செய்திகளை அனுப்புவதாகக் குறிப்பிட்டு இருந்தார். இத்தகைய
போக்கு தமிழ் வளர்ச்சிக்குக் கேடு தரும் அல்லவா? 1950களில்ஐரோப்பிய
மொழிகள் போல் உரோமன் எழுத்துகளிலேயே தமிழ் எழுதப்பட வேண்டும் எனச் சிலர் தமிழை
அழிக்க முயன்றனர். அப்பொழுது பேராசிரியர் முனைவர்சி.இலக்குவனார் முதலானோர் கடும்
எதிர்ப்பு தெரிவித்ததால் அக் கெடு முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், இப்பொழுதோ நாம் நம்மை அறியாமலேயே அலைபேசிகள் வாயிலாகவும் மின்னஞ்சல்கள்
வாயிலாகவும் தமிழ் எழுத்துச் சிதைப்புகளில் ஈடுபட்டு வருகின்றோம். இவ்வாறு இல்லாமல்தமிழிலேயே தமிழ்ச் செய்திகளைப்
பகிர வேண்டும்.
எனவே,தமிழ்நாட்டில்,தமிழ்ப்பயன்பாட்டுடன் கூடிய அலைபேசி, கணிணி முதலானவற்றை மட்டுமே விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலைபேசிகளுக்கு இணையத் தொடர்பு
உள்ளமையால், முழுமையான தமிழ்ப் பயன்பாட்டிற்கு வழி
வகுக்க வேண்டும். அலைபேசி, கணிணிகள் ஆகியவற்றில் எப்புதிய வகை அங்காடிக்கு வருவதாயினும்
தமிழ்ப்பயன்பாட்டு ஏந்துகளுடன் மட்டுமே வர
அரசும் கணிணி நிறுவனங்களும் வகை செய்ய வேண்டும்.
தமிழ்
மொழி வளர்ச்சிக்காக அயல்மொழித் தேர்ச்சி
தமிழ்ப்பகைவர்கள் பலர் ஆங்கிலம் முதலான
அயல்மொழியில் எழுதும் திறன் உள்ளவர்களாக உள்ளனர். எனவே,
தமிழுக்கு எதிரான கருத்துகளை எளிதில் இணையம் வழி பரப்புகின்றனர்.
தமிழின் வரலாறு அறியாதவர்களும் தமிழை அறிமுக நிலையில் அறிகின்றவர்களும் தமிழ்
பற்றி ஆங்கிலம் முதலான மொழிகள் வாயிலாக அறிய விரும்புபவர்களும் இவ்வாறு தவறான
கருத்துகளை முதலில் படிக்க நேர்வதால் அவற்றையே மெய்யென்று நம்பி விடுகின்றனர்.
அப்பொய்மைக் கருத்துகளின் அடிப்படையில்
தவறான பாதையில் ஆராய்ச்சியை அமைத்துக் கொள்கின்றனர். “விதைஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?”இவர்களில்
பலரும் தவறான கருத்துகளை மெய்யென நம்பி மேலும்தவறான முடிவுகளுக்கு வந்து விடுகின்றனர்.
எனவே, தமிழ் தொடர்பான உண்மையான வரலாற்றை அறியச்செய்வதில் இடர்ப்பாடு வருகின்றது.
தமிழில் பட்டம் பெறுநர், படிக்கும் பொழுதே பகுதி நேரமாகப்
படித்தாவது ஆங்கிலம் முதலான அயல் மொழிகளில் தேர்ச்சியும் மொழிபெயர்ப்புத் திறனும்
பெற்றுக் கொள்வது தமிழுக்கு நலம் பயக்கும்.
எல்லாம்
தமிழில்
தமிழ்ஆட்சிமொழியாக முழு அளவில் இல்லாமையும்
கல்விமொழியாக அனைத்து நிலைகளிலும் இல்லாமையுமே தமிழின் பயன்பாட்டினைக் குறைக்கின்றது.
கல்வி நிலையங்கள் தமிழ் மொழிப்பாடங்களில் மட்டுமல்லாமல்,
பிற துறைப் பாடங்களிலும் தவறின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளித்து
முதன்மை அளித்தால் பிழையற எழுதுநர் பெரும்பான்மையராக இருப்பர். எல்லாம் தமிழில்!
எதுவும் தமிழில்! என்னும் நிலையை நாம்
எட்டிவிட்டால் உலக அளவில் தமிழ்தான் முதன்மைப்
பயன்பாட்டில் இருக்கும்.
அறிவியலாளர்களின் உழைப்புக்கொடையால் நமக்குக்
கிடைத்த இணைய வகைகளைச் சிறப்பாகப் பயன்படுத்தித் தமிழுக்குச் சிறப்பு சேர்ப்போம்!தமிழ்ப்புலவர்களே! இணையத்தின்
பக்கம் வாருங்கள்! தமிழ் ஆர்வலர்களே!தமிழிலும் ஏதேனும் ஓர் அறிவியல் துறையிலேனும்
புலமை பெறுங்கள்! தமிழ் படித்தோர் பிற துறை அறிவும் பிற துறை கற்றோர் தமிழறிவும்
பெற்றால்தான் என்றுமுள செந்தமிழாக
என்றென்றும் நம் தமிழ் உயர்ந்தோங்கி நிற்கும்.
இங்கு
வருகை தந்துள்ள உத்தமம் தலைவர் மணி.மணிவண்ணன் அவர்கள், வேண்டுகோளை ஏற்று மக்கள் அரங்க
உரைகளையும் வெளியிட இசைந்ததால் அவருக்கும் அவையோர்க்கும் நன்றி.
இணையத்தமிழை
இணைந்து காப்போம்!
பைந்தமிழை
எங்கும் பரப்புவோம்!
ஈடிலாப்புகழ்
எய்துவோம்!