மீள்பிரசுரம்: http://www.sramakrishnan.com/இணைய எழுத்து -
எஸ். ராமகிருஷ்ணன் --
மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன். -நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே அதிகமானது.இணையத்தில் இரண்டு வகையான எழுத்துகள் வாசிக்க்கிடக்கிறது. ஒன்று தங்களுக்கு பிடித்த சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள் பாதித்த நிகழ்வுகள், நடப்புகளின் மீதான அவதானிப்பு . ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், ஆவேசம், என்று அவரவர் வலைப்பக்கங்களில் எழுதப்படுபவை. அதில் பெரும்பான்மை வலைப்பக்கங்களின் வழியே முதன்முறையாக எழுத துவங்கியவர்கள்.. மற்ற வகை. எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது. இணைய தளங்கள் நடத்துவது.நான் இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவன். நான், சாருநிவேதிதா, ஜெயமோகன், நாகார்ஜ�னன், மனுஷ்யபுத்திரன், உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இணையத்தளங்கள் நடத்திவருகிறோம். இன்று தமிழின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இணையதளங்களில் கட்டுரைகள், பத்திகள் எழுதுகிறார்கள். ஈழத்து இலக்கியம் குறித்து அதிகம் இணையதளங்களின் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது. அச்சு ஊடகங்களில் காணமுடியாத அரசியல் சமூக கலாச்சார பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள், பத்திகள், நேரடியான கருத்துமோதல்கள், உடனடி எதிர்வினைகள் என்று இணையம் பன்மடங்கு வீரியமாக செயல்படுவதை உணர்ந்தவன் நான். அதே நேரம் அசட்டுதனமான கருத்துகளை கொண்டாடுதல், மலிவான சண்டைகள், தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மிதமிஞ்சிய சுயபாராட்டுதல்கள். குப்பையாக கொட்டப்படும் அபிப்ராயங்கள், கவிதை என்ற பெயரில் எழுதி தள்ளப்படும் சுயபுலம்பல்கள். தமிழ்சினிமா கிசுகிசுக்களை கவர்ச்சிபடங்களுடன் வெளியிடுவது என்று அதன் இன்னொரு பக்கம் களைப்படையவும் செய்கிறது.இணைய எழுத்திற்கு என்று இன்னமும் தனி அடையாளம் உருவாகவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் உள்ள தமிழ் வலைப்பக்கங்களில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தரமாகவும், ஆக்கபூர்வமான அக்கறைகளுடனும், விவாதிக்க கூடிய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. இதே நிலை தான் அச்சு ஊடகங்களிலும் உள்ளது. ஆனால் அச்சு ஊடகங்களில் தேர்வு செய்யபடுதல் என்று முறை இருப்பதால் கொஞ்சமாவது வடிகட்டபடுகிறது. இணையம் அப்படியில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சுஜாதா கணிணியை பயன்படுத்தி தமிழில் எழுதுகிறார் என்பது நாளிதழ்களில் செய்தியாக வந்தது. அதற்காகவே அவரை தேடி போய் எப்படி தமிழில் எழுதுகிறார் என்று வியப்புடன் பார்த்து வந்தேன். கணிணியில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான மென்பொருட்கள் அதிகம் வராத நாட்கள் அவை. அந்த வியப்பு தான் என்னை கணிணி நோக்கி உந்தியது. நானும் கணிணியில் தமிழில் எழுத வேண்டும் என்று முனைப்பு கொண்டேன். நண்பர் எழுத்தாளர் இரா. முருகன் முரசு மென்பொருளை ஒரு பிளாப்பியில் தந்து அதை பயன்படுத்தும் முறை பற்றி சொன்னார்; அப்படி தான் கணிணியில் தமிழில் எழுத துவங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக அட்சரம் என்றொரு வலைப்பதிவை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினேன். அதன் பிறகு இரண்டு வருசங்களாக எனது பெயரிலே இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.இணையத்தில் உள்ள இதழ்களில் திண்ணை தான் முன்னோடியான முயற்சி. திண்ணையில் கட்டுரை வந்திருக்கிறது வாசித்தீர்களா என்று கேட்பார்கள். புதிய ஊடக வெளியாக திண்ணை அமைந்திருந்தது. அதன் பிறகு ஆறாம்திணை. அம்பலம், சிபி.காம் துவங்கி இன்று உயிர்மை. காலச்சுவடு, போன்ற அச்சு இதழ்களின் மின்வடிவங்களும், கீற்று, அதிகாலை. தமிழ்மணம், மாற்று என்று இணைய எழுத்துகளை ஒரு சேர வாசிக்கும் கூட்டு தளங்களும் வந்துவிட்டன. உயிரோசை, சொல்வனம், பதிவுகள் போன்ற இலக்கிய இதழ்களும் வெளியாகின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் கூட இணையத்தில் முழுமையாக வாசிக்க கிடைக்கினறன.உயிரோசை இணைய இதழ் ஒரு ஆண்டு வெளிவந்து அதில் எழுதிய முக்கிய படைப்பாளிகளின் பத்து புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷம் தருகிறது. இணையத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் ஒரு சேர புத்தகமாவது இதுவே முதல்முறை . உயிரோசை இணையத்தில் சிறந்த இலக்கிய இதழாக வளர்ச்சிபெற்று வருகிறது. நான் அதன் தொடர்ந்த வாசகன். அதில் வரும் பத்திகளை தொடர்ந்து வாசிக்கிறேன். நான் அறிந்தவரை மற்றமொழிகளில் எழுத்தாளர்கள் தங்களது இணையதளங்களை ஒரு விசிட்டிங் கார்டு போல தான் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களை பற்றிய சுயவிபரங்கள் , அவர்கள் எழுத்தின் சில மாதிரி பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. நேரடியாக இணையத்திற்கு என்றே எழுதுவதுதில் தமிழ் எழுத்தாளர்களே முன்னோடியாக இருக்கிறார்கள். உலகெங்கும் இலக்கிய இதழ்களோ அல்லது பதிப்பகங்களோ தான் எழுத்தாளர்களுக்கான வலைப்பக்கங்கள், இணையதளங்களை நடத்துகின்றன. தங்களது இதழில் எழுத்தாளர் எழுதும் பத்தியை அதில் உள்ளீடு செய்கின்றன. அதிலும் தமிழில் நடந்துள்ள மாற்றம் முக்கியமானது, எழுத்தாளர்களே தங்களுக்கான இணைய தளத்தினை, வலைப்பக்கத்தை நடத்துகிறார்கள். அல்லது அவர் மீது அக்கறை கொண்ட வாசகர் அவருக்கான இணைய தளத்தை உருவாக்கி தந்து நடத்துகிறார். இந்த முயற்சி வேறு மொழிகளில் அதிகம் இல்லைபெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி, கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்துகொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.வீடியோ, ஆடியோ மற்றும் ஒவியங்கள், கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள், நேர்காணல்களின் தரவிறக்க வசதி, நேரடியாக எழுத்தளாருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ள படவில்லை.இணையத்தில் எழுதுவதால் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்ற பொது வதந்தி தமிழகம் எங்கும் காணமுடிகிறது. நான் அறிந்த பல எழுத்தாளர்கள் அதை நேரடியாக என்னிடமே கேட்டிருக்கிறார்கள். உண்மையில் இணையத்தில் எழுதி சம்பாதிக்கின்றவர்கள் என்று எவரையும் இன்று வரை நான் காணவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தன் கையில் இருந்து ஆண்டிற்கு குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் செலவிட்டே இணைய தளங்களை நடத்துகிறார்கள். கடுமையான எதிர்வினைகள், வசைகளை நேரடியாக மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் வழியாக பெருகிறார்கள் என்பதே உண்மை. உலகெங்கும் உள்ள வாசகர்களுடன் தனது படைப்புகளை பகிர்ந்து கொள்வது என்ற எத்தனிப்பே பல எழுத்தாளர்களையும் இணையதளங்களில் எழுத வைத்துள்ளது.இணையத்தில் நான் கண்ட முக்கிய அம்சம். இங்கே வாசகர்கள் என்று யாரும் கிடையாது. வாசிப்பவரும் ஒரு எழுத்தாளரே. அவர் என்ன எழுதுகிறார் என்பதில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் ஒரு வலைப்பக்கம் வைத்திருப்பார். தொடர்ந்து எழுதி வருபவராக இருப்பார். அது தான் இதன் பலம் அதுவே இதன் பலவீனம். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளபடும் எத்தனங்களையே அதிகம் காணமுடிகிறது. அதற்காக எந்த அளவும் செயல்பட தயங்காத பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். பல வலைப்பக்கங்கள் அவர்களது டயரிகுறிப்புகள் என்ற அளவில் தான் உள்ளன.சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி.இணையம் அச்சு ஊடகங்களை தாண்டிய நவீன ஊடக வெளி. அதை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது எழுதுபவரின் கையில் தானிருக்கிறது. பக்க கட்டுபாடு இல்லை என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும் இரண்டு பக்கங்களுக்கு மேலாக எழுதப்படும் பதிவுகளை பலரும் படிப்பதில்லை என்பது தான் உண்மை. பின்நவீனத்துவக் கருத்துகள், மொழியாக்கங்கள், தத்துவம் சார்ந்த உரையாடல்கள், விஞ்ஞானம் பற்றிய ஆழ்ந்த கட்டுரைகள் இணையத்தில் வெளியாகின்றன. ஆனால் அவை வாசகர்களை கவனிப்பதேயில்லை. அது போலவே தொடர்ந்து தமிழ் வலைப்பக்கங்களை வாசித்து வரும்போது பத்துக்கும் குறைவானவர்களே தீவிரமாக தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்து எழுதி வருவதை காணமுடிகிறது. மற்றவர்கள் மிதமிஞ்சிய வேகத்தில் எழுத துவங்கி சில மாதங்களில் இணையத்தை விட்டே போய்விடுகிறார்கள். அல்லது ஒதுங்கி கொண்டு விடுகிறார்கள். சலிப்படைந்து திட்ட துவங்குகிறார்கள். சிலருக்கு வலைப்பக்கம் என்பது அன்றாட செயல்படாகியிருக்கிறது. எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்காக எதையாவது உள்ளிடுகிறார்கள்.சமீபமாக இணையத்தில் எழுத துவங்கிய சிலர் இதிலிருந்து அச்சு ஊடகங்களுக்கு தாவியிருக்கிறார்கள். பத்தி எழுதுகிறார்கள். அது போலவே பல ஆண்டுகளாக எழுதாமல் ஒதுங்கிய இருந்த இலக்கியவாதிகள் இணையத்தின் வருகையால் அச்சு ஊடகங்களை விலக்கி நேரடியாக இணையத்தில் எழுத வந்திருக்கிறார்கள். வார மாத இதழ்கள் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அடையாளம் காட்டுகின்றன. பெண்கள் வேறு எந்த ஊடகங்களையும் விட இணையத்தின் வழியே தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அது மிக முக்கியமான வரவு. இது போலவே ஒய்வு பெற்றவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் வலைப்பக்கம் தங்களுக்கான தொடர்பு வெளியாக மாறியிருக்கிறது. வலைப்பக்கங்கள் பொதுவாக மேடைப்பேச்சை போன்ற உடனடி கைதட்டல்களுக்கானவையாக கருதப்படுகின்றன. அப்படி இருக்க வேண்டியது அவசியமில்லை. அதனால் தான் பின்னூட்டம் இடுவதை இவ்வளவு பரபரப்பாகவும் நான் தான் முதலில் என்று கொண்டாட்டத்துடனும் செயல்படுகிறார்கள். பின்னூட்டம் ஒரு எதிர்வினை மட்டுமே. அதை விரும்புவதும் விலக்குவதும் படைப்பாளியின் சுதந்திரம். பிரிண்ட் அவுட் செய்து கையில் வைத்து மறுபடி படிக்க செய்யும் படியாக பல கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அவை இணையத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமலே தானிருக்கின்றன.சுற்றுசூழல், சமகால அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தமிழ் மரபு சார்ந்த சிலரது வலைப்பதிவுகள் காத்திரமானவை. ஆனால் அதனை வாசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் மிக குறைவு. இணைய எழுத்திலும் சினிமாவே பிரதானமாக உள்ளது. அதிலும் கிசுகிசு, அதிரடி விமர்சனம், கவர்ச்சிபடங்களுக்கு அதிகமான வருகை காணமுடிகிறது.அச்சு இதழ்களில் இல்லாத ஒரே வித்தியாசம் தமிழ்சினிமாவை தாண்டி பலரும் வெவ்வேறு மொழி படங்களை பற்றி எழுதுகிறார்கள் என்பதே. ஆனால் அவை அந்த படங்களை பற்றிய தங்களது ரசனையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. ஆய்வு மிக குறைவே.லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹேயின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஏதாவது ஆவணப்படம் இருக்கிறதா என்று தேடினால் மறுநிமிசம் அவரது நேர்காணல், ஆவணப்படம். கவிதை பற்றிய அவரது சொற்பொழிவுகள் என்று நாலைந்து மணி நேரம் காணும் அளவிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் எழுத்தளார்களை பற்றிய ஆவணப்படங்கள், அவர்களது நேர்காணல்களின் வீடியோ பதிவுகள், மற்றும் அவர்களது சொற்பொழிவுகளின் ஆடியோ என எதையும் காண முடிவதில்லை. அரிதாக ஒன்றிரண்டு பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை தரவிறக்கம் செய்ய இயலாது. அத்துடன் அவை நேரலையாக காணவும் போராட வேண்டியிருக்கிறது. வெவ்வேறு இலக்கிய கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆய்வாளர்கள் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்கள். ஆனால் அவை அந்த நிகழ்வோடு காற்றில் கரைந்து போய்விடுகின்றன. அதை முறையாக பதிவு செய்து இணையத்தில் தர முன்வந்தால் தமிழின் மாற்று சிந்தனை வெளி அதிகம் பேரை சென்று அடையும்.கல்வி புலங்கள் தங்களது செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து தரவேற்றம்செய்வதன் வழியே பொது வாசகர்கள் அதை அறிந்து கொள்ள செய்யய இயலும். அது போலவே சாகித்ய அகாதமி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகள் தங்களது கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள், படைப்பாளிகளை பற்றிய ஆவணப்படங்கள் இணையத்தில் எளிதாக பார்வையிட வசதி செய்து தருவதன் வழியே அவை இன்னும் அதிகம் பார்வையாளர்களை சென்றடைய கூடும்ஈழத்து படைப்பிலக்கியங்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எளிதாக வாசிக்க கிடைக்கும் விதத்தில் ஈழம்.நெட் என்ற இணையம் உருவாக்கபட்டிருக்கிறது. இதில் முக்கிய படைப்பாளிகளின் நூல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதி உள்ளது. இது ஒரு முன்னோடியான முயற்சியாகும். தமிழில் இது போன்ற கூட்டு முயற்சி அவசியம் தேவையானதாக உள்ளது.தமிழ் இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பல முக்கிய தகவல்கள், கட்டுரைகள், விவாதங்கள், இன்று வரை ஒருமித்து சேகரமாக்கபட்டு ஆவணப்படுத்தபடுதல் வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் பற்றி சுயவிபரங்கள், புகைப்படங்கள், முக்கிய புத்தகங்கள், அதன் பதிப்பகங்கள், விமர்சனங்கள் என்று அடங்கிய விரிவான தகவல் சேமிப்பு தளங்கள் உருவாக்கபடவேண்டும். இதற்கான ஒன்றிரண்டு முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ் விக்கிபீடியா போன்றவற்றில் உள்ள தகவல்பிழைகள் முறையாக சரி செய்யப்படல் வேண்டும்.இணையத்தில் புதிதாக எழுத வருகின்ற பலரும் எதை படிப்பது. என்ன சினிமாவை பார்ப்பது.எந்த இணைய தளங்களை வாசிப்பது என்று வழிகாட்டுதலை விரும்புகிறார்கள். அது அச்சு இதழில் காணமுடியாத வசதி. அதை எளிதாக பலரும் செயல்படுத்த முடியும். நான் தொடர்ந்து நான் வாசிக்கும் இணையதளங்கள், புத்தகங்கள், திரைப்படங்களை சிபாரிசு செய்கிறேன். இதற்காகவே எவராவது முன்வந்து ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டால் அது அதிகம் உதவிகரமாக இருக்க கூடும்.தமிழ் வலைப்பக்கங்களுக்கான இன்டெக்ஸ் ஒன்று உருவாக்கபடுதல் வேண்டும். அதன்வழியே எவரும் எந்த இணையதளத்தையும் உடனடியாக பார்வையிட முடியும். அது போலவே வாசிக்க கிடைக்காத பல முக்கிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. தமிழில் அது இன்றும் சாத்தியமாகவில்லை.நுண்கலை, பண்பாடு சார்ந்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய இடங்கள், நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எண்ணிக்கையற்று ஆங்கிலத்தில் உள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு புள்ளிகள் இணையத்தில் இன்னமும் ஒருங்கிணைக்கபடவில்லை.இணைய எழுத்து நாளை இன்னமும் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. புதிதாக எழுத வருகின்றவர்கள் இணையத்தின் வழியே அறிமுகமான போதும் தனித்த படைப்பாளியாக உருவாக அதிக சாத்தியங்கள் உள்ளன. அது போலவே மாற்று சிந்தனைகளுக்கு இணையம் இன்னமும் கூடுதலான முக்கிய ஊடகமாக அமையும். ஆவணபடுத்துதல், அறிமுகம் செய்வது. பல்துறைகளை ஒன்றிணைத்தல், புதிய வாசக தளங்களை உருவாக்குதல், அடிப்படை மாற்றங்கள் குறித்த விவாதங்களை உருவாக்குதல், குறும்படங்கள், ஆவணப்படங்களை எடுப்பவர்கள் இணையத்தின் வழியே அதை வெளியிடுவது என்று இணையம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன் ஒருபகுதியாகவே இணையத்தில் எழுதுவதும் இருக்கிறது.கசடுகளை நீக்கி தேவையானதை அறிந்து கொள்வது வாசகனின் கையிலே உள்ளது. இணையம் புதிய வாசகபரப்பை, எழுத்தை உருவாக்கும் தடையற்ற சாத்தியங்களை தருகிறது. அதன் வளர்ச்சியும் செயல்பாடும் கூட்டுமுயற்சிகளால் மட்டுமே மாறுதல் அடையும் என்று தோன்றுகிறது.நன்றி: http://www.sramakrishnan.com/
நன்றி பதிவுகள்.கம.
இன்றுதான் தங்கள் வலைப்பக்கத்தைப் பார்த்தேன்..
நன்று!