/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, June 9, 2011

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா

இணையத்தில் தரவு தளங்களில் குறிப்பிட்டுச் சொல்வோமானால் அது விக்கப்பீடியாவாகத்தான் இருக்க முடியும் எந்த தலைப்புகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் தகவல்களை நமக்குக் கொடுக்கும் சிறந்த தளம் விக்கிப்பீடியாவாகும். இந்த தளம் இன்றைய ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் செய்தியாளர்களுக்கும் கிடைத்த செய்திப் புதையல் என்றே கூறலாம். 267 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் ஒன்று.

விக்கிப்பீடியா பொருள் விளக்கம்

உலகிலுள்ள எந்தப் பொருள் குறித்தும் அறிந்து கொள்ள உதவும் ஒரு புத்தகம் என்சைக்ளோபிடியா என்கிற கலைக்களஞ்சியம். இந்தப் புத்தகத்தை இணைய வழியில் கொடுக்க முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த கண்னி மென்பொருள் வல்லுனர் ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஜ்ஞ்சர் ஆகியோர் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் விக்கிபீடியா (Wikipedia). ஹவாய் மொழியில் விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு “விரைவு” என்ற பொருள். விரைவாக அறிவு சார்ந்த தகவல்களை பயன்பாட்டாளர்களுக்குத் தருவதால் இந்த இணைய என்சைக்ளோபீடியாவிற்கு ‘விக்கிப்பீடியா’ எனப் பெயரிட்டுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.தோற்றம்

2001 ஆம் ஆண்டில் இணையதளம் அமைப்பதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) மற்றும் தத்துவ ஆசிரியரான திரு.லாரி சாஞ்சர் (Larry Sanger) ஆகியோர் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். இந்த தளத்திற்கான இடத்திற்காக இணையத்தில் விக்கிப்பீடியாவின் பதிவை 2001 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று www.wikipedia.com என்ற இணைய முகவரியையும், ஜனவரி 13-ஆம் தேதியன்று www.wikipedia.org என்ற இணைய முகவரியையும் பதிவு செய்தனர். ஆங்கிலத்தில் முதலில் செயல்படத் தொடங்கிய இத்தளம் பிற மொழிகளிலும் செயல்படுத்த லாப நோக்கமற்ற தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாக விக்கிப்பீடியாவிற்கென ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. விக்கிப்பீடியா அமைப்பானது 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சு மொழியிலும், மே மாதத்தில் ஜெர்மன் மொழியிலும் தனி விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. இத்துடன் வேற்று மொழிகளுக்கான விக்கிப்பீடியாவை உருவாக்கிக் கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டன. இவ்வாறு விருப்பமுடையவர்கள் அவரவர் மொழிகளுக்கேற்ப விக்கிப்பீடியாவை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வரும் சுமார் 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த 267 மொழிகளிலான விக்கிப்பீடியாக்களில் தர வரிசையில் முதலில் ஆங்கிலம், அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரெஞ்சு, போலீஷ் (Polish), ஜப்பான், இத்தாலி, டச்சு, ஸ்பானிஷ், போர்ச்சுக்கல், ரஷ்யா, சுவிஸ், சீனா, நார்வே, பின்னிஷ் (Finnish), கட்டாலன் (Catalan), உக்ரேனியன் ஹங்கேரி, செக் (Czech) துர்கீஸ், ரோமானியன், எஸ்பரண்டோ (Esperanto) வோலாபக் (Volapuk), கொரியன், டேனிஷ் (Danish), இந்தோனேசியா, சுலோவக் (Slovak), அராபி, வியட்நாமிஷ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் மொழியில் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியில் “மனித மேம்பாடு” என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடங்கியவர் தனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்கிற கருத்து உள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இது ஒரு விளம்பரமாக இருந்ததால் அதை பிற்காலத்தில் ஒரு பயனர் நீக்கி விட்டார். இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இ.மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) தமிழில் உருவாக்கியுள்ளார். இவையன்றி விக்கிப்பீடியாவும் அதன் பிற இணையத்திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ள மீடியா விக்கி என்னும் மென்பொருளின் அனைத்துப் பக்கங்களையும் அதற்குரிய இடைமுகத்துக்குத் தேவையான தகவல்களையும் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார். என்று தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.இதனால் தமிழில் விக்கிப்பீடியாவின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வைக்குச் சென்றது. இன்று பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் முயற்சியால் 14000 க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு 32800க்கும் அதிகமான கட்டுரைகளைக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில் 67-வது இடத்தில் உள்ளது. பிற இந்திய மொழிகளான இந்தி – 43 வது இடத்திலும், தெலுங்கு 47 வது இடத்திலும், மராத்தி 58 வது இடத்திலும், வங்காளம் 67 வது இடத்திலும், உருது 84 வது இடத்திலும், குஜராத்தி 91 வது இடத்திலும், கன்னடம் 97 வது இடத்திலும், பஞ்சாபி 144 வது இடத்திலும் பீகாரி 146 வது இடத்திலும், பஞ்சாபி 168 வது இடத்திலும், ஒரிசா 196 வது இடத்திலும், காஷ்மீர் 208 வது இடத்திலும், சிந்தி 213 வது இடத்திலும் அஸ்ஸாமி 220 வது இடத்திலும் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா தோன்றியதற்குப் பிறகு தோன்றிய பல மொழிகளிலான விக்கிப்பீடியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ் மொழியில் முன்னேற்றம் சற்று குறைவாகவே உள்ளது. இதனைப் போக்க தமிழர்கள் பலருக்கு இணைய அறிவும், தமிழ் தட்டச்சு செய்ய முடியாமையும் குறைபாடுகளாக உள்ளன. இது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். இதில் யார்வேண்டுமானாலும் தன்னார்வத்துடன் எந்த தலைப்பிலும் கட்டுரையை உருவாக்கலாம். முழுக்க முழுக்க இலவசமாக செயல்படும் தன்னார்வ நிறுவனமாகும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கம்

இணையத்தின் வழியாக தமிழ் தரவுகளைத் தேடுபவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்படுகிறது. எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய தமிழில் தரமான கட்டற்ற கலைக் களஞ்சியத்தை உருவாக்குவது போன்றவையே இதன் நோக்கமாகக் கருதப்படுகிறது.

தமிழ்த் தரவுகளின் உட்தலைப்புகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 27,000 க்கும் அதிகமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இதனைப் பல்வேறு நாட்டிலிருந்து, பலதுறை வல்லுனர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அவர்களில் மயூரநாதன், கனடாவிலிருக்கும் தமிழரான. நக்கீரன், ஆஸ்திரேலியாவிலிருக்கும் தமிழரான கனக சிறிதரன், கனடாவில் இருக்கும் மின் மற்றும் கணினிப் பேராசிரியர் செல்வா என்கிற திரு. செ.ரா.செல்வக்குமார், தமிழ்நாட்டிலிருக்கும் சுந்தர், ரவிசங்கர், தேனி எம். சுப்பிரமணி, சிவக்குமார், ஜெர்மனியிலிருக்கும் சந்திரவதனா, ஜப்பானின் டெரன்சு, நோர்வேயிலிருக்கும் கலை, அமெரிக்காவிலிருந்து குறும்பன் மற்றும் கோபி, பீபிசெல்வம், நிரோஜன் சக்திவேல், டி.ரெங்கராசு, பேராசிரியர் வி.கே, கார்த்திக்பாலா, மு.மயூரன், பரிதிமதி, அராப்பத், மகிழ்நன், வைகுண்டராஜா, சோடாபாட்டில், தகவலுழவன் போன்றோர்கள் ஆவார். இவர்களுடன் மேலும் பல பயனர்களுடைய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இதில் கட்டுரைகளின் உட்கருத்தைக் கொண்டு ஒன்பது முக்கியத் தலைப்புகளாகப் பிரித்து வரிசைப்படுத்தியுள்ளனர். அவை முறையே

1. தமிழ்

தமிழ் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அகர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழியின் தோற்றம், மக்கள்தொகை, தமிழர்களின் வரலாறு, மற்றும் நூல்கள் குறித்த பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி சார்ந்த சில முக்கியக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

2. பண்பாடு

பண்பாடு என்ற தலைப்பில் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழர்களின் கலாச்சாரம், வீரம், விளையாட்டுகள் போன்றவையும் அகரவரிசைப்படுத்தி பகுத்து வைத்துள்ளனர். மனித சமுதாயத்தின் வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் பண்புகள் சார்ந்த துணைப்பகுப்புகள் உள்ளன. மேலும் பண்பாடு குறித்த சில முக்கிய கட்டுரைகளின் தலைப்புகளும் கீழ் பகுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.


3. வரலாறு

இந்த தலைப்பில் மொத்தம் 28 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதன்மைப் பக்கத்தில் அரசு, இனம், காலம் போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய துணைப் பகுப்புகள் அகரவரிசையில் இடம் பெற்றுள்ளன. மேலும் உலக வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பும் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
4. அறிவியல்

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலச் சூழலில், அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள் பல்கிப் பெருகி வருகின்றன. ஒரு மொழி வளர்ந்து செல்வதற்கு அந்தந்த காலக்கட்ட அறிவியல் சாதனங்களையும், கருத்துக்களையும், உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் விக்கப்பீடியாவில் இதற்கென ஒரு தலைப்பில் அறிவியல் ஒப்பிரு அளவியல், அறிவியல் ஆய்விதழ்கள், இயற்பியல், அறிவியல் தமிழ் என 80 உட்தலைப்புகளில் அறிவியல் சார்ந்த முக்கியக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

5. கணிதம்

கணிதம் எனும் தலைப்பில் 35 துணைப்பகுப்பாக கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அறிவியல், இடவியல், இயற்கணிதம், எண் கோட்பாடு, எண் கணிதம், எண்கள், கணித இயல் வகைப்பாடுகள், கணித மரபு, விரல் கணிதம் என்ற உட்தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கீழ் உள்ள பகுப்பில் பல தலைப்புகளிலும் கணிதம் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

6. தொழில்நுட்பம்

இந்தத் தலைப்பில் பல துணைப்பகுப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆற்றல், இயந்திரவியல், உயிர், தொழில் நுட்பவியல், உலோகவியல், கட்டிடக்கலை, கணினியியல், கருவிகள், தகவல் தொழில் நுட்பம், தொழிற்சாலை, தொழில்கள், நானோ தொழில் நுட்பம், பயன்பாட்டுக் கருவிகள், விண்வெளிப் பயணம் போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் உள்ளன.

7. புவியல்

புவியியல் எனும் தலைப்பில் புவியியலின் தோற்றம், கண்டங்கள், உலக புவியியல் அமைப்பு போன்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. இடம், இயற்கை அழிவுகள், எரிமலை, கடற்கரை, சுற்றுலா, சூழலியல், தீபகற்பங்கள், நாடுகள், நில அமைப்பு, நிலவியல், நீர் நிலைகள், பீடபூமிகள், புவியாளர்கள், பெருங்கடல் ஆய்வு பற்றிய செய்திகள் உள்ளன. இந்தியாவைப் பற்றிய நிலவியல் தனியாக உள்ளன. அமெரிக்க ஜக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அயல் நாடுகளின் புவி அமைப்பும் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள நிலவியல், அமைப்புகளும், தமிழ்நாட்டிலுள்ள ஏரிகள், குளங்கள், கடற்கரை, ஆறுகள், ஊர்களும் நகரங்களும், மலைகள் போன்ற செய்திகளாக பல செய்திக் கட்டுரை இடம் பெற்றுள்ளன.

8. சமூகம்

சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை பல துணைப் பகுப்புகளில் அகரவரிசையில் நிறுவியுள்ளனர். அன்றாட வாழ்வியல், சமூக அமைப்பு, அரசியல், இனங்கள், சமூக இயக்கங்கள், உறவுமுறை, ஊடகவியல், சட்டம், தொல்பொருள், மனித உரிமைகள், வணிகவியல் எனும் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. மேலும் சில உள் தலைப்புகளில் சமூகம் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளன.

9. நபர்கள்

நபர்கள் தலைப்பில் அகிம்சைவாதிகள், அரசர்கள் அறிவியளாலர்கள், ஆன்மீகவாதிகள், இசைத்துறையினர், இயல்பியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூகத் தலைவர்கள், மருத்துவர்கள் என்ற தலைப்புகளில் அகரவரிசையில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஒன்பது தலைப்புகளில் தமக்குத் தேவையான கருத்தைப் பயனுள்ளவர்கள் தேடி எடுத்துக் கொள்ளலாம். கட்டுரைத் தொகுப்புகளின்றி வேறு பல திட்ட செயல்பாடுகளும் தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியாவின் துணைத் திட்டங்கள்

விக்சனரி

எனது தமிழ் விக்கிப்பீடியா நூலின் 161 ஆம் பக்கத்திலிருந்து 165 வரையுள்ள பக்கங்களில் உள்ள செய்திகளில் விக்சனரி, விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி இனங்கள், விக்கி செய்திகள் போன்றவற்றை அப்படியே பயன்படுத்திக் கொள்ளவும்.

தமிழில் தொடங்கப்பட உள்ள திட்டங்கள்

விக்கிப்பீடியாவின் துணைத் திட்டங்களில் விக்கி பொது, விக்கி பல்கலைக்கழகம், மேல் விக்கி போன்ற திட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்கள்

1. உலகில் இருக்கும் எந்த கருத்துக்களையும் இதில் நம்மால் விரைவாக எடுத்துக் கொள்ளலாம்.
2. உலகச் செயல்பாடுகள், செய்திகள், மரபுசார்ந்த உடைகள், பண்பாடு போன்றவைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
4. ஆராய்ச்சி செய்வோர், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கட்டிடப் பணியாளர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், சமூகவியலாளர்கள் என அனைவருக்கும் பயன்படும் தரவு தளமாக இது பயன்படுகிறது.
5. பிற மொழிகளின் வரலாற்றை எளிதில் இதன் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
6. மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. இது ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது.

2 comments:

 • அன்பின் முனைவரே..

  நான் வலைச்சரத்தில் ஒருவாரகாலம் ஆசிரியப் பணியாற்றினேன்..

  அதனை
  http://gunathamizh.blogspot.com/p/blog-page_02.html

  இந்த இணைப்பில் காணலாம்.

  இதில் இலக்கியத்தமிழ் என்ற பகுதில் தங்களையும் அறிமுகம் செய்தேன்..

  தங்களையும் தங்களைப் போன்ற தமிழ் வலைப்பதிவர்களையும்

  கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்...

  http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

  தங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள் முனைவரே..

 • விக்கிப்பீடியா குறித்த விழிப்புணர்வு இன்னும் தேவை முனைவரே..

  நல்லதொரு அறிமுகம் செய்துள்ளீ்ர்கள்..

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்