/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, October 27, 2011

தமிழ் மென்பொருள்களும் எழுத்துருக்களும்

|0 comments

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல தொழிற்நுட்பத்திலும் தேக்கநிலைதான் ஒருசில ஆண்டுகள் இருந்தன.ஆனால் இன்று இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாக உயர்ந்துள்ளது.”காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பதுபோல தமிழுக்கும் பல மென்பொருள்கள் பொன்குஞ்சுகளாக இருந்து வருகின்றன. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இந்த பதிவு பயன்படும்.
தமிழில் நீங்கள் கணினி பயன்படுத்தி ஏதேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு தேவைப்படுவது ஃபான்ட்ஸ் (Fonts) என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீன கணினி இயங்குதளங்களில் (ஆப்பிரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் தட்டச்சு செய்ய இது ஒன்றே போதுமானது.

தமிழ் மென்பொருள் என்றால் என்ன?

பல கணினி இயங்குதளங்கள் நேரடியாக தமிழில் உள்ளீடு செய்வதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் போன்ற மொழிகளுக்கும் கணினியில் கையாள்வதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எளிமையாக கூறுவதென்றால், நாம் பயன்படுத்தும் விசைப்பலகைகள் ஆங்கில மொழியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு, ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில வடமொழி எழுத்துக்களை நாம் உள்ளீடு செய்யும் வகையில் விசைப்பலகைகளின் அமைப்பு இல்லை. இத்தகைய பிரச்சினைகளை கையாள சில உத்திகள் மென்பொருட்களின் மூலம் செய்யப்படுகின்றன. இத்தகைய மென்பொருட்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது.
மேலும் அங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் உள்ளது (Typing method). ஆனால் தமிழுக்கு பல்வேறு உள்ளீட்டு முறைகள் (typewriter, typewriter old, phonetic, transliteration, tamilnet99, போன்றவை) உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு செய்ய முடியாது. ஆகவே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இவை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் வேறானவை என்பதால், பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ்சார்ந்த கணினி வேலைகளுக்கென சிறப்பான மென்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

முடிவாக கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வகையில் ஒரு சிறு மென்பொருள்தான். அதனை நேரடியாக பயன்படுத்துவதில் குறிப்பாக வின்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை திறமையுடன் கையாள்வதற்காகவும், ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யும் பொழுது அது தரும் மொழிசார்ந்த துணைக்கருவிகளைப் போல் (இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, போன்றவை) தமிழுக்கும் உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும் என இரா. கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு என்றால் என்ன?

ஒரு மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவமைத்து, கணினி ஏற்றுக் கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு மென்பொருளாகும். டிரெடில் அச்சுக்கோர்க்கும் முறையில் கூறுவதென்றால் அஞ்சறைப்பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குகளை போட்டு வைத்திருக்கும் சட்டகங்களை போன்றதே எழுத்துரு எனப்படுவது.

தொடக்கத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளைக் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், படம் வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என கணினியில் திறமையாக பாவித்துச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென் பொருள்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர்.இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடித்தன
.
ஆதமி மென்பொருள்

ஆங்கில மென்பொருள்போல தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கவேண்டுமென பல கணிப்பொறி வல்லுனர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக முதலில் கனடாவில் வசிக்கும் திரு.கலாநிதிசீனிவாசன் என்பவரால்1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆதமி தமிழ் மென்பொருளாகும். இதன் மூலம் கணிபொறியில் தமிழில் எழுதி அதனை அச்சுப்பதிவு செய்துகொள்ள முடிந்தது.

மயிலை

இதனைத் தொடர்ந்து1985-ஆம் ஆண்டு சுவட்சர்லாந்தில் உள்ள முனைவர் கு.கல்யாண்சுந்தரம் என்பவரால் உருவமைத்த மயிலை எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு உருவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் ஆங்கில எழுத்தாகிய A-வைத் தட்டினால் அது அ-என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைபோன்று K-க, O- கொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன.




முரசு அஞ்சல்

“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் போன்ற செயல்கள் இலகுவாக்கப்பட்டன.


தமிழ் லேசர்

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் உருவைமைத்த ’தமிழ் லேசர்’(tamil laser) எனும் குறியீட்டு முறையில் அமைந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

ISCII-83

இந்திய அரசால் நிருவப்பட்ட Centre for Developments for Advanced Computing (CDAC)என்ற அமைப்பால் ISCII-83 என்ற தமிழ் மெபொருள் உருவாக்கப்பட்ட
.
பிற தமிழ் மென்பொருள்கள

அமெரிக்கத் தமிழர் மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமியால் தொடங்கப்பட்ட அணங்கு,மதுரைத்திட்டக் குழுவினரால் வடிவமைத்த TSCII,கனடாவில் வசிக்கும் தமிழ் ஆர்வலர் திரு.விஜயகுமாரின் சரஸ்வதி போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
1990-இல் அமெரிக்கவைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் T.கோவிந்தராசு என்பவர் உருவமைத்த பல்லாடம், சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் கணியன் போன்ற மென்பொருள்கள் தமிழில் உருவாகி தமிழ் மொழி இணையத்திலும் கணிப்பொறியிலும் வளர்ந்த நிலையில் உள்ளது.

தாரகை

சிங்கப்பூரில் உள்ள ஆர்.கலைமணி என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் தாரகை எழுத்துரு மென்பொருளாகும்
இவைகள் மட்டுமன்றி தமிழகத்தைச் சார்ந்த கணிப்பொறி வல்லுனர்களும் மென்பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் திரு.செல்லப்பனின் asian printers,க.இளங்கோவனின் CAD Graph, டாக்டர். கூப்பர் modular infotech, திரு துளுக்காணம் அவர்களின் lastech, மா.ஆண்டோபீட்டர் அவர்களின் softview(inscript fonts), திரு.தியாகராசனின் வானவில் போன்றவையும் அடங்கும்
.
இ-கலப்பை

முரசு 2000-த்தை தொடர்ந்து பெங்களூரில் பணியாற்றிவரும் மென்பொருள் தயாரிப்பாளர் திரு.முகுந்தராஜாவின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருங்குறியீட்டில் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் இ-கலப்பையைக் கணினியில் நிறுவுதல்,தொடர்ந்து யூனிக்கோடு எழுடத்துருக்களை நிறுவுதல் என்ற இரு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.



கூகிள் தமிழ் ஒலிமாற்றி மென்பொருள்

கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.
http://www.google.com/ime/transliteration/

அகபே தமிழ் எழுதி

அகபே தமிழ் எழுதி தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதி மென்பொருள். இந்த தமிழ் எழுதியை இலவசமாக வலைப்பூக்களிலும், வலைத்தளங்களிலும் நிறுவிக் கொள்ள முடியும்

என்.எச்.எம் மென்பொருள்(new Horizon media)

சென்னையில் உள்ள கிழ்க்குப்பதிப்பக திரு.பத்திரிசேசாத்திரி அவரகளின் முழுமுயற்சியோடு திரு.கே.எஸ்.நாகராஜன் அவர்களால் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டது.இதுவரை வந்துள்ள தமிழ்ஒருங்குறியீட்டு மென்பொருள்களில் முதன்மையானது என்று கூறலாம்.இதனை இலவசமாக கணிப்பொறியில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இம்மென்பொருள் தமிழ்மொழித் தவிர பிற இந்திய மொழிகளிலும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகி மென்பொருள் (azhagi.com/docs.htm)

விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவரது அயராத முயற்சியால் உருவான மென்பொருள்தான் அழகி ஆகும்.
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிச்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration).
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.

செல்லினம் மென்பொருள்

என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கிதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் அறிமுகமாக வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிடபட்டது.
சர்மா சொற்பிழைச்சுட்டி மென்பொருள் (http://sarma.co.in/tamil/index.htm)
சொற்பிழைச் சுட்டிக்கான இம்மென்பொருட்கள் சொற்களின் எழுத்துப் பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளன.
சொற்பிழைச்சுட்டி மென்பொருள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்களிள் 35 வகையான (பட்டியலிலுள்ள, Unicode) எழுத்துருக்களையும் தானாகவே இனம் கண்டு சொற்பிழைகளைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில் உள்ளவாறு (English spell checking) தவறான வார்த்தைகளின் அடியில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டிடும். எனவே பயனாளர் குறிப்பிட்ட எழுத்துருவில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டு உள்ளீடுகளையும் இனம் கண்டு தானாகவே சொற்பிழைகளைக் கண்டறியும்.









Tuesday, October 25, 2011

தீபத்திருநாள் வாழ்த்துகள்

|0 comments
நல்லதை எண்ணவோம்
நல்லவை நடக்கும்.

தீபத்திருநாளில் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்...








அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.




Saturday, October 1, 2011

சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைகள்

|2 comments



உலக இலக்கியங்களில் செம்மொழி இலக்கிய வரிசையில் தமிழ்மொழியும் ஒன்று. இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியில் எண்ணிலடங்கா இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்றன. உலகமொழிகளில் எத்தனையோ மொழி இலக்கிய வரலாற்றைப் படித்துள்ளேன். அனால் தமிழில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுச் செய்தியைப் போல வேறு எந்தமொழி இலக்கியத்திலும் காணக்கிடைக்கவில்லை என்று பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் குறிப்பிடுவதன் மூலம் உலக அளவில் தமிழ்மொழி பெற்றுள்ள செல்வாக்கினை நாம் நன்கு உணரலாம்.
நமது இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்தை மூன்று பெரும்பிரிவாகப் பிரித்துள்ளார்கள். அவை முதல்,இடை,கடை என்பவயைகும்.இச்சங்கங்களில் உருவாகிய நூல்களின் எண்ணிக்கைக் கணக்கிட இயலாதது.இத்தகு சிறப்புப் பெற்ற தமிழ் மொழியில் இலக்கியப் பாடல்கள் பல புலவர்களால் பல காலக்கட்டத்தில் பாடப்பெற்றவையாகும். இவ் இலக்கியங்களில் பொதிந்துள்ள் கருத்துக்கள் மிக அதிகம். மனித வாழ்வு, உலகப் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், மனிதனின் தேவை, ஒழுக்க நெறி என பரப்பு விரிகின்றன.இருந்தாலும் சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைக்கோட்பாடுகள் என்ற தலைப்பில் இக்கட்டுரை விரிகிறது.

சங்கைலக்கியப் புலவர்களின் எண்ணிக்கை.

சங்ககாலம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனலாம். இச்சங்ககாலங்களில் மூன்று சங்களிலும் புலவர்களால் பாடப்பெற்ற தொகுப்பு நூல்கள் உள்ளன. இவைகளில்
முதல் சங்கத்தில் 4449 புலவர்களும்
இடைச்சங்கத்தில் 3700 புலவர்களும்
கடைச்சங்கத்தில் 449 புலவர்களும்
இருந்துள்ளனர் என்று இலக்கிய வரலாறு கூறுகிறது.
மொத்தம் 8598 புலவர்கள் சங்க இலக்கியத்தைப் பாடியுள்ளதாக வரலாறு உள்ளது.
இவற்றில் பாடிய புலவர்கள் பல இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இவர்களின் மனநிலை ஒவ்வொருவருக்கும் வேறுப்பட்டு இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக
கூறியுள்ளனர். இவர்களின் மன அளுமை எவ்வாறு இருந்திருக்கும். புலவர்கள் மக்களையும் ,அரசனையும் ,இயற்கையையும், காதல் வீரம் ,கொடை என பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.இவர்களின் மன ஆளுமையைக் கண்டு வியக்கதாவர்கள் இல்லை.

மனம்

மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

சிந்தனை

சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
சிந்தித்தலின் உயர்வே கணியன் பூங்குன்றனின் உலகப்பார்வையைச் சற்று உயர்வாக எண்ணத் தூண்டுகிறது. மேலும் அவரது மன அளுமையையும் இப்பாடல் வெளிக்காட்டிகிறது.இன்றைய உலகம் சுயநலம் மிக்க மனிதர்கள நிறைந்ததாகும்.இந்த உலகத்தில் சுயநலம் சிறிதும் இல்லாத மனிதர்களின் மேன்மைப் பண்பினை இப்பாடல் விளக்குகிறது.இந்த உலகம் ஏன் இன்றளவும் நிலைப்பெற்றிருக்கிறது?என்ற வினாவை எழுப்பிக்கொண்டு இவவாசிரியர் விடை கூறுகிறார். தேவர்கள் அருந்தக்கூடிய அமிழ்தம் கிடைத்தபோதும் தனக்கு மட்டும் உரியது என்று தனித்து உண்ணாமல் மனிதர்கள் உள்ளத்தால் இந்த உலகம் இன்றளவும் திகழ்கிறது. சினப்பண்பு சிறிதும் இல்லாதவர்கள், சோர்வடையாதவர்கள்,மற்றவர்களின் கருத்துக்களுடன் இயைந்து செல்பவர்கள்,புகழுக்காக உயிரயையும் தரத் தயங்காதவரகள், தமக்கு என எதனையும் பெற முயற்சி செய்யாதவார்கள், பிறருக்காகவே எப்போதும் முயற்சி செய்து உழைப்பவர்கள் போன்றன் மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்றளவும் நிலைப்பெற்று உள்ளது என்ற சிந்தனையை கூறியுள்ளார். மேலும் மனித உள்ளத்தினை மேம்பாடடையச் செய்யக்கூடிய கருத்ஹ்டுக்களைக் கொண்ட பாடல்.
தீமையும் நல்லதும் அவரவரின் மனதைப்பொறுத்தது. அது மற்றவர்களால் நிகழக்கூடியது அல்ல என்கிறார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரவாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்




இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலை இ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே(புறம்.192)

தெளிந்த மன சிந்தனையுடையோரால் மட்டுமே இதுபோன்ற மன ஆளுமைச் செய்திகளை கூறச்செல்லமுடியும். எனவே தெளிந்த மனசிந்தனை வேண்டும்.
தன்னை ஆளுகின்றவன் எவனோ அவனால்தான் நல்ல சிந்தனைப் பிறக்கும் அப்பொழுதுதான் உலகை ஆளுகின்ற சக்தியைப் அவனால் பெறமுடியும்.
இதைப்போன்றே
“பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந்தத்தங், கருமமே கட்டளைக் கல்” (குறள், 505)
என்ற;உலக ஆசான் வள்ளுவன் கூறியிருக்கிறார்.அவனவன் செய்கின்றே செயலே அவனை நல்லவனாக உயர்த்துகின்றது என்ற மன் ஆளூமையை வெளிப்படுத்தியுளார்.
மேளும் தம் ஆளுமைப்பன்மை அவ்வையார் குறிப்பிடும்போது எந்த நிலமாக இருந்தாலும் அந்த நிலத்தில் நல்ல ஆடவர்கள் இருந்தால் அநிலம் வளமையடையும் என்ற உயரிய சிந்தனையை தன் ஆலுமையின் மூலம் எடுத்துக்காட்டுகிறார்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!.(புறம் 187)

நோக்கு(க்கம்)

மன ஆளுமைக்கு அடுத்த சிறப்பு என்று கூறுவோமானால் நோக்கம் நல்லவையாக அமைந்திருக்க வேண்டும்.அரசன் சட்டம் இயற்றலாம். அது மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமைய வேண்டும். அதைவிடுத்து மக்களை துன்பப்படுத்தும் விதமாக இருத்தல் கூடாது. மன்னன் ஒருவன் வரி வசூல் செய்ய படைவீரர்களை அனுப்பி வைக்கின்றான். அதிகமான வரியை மக்களுக்கு விதிக்கின்றான். இதனைக்கண்டு மக்கள் மனதை நன்கு அறிந்த புலவர் மன்னனுக்குத் தன் அறிவுரையாகவும், மன ஆளுமையை
காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
……… ……… ……… ……….. ……… ………. ……… ……… …….. ………. ….
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா உலகமொங் கெடுமே (புறம்-184)
என்று பாண்டியன் அறிவுடைநம்பிக்கு மக்களிடம் எவ்வாறு வரிவசூல் செய்ய வேண்டும் என்று பிசிராந்தையார் தரும் உலக நோக்கு கருத்தைக் மன்னனுக்குத் தெளிவுபடுத்தும் காட்சி.இது இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. உலக நாடுகள் பல இன்று பொருளாதரத்தில் சிக்கித் தவிக்கும் சூழல் நமக்கு நன்றாகத் தெரியும்.

உணர்ச்சி

மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம்.இலக்கியம் உணர்ச்சிகளின் விளையாட்டுக் களம் என்பதுஅனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பேறுண்மை.
மனித உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிகளைப் பல இடங்களில் பல புலவர்கள் மன ஆளுமையாகப் பதிவு செய்துள்ளனர். பல மன்னர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ளாத புலவர்கள் கையறுநிலைப்பாடல்களாகப் பாடியுள்ளனர்.நம்மி நெடுஞ்செழியன் இறப்பை பேரெயின் முறுவலார் என்ற புலவர் தன் மன உணர்ச்சியின் பிழிவாகப் (புறம்-239) பாடியுள்ளார். கபிலர் பாரி மறைந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளாமல் வருந்திப்பாடிகிறார். ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீர்த்தனார் பாடிய பாடல்

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆன்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே. (புறம் -242)
மன்னன் இறந்தபோது அவனது இறப்பை ஏற்றுக்கொள்ளாமல் மங்கலப் பொருளான மலரை-முல்லை மலரை எவரும் அணிய முன்வரவில்லை. மக்கள் இவ்வாறுகொடிய அவலத்தில் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க இயற்கைப் பொருள்களான மலைக்கும்,நதிக்கும், மலருக்கும் செடிக்கும் என்ன தெரியும்? மலர் இயல்பாக பூக்கிறது, தென்றல் இயல்பாக வீசுகிறது, மரங்கள் இயல்பாக அசைகின்றன.இயற்கையின் இயல்பான செயல்கள் கூட மன்னனை இழந்தும் வருந்தும் குடிமக்களுக்குத் துன்பத்தைத் தருகின்றன என்று உணர்ச்சியின் உச்சக்கட்டமாக முல்லைப்பூவைப் பார்த்து கேட்கும் புலவனின் மன நிலையை நாம் என்னவென்று கூறுவது.இது புலவனின் மன ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்
.
மன உறுதி..

ஒரு செயலை செய்துமுடிக்க மன உறுதி மிக அவசியம். இது மன ஆளுமைக்கு அடுத்த அறன். மனம் ஒரு குரங்கு என்பர் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது. அதனை நிலை நிறுத்தியவர்கள் வாழ்வில் பல முன்னேற்றேங்களை அடைந்துள்ளனர்.பெருஞ்சாத்தன்
என்ற புலவர் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று பாடிவிட்டு பரிசில் கேட்கிறார். அவன் சிறிது கொடுக்க அதனை வாங்காது சூழுரை செய்கின்றான். உனது பரிசிலை நீயே வைத்துக்கொள். இதனைவிட அதிகமாக பரிசிலைப்பெற்று நான் மீண்டுவருவேன்.
அவ்வாறு கூறீயப்படியே பெருஞ்சாத்தன் குமணனைப்பாடிப் பரிசில் பெற்று வருகின்றான். வந்தவன் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று இதோ நான் உனக்குத் தரும் மிக உயர்ந்த பரிசாக இந்த யானையை வைத்துக்கொள் என்று அவனது கடிமரத்தில் யானையைக் கட்டிவைத்துவிட்டு திரும்புகின்றான். இது பெருஞ்சித்திரனாரின் மன உறுதியை வெளிப்படுத்தி நிற்கிறது.
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. (புறம்-162)


இதுபோன்றே அவ்வையார் அதியமான் நெடுமான் அஞ்சி பரிசிலை காலம் தாழ்ந்து கொடுத்தான் என்ற காரணத்திற்காகப் பரிசிலைப் பெற்றுக்கொள்ளாமல் திரும்புகிறார். அப்பொழுது எமக்கு எந்த திசைக்கு சென்றாலும் பரிசிலும் உணவும் கிடைக்கும் என்று கூறி செல்கிறார். இச்செயல் அவரின் மன உறுதியைக் காட்டுகிறது.
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.(புறம் 206)
கற்பனை
கற்பனை மனிதனுக்கு இயல்பாகவே வாய்ந்த ஒரு அணிகலன். அது மனிதனிடம் செயற்கையாக உருவாக்கப்படவில்லை. கற்பனை மனிதனின் எண்ணங்களைச் செதுக்குகிறது.
மனிதனிடம் இயல்பாக புதைந்து கிடக்கின்ற கனவு காணூம் பன்புதான் கற்பனைக்கு அடிப்படை. கனவு கற்பனை இரண்டுமே நிகழ்காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் சொல்ல முடியாதா துன்பங்களிலிருந்து விடுதலை தருகிறது.இத்தகைய கற்பனையை சங்கப் புலவர்கள் மன ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக பாடியுள்ளார்கள்.
பாலைப் பாடிய பெருங்கடுங்கோ பாலை நிலத்தில் நடந்துசெல்லும் தலைவனும் தலைவியும் காணும் நிகழ்வுகளை ஆசிரியர் தனது கற்பனைத் திறத்தினால் வெளிப்படுத்துகிறார். ஆண் மானின் நிழலில் பெண் மான் படுத்துறங்கும் நிகழ்வைக்காட்டி தலைவனின் நிழலில் தலைவி ஓய்வு எடுக்கும் அன்பினைக் காட்டுகிறார்.
குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை இயற்கையோடும், நிலத்தைவிட பெரியது வானத்தைவிட உயரமானது,கடலைவிட ஆழமானது என காதலை உயர்வாகத் தன்கற்பனைத்திறத்தினால் செதிக்கியுள்ளார். இது புலவனின் மன ஆளுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."(குறு-3)

இவ்வாறாக சங்க இலக்கியப்புலவர்கள் மன் ஆளுமைக்கருத்துக்களை உலகிற்கு வழங்கியுள்ளனர் மனம் நல்லவையாக இருந்தால் செயல் நல்லவயாக அமையும். இதனை சங்க இலக்கியப்புலவர்களின் பாடல்கள் வழியாக நாம் கண்டுகொள்ளமுடிகின்றது
.
கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள்

1.புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதர்
2.கலித்தொகை, சக்திதாசன் சுப்பிரமணியம்.
3.குறுந்தொகை மூலம்,
4.www.wikipedia.org
5.www.tamilvu.org















































.