/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 26, 2015

முனைவர் எஸ். அருள்மொழி - Dr.s.Arlmozhi

முனைவர் எஸ். அருள்மொழி ( 1968) … தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில் நுட்பத்துறையில் பல அரிய பணிகளை மேற்கொண்டுவரும் இன்றைய இளைய தலைமுறை ஆய்வாளர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும் (1988), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1990) கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர் ஹைதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் செயற்படுத்தமொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் ( Centre for Applied Linguistics and Translation Studies – Centre for ALTS) எம் ஃபில் பட்டமும் (1992) , செயற்படுத்த மொழியியலில் ( Applied Linguistics) முனைவர் பட்டமும் (1999) பெற்றார். அறிவியல் தொழில்நுட்பத்துறைக் கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புபற்றி ( Dynamics of Translation in Reconstructing Sc-Tec Terminilogies) எம் ஃபில் படிப்பில் ஆய்வு மேற்கொண்டார். இலக்கண உருபன்-ஒலியன் பற்றிக் ( Aspects of Inflectional Morpho-Phonology: A Computational Approach) கணினிமொழியியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சில ஆண்டுகள் பணியாற்றியபிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தின் AU-KBC மையத்தில் தமிழ்க் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிற ஆய்வுக்குழுவில் ஒருவராக ஐந்து ஆண்டுகள் (2000-15) செயல்பட்டார். பின்னர் ஆந்திரா குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் கணினிமொழியியல், திராவிடமொழிகள் ஆய்வுத் துறையில் எட்டு ஆண்டுகள் (2005-13) பணியாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ( 2013 –இலிருந்து) ஹைதராபாத் நடுவண் பல்லைக்கழகத்தின் செயற்படுத்த மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய முக்கியமான ஆய்வுத்தளமான கணினிமொழியியல் துறையில் தரவுமொழியியல் ( Corpus Linguistics) , சொல்வலை ( WordNet) , இயந்திரமொழிபெயர்ப்பு ( Machine Translation - MT) ஆகிய பிரிவுகளில் முக்கியமான ஆய்வுத்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். சொல்வலைத் திட்டத்திற்கான ( WordNet) உலக அளவிலான முறையான பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்குமான ஆய்வுத் திட்டங்களை இந்திய நடுவண் அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியுடன் பல இலட்சம் மதிப்புள்ள திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். கணினிமொழியியல், குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்புக்கான சொற்களஞ்சியத்தை ( Lexical Resources) உருவாக்குவதில் முக்கியப் பங்கு ஆற்றிவருகிறார். தமிழ்ச்சொல்வலை ( Tamil WordNet) , தமிழுக்கான வினைச்சொல்வலை ( VerbNet for Tamil) , தெலுங்கு-தமிழ் இயந்திர மொழிபெயர்ப்பு ( Telugu – Tamil MT), இந்திய மொழிகளுக்கான தரவுத்தளம் உருவாக்கம் ( Indian Languages Corpora Initiative ) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழுக்கான பலவகை மென்பொருள் உருவாக்கங்களுக்கு இவரது பணிகள் பெரிதும் பயன்படும். தேசிய அளவிலான கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் அளித்துள்ளார். 2012 –ஆம் ஆண்டு என்னுடன் இணைந்து மலேசியாவில் கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் மலேசியா ஆசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான கணினிமொழியியல் பயிலரங்கம் ஒன்றில் பயிற்சியாளராகப் பணி மேற்கொண்டார். தமிழகத்தில் கணினிமொழியியலில் முறையான பயிற்சிகளைப் பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இளம் ஆய்வாளர்களில் ஒருவரான இவரைத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் , தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வு மையங்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. மின்னஞ்சல் முகவரி - arulmozi@gmail.com, arulmozi@uohyd.ac.in

நன்றி பேரா.தெய்வசுந்தரம்.

1 comments:

  • Rajkumar Ravi says:
    October 31, 2015 at 12:35 PM

    கணித்தமிழில் மொழியியல் கூறுகளை ஆராய்ச்சி மேற்கொண்டிருப்பவரை உலகறிய அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்