/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, July 16, 2015

பேராசிரியர் ப. பாண்டியராஜா

தமிழறிஞர்கள்பற்றி (73) …
பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943) … மிகவும் வியப்புக்குரிய ஒரு தமிழறிஞர். பட்டங்கள் பெற்றது கணிதத்துறையில் … பணியாற்றியது கணிதத்துறையிலும் கணினித்துறையிலும் …. ஆனால் தமிழறிஞர்கள் பலரும் இணைந்து செய்யவேண்டிய பணிகளை – ஒரு மிகப்பெரிய தமிழாய்வு நிறுவனம் செய்யவேண்டிய பணிகளை - தனி ஒரு ஆய்வாளராக இருந்து சாதித்துள்ளார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (1962), முதுகலைப் பட்டம் (1964), எம் ஃபில் பட்டம் ( 1972) பெற்றுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் (1980), மொழியியலில் சான்றிதழும் பெற்றுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, 2001-ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வானது தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை எழுத்துத்தமிழின் பண்புக்கூறுகளைப்பற்றிய ஒரு புள்ளியல்துறை நோக்கிலான ஆய்வாகும் ( A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – a Diachronic and Synchronic Study of linguistic features starting from Tolkappiyam and upto modern times). மொழியியல், புள்ளியல், கணினியியல் ஆகிய மூன்று துறைகளையும் இணைத்து 20-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய அரும்பெரும் சாதனையானது, பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்காப்பிய இலக்கணத்திற்கும் இலக்கணக் குறிப்புகளோடும் ( Word class category) புள்ளியியல் விவரங்களோடும் தொடரடைவுகளைத் தருகிற மென்பொருள் உருவாக்கியுள்ளதாகும். இவ்விதத் தொடரடைவுகள் உதவிகொண்டு, தமிழ் இலக்கியங்களின் மொழிநடையைப் பல்வேறு கோணங்களில் ஆராயலாம். பல்வேறு மொழிவழிக் கருவிகளை – ஒலியனியல், உருபனியல் ஆகியவற்றை ஆராய்வதற்கான மொழிக்கருவிகளை – உருவாக்கலாம். தமிழ் லெக்சிகன் போன்ற பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். தமிழுக்கான வரலாற்று இலக்கணத்தை எழுதலாம். இவர் அளித்துள்ள தமிழ் இலக்கியப் பனுவல்களைக்கொண்டு, தமிழுக்கான தரவுத்தளங்களை உருவாக்கலாம். தமிழ் இலக்கியங்களைச் சொல்பிரித்து இவர் அளித்துள்ளது கணினித்தமிழ் ஆய்விற்கு மிகவும் பயன்படும். ஒவ்வொரு இலக்கியத்திலும் பயின்றுவந்துள்ள அடிச்சொல்கள் எவ்வளவு, இலக்கண விகுதிகள் எவ்வளவு, , விகுதி ஏற்ற சொல்கள் எவ்வளவு போன்ற விவரங்களையெல்லாம் இவர் அளித்துள்ளார். தமிழ் இலக்கியங்களின் யாப்பு கட்டமைப்பு, தொல்காப்பியத்தின் அமைப்பு ஆகியவைபற்றியும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்மொழி ஆய்வாளர் என்ற முறையிலும் கணினித்தமிழுக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிற ஆய்வாளர் முறையிலும் எனக்கு அவரது இப்பணிகள் மிகுந்த உதவியாகயிருக்கிறது என்று கூறுவதில் மிகவும் மகிழ்வடைகிறேன். ஒரு கணிதத்துறை , கணினித்துறை சார்ந்த ஒரு பேராசிரியர் தமிழ்மொழிக்குச் செய்துள்ள இந்த அரிய பணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரது இணையதளத்தின் முகவரி - http://sangamconcordance.in/
நன்றி முனைவர் தெய்வசுந்தரம், தலைவர், தமிழ்த்துறை.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்