/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, March 28, 2015

இறையனார் அகப்பொருளும் நம்பியகப்பொருளும்

|0 comments

  இறையனார் அகப்பொருளும் நம்பியகப்பொருளும்


காவிரி மகளிர் கல்லூரியில் (திருச்சிராப்பள்ளி) வாசிக்கப்பட்டக் கட்டுரை. தமிழ் இலக்கிய காலம் ஒரு பொற்காலம். தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் வளர்ந்து வந்த பாதையும் ஒரு நெருடலானது. அந்த வகையில் இலக்கண நூல்களில் அகம் சார்ந்து இயங்ககூடிய அல்லது கருத்துக்களை வெளியிடக் கூடிய நூல்களில் இறையனார் அகப்பொருளும் நம்பியகப்பொருளும் தலைசிறந்த நூல்களாகும். இத்தகு இரண்டு நூல்களின் கருத்துக்களைத் தெளிவுபட விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இறையனார் அகப்பொருள் அமைப்பு முறை
களவின் இலக்கணத்தையும் கற்பின் இலக்கணத்தையும் நயம்பட உரைப்பது இந்நூல். இதில்  கற்பிற்கு ஊன்றுகோளாக இருக்கும் களவுப் பிரிவில் 33 நூற்பாக்களும் துறவின் வாழ்க்கைக்கு ஊன்றுகோளாக இருக்கும் கற்பு பிரிவில் 27 நூற்பாக்களும் மொத்தம் 60 நூற்பாக்களையுடையதாகச் சூத்திரம் அமைந்துள்ளது.
இறையனார் களவியல் என்ற நூல் கடைச் சங்க காலத்தின் இடைப்பகுதியில் பாண்டியனது ஆட்சிக்காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மழையின்றி பஞ்சம் வாட்டியுள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாகப் பஞ்சம் தொடர்ந்துள்ளது. இதனை ‘வற்கடம்என்று அக்காலத்தில் அழைத்துள்ளனர். இந்த வற்கடம் வாட்டிய காலத்தில் ஆண்ட  பாண்டியனின் பெயர் இந்நூலில் குறிப்பிடப் படவில்லை. வேறு சில நூல்கள் இப்பாண்டியன் பெயரை உக்கிரப்பெருவழுதி  என்று கூறுகின்றன.  வற்கடம் தீர்ந்து மழை பெய்யும் காலம் வரும் வரை புலவர்கள் இந்த நாட்டில் வாழாமல் அனைவரும் வெளி நாட்டில் வாழ்ந்துவிட்டு மழைப் பெய்து நல்ல நிலைமையில் நாடு வந்தால் மட்டும் அனைவரும் வரவேண்டும் என்று மன்னன் அனைத்துப் புலவர்களுக்கும் ஓலைமூலம் செய்தி அனுப்பி வைக்கின்றான். அதேபோல மழைப்பொழிந்து வற்கடம் தீர்ந்துபோகிறது. சென்ற புலவர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர். அவ்வாறு மிண்டும் வந்த புலவர்கள் சில நூல்களையும் ஓலைச்சுவடிகள் மூலம் கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரும்போது தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் மட்டும் காணவில்லை.
எழுத்தும் சொல்லும் பொருளதிகாரத்தின் பொருட்டு அல்லாவா உருவாயின. அஃதின்றேன் எழுத்தும் சொல்லும் மட்டும் கிடைத்து என்ன பயன் என்று அரசன் வினவியிருக்கின்றான்; மதுரை ஆலவாயண்ணலிடம் முறையிட்டுள்ளான், அதுசமயம் மறுநாள் சொக்கலிங்கத்தின் பீடத்தில் செப்பேடு ஒன்றில் இறையனார் களவியல் என்ற பெயரில் 60 சூத்தரங்கள் கொண்ட பொருள் நூல் ஒன்று காணக்கிடைத்துள்ளது. அதற்கு உரையைக் கடைச்சங்கப் புலவர்கள் 49 பேரும் எழுதியிள்ளனர்.  இவ்வுரைகளில் எதைக் கொள்வது எதை விடுவது என்று சிக்கல் மன்னருக்கும் புலவர்களுக்கும் ஏற்பெற்றிருக்கிறது. இதனைப் போக்குவதற்கு இறைவன் மதுரைக்குப் புறத்தே உள்ள உப்பூரிக்குடியில் ஓர் ஊமை இருப்பதாகவும் அவன் பெயர் சிவகுமரன் (வடமொழியில் உருத்திரசன்மன்) என்றும் எந்த உரையை அவன் கேட்கும்போது கண்களில் நீர்மல்க தலையசைத்து கரவொளி எழுப்புகின்றானோ அதுவே சிறந்த உரை என்று அசரீரி எழுந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உரை நக்கீரரின் உரைதான் என்று கூறுவர். அதுவே இறையனார் களவியல் உரை என வழங்கி வருகிறது. இந்த உரைதான் தமிழ்ச் சங்கம் மூன்றின் வரலாறுகளைக் கூறும் ஆவணமாக அறிஞர்களால் போற்றப்படுகிறது.
களவியல்
சிறப்பினால் பெயர்பெற்றது களவியல் ஆகும். தமிழில் ஐந்திணையின் வரலாறு, நூல்வரலாறு,  முதல், கரு,உரிப்பொருள்களின் விளக்கம், எட்டுவகைத் திருமணம், நயப்பு, பிரிவச்சம், வன்புறை, அருமையறிதல் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. அடுத்து தலைவன் தலைவியின் இடையே நடைபெறும் ஊடல்களைப் போக்கவும் இருவரையும் ஒன்றிணைத்து வைக்க பாங்கற் கூட்டம், உற்றது உரைத்தல், தலைவனை வியந்து கூறுதல் என்பவையும் இதில் அடங்கும். மடல் திறம் கூறல்,  தோழியின் பண்புநலன்கள், அறத்தோடு நிற்றல், புணர்ச்சியில் களிறுதரும் புணர்ச்சி, புனல் தரும் புணர்ச்சி, களவின் வழியே கற்பு, இரவுக்குறிம், அல்லல்குறி, பகற்குறி, களவு வெளிப்படுதல், அலர் தூற்றல், ஊரார், போவோர், கண்டோர்,  வேலனை கேட்டல் போன்ற இன்னும் பல செய்திகள் களவியியலில் குறிப்பிட்டுள்ளன. கற்பியல் பிரிவைப்பற்றி விரிவாகப் பேசப்படுகிறது.
நம்பி அகப்பொருள் அமைப்பு
நாற்கவிராசர் நம்பியால் இயற்றபெற்ற அகப்பொருள் விளக்கம் தொல்காப்பியத்தின் வழி நூலாகவும், சார்பு நுலாகவும் விளங்குகிறது. 12,13 ஆம் நூற்றாண்டில் நம்பியகப்பொருள் இயற்றப்பெற்றள்ளது.
தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அகத்திணை, களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் போன்ற இயல்களில் அகப்பொருள் இலக்கணத்தை விளக்கியுள்ளார். அதற்கு அடுத்த நிலையில் இந்த அகப்பொருள் நூலில் அகத்திணையியல் (116), களவியல் (54), வரைவியல்(29), கற்பியல்(10), ஒழிபியல் (43) என ஐந்து இயல்களாகப் பிரித்து மொத்தம் 252 நூற்பாக்களையுடையதாக அமைந்திருக்கிறது.
இதில் அகத்திணையியலில் ஐந்திணைப் பாகுபாடுகள், முதல்,கரு,உரிப்பொருள் பற்றிய செய்தி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும் பெரும்பொழுது,சிறுபொழுது, கைக்கிளை, பெருந்திணை, அறத்தொடு நிற்கும் இலக்கணப் படிநிலையும், மக்களின் பிரிவையும் அந்த பிரிவு எத்தனை ஆண்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளது. பாணர், விறலி, கூத்தற், இளையோர், கண்டோர், பார்ப்பணர் சூத்திரர், பாகற்,பாங்கிற்,  செவிலி, பரத்தையர், தோழி, அறிவர், காமக்கிழத்தியர்,காதற்பரத்தையர் என இவர்களின் உரிமைகளைப் பற்றி விரிவாக குறிப்பிடுகிறது.
அடுத்த இயல் களவியலில் களவின் இலக்கணங்களாக எண்வகைத் திருமணம் பற்றிப் பேசப்படுகிறது; கைக்கிளையின் பாகுபாடுகளாக காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் போன்ற செய்திகளை விளக்குகிறது. களவிற்குரிய இயற்கைப்புணர்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியற் கூட்டம்(12), பகற்குறி(12), பகற்குறி இடையீடு, இரவுக்குறி(9), இரவுக்குறி இடையீடு, வரைதல் வேட்கை, வரைவு கடாதல்(20), ஒருவழித்தணத்தல், வரைவிடை வைத்து பொருள்வயில் பிறிதல் என்ற களவு கால வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை இந்தப்பகுதி எடுத்து விளக்குகிறது.
மூன்றாவதாக, வரைவியலில் திருமணம் செய்தல்,(பெண் வீட்டார் ஒப்புதலுடன் நடைபெறும் திருமணம், உடன்போக்கில் நடக்கும் திருமணம்) அறத்தொடு நிற்றல், தலைவி, தோழி, செவிலி அறத்தோடு நிற்கும் திறம் வியந்த கூறப்பட்டுள்ளது. அடுத்து உடன்போக்கின் வகைகளை எட்டாகக் குறிப்பிடுகிறார். உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து செவிலி, நற்றாய், கண்டோர் இரங்கல், செவிலி உடன்போக்கில் சென்றவர்களைத் தேடிச் செல்வது, சென்றவர்கள் தம் இல்லம் வந்துசேர்வது பற்றியச் செய்தியைக் குறிப்பிடுகிறது.
நான்காவதாக கற்பியல் ஆகும். இதில் இல்லறம் நடத்தும் கிழவன், கிழத்தியின் பாங்கு சிறப்பாக எடுத்தோதப்பட்டுள்ளது. கற்பின் சிறப்பும், கற்பிற்குரிய இலக்கணமாகவும் விளக்குகிறது. இலவாழ்க்கையில் பிரிவை  இல்வாழ்க்கை, பரத்தையிற், ஓதல், காவற், தூது, துணைவயிற், பொருள்வயிர் பிரிவு என ஏழு பிரிவுகளில் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லும் இயல்புகளாகக் கூறப்பட்டுள்ளது.
ஐந்தாவதாக ஒழிபியல் ஆகும். இதில் முன்னர் கூறிய செய்தி அல்லது கூறாதா செய்தியைத் தொகுத்து உரைப்பதாகும். அகப்பாட்டு உறுப்புகளாக திணை, கைக்கோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன்,முன்னம்,மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை என்ற பன்னிரண்டு என்கின்றது. பெருந்திணை, கைக்கிளைக்குரிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உவமை, உள்ளுறை இலக்கணமும் கூறப்பட்டுள்ளது.
முச்சங்க வரலாறு:

களவு நிகழ்ச்சிகளைக் கூறுவதாக வந்த இறையனார் களவியலின் உரை தமிழ்மொழியினை முதன்மைப்படுத்தும் பொருட்டு மூன்று சங்க வரலாற்றினை நக்கீரர்,
முதற்சங்கம்
புலவர்களின் எண்ணிக்கை : 4449
சங்கம் வளர்த்த ஆண்டு : 4440
முன்னிலை வகித்த மன்னர்கள் : 89
இடம்: கடல்கொண்ட மதுரை.
இடைச்சங்கம்
புலவர்களின் எண்ணிக்கை : 3700
சங்கம் வளர்த்த ஆண்டு : 3700
முன்னிலை வகித்த மன்னர்கள் : 59
இடம்: கபாடபுரம்.
கடைச்சங்கம்
புலவர்களின் எண்ணிக்கை : 449
சங்கம் வளர்த்த ஆண்டு : 1850
முன்னிலை வகித்த மன்னர்கள் : 49
இடம்: மதுரை.
என்று குறிப்பிடுகின்றார். மேற்குறிப்பிட்ட புலவர்களின் எண்ணிக்கையும், சங்கம் வளர்த்த ஆண்டும், முன்னிலை வகித்த மன்னர்களையும், முதன் முதலில் இறையனார் களவியல் உரையே குறிப்பிடுகிறது. புலவர்கள் கூடி தமிழ் உரையாடிய அவையை இலக்கியங்கள்,
"தொல்லானை நல்லாசிரியர்
புணர்கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்" (மதுரைக்காஞ்சி:761-762)
"
நிலன்நாவில் திரிதரும் நீள்மாடக் கூடலார்
புலன்நாவில் பிறந்தசொல் புதிது உண்ணும்" (கலித்தொகை-35)
புதுமொழி கூட்டுண்ணும் - கலித்தொகை- 68
தமிழ்கெழு கூடல் - (புறநானூறு - 68)
என்ற தொடர்களும், அவை, கூடல் என்று சொல்லும் சங்கத்தையும், தமிழையும் இணைத்தே பேசுகின்றன. இந்தச் செய்தி நம்பி அகப்பொருளில் இடம்பெறவில்லை.

பாயிரம்:
"இறையனார் களவியல்" நேரடியாக "அன்பின் ஐந்திணை" என்று பாடு பொருளுக்குச் செல்வதால், நூல் என்பது முழுமை பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த உரையாசிரியர் நக்கீரர்,
"ஆயிரமுகத்தான் அகன்றதாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே"
என்று சான்று காட்டி, பொதுப்பாயிரத்தையும், சிறப்புப்பாயிரத்தையும் விளக்கி நூல் தோன்றிய வரலாற்றினையும் விளக்கியுள்ளார்.
களவியலின் விரிவு நிலை

தலைவனும், தலைவியும் தங்கள் பெற்றோருக்கும், ஊராருக்கும் தெரியாமல் களவு வாழ்க்கை மேற்கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு கூற்று நிகழ்வதை தொல்காப்பியர் தலைவனுக்கு 21+5 இடங்களிலும், தலைவிக்கு 10+37+3 இடங்களிலும், தோழிக்கு 32 இடங்களிலும் கூற்று நிகழும் என்று களவியலில் குறிப்பிடுகின்றார். தம்கால நிகழ்வை அறிந்த இறையனார் களவியலின் உரையாசிரியர் நக்கீரர், இயற்கைப் புணர்ச்சி, பாங்கற்கூட்டம், இடந்தலைப்பாடு, இரந்து குறையுறுதல், மதியுடம்படுத்தல், குறி நிகழுமிடம், களவு நிகழுமிடம், அறத்தோடு நிற்றல், வரைவு கடாதல், உடன்போக்கு என்று களவு நிகழ்வுகளைக் காட்சி அடிப்படையில் விளக்கி விரிவான விளக்கம் தருகிறார். இத்தகைய போக்கு பிற்கால அகப்பொருள் நூலன நம்பியகப் பொருளிலும் இடம்பெற்று இருக்கிறதுமேலும் உரையாசிரியருக்கும், கோவை இலக்கியத்திற்கும் அடிப்படையாக அமைகிறது.

கருப்பொருளின் விரிவு

கருப்பொருள் என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்துநிலங்களில் வாழும் உயிரினங்கள் ஆகும். இதை தொல்காப்பியர்,
"தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை
செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப" (அகத்திணை - 18)

எட்டுவகை கருப்பொருள் என்று குறிப்பிடுகிறார். "இறையனார் களவியல்" நூற்பா "அன்பின் ஐந்திணை" என்று குறிப்பிடுகின்றது, ஆனால் உரையாசிரியர் நக்கீரர் ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, அங்குள்ள விலங்கு, மரம், பறவை, பறை, அவர்களது தொழில், யாழ், தலைமகனது பெயர், தலைமகளது பெயர், நீர்நிலைகள், ஊர், பூ, மக்கள் பெயர் என்று ஆறு கூடுதலாக எழுதி கருப்பொருள் பதினான்கு என்று வரையறுக்கிறார். இந்த விரிவான பட்டியல் சங்க இலக்கிய திணைப்பாடல் பகுப்புக்கு வழிவகுக்கின்றன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் தமது உரைகளில் கருப்பொருள் பட்டியலை விரிவாகக் குறிப்பிடுகின்றனர்.
இதனைப் போன்றே பின்னர் தோன்றிய நம்பி அகப்பொருளிலும் கருப்பொருள்கள் பதினான்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ணங் குயர்ந்தோர் ரல்லோர் புள்விலங்
கூர்நீர் பூமா முணாப்பறை யாழ்பண்
டொழிலெனக் க்குவி ரெழுவகைத் தாகும்” (ந.அகப்பொருள், அகத்திணை, பாடல்-19.)

பாங்கனின் செயல்பாடுகள்

களவுக் காலத்தில் தலைவன், தலைவியைச் சந்திக்க பாங்கன் அல்லது தோழி உதவியை நாடவேண்டியிருக்கும். இதைத் தொல்காப்பியர்
"
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப"
என்று குறிப்பிட்டவர் அவை என்னவென்று விளக்கவில்லை. இதை இறையனாரும் "பாங்கிலன் தமியோள்" (இறையனார் - 3) என்று கூறி விரிவாக விளக்கவில்லை. ஆனால் இறையனார் களவியலின் உரையாசிரியர் நக்கீரர், தொல்காப்பியர் குறிப்பிடும் பாங்கன் நிமித்தத்திற்கு உற்றதுவினாதல், உற்றதுஉரைத்தல், கழறியுரைத்தல், கழற்றெதிர்மறை, கவன்றுரைத்தல், இயல்இடம் கேட்டல், இயல்இடம் கூறல் என்று பன்னிரண்டில் ஏழு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். இத்தகைய பாங்கனின் செயல்பாடுகள் தலைவனையும், தலைவியையும் இணைக்கும் பொருட்டு அமைகின்றன.

தொல்காப்பியர் பன்னிரண்டு என்று குறிப்பிட்டார். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் அவை என்னவென்று பட்டியல் இட்டுள்ளார். ஆனால் நம்பியகப்பொருளில் பாங்கனின் செயல்பாடுகளாக இருபத்துநான்கு என்று குறிப்பிடுகிறார். அவைமுறையே தலைவன் பாங்கனைச் சார்தல்;தலைவன் உற்றது உரைத்தற்குச் செய்யுள்; பாங்கன் கழறற்குச் செய்யுள்; கிழவோன் கழறற்கு மறுத்தல் செய்யுள்; பாங்கன் கிழவோனுக்கு பழித்தல்; பாங்கன் தன்மனத்துக்குக் கூறிக்கொள்வது; பாங்கன் தலஒவனோடு இருத்தல்; பாங்கன் இறைவனை வேண்டல்; பாங்கன் குறிவழிச் சேறர்; இறைவியைக் காண்பது;  இகழ்தற்கு இரங்குதல்; தலைவனை வியந்து கூறுதல்;
தலைவன் தலைவியைக் காணச்செய்வது தலைவனுன் கலவியின் மகிழ்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது; புகழ்ந்து கூறுதல் என வகைப்படுத்தியுள்ளார்.

எண்வகை மணத்தின் விளக்கம்

திருமணம் என்பது ஆணும், பெண்ணும் மனம் ஒத்து இணைவது. இத்தகைய மணத்தைத் தமிழக மரபில் "காதலித்து மணம் செய்வது", "பெற்றோரால் மணம் செய்வது" என்று இரண்டு வகைப்படுத்தலாம். இந்த இரண்டுவகை மணத்தோடு, ஆரியரின் எண்வகை மணத்தை தொல்காப்பியர்,
"மறையோர் தேஎத்து மன்றல் எட்டு" (களவு-1)
என்று குறிப்பிடுகிறார். இதனை இறையனார்,
"
அந்தணர் அருமறை மன்றல் எட்டு" (இறையனார்-1)
என்றும், நம்பியகப்பொருள்,

"உளமலி காதற் களவெனப் படுவ
தொருநான்கு வேதத் திருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத் தியல்பின தென்ப” (ந.அகப்பொருள்-117)

என்றும் குறிப்பிடுகிறார். தொல்காப்பியரும், இறையனாரும் விரிவாகக் கூறாத எண்வகை மணத்தை அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை (பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், அசுரம், இராக்கதம், பைசாசம்) என்று தமிழ்ப்படுத்தி விரிவாகக் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் எண்வகை மணத்தின் விரிவான நிலையை நக்கீர்ர் கையாண்டுள்ளார். இதை அப்படியே நாற்கவிராச நம்பியும் அவரது நூலில் கையாண்டுள்ளதைக் காண்முடிகின்றது.

களவுக்கு காலமும் காதலர் வயதும்

களவு (காதல்) நிகழ்வதாக இருந்தால் அதற்கு ஒரு கால அளவு என்பது தேவை. எதற்கும் ஒரு கால அளவு இருக்கவேண்டும்.  அவ்வாறு களவு வாழ்விற்கு எல்லையாக தொல்காப்பியர் கூறாத களவின் கால எல்லையை இறையனார்,

"களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப" (இறையனார்-32)

இரண்டு திங்கள் என்று குறிப்பிடுகின்றார். இரண்டு மாத கால எல்லையைக் கொண்ட இக்களவு காதலர்க்கு எந்த வயதில் வரும் என்பதை உரையாசிரியர் நக்கீரர் தலைவிக்கு பதினோரு வயது பத்துமாதம், தலைவனுக்கு பதினைந்து வயது பத்து மாதம் இருக்கையில் காதல் வரும், இத்தகையக்களவுக்காதல் அம்பல் அலராகி கற்புநிலைக்கு வரும்போது இரண்டு மாதம் நிறைவுறும். அப்போது தலைவிக்கு பன்னிரண்டு வயதும், தலைவனுக்கு பதினாறு வயதும் நிறைவுறும் என்று குறிப்பிடுகின்றார். இந்தக் களவுக்கு உண்டான காலமும், காதலர்கள் வயதும் குறிப்பிடுதல் அகப்பொருள் வளர்ச்சியினைக் காட்டுகின்றன. இக்கருத்தை நம்ம்பியகப் பொருள் விரிவாக குறிப்பிடப்படவில்லை.

அகப்பொருளில் பெரும்பொழுது,சிறுபொழுது வகைகளில் இரண்டு அகப்பொருள் நூலிலும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. அதைப் போல ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருள், உரிப்பொருள் பட்டியலிடப்பட்டுள்ளது.
பகற்குறி இரவுக்குறி இலக்கணமும்  கூறிப்பட்டுள்ளன.
நக்கீரர் உரையில்
குறீயெனப் படுவ திரவினும் பகலுனு
மறியக் கிளந்த விடமென மொழிப” (.அகப்பொருள்-18)
என்று குறி இரண்ட நேரங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிடுகிறார். அதைபோல நம்பியக்ப்பொருளில்
குறியிடங் கூறல் முதலாப் பெறலரும்
விருந்திறை விரும்பல் ஈறாப் பொருந்தப்
பகர்ந்தபன் னிரண்டும் பகற்குறி விரியே” (நம்பி அகப்பொருள்-152)

என்று பகற்குறி பன்னிரண்டு இடங்களில் இடம்பெறும் என்று விளக்குகிறார். இரவுக்குறி 27 இடங்களில் நடைபெறும் என்று குறிப்பிடுகிறார்.
அறத்தொடு நிற்றல் என்ற துறையை இரண்டு நூலும் குறிப்பிட்டுள்ளது. நம்பியகப்பொருளில் அகத்திணை இயலிலும், இறையனாரில் களவியல் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன.


கற்பில் நிகழும் பிரிவு வகையை இரண்டு நூலும் குறிப்பிடுகின்றன. நம்பி அகப்பொருளில்,

“பரத்தையிற் பிரிதல் ஓதற்குப் படர்தல்
அருட்டகு காவலொடு தூதிற் ககற்ல்
உதவிக் கேகல் நிதியிற் கிகத்தலென்
றுரைபெறு கற்பின் பிரிவறு வகைத்தே” (நம்பி-அகம்-62)

பரத்தையிற் பிரிவு (12 நாள்) ஓதற்பிரிவு (மூன்று ஆண்டு), தூது, துணைவயிற், பொருள்வயிற், காவல் பிரிவு(ஓர் ஆண்டு)

“பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந் துறைவோர்க்
குரிய தன்றே யாண்டுவரை யறுத்தல்” (இ.அகப்பொருள் சூ.41)

என்று இறையனார் அகப்பொருளும் நம்பியகப் பொருளும் தூதிற்கும் துணைமைக்கும் பிரியும் காலம் நீட்டிக்க படும் என்கின்றனர்.
இது அன்றையக் காலத்திற்குப் பொருந்துவனாக இருந்தாலும் இன்றையக் காலத்திற்கு இது பொருந்தாது. ஏனெனில் அன்று  தலைவன் பணிக்குச் சென்றான். இன்று தலைவனை விட தலைவிதான் அதிகமாக பணிக்குச் செல்கின்றனர். எனவே பிரிவு என்பது இன்று ஆண்களுக்கும் நடக்கின்றனர். எனவே நாம் இந்த அகப்பொருள் நூல்கலை மீள்ப்பார்வை செய்யுது பார்க்கவேண்டிய காலம் வெகுவிரைவில் வந்துவிட்டது. இன்றையத் தேவையை உணர்ந்து புதிய அகப்பொருள் நூல் ஒன்று இல்லை பல நூல்கள் வெளிவரவேண்டும்.

பழந்தமிழர்களின் வாழ்வியல் ஒழுகலாறுகளான அன்பு வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்ற எழுதப்படாத சட்டமாகத் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பியகப்பொருள் போன்ற நூல்களால் நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. மேலும் தமிழரின் கற்பு நிலை வாழ்க்கை இன்றையளவிலும் கடைபிடிக்க்க் காரணமாக அமைவது இதுபோன்ற அகப்பொருள் இலக்கண நூல்களும் பண்டைய இலக்கிய நூல்களும் மிகப்பெரிய சமூகப்பணியைச் செய்துவருகிறது.
மனித சமூதாயத்தின் வாழ்க்கை முறைகளான களவு, கற்பு என்ற இரண்டும் எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டால் இந்த இலக்கண நூல்கள் உருவானதற்குக் கிடைத்த பயனாக அமையும்.
ஆய்விற்குப் பயன்பட்ட நூலகள்
1.    இறயனார் அகப்பொருள் உரை, நக்கீரர், சாரதா பதிப்பகம்
2.    அகப்பொருள் விளக்கம், நாற்கவிராச நம்பி, கழக வெளியீடு,
3.    தமிழ் இலக்கிய வரலாற்று களஞ்சியம், மது.ச.விமலான்ந்தம், ஐந்திணைப்பதிப்பகம்.
4.    தொல்காப்பியம் பொருளதிகாரம், இளபூரணனார் உரை, கழக வெளியீடு.
6.    www.tamilvu.org