/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, October 1, 2011

சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைகள்
உலக இலக்கியங்களில் செம்மொழி இலக்கிய வரிசையில் தமிழ்மொழியும் ஒன்று. இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியில் எண்ணிலடங்கா இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்றன. உலகமொழிகளில் எத்தனையோ மொழி இலக்கிய வரலாற்றைப் படித்துள்ளேன். அனால் தமிழில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுச் செய்தியைப் போல வேறு எந்தமொழி இலக்கியத்திலும் காணக்கிடைக்கவில்லை என்று பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் குறிப்பிடுவதன் மூலம் உலக அளவில் தமிழ்மொழி பெற்றுள்ள செல்வாக்கினை நாம் நன்கு உணரலாம்.
நமது இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்தை மூன்று பெரும்பிரிவாகப் பிரித்துள்ளார்கள். அவை முதல்,இடை,கடை என்பவயைகும்.இச்சங்கங்களில் உருவாகிய நூல்களின் எண்ணிக்கைக் கணக்கிட இயலாதது.இத்தகு சிறப்புப் பெற்ற தமிழ் மொழியில் இலக்கியப் பாடல்கள் பல புலவர்களால் பல காலக்கட்டத்தில் பாடப்பெற்றவையாகும். இவ் இலக்கியங்களில் பொதிந்துள்ள் கருத்துக்கள் மிக அதிகம். மனித வாழ்வு, உலகப் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், மனிதனின் தேவை, ஒழுக்க நெறி என பரப்பு விரிகின்றன.இருந்தாலும் சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைக்கோட்பாடுகள் என்ற தலைப்பில் இக்கட்டுரை விரிகிறது.

சங்கைலக்கியப் புலவர்களின் எண்ணிக்கை.

சங்ககாலம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனலாம். இச்சங்ககாலங்களில் மூன்று சங்களிலும் புலவர்களால் பாடப்பெற்ற தொகுப்பு நூல்கள் உள்ளன. இவைகளில்
முதல் சங்கத்தில் 4449 புலவர்களும்
இடைச்சங்கத்தில் 3700 புலவர்களும்
கடைச்சங்கத்தில் 449 புலவர்களும்
இருந்துள்ளனர் என்று இலக்கிய வரலாறு கூறுகிறது.
மொத்தம் 8598 புலவர்கள் சங்க இலக்கியத்தைப் பாடியுள்ளதாக வரலாறு உள்ளது.
இவற்றில் பாடிய புலவர்கள் பல இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இவர்களின் மனநிலை ஒவ்வொருவருக்கும் வேறுப்பட்டு இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக
கூறியுள்ளனர். இவர்களின் மன அளுமை எவ்வாறு இருந்திருக்கும். புலவர்கள் மக்களையும் ,அரசனையும் ,இயற்கையையும், காதல் வீரம் ,கொடை என பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.இவர்களின் மன ஆளுமையைக் கண்டு வியக்கதாவர்கள் இல்லை.

மனம்

மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

சிந்தனை

சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
சிந்தித்தலின் உயர்வே கணியன் பூங்குன்றனின் உலகப்பார்வையைச் சற்று உயர்வாக எண்ணத் தூண்டுகிறது. மேலும் அவரது மன அளுமையையும் இப்பாடல் வெளிக்காட்டிகிறது.இன்றைய உலகம் சுயநலம் மிக்க மனிதர்கள நிறைந்ததாகும்.இந்த உலகத்தில் சுயநலம் சிறிதும் இல்லாத மனிதர்களின் மேன்மைப் பண்பினை இப்பாடல் விளக்குகிறது.இந்த உலகம் ஏன் இன்றளவும் நிலைப்பெற்றிருக்கிறது?என்ற வினாவை எழுப்பிக்கொண்டு இவவாசிரியர் விடை கூறுகிறார். தேவர்கள் அருந்தக்கூடிய அமிழ்தம் கிடைத்தபோதும் தனக்கு மட்டும் உரியது என்று தனித்து உண்ணாமல் மனிதர்கள் உள்ளத்தால் இந்த உலகம் இன்றளவும் திகழ்கிறது. சினப்பண்பு சிறிதும் இல்லாதவர்கள், சோர்வடையாதவர்கள்,மற்றவர்களின் கருத்துக்களுடன் இயைந்து செல்பவர்கள்,புகழுக்காக உயிரயையும் தரத் தயங்காதவரகள், தமக்கு என எதனையும் பெற முயற்சி செய்யாதவார்கள், பிறருக்காகவே எப்போதும் முயற்சி செய்து உழைப்பவர்கள் போன்றன் மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்றளவும் நிலைப்பெற்று உள்ளது என்ற சிந்தனையை கூறியுள்ளார். மேலும் மனித உள்ளத்தினை மேம்பாடடையச் செய்யக்கூடிய கருத்ஹ்டுக்களைக் கொண்ட பாடல்.
தீமையும் நல்லதும் அவரவரின் மனதைப்பொறுத்தது. அது மற்றவர்களால் நிகழக்கூடியது அல்ல என்கிறார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரவாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலை இ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே(புறம்.192)

தெளிந்த மன சிந்தனையுடையோரால் மட்டுமே இதுபோன்ற மன ஆளுமைச் செய்திகளை கூறச்செல்லமுடியும். எனவே தெளிந்த மனசிந்தனை வேண்டும்.
தன்னை ஆளுகின்றவன் எவனோ அவனால்தான் நல்ல சிந்தனைப் பிறக்கும் அப்பொழுதுதான் உலகை ஆளுகின்ற சக்தியைப் அவனால் பெறமுடியும்.
இதைப்போன்றே
“பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந்தத்தங், கருமமே கட்டளைக் கல்” (குறள், 505)
என்ற;உலக ஆசான் வள்ளுவன் கூறியிருக்கிறார்.அவனவன் செய்கின்றே செயலே அவனை நல்லவனாக உயர்த்துகின்றது என்ற மன் ஆளூமையை வெளிப்படுத்தியுளார்.
மேளும் தம் ஆளுமைப்பன்மை அவ்வையார் குறிப்பிடும்போது எந்த நிலமாக இருந்தாலும் அந்த நிலத்தில் நல்ல ஆடவர்கள் இருந்தால் அநிலம் வளமையடையும் என்ற உயரிய சிந்தனையை தன் ஆலுமையின் மூலம் எடுத்துக்காட்டுகிறார்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!.(புறம் 187)

நோக்கு(க்கம்)

மன ஆளுமைக்கு அடுத்த சிறப்பு என்று கூறுவோமானால் நோக்கம் நல்லவையாக அமைந்திருக்க வேண்டும்.அரசன் சட்டம் இயற்றலாம். அது மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமைய வேண்டும். அதைவிடுத்து மக்களை துன்பப்படுத்தும் விதமாக இருத்தல் கூடாது. மன்னன் ஒருவன் வரி வசூல் செய்ய படைவீரர்களை அனுப்பி வைக்கின்றான். அதிகமான வரியை மக்களுக்கு விதிக்கின்றான். இதனைக்கண்டு மக்கள் மனதை நன்கு அறிந்த புலவர் மன்னனுக்குத் தன் அறிவுரையாகவும், மன ஆளுமையை
காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
……… ……… ……… ……….. ……… ………. ……… ……… …….. ………. ….
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா உலகமொங் கெடுமே (புறம்-184)
என்று பாண்டியன் அறிவுடைநம்பிக்கு மக்களிடம் எவ்வாறு வரிவசூல் செய்ய வேண்டும் என்று பிசிராந்தையார் தரும் உலக நோக்கு கருத்தைக் மன்னனுக்குத் தெளிவுபடுத்தும் காட்சி.இது இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. உலக நாடுகள் பல இன்று பொருளாதரத்தில் சிக்கித் தவிக்கும் சூழல் நமக்கு நன்றாகத் தெரியும்.

உணர்ச்சி

மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம்.இலக்கியம் உணர்ச்சிகளின் விளையாட்டுக் களம் என்பதுஅனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பேறுண்மை.
மனித உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிகளைப் பல இடங்களில் பல புலவர்கள் மன ஆளுமையாகப் பதிவு செய்துள்ளனர். பல மன்னர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ளாத புலவர்கள் கையறுநிலைப்பாடல்களாகப் பாடியுள்ளனர்.நம்மி நெடுஞ்செழியன் இறப்பை பேரெயின் முறுவலார் என்ற புலவர் தன் மன உணர்ச்சியின் பிழிவாகப் (புறம்-239) பாடியுள்ளார். கபிலர் பாரி மறைந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளாமல் வருந்திப்பாடிகிறார். ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீர்த்தனார் பாடிய பாடல்

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆன்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே. (புறம் -242)
மன்னன் இறந்தபோது அவனது இறப்பை ஏற்றுக்கொள்ளாமல் மங்கலப் பொருளான மலரை-முல்லை மலரை எவரும் அணிய முன்வரவில்லை. மக்கள் இவ்வாறுகொடிய அவலத்தில் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க இயற்கைப் பொருள்களான மலைக்கும்,நதிக்கும், மலருக்கும் செடிக்கும் என்ன தெரியும்? மலர் இயல்பாக பூக்கிறது, தென்றல் இயல்பாக வீசுகிறது, மரங்கள் இயல்பாக அசைகின்றன.இயற்கையின் இயல்பான செயல்கள் கூட மன்னனை இழந்தும் வருந்தும் குடிமக்களுக்குத் துன்பத்தைத் தருகின்றன என்று உணர்ச்சியின் உச்சக்கட்டமாக முல்லைப்பூவைப் பார்த்து கேட்கும் புலவனின் மன நிலையை நாம் என்னவென்று கூறுவது.இது புலவனின் மன ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்
.
மன உறுதி..

ஒரு செயலை செய்துமுடிக்க மன உறுதி மிக அவசியம். இது மன ஆளுமைக்கு அடுத்த அறன். மனம் ஒரு குரங்கு என்பர் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது. அதனை நிலை நிறுத்தியவர்கள் வாழ்வில் பல முன்னேற்றேங்களை அடைந்துள்ளனர்.பெருஞ்சாத்தன்
என்ற புலவர் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று பாடிவிட்டு பரிசில் கேட்கிறார். அவன் சிறிது கொடுக்க அதனை வாங்காது சூழுரை செய்கின்றான். உனது பரிசிலை நீயே வைத்துக்கொள். இதனைவிட அதிகமாக பரிசிலைப்பெற்று நான் மீண்டுவருவேன்.
அவ்வாறு கூறீயப்படியே பெருஞ்சாத்தன் குமணனைப்பாடிப் பரிசில் பெற்று வருகின்றான். வந்தவன் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று இதோ நான் உனக்குத் தரும் மிக உயர்ந்த பரிசாக இந்த யானையை வைத்துக்கொள் என்று அவனது கடிமரத்தில் யானையைக் கட்டிவைத்துவிட்டு திரும்புகின்றான். இது பெருஞ்சித்திரனாரின் மன உறுதியை வெளிப்படுத்தி நிற்கிறது.
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. (புறம்-162)


இதுபோன்றே அவ்வையார் அதியமான் நெடுமான் அஞ்சி பரிசிலை காலம் தாழ்ந்து கொடுத்தான் என்ற காரணத்திற்காகப் பரிசிலைப் பெற்றுக்கொள்ளாமல் திரும்புகிறார். அப்பொழுது எமக்கு எந்த திசைக்கு சென்றாலும் பரிசிலும் உணவும் கிடைக்கும் என்று கூறி செல்கிறார். இச்செயல் அவரின் மன உறுதியைக் காட்டுகிறது.
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.(புறம் 206)
கற்பனை
கற்பனை மனிதனுக்கு இயல்பாகவே வாய்ந்த ஒரு அணிகலன். அது மனிதனிடம் செயற்கையாக உருவாக்கப்படவில்லை. கற்பனை மனிதனின் எண்ணங்களைச் செதுக்குகிறது.
மனிதனிடம் இயல்பாக புதைந்து கிடக்கின்ற கனவு காணூம் பன்புதான் கற்பனைக்கு அடிப்படை. கனவு கற்பனை இரண்டுமே நிகழ்காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் சொல்ல முடியாதா துன்பங்களிலிருந்து விடுதலை தருகிறது.இத்தகைய கற்பனையை சங்கப் புலவர்கள் மன ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக பாடியுள்ளார்கள்.
பாலைப் பாடிய பெருங்கடுங்கோ பாலை நிலத்தில் நடந்துசெல்லும் தலைவனும் தலைவியும் காணும் நிகழ்வுகளை ஆசிரியர் தனது கற்பனைத் திறத்தினால் வெளிப்படுத்துகிறார். ஆண் மானின் நிழலில் பெண் மான் படுத்துறங்கும் நிகழ்வைக்காட்டி தலைவனின் நிழலில் தலைவி ஓய்வு எடுக்கும் அன்பினைக் காட்டுகிறார்.
குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை இயற்கையோடும், நிலத்தைவிட பெரியது வானத்தைவிட உயரமானது,கடலைவிட ஆழமானது என காதலை உயர்வாகத் தன்கற்பனைத்திறத்தினால் செதிக்கியுள்ளார். இது புலவனின் மன ஆளுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."(குறு-3)

இவ்வாறாக சங்க இலக்கியப்புலவர்கள் மன் ஆளுமைக்கருத்துக்களை உலகிற்கு வழங்கியுள்ளனர் மனம் நல்லவையாக இருந்தால் செயல் நல்லவயாக அமையும். இதனை சங்க இலக்கியப்புலவர்களின் பாடல்கள் வழியாக நாம் கண்டுகொள்ளமுடிகின்றது
.
கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள்

1.புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதர்
2.கலித்தொகை, சக்திதாசன் சுப்பிரமணியம்.
3.குறுந்தொகை மூலம்,
4.www.wikipedia.org
5.www.tamilvu.org.


2 comments:

  • தேவையான பகிர்வு முனைவரே..

    பத்து பதிவுகளில் தரவேண்டிய செய்திகளைத் தொகுத்து ஒரே பதிவாகத் தந்துவி்ட்டீர்கள்..

    தொடர்ந்து வெளியிட்டுத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்யவேண்டுமேனக் கேட்டுக்கொள்கிறேன்..

  • மணிவானதி says:
    October 9, 2011 at 7:07 AM

    நன்றி முனைவர் இரா.குணசீலன். உயர்ந்த அளவில் தமிழுக்குத் தொண்டுசெய்யவில்லை என்றாலும் அணில்போன்று சின்ன உதவியை நாம் அனைவரும் சேர்ந்து செய்வோம்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்