/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, September 17, 2011

திரு.பாலகுருசாமியும் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியும்(இனாம்குளத்தூர்)

|4 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில்(இனாம்குளத்தூர்) அண்ணாப் பல்கலைக்கழக மேணான் துணைவேந்தரும்,தமிழகத் திட்டக்குழு உறுப்பினருமான திரு.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.அவரை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருமதி கே.மீனா அவர்கள் வரவேற்றார். திரு பலகுருசாமி மாணவர்களிடம் உரைநிகழ்த்தும்போது நல்ல முறையில் மாணவர்களாகிய நீங்கள் படிக்கவேண்டும். இன்றைய அறிவியல் காலக்கட்டத்தோடு இணைந்து பாடங்களைப் பயிலவேண்டும் என்றார். மேலும் இக்கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பின் இறுதியில் முதல் இடம் பிடித்த மாணவ மாண்வியருக்கு 25000 பணமுடிப்பு எனது சொந்த செலவிலிருந்து வழங்கப்ப்டும் என்று மாணவர்களிடம் கூறினார். இது மாணவ மாணவிகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளன
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்றல்.அருகில் பாரதிதாசன் பல்கைக்கழகத் தொலைதூர கல்வி மையத்தின் இயக்குநர் முனைவர் அறுமுகம். . அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பலகலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தினார். மாணவ மாணவியர்கள் கணிப்பொறி அறிவை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன்.எனவே உங்கள் படிப்பு எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைய வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் தமிழகத் திட்டக்குழு உறுப்பினரும் துணைவேந்தருமான திரு.குருசாமி அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடியது.
துணைவேந்தர் கே.மீனா அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.

Saturday, September 3, 2011

இணையமும் தமிழும் நூல் பார்வை

|0 comments

பேரன்புடையீர் வணக்கம்.
தங்களது இணையமும் தமிழும் என்ற தலைப்பிலான நூலை வாசித்தேன்.
காலத்திற்கு ஏற்ற நூலைச் செதுக்கித்தந்துள்ள தங்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.
இயல்களும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.நிறைவுப்பகுதியில் உள்ள இணையத்தமிழ் இதழ்களின் முகவரிகள் பயன்பல தரும்.புரவலர் கணிப்பொறி (server computer)என்ற சொற்றொடர் புதுமையானது.குலோத்துங்கன் கவிதை இயலினூடே மின்னுகிறது. அதிக இணையப்பக்கங்களை ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழ் பெற்றுள்ள செய்தியும், இணையக்கல்வி முயல்வுகள் பற்றிய(பக்.45-47)செய்திகளும் படிப்பாருக்கும் உதவும்.இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல, வணக்கம்.

அன்புடன்
முனைவர் அ.அறிவுநம்மி
முதன்மையர்
சுப்பிரமணிய பாரதியார் பல்கலைக்கழகம்
புதுச்சேரி-605014


அன்பர் சீராசை சேதுபாலா அவர்கள் அவரது வலைப்பூவில் இணையமும் தமிழும் நூல் பற்றி எழுதியுள்ள மதிப்புரையும் கீழே உள்ளன.

முனைவர் துரை மணீகண்டன் எழுதிய இணையமும் தமிழும் புத்தகம், சென்னை-17-ல் 17/3சி மேட்லி சாலயிலிருந்து வெளியிடப் பட்டுள்ளதைப் பார்த்து வியப்படைந்தேன்.

லேனா தமிழ்வாணன் கண்ணில் படாமல் போன தலைப்பு என வியந்தேன். திருச்சிக்காரரின் துணிச்சல் பாரட்டத்தக்கது.

இணயம் ஓர் அறிமுகம், இணயத்தின் வரலாறு, இணய்த்தில் தமிழ், இணயம் தொடர்பான மாநாடுகள்-கருத்தரங்குகள், இணயத்தில் தமிழில் பயன்பாடு, இணயத்தில் தமிழ்க்கல்வி, இணையத்தில் தமிழ் மின் இதழ்கள், இணயத்தில் தமிழ் மின் நூலகம், இணயம் வழி கணினி ஆய்வுகள் என்று ஆரம்பப் பள்ளி மாணவன் கூடப் புரிந்துகொள்ளுமாறு விளக்கமாக எழுதியுள்ளார்.

இணய அகராதி குறித்த விள்க்கம் சற்றுச் சிந்திக்கத் தக்கது. விக்கி பீடியாவை கட்டற்ற களஞ்சியம் என்று மொழியாக்கம் செய்துதான் தீர வேண்டுமா? லாரி, கார், மோட்டார், ரெயில், போன்று மக்கள் மத்தியில் பழ்க்கமாகிவிட்ட சொற்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்ல்லை என்ற டாக்டர்.மு.வரதராசனார் காட்டிய வ்ழியைப் பின்பற்றினால் நன்றாக இருக்குமே?

சுமார் 150 இணையத் தமிழ் இத்ழ்களின் முகவரியைத் தேடித்தந்திருப்பது நல்ல சாதனை!

18 தமிழ் கணிமை நிறுவனங்களச் சுட்டியுள்ளார். இலவசங்களாகத் தருவதையும், விலைக்கு விற்பதையும் பிரித்துக் காட்டியிருக்கலாம்.

பல்கலைத்த் தளங்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ் கணிமச் சுவடிகள், ஆய்வுக் கட்டுரை, சிறு விளக்கங்கள் கொடுத்திருந்தால் என் போன்று துவக்க நிலையில் இருப்போருக்கு பேருதவியாய் அமைந்திருக்கும்.

தமிழ் இணைய வானொலி நிறைய விடுபட்டுள்ளன். அதற்கென்றெ தனி இதழ் வருகின்றது. ஆசிரியரும் அமிஞ்சிக்கரையிதான் உள்ளார். இந்த் வலைப்பூவில் தேடினாலே கிடைக்கும் குறைவாகக் கூறவில்லை. அடுத்த நூலில் சேர்த்துக் கொள்ளலாம்.

worldtamilnews.com உலகின் முதல் தமிழ் இணைய வானொலி முகவரி சென்னை எழும்பூரிலிருந்து 8 ஆம் வ்குப்பு மட்டுமே படித்த vkt பாலன் அவர்களால் நடத்தப் படுகின்றது.9841078674

தமிழ் இணய்தளத் தேடும் எந்திர முகவரி எனக்குப் புதிய தகவல்.


நல்ல புதிய முயற்சிக்கு முனைவர். துரை மணிகண்டனுக்கு வாழ்துக்க்கள்!.

அன்புடன்
சீராசை சேதுபாலா
http://rssairam.blogspot.com/

Thursday, September 1, 2011

தமிழ் மின்னியல் நூலகம் (Digital Library)

|0 comments


பல பொருள் விரிந்த கருத்துக்களை ஒருங்கே சுருக்கிக் கூற எழுந்ததுதான் வெண்பாவும், ஆசிரியப்பாவும் ஆகும். அதைப் போன்று தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்துத் தருவதுதான் தமிழ் மின்னியல் நூலகம் மற்றும் இணைய நூலகம் ஆகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவனந்தி முனிவரின் கருத்திற்கேற்ப ஒரு காலத்தில் கருத்துக்களைக் கருவாக சுமந்தது ஓலைச்சுவடிகள். காலமாற்றத்தின் சூழலுக்கேற்ப அச்சு இயந்திரம் காகிதமாகின. பின்பு நூல்களைத் தொகுத்து வெளியிட அல்லது பாதுகாப்பாக படிக்க ஒரு நூலகம். அவ்வாறு பாதுகாத்து வைத்த நூல்களை, நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகம் உருவாகி வருகின்றன. இந்த மாற்றம் நிகழ்கால எதிர்கால அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியக் கூடும்.

மின்னியல் நூலகம்

“மின்னியல் நூலகம் என்பது, தற்போது வழக்கில் உள்ள அச்சு வடிவம் அல்லது மைக்ரோபிலிம் (Micro Film)வடிவத்தில் உள்ள புத்தகங்களை அல்லது அவற்றுள் ஒரு பகுதியை மாற்று வழியாகவோ, மறு பிரதியாகவோ, துணைப் பொருளாகவோ மின்னியல் வடிவில் பாதுகாத்து வைக்கும் நூலகமாகும்” என்று மலேசியாவைச் சேர்ந்த எஸ். இளங்குமரன் என்பவர் விளக்கம் தந்துள்ளார். இவையன்று பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார். மின்னியல் நூலகத்தில் அதிகமான தமிழ் நூல்களே மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்

உலக மின்னியல் நூலகம்

உலக மின்னியல் நூலகம் என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். இதன் பயனாக

1. அனைத்துலக மற்றும் பல்வேறு கலாச்சாரப் புரிந்துணர்வை வெளிப்படுத்துதல்.
2. கலாச்சாரம் சார்ந்த தகவல்களை இணையத்தில் அதிகரித்தல்.
3. கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதோடு இணை இயக்கங்களின் தரத்தை மேம்படுத்தி, நாடுகளுக்கு இடையிலான தொழில் நுட்பப் பிரிவினைகளைக் குறைத்தல்.
4. இலவசப் பன்மொழி வடிவிலான உலகளாவிய கலாச்சாரத்தின் முக்கியத் தகவல்களான எழுத்து வடிவம், வரைபடம், அரிதான நூல்கள், இசை, பதிவுகள், திரைப்படங்கள், அச்சுகள், புகைப்படங்கள், கட்டடக்கலை வரைபடங்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார பதிவுகள் போன்றவற்றை இணையத்தில் கிடைக்க வழி செய்தல் போன்றவையாகும்.

உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் (Center for Research Libraries an International Consortium of University, College and Independent Research Libraries) http://catalog .crl.edu/171 -நாடுகளிலுள்ள 72,000 நூலகங்களை இணைத்து உலக மக்களுக்கு வழங்கி வருகிறது என்று முனைவர் கு. கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மின்னியல் நூலகம்

உலக மொழிகளில் கணிப்பொறியையும் இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் செம்மொழித் தமிழும் ஒன்று. இன்று இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி அதனை வெளியிட்டு உலகத் தமிழ் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். அந்த வகையில் தமிழ் மின்னியல் நூலகம் இணையத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழ் மொழி ஆராய்ச்சிக்கென்று சிகாகோ பல்கலைக்கழகத்தால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரில் 1994-ல் தொடங்கினர். இதில் பலதரப்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், தமிழ்க் கட்டுரைகள் முதலானவைகளைத் தொகுத்துத் தந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு போன்றவைகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இஃது இணையத்தில் 1996 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் மூலம் உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விரைவாக நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். முக்கியமான, அரிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது.

மதுரைத் திட்டம் (Project Madurai)

உலகில் வாழும் 12 கோடி தமிழர்களையும் இணையம் வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களை மின் பதிப்புகளாக உருவாக்கி அவற்றை இணையம் வழியே வெளியிட்டது இம் மதுரைத் திட்டம். இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக நூல்களைப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டமே மதுரைத் திட்டமாகும். கே. கல்யாணசுந்தரம், முனைவர் பி. குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் 1998ஆம் ஆண்டு தமிழர் திருநாளன்று தொடங்கப்பட்டது.

மதுரைத் திட்டம் நூலகமானது எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழ் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. தொடக்க காலத்தில் இணைமதி, மயிலை போன்ற எழுத்துருக்களில் இயங்கிய இந்நூலகம் பின் திங்கியில் செயல்பட்டு வந்துள்ளது. 2003-லிருந்து ஒருங்குறி எழுத்துருவில் இயங்கி வருகிறது.

இந்நூலகத்தில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள் படைப்புகள், உரைநூல்கள்) சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பு கூறுகள் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருப் பிரச்சனை என்பது இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது நூலகம் தமிழ்.நெட் இணையதளத்துடன் இணைந்து செயல்படுகிறது.

தமிழ் இணையக் கல்விக்குழுமம்
உலகு தழுவிய தமிழர்களின் அக்கறையினால் 17.02.2001 அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றது. இது பல நாட்டு மாணவர்கள் தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவற்றில் மின்நூலகம் என்ற பகுதியில் தமிழ் நூல்கள் மட்டுமின்றி தமிழ் நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், கலைக்களஞ்சியம், கலைச்சொல் தொகுப்புகள், சுவடிக் காட்சியகங்கள், பண்பாட்டுக் காட்சியகங்கள், பயணியர் போன்ற உட்தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலகத்தில் இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதிநெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியங்கள், தமிழ் உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இன்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பரவலாக இந்நூலகத்தைப் பயன்படுத்தியே ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். அனைத்து நூல்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

சிறப்புக் கூறுகள்

பிற மின்நூலகத்ததை விட தமிழ் இணையக் கல்விக் கழக (தற்போது பெயர் மாற்றம்) நூலகத்தில் பல சிறப்புக் கூறுகளைப் பெற்றுத் திகழ்கிறது.
1. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன.
2. சங்க இலக்கியப் பாடுபொருள்கள் எண், சொல், பக்கம், பாடினோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை கூற்றும், பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள் என்னும் தலைப்புகளில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
3. அகராதிகளில், தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதியுள்ளது.
4. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வகையில் அமைந்த சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவ கோயில்களின் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு முதலான பண்பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது.
5. திருத்தலங்கள் என்னும் வரிசையில் 14-சமணத் தளங்கள், 101 சைவத் தளங்கள், 93-வைணவத் தளங்கள், 9-இசுலாமிய தளங்கள், 13-கிறித்துவத் தளங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன.

6. தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி உள்ளது.

இவ்வாறு பல வசதிகளைக் கொண்ட இம்மின்நூலகம் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய நூல்களைக் கண்டு படிப்பவர்களுக்கும் பயன்படும். இதில் 350 மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இலக்கிய வரலாற்று அடிப்படையில் நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விதம் படிப்பவர்களையும், நூல்களைத் தேடி எடுப்பவர்களையும் இலகுவாக கவர்ந்திழுக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் மின் பதிப்பில் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து இணையத்தில் வெளியிடுவது ஆகும்.

மின்பதிப்பாக்கம், மின்னூலாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இணையத்தில் மின் நூல்களுக்கான அட்டவணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இவற்றில் அரக்குமாளிகை நாடகம், அமெரிக்க அன்னையான பிள்ளைத் தமிழ், சபரி மோட்சம், சுபத்திரை மாலையிடு போன்ற அரிய நூல்கள் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூலகம்.நெட்

ஈழத்தில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களையும், இதழ்களையும் மின் வடிவமாக்கி பாதுகாத்து அனைவரும் காணும் வகையில் நூலகம்.நெட் செயல்படுகிறது. இஃது ஓர் இலாப நோக்கமற்ற தன்னார்வ கூட்டு முயற்சியாகும். மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை போலவே இதுவும் அமைந்துள்ளது. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத் மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-ல் தொடங்கி இடையே சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை மாதம் மீண்டும் புதுப்பொழிவுடன் பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது. வாரம் ஒரு மின்னூல் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது. 30.10.2010 முடிய 6100 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் ஆவண வகைகள், பகுப்புகள், பட்டியல்கள் என மூன்று பெரும் தலைப்புகளில் செயல்படுகிறது. ஆவண வகைகள் என்பதில் நூல்கள், சஞ்சிகைகள் பத்திரிக்கைகள், பிரசாரங்கள், ஆய்வேடுகள் என்னும் பகுப்புகள் உள்ளன. பகுப்புகள் என்பதில் எழுத்தாளர்கள், வெளியிட்ட ஆண்டு, பதிப்பகங்கள், நூல்வகை ஆகியவை இடம்பெற்றுள்ளன. பட்டியல்கள் என்ற மூன்றாவது தலைப்பில் நூறு எண்கள் கொண்ட தொகுப்புகளாக 6100 நூல்கள் உள்ளன. மேலும் பிற மின் நூல்கள் என்ற தேடலில் பிற நிறுவனங்களின் மின் நூல்களையும் இந்த நூலகம்.நெட்டில் காண முடிகிறது.

இந்திய மின்நூலகம் (Digital Library of India)

தமிழ் இணைய மாநாட்டுக் குழுவால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மின் நூலகமாகும். இதில் பலதரப்பட்ட நூல்களை மின்பதிவேற்றம் செய்துள்ளனர். ஞானாமிர்தம், வேதாந்த நூல்கள், சைவசித்தாந்த நூல்கள், சோதிட நூல்கள், குணவாகடம், ஜெகசிற்பியின் புதினங்கள், பயண இலக்கிய நூல்கள் என 223-தலைப்புகளில் நூல்களை மின்பதிப்பாக்கி வெளியிட்டுள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள நூல்கள் அனைத்தும் தமிழ் வாசகர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும்.

சென்னை நூலகம்

கோ. சந்திரசேகரன் என்கிற தனி நபர் எந்த அமைப்புகளின் துணையுமின்றி 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய மின் நூலகம் சென்னை நூலகம். இம்மின் நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை நூல்கள் உள்ளன. அதுவும் ஒருங்குறியில் இருக்கின்றன.
சில சங்க இலக்கிய நூல்களின் நூற்பா மட்டும் இடம்பெற்றுள்ளன. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுமையாக இத்தளத்தில் பார்வையிடலாம்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. யாப்பருங்கலக்காரிகை, நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருவுந்தியார் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. இவற்றை எண்கள் அடிப்படையில் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.

இவையன்றி கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, மு. வரதராசன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளும் இதில் கிடைக்கின்றன.

இம்மின் நூல்கள் அன்றி தெற்காசிய நூலகம் Digital South Asia Library என்ற பெயரில் சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருகின்றது www.dsal.uchicago.edu. மேலும் மலாயாப் பல்கலைக்கழக மின்னியல் நூலகமும் வெளிவருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஆய்விதழ் தமிழியல் - Journal of Tamil Studies இல் 1972 முதல் வெளியான ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்பரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழியல் என்ற பக்கத்தில் இதனைப் பார்க்கலாம். இதுவரை ournal of Tamil Studies இல் 76 இதழ்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் கடைசி 4 இதழ்கள் நீங்கலாக, அதாவது முதல் (001-September 1972) இதழ் தொடக்கம் எழுபத்திரண்டாவது (072 – December 2007) வரையிலான இதழ்களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

306 முதன்மைக் கட்டுரையாளர்களால் எழுதப்பட்ட 611 கட்டுரைகளும் 55 கட்டுரைப் பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடைசி 4 இதழ்களில் உள்ளடக்க அட்டவணை மட்டும் கிடைக்கும். 77-வது இதழ் வெளியாகும் போது 73 இதழின் கடடுரைகள் தரவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் துணை புரியும்.

மின்னியல் நூலகப் பயன்பாடு

1. நூலகத்திலிருந்து பெற விழையும் தகவல்களை, நூலகத்திற்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தே கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள இயலும்.
2. உலகில் எங்கு நூல்கள் உருவாகியிருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் நாம் அந்நூல்களை வாசிக்க இயலும்.
3. நூலகச் சாதனங்களை இரவல் பெறுவது போன்ற செயல்முறை மற்றும் சேவையை மேம்படுத்த உதவும்.
4. நூலகச் சாதனங்கள் பற்றிய தகவல்களை பயனீட்டாளர்கள் எளிதில் தெரியப்படுத்துவது.
5. பல உரையாசிரியர்களின் உரையை ஒரே நேரத்தில் ஒரே நூலுக்குப் பெற்றுக் கொள்ளுதல்.
6. நூல் இரவல் என்பது முற்றிலும் நிறுத்தம் பெறும்.