/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, August 19, 2011

தமிழ் மரபு அறக்கட்டளை

|2 comments
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. அஃது இன்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இன்றைய உலகை வெகுவிரைவாக கற்றுக்கொள்ள, அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள இன்று விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுத்த கொடை கணிப்பொறியும் அதனுடன் இணைந்த இணையமுமாகும். இந்த இணைகள்தான் இன்று அத்தனை பணிகளையும் எளிதாகவும் விரைந்தும் செய்து முடித்திட உதவுகின்றது.

இணையம் இன்று பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை என்பதற்கேற்ப அதன் பயன்பாடு வளர்ந்து உள்ளது. இஃது அலுவலகப் பணிகள், வணிகம், கல்வி என இதன் பணி அனைத்திலும் விரிகிறது அவற்றில் கல்விக்கான பணிகள் பல உள்ளன. அக்கல்விப் பணியில் தமிழ்மரபு அறக்கட்டளையின் பயன்பாடுகள் மிகவும் அதிகம்.

தமிழ்மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
வாழ்க்கையின் மரபுகளைத் தொகுத்து வெளியிடும் தரவுதளமாக இந்த தமிழ் மரபு அறக்கட்டளை விளங்குகிறது. காலத்தின் ஓட்டம் நெடுந்தொலைவுடையது. அதன் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், இன்றும் நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் மரபு பற்றிய எண்ணங்களை மக்களிடம் தக்க வைத்திருப்பதே ஆகும். மரபுகளை வாய்வழிச் சொல்லும் பழங்கதைகள், புராணக்கதைகள், சித்திரங்கள், ஓலைச்சுவடிகள், பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் காணமுடிகின்றது. இவைகளைப் பாதுகாக்கும் முயற்சியிலும் மீண்டும் மக்களிடம் இவற்றை அறிமுகப்படுத்தும் முனைப்புடனும் இந்த தமிழ்மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்மரபு அறக்கட்டளை உலகம் தழுவிய ஒரு அறக்கட்டளையாக விளங்குகிறது. பல்லாயிரமாண்டுகள் தொன்மையுள்ள தமிழ்மரபு இலக்கியம், கலைகள் எனப் பலவகைப்படுகிறது. இந்த மரபுச் செல்வங்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஏனைய புலம் பெயர் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் தமிழ்மரபு அறக்கட்டளை பழைய ஓலைச்சுவடிகளையும் அவற்றில் புதைந்துள்ள தமிழ் மரபுசார் வளங்களையும் பாதுகாத்து உலக மக்களுக்கு வழங்கும் பணியையும் செய்து வருகின்றது.
இச்செயல்பாடுகள் கணினி சார் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை இலகுவாக பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. ஒலி, ஒளி எழுத்து வடிவ முறைகளில் அவற்றை இலக்கப் பதிவாக்கி வெளியிட்டு வருகிறது. இன்றுள்ள இணையவசதியால் இக்கருத்து, காட்சிப் படங்களாக இருப்பதால் உலகத்தாரோடு மிக இலகுவாகப் பகிர்ந்துக்கொள்ள முடிகிறது.

உருவாக்கம்

“ஒரு முறை பின்பணிக்காலப் பொழுதில் நானும் முனைவர். கல்யாணந்தரமும் (மதுரைத் திட்டம்) சுபாஷினி ட்ரெம்மல் மரபு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். புதிதாக மலர்ந்திருக்கும் இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்ப் பூங்கா ஒன்று அமைக்க திட்டமிட்டோம். அதுவொரு பிரமாண்டமான திட்டம். தமிழின் அனைத்து மரபு செல்வங்களையும் இலக்க வடிவில் கொண்டுவந்து விடுவது என்பது திட்டம் (Digitization of Tamil Heritage Materials) இப்படிச் செய்யும் போது ஒரு சொடுக்கில் தமிழ் செல்வங்களை நுகர விரும்புபவர்களுக்கு அளித்த விடா முயற்சி. அது ஒரு கனவு. மெகா கனவு சந்திரனுக்கு இலக்கு வைத்தால்தான் வீட்டுக் கூரையாவது ஏறமுடியும் என்பது ஒரு கணக்கு. நாங்கள் இன்னும் சந்திரனில் கால் வைக்கவில்லை, கூரை ஏறி இருக்கிறோம், எல்லோரும் தோள் கொடுத்தால் ஒரு நாள் சந்திரனில் கால் வைக்கலாம்.”

என்று தமிழ் மரபு அறக்கட்டளை 2001-ல் தோன்றிய நிகழ்வை அதன் தலைவர் முனைவர். ந.கண்ணன் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் அனைவரும் கூடி செயல்படுவோம் என்று கூறியுள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இஃது அவரது பரந்த எண்ணத்தை வெளிக்காட்டுகிறது. தமிழ் இணையம் மாநாடு 2002-ல் அமெரிக்காவில் நடைப்பெற்ற போது தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

நாம் இந்த தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சென்றால் முன்பே கூறியுளளது போல் தமிழ் மரபு சார்ந்த நிகழ்வுகளையும், செய்திகளையும் காணலாம். www.tamilheritagefoundation.org என்ற இணைய முகவரிக்குள் சென்றால் முகப்பு பக்கம் தோன்றும். அந்த பக்கத்தில் ‘நுழைக’ என்ற பகுதியைச் சுட்டினால் தமிழ் மரபு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் வலது பக்கம் தோன்றும்.

1. எங்களைப் பற்றி அறிந்து கொள்ள…!
2. பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் தகவல்களை இங்கே…!
3. மேல் விவரங்களும் அதிக தமிழப் பக்கங்களும் முதுசொம் சாளரத்தில் உள்ளன.
4. தமிழகக் கோயில்களின் தல புரணங்கள்
5. கருணாகரன் நூல்நிலையம் தொடர்பான செய்திகள்
6. சுவடியியல் தொடர்பானவை
7. தமிழ் மரபு அறக்கட்டளையின் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி (CMS)
8. தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விளக்கி.

- என்னும் இவையில்லாமல் மரபுசேதி (Heritage News) மரபின் குரல் (Heritage Tunes) மரபுச்சுவடு Image Heritage தமிழ் நிகழ்கலை (Waiting Room) என்று பல பிரிவுகளும் இங்கு வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எங்களைப் பற்றி அறிந்த கொள்ள…! (தமிழ்மரபு அறக்கட்டளையின் தோற்றம் ஆண்டு)
இந்தப் பகுதியில் தமிழ்மரபு அறக்கட்டளையின் தோற்றம் தோற்றுவித்தவர்களான தலைவர், முனைவர். ந.கண்ணன் (தென்கொரியா), துணைத்தலைவர், திருமதி சுபாஷினி ட்ரெம்மல் (கணினிப் பொறியாளர், ஜெர்மனி) போன்றவர்கள் குறித்த தகவல்கள் இடம் இடம்பெற்றுள்ளன.

பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இங்கே …!

இந்தப் பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடர்பாக உலகில் எங்கெங்கு சென்று வந்திருக்கிறார்கள் என்கிற செய்தித்தாள், பத்திரிக்கையில் வந்த செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர். மேலும் சில தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

முதுசொம் சாளரம்

தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகள் உலகம் முழுவதும் வரவேற்கப்பட்டு வருகின்றன. தமிழ்மொழி அறிந்த அனைவரும் இத்தளத்தைச் சென்று பார்த்துப் பயன் பெறலாம். தமிழ் மொழிக்கும், தமிழர்களின் மரபிற்கும். எதிர்கால உலக மக்களுக்கும் நம்மால் இயன்ற பங்களிப்பை இத்தளங்களில் பதிவேற்றம் செய்து வைக்கலாம். இதனைக் கருத்தில் கொண்டு, பல தலபுராணங்களை ஒலி, ஒளி-படம் கொண்டு இப்பகுதியில் இணைத்துள்ளனர்.

தல புராணங்கள்

உலக இலக்கியங்களில், பண்பாடுகளில் தமிழ் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இலக்கண இலக்கியங்களும், புராணங்களும் ஆகும். அனைவராலும் அனைத்துக் கோயில்களுக்கும் (புண்ணியதலம்) சென்று வர இயலாது. ஆகையால் அவைகளை ஈடுகட்டத் தோன்றியவை தல புராணங்கள் ஆகும்.
இறைவன் வெவ்வேறு பிரதேசங்களில் பலவகைகளில் காட்சி தந்துள்ளான். இது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபாடு அடையும். காசி இராமேஸ்வரம் செல்ல இயலாதவர்களுக்குத் தத்தம் ஊர்களில் இருக்கும் இறைவன் சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுப்பது தலபுராணங்கள் மேலும் மெய்ஞானிகளுக்கு (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) அருள் மூலம் இறைவன் இறைக் காட்சிகளைக் காட்ட அவர்கள் ஒவ்வொரு சிற்றூர்க் கோயில்களுக்கும் சென்று தலபுராணங்கள் எழுதி வைத்துள்ளனர். அவைகளைத் தொகுத்தும் கொடுத்துள்ளார்கள்.
இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ள செய்தியைத் தொகுக்க ஆகும் செலவுகளை லண்டன் மாநகரில் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர். தண்டபாணி, அதே நாட்டில் தமிழ்ப்பணிச் செய்து வரும் திரு. சுவாமிநாதன் ஆகிய இருவரும் கொடுத்து உதவி வருகின்றனர் என்று இதன் தலைவர் ந. கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

சுவடியியல்

சுவடியியல் என்ற பகுதியில் நமது பழைய ஓலைச்சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்துள்ளனர். அச்சு இயந்திரம், தாள்கள் கண்டுபிடிக்காத காலத்தில் உலக அறிவை முழுவதும் தன்வயம் வைத்திருந்த தமிழர்கள் பனை ஓலைகளில் தங்கள் அறிவைப் பதிவு செய்து வைத்துள்ளனர். இவைகளில் 25 சதவிகிதம் மட்டுமே திரு. ஆறுமுகநாவலர். உ.வே.சா போன்றவர்களால் நூல் வடிவம் பெற்றுள்ளது. மீதம் இருக்கும் 75சதவிகித ஓலைச் சுவடிகளில் இருக்கும் அரிய கருத்துக்களை நூல் வடிவம் பெற இன்று சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் 21,000-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளைச் சுவடிப்புலம் Catalogue of Tamil paragraph manuscripts in Tamil University என்ற பெயரில் அட்டவணையினை வெளியிட்டுள்ளது. இவற்றை எத்தனை இலக்கிய ஆய்வளர்கள் கண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை? தகவல் தொடர்பு பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஏன் தமிழ்மொழியையும் அதில் ஏற்றி உலகறிய செய்ய முடியாது என்ற எண்ணம் இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவுதான் ‘சுவடிபுலம்’ என்ற பகுதி உருவாகியுள்ளது. தமிழர்களுக்குப் புத்துணர்ச்சியும், விழிப்புணர்வும் தந்துள்ளது. இப்பகுதியில் ஏடுகள் என்றால் என்ன? எத்தனை வகை ஏடுகள் உள்ளன, ஏடுகளை வாசிப்பது எப்படி? தமிழ் ஏடுகளின் நூலகங்கள் எங்குள்ளன? பல்கலைக் கழகங்கள் செய்யும் சீரிய முயற்சிகள் என்ன? (பாரதிதாசன் பல்கலைக்கழகம். ஓலைச்சுவடி தரவு) போன்ற வினாக்களுக்கான விடையை மின் படிவங்களாகவும், மின் உரைகளாகவும், மின் பேசும் படங்களாகவும், மின் இணைப்புகளாகவும், பார்வைக்கு அளித்துள்ளது. எனவே உங்கள் இல்லங்களில் அரிய ஏடுகள் இருந்தால் அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்குக் கொடுத்துத் தமிழ் வளர்ச்சிக்கு உதவலாம். மின் நகல் எடுத்துவிட்டு அதை உங்களிடமே மீண்டும் கொடுத்து விடுவார்கள். இதனால் தமிழின் பழமையை நீங்களும் அறிந்து கொள்வீர்கள் உங்களது அறிவையும் உலக மக்களோடு பகிர்ந்தும் கொள்வீர்கள்.

மரபு விக்கி

முதுசொம் சாளரத்தில் மரபு விக்கி என்ற பகுதியும் உள்ளது. இதில் நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரவர் துறை பற்றிய செய்திகளை அச்சாகவும். காட்சி ஒளி மூலமாகவும் தரலாம். இதற்கு நீங்கள் முதலில் தமிழ் மரபு அறக்கட்டளையில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவையும் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பேருதவி செய்து வருகின்றது.

I. மரபுச் சேதி (Heritage News)
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவரும். இதைத் திறமையாக செயல்படுத்த ஆர்வமுள்ள தமிழர்கள் சேதிக் குறிப்புகளை அனுப்புவதுடன், அவை இணையத்தில் எங்கேனும் வெளியாகியிருந்தால் அதன் தொடுப்பைக் (web link) கொடுத்து உதவலாம்.

II. மரபின் குரல் (Heritage Tunes)
முதுசொம் இசையரங்கம் என்றொரு வலைப்பக்கம் இயங்கி வருகிறது. அதை இன்னும் (interactive) ஊடாட வைப்பதே இவ்வலைப்பதிவின் நோக்கமாகும்.
1. உங்கள் வட்டார வழக்கு, பேச்சு இவைகளை இத்தளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். Voice Snap குழுவுடன் இணைந்து இதைச் செய்துள்ளொம்.
2. மழலைப் பாடல்களை பெரியோரோ, சிறுவர்களோ பாடிப் பதிவு செய்யலாம்,
3. இசைத் துக்கடா(Music Sample) வை இங்கு அனுப்பலாம்.
4. இலக்கிய உரைகளை அனுப்பலாம்.
5. உங்கள் கவிதை, உங்கள் நாவல் இவைகளை உங்கள் குரலில் காலத்தின் பதிவாக இங்கு நிரந்தரப்படுத்தலாம்.
6. தமிழின் அமுதம் போன்ற இசை இங்கு பிரவாகம் எடுக்கும் படி செய்யலாம். தமிழ் இசை என்பது பரந்த நோக்கில் ‘திராவிட இசை’ என்றே இங்கு பதிவாகிறது. எனவே தெலுங்கு, கன்னட, மலையாள, தமிழ் இசைப் பாரம்பரியம் இங்கு பதிவாகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
7. தமிழ் கிராமப்புற இசை பற்றிய பதிவுகள் அரிதாகவே உள்ளன. அவைகளை இங்கு சேகரம் செய்யலாம்.

III. மரபுச் சுவடு (Image Heritage)
படங்கள்! ஆகா! அவை சொல்லும் சேதிகள்தான் எத்தனை. அது கல்யாணக் காட்சியாக இருக்கலாம், குழந்தைப் பிறப்பாக இருக்கலாம். ஊர் தேர்த் திருவிழாவாக இருக்கலாம். பழைய படங்கள். தமிழக வீடுகள், தமிழக தெரு அமைப்பு தமிழகக் கோயில்கள், சிற்பங்கள்... அம்மம்மா! எத்தனை உள்ளன. அப்புகைப்படங்களை இங்கு தொடுப்பது நோக்கம். வேறொரு தளத்தில் அது இருந்தால், ஒரு தொடுப்பின் மூலம் அவைகளைக் இணைத்துவிட முடியும். மிக, மிக எளிய வழியில் நம் சுவடுகளை இங்கு பதிக்கலாம். புற உலகில் (வெளிநாட்டில்) தமிழ்க் கல்வி பயில்பவர்களுக்கு இம்மாதிரிப் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு தமிழ் இணைய மாநாட்டிலும் இதன் தேவை வலியுறுத்தப்படுகிறது.

IV. தமிழ் நிகழ் கலை (Waiting Room (Video Show))
ஒட்ட வைக்கும் (Embed) திறன் கொண்டு You Tube, Google Video மற்றும் பிற கிட்டங்களில் கிடக்கம் தமிழ் நிகழ்வு பற்றிய ஆவணங்களை மிக எளிதாக இங்கு சேர்த்து விடலாம். இங்கு அனுப்புங்கள் என்றால் யாரும் அனுப்ப மாட்டார்கள். ஆனால் கூகுளுக்கு அனுப்புவார்கள். எல்லோருக்கும் மேடையில் ஒளிவட்டத்தில் இருக்கவே ஆசை. அதைத்தான் இவ்வலைப்பூ செய்யப் போகிறது. அனுப்புவருக்கும் சிரமமில்லை. அவர்கள் பார்த்து. ரசித்த ஒரு வீடியோ கிளிப்பை எமக்கு ‘html tag’ ஆக அனுப்பினால் போதும். இந்த ஒட்டவைக்கும் திறன் கொண்டு நம் வீட்டு வீடியோ (புழக்கடை சினிமா - Garage Cinema) வையும் இங்கு வெளியிடலாம். ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் வீடியோ எடுக்கிறோம், படமெடுக்கிறோம், சிலர் பாட்டுக்களை பதிவு செய்வதுமுண்டு. அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். இது professional ஆக இருந்தாலும் வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கும் பிறருக்கும் அது ஏதோவொருவகையில் பயன்படும்.

உங்களிடம் அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை. ஒரு மின்னஞ்சல் (E.mail) அவ்வளவுதான். அம்மின்னஞ்சலில் மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் அனுப்பி விடலாம். ஊர் கூடி தேர் இழுக்க ஆசையா? எளிதாக இவ்வலைப்பதிவு இணை-ஆசிரியாராக நீங்கள் சேர்ந்து தொடர்ந்து பங்களிக்கலாம்.

வலைப்பூக்கள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் உட்பிரிவுகளில் மரபு சார்ந்த நிகழ்வுகளை வலைப்பூக்களில் வெளியிட்டு வருகிறது. மரபு அறக்கட்டளையின் சார்பாக நான்கு வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளில்

மரபுச் சேதி (Heritage Tunes)

இவ்வலைப்பூவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவருகின்றது.

படம் ( )
மரபின் குரல் (Heritage Tunes)
மின் தமிழ்

இஃது ஒரு இணையக்குழு என்று கூட கூறலாம். ஒத்தக் கருத்துடையவர்கள் இங்கு ஒன்று கூடி விவாதம் செய்து வருகின்றனர். சில கலந்துரையாடல்கள் வியக்க வைக்கின்றன. தமிழ் இலக்கணம், புதிய சொற்கள், இலக்கிய ஆய்வு, திருக்குறள் உரை, சைவ சித்தாந்த தத்துவ விளக்கம், வைணவத் தத்துவங்கள், ஆலய விளக்கம், பயணங்கள் குறித்த செய்திகள், பழமொழிகள், கலைகள், தமிழறிஞர்கள், தமிழ் தொடர்பான முக்கியச் செய்திகள் இசை, பிற கலைகள், இறை அனுபவம், பக்தி, என பல தலைப்புகளில் சிந்தனை ஓட்டத்தைத் தாங்கி ஒவ்வொரு நாளும் புதிய செய்திகளைக் கொண்டு வெளிவருகின்றது.

“அறிவை விரிவுசெய் அகன்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று கூறிய புரட்சிக்கவி பாரதிதாசனின் கூற்று நினைவில் கொள்ளத்தக்க வேண்டும். தமிழ்மொழியின் மரபுகளைக் காலத்திற்கேற்ப பாதுகாக்க வேண்டும் என்ற சீறிய எண்ணத்துடன் இத்தமிழ் மரபு அறக்கட்டளைத் தோன்றி அதில் எண்ணிலடங்கா இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் உலக மக்களின் பார்வைக்கும் அறிவுக்கும் விருந்தாக ஒளிப்படம் மூலம் எடுத்துக்காட்டி வருகிறன்றனர்.
மரபு அறக்கட்டளைத் தோற்றம், அதன் வளர்ச்சி முதுசொம் சாளரத்தின் பயன்கள், தலபுராண கதைகளை காட்சி படம் மூலம் விளக்கிக் காட்டியுள்ளன. சுவடியின் பயன், அதன் தரம் போன்றவைகளை தரவாரியாக, பொருள் வாரியாக, துறை வாரியாக பிரித்துக் கூறியுள்ளன.. மரபு விக்கி என்ற பகுதியில் துறைசார்ந்த கருத்துக்களை அவரவர் பதிவு செய்து வைக்கலாம் என்றும் நான்கு வலைப்பூக்களின் செய்தியும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மின் குழுமம் என்ற பகுதியும் இம்மரபு அறக்கட்டளையில் செயல்பட்டுவருகிறது. மொத்தத்தில் இதனைப் படிக்கும், பார்க்கும் தமிழர்கள் பல்வகைகளில் பயன்பெறுவார்கள் அதற்கு இந்த அறக்கட்ளையின் பணி மேலும் மேலும் வளர நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தமிழை உலக மொழிகளின் வரிசையில் முன்நிறுத்துவோம்.