/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, June 6, 2011

தமிழ் எழுத்துரு மாற்றிகள்

தமிழ் எழுத்துரு மாற்றிகள்எழுத்துருக்கள்

கணிப்பொறியும் இணையமும் அறிமுகமானக் காலச்சூழலில் உலகில் இருக்கும் தமிழ் அன்பர்கள் ஏதாவதொரு எழுத்துருவில் கருத்தைப் பதிவு செய்ய தொடங்கினார்கள். அன்று அஃது அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் பலர் ஒன்று கூடிக் கொண்டாடியுள்ளனர். நாளடைவில் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழ் நண்பர்கள் அவர்களுக்கு விருப்பப்பட்ட எழுத்துருவில் எழுதத் தொடங்கினர். இவ்வாறு எழுதியவர்கள் அவர்களுக்குள்ளேயே கருத்தைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு உலக நாடுகளில் இருக்கும் பலரும் அவர்களுக்குத் தெரிந்த பலவகையான எழுத்துருவை உருவாக்கினர். இது சுமார் 250 எழுத்துருவாக இன்று உள்ளன.

எழுத்துருப் பிரச்சனை

தொடக்கத்தில் தமிழ்மொழியில் பலவகையான எழுத்துரு தோன்றுவது தமிழுக்குப் பெருமையாக இருந்தது. அதுவே சில வேளையில் சிக்கலையும் தந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கச்சமங்கலம் என்னும் சிற்றூரில் பிரபாகரன் என்பவர் கணினியில் தட்டச்சு செய்து அதனை கலிபோர்னியாவில் வசிக்கும் நண்பருக்கு அனுப்புகிறார். அங்கு அவர் கணினியின் முன் அமர்ந்து நண்பர் அனுப்பிய மின் அஞ்சலை ஆர்வத்துடன் பார்க்கிறார். செய்தி அனைத்தும் கோடு கோடாக, கட்டம் கட்டமாக என்னவென்று திகைக்கின்றார; என்ன சிக்கல் என்றால் கச்சமங்கலத்திலிருந்து அனுப்பியச் தமிழ்ச் செய்தியானது ஒரு வகை உள்ளூர் எழுத்துரு (எடுத்துக்காட்டு. இளங்கோ, கம்பன்) இந்த எழுத்துரு கலிபோர்னிய நண்பர் கணிப்பொறியில் இல்லை. அவர் வேறொரு எழுத்துருவைப் பயன்படுத்துகிறார். இப்போது கலிபோர்னியா நண்பர் ஒரு செய்தியை பிரபாகரனுக்கு அனுப்புகிறார். இவர் தன் கணிப்பானைத் திறந்து பார்த்தால் அவருக்குத் தோன்றியது கட்டம் கட்டம், கோடு கோடாகத் தெரிகிறது.
இதற்குத் தீர்வு என்ன என்று யோசிக்கும் போதுதான் உலகத்திற்கெல்லாம் பொதுவான எழுத்துருவை நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே இதற்குத் தீர்வு என்று இருவரும் முடிவிற்கு வருகின்றனர். சரி இனி இருவரும் ஒரே எழுத்துருவில் கதைக்காலம், எழுதலாம். இதற்கு முன் அனுப்பிய வந்த செய்திகளைக் காண என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த வினா இருவருக்கும் தோன்றுகிறது. இதுபோன்று உலகில் இருக்கும் அனைத்துத் தமிழுருக்கும் தோன்றுகிறது. விளைவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு பொதுவான எழுத்துரு தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை (Unicode Font) உருவாக்குகின்றனர். இந்த ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு உலகம் முழுவதும் தமிழுக்கான எழுத்துரு பிரச்சனை ஓரளவு தீர்ந்தது.

எழுத்துரு மாற்றிகள்

ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு முன்பு கணினியில் உருவாக்கப்பட்ட பிற தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாற்ற என்ன செய்வது அல்லது ஒருங்குறியிலுள்ள எழுத்துக்களை பிற எழுத்துருக்களுக்கு மாற்ற வேண்டிய அவசியமும் உருவானது. இதற்கு எழுத்துரு மாற்றிகள் தேவைப்பட பல எழுத்துரு மாற்றிகளும் உருவாக்கப்பட்டன.

இப்படி உருவாக்கப்பட்ட பல எழுத்துரு மாற்றிகளை இணையத்தில் இலவசமாக நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான். நீங்கள் எந்த எழுத்துருவில் செய்தியை அடித்தாலும், அல்லது உங்களுக்கு வந்த செய்தியாயினும் அதனை உங்கள் கணினியில் உள்ள எழுத்துருவிற்கே மாற்றம் செய்து கொள்ளலாம் அல்லது ஒருங்குறிக்கு மாற்றி செய்தியைப் படித்துக் கொள்ளலாம். இதுபோன்று இணையத்தில் எண்ணற்ற எழுத்துரு மாற்றிகள் இலவசமாக இயங்குகின்றன. அப்படி சில எழுத்துரு மாற்றிகள் குறித்த தகவல்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

பொங்கு தமிழ் எழுத்துரு
தமிழ் எழுத்துரு மாற்றியின் தலைமகன் என்றே கூறலாம். ஏன் என்றால் பலர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால் பல எழுத்துரு பிரச்சனை ஆங்காங்கு ‘நீரு பூத்த நெருப்பு போல’ பரவியிருந்த நேரம் சுரதா யாழ்வாணன் என்பவரின் முயற்சியால் எந்த எழுத்துருவையும் ஒருங்குறி எழுத்துருவிற்கு ((Unicode Font)) மாற்றி விடலாம் என்ற புதிய மென்பொருளை கண்டுபிடித்ததுதான்.
எந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாது எழுத்துருவாக விருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளீடு செய்து கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களில் இருக்கும் எழுத்துருவைச் சுட்டினால் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்க முடியும். சுரதா யாழ்வாணன் இந்த எழுத்துரு மாற்றியைப் பற்றிக் கூறும்போது,

“யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்குப் பொங்குதமிழ் எனப் பெயரிடப்படுகிறது”

என்று கூறும்போது, சுரதாவின் தமிழ்ப்பற்றை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், இந்த தானிறங்கி எழுத்துருவைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய ஆவரங்கால் சீனிவாசனுக்கு எனது நன்றிகள் என்றும் கூறியுள்ளார்.
பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியில் 19-எழுத்துரு மாற்றிகள் செயல்முறையில் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்குறி எழுத்துருக்கு மாற்றிவிடும் வாய்ப்புடையவை. இது தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் இணைய இணைப்பின்றி சாதாரணமான நிலையிலும் இயங்கும்படி உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு எனச் சொல்லலாம்.

படம் – 1

அதியமான் எழுத்துரு மாற்றி

பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியைப் போன்று அதியமான் எழுத்துரு மாற்றியும் இலவசமாக இணையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த எழுத்துருவை உருவாக்கியவர் கோபி ஆவார். இவர் பொங்குதமிழ் எழுத்துருவை உருவாக்கிய சுரதா யாழ்வாணனை மேற்கோள் காட்டுகிறார். அதியமான் எழுத்துரு மாற்றியை உருவாக்க உறுதுணையாக இருந்தவர் என்றும் கூறுகிறார். மேலும் அமெரிக்காவில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் நா. கணேசனும் இந்த எழுத்துரு உருவாக்கத்திற்கு துணைப்புரிந்தனர் என்று கோபி நன்றி மறவாமல் தன் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எழுத்துரு மாற்றியினால் இணையத்தில் ஒருங்குறி (Unicode) எழுத்துருவை மட்டும் பல இயங்கு தளங்கள் (OS) செயலிகள் (application) ஆகியன எந்த எழுத்துருவையும் கணினியில் நிறுவாமாலேயே படிக்கின்ற வசதியைத் தருகின்றன மற்ற தகுதரங்களை (Encoding standards) பயன்படுத்தும் வலைத்தளங்களைப் படிக்க உரிய எழுத்துருக்களை நிறுவ வேண்டும். மேலும் “சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறவும் உரிமை மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயெ இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படிப்பதற்காகத்தான் இந்த எழுத்துரு மாற்றியை உருவாக்கியுள்ளேன்” என்று கூறுகிறார்.
இந்த மாற்றியில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் (TUNE) தமிழ் புதிய ஒருங்குறி தகுதரத்திலிருந்தும். TSCII தகுதரத்திலிருந்தும், ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்கலாம்.
இந்த எழுத்துரு மாற்றியினால் பத்துக்கும் மேற்பட்ட (திஸ்தி, டாம், டாப், TUNE, தினமணி, kalaham) எழுத்துருக்களை ஒருகுறியில் மாற்றி வாசிக்க முடியும்.

தமிழ் எழுத்துரு மாற்றி
இந்த எழுத்துரு மாற்றியும் பொங்குதமிழ், அதியமான் போன்ற நாம் வாசிக்க வேண்டிய செய்தியை இடதுபுறம் உள்ள கட்டத்தில் கொண்டு வந்து நிறுவிய பின் மேலே உள்ள எழுத்துருவான திஸ்கி, டாம், ரொமைனஸ்டு, அஞ்சல், மயிலை, முரசொலி, தினதந்தி பாமினி, டாம், பூமி, தினகரன், நக்கீரன், தினமணி என்ற பதிமூன்று எழுத்துருக்களையும் ஒருங்குறியில் மாற்றிக் கொள்ள முடியும்.

சிலம்பம் தமிழ் எழுத்துரு மாற்றி
ஒருங்குறி முறையில் எழுத்துருவை மாற்றிக் கொடுக்கும் செயலியாகும். இந்த எழுத்துரு மாற்றியில் பாமினி, தமிங்கிலிஸ் எழுத்துருவை ஒருங்குறி எழுத்துருக்களாக மாற்றிக் கொடுக்கின்றன.

இஸ்லாம் கல்வி எழுத்துரு மாற்றி
பாமினி முதல் ஒருங்குறி எழுத்துரு மாற்றி என இயங்கும் இந்த எழுத்துரு மாற்றி பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிரதவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் என்னும் எழுத்துருக்களை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை ஒருங்குறிக்கு மாற்றும் செயலியாகும். அப்படி மாற்றும் போது சில சின்ன சின்ன தடங்கள், இடையூறு இருந்து வந்தன எ.கா. தொடரி (,), முற்றுப்புள்ளி(.) போன்றவை இடம் பெறமால் இருந்து வந்துள்ளன. ஆனால் இந்த எழுத்துரு மாற்றியின் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. பாமினி-ஒருங்குறி எழுத்துரு மாற்றியும் சுரதாவை முன்னோடியாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

என்.எச்.எம் எழுத்துரு மாற்றி
பத்ரி சேசாத்திரி என்பவரால் தொடங்கப்பட்ட நியூ ஹாரிசன் மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் வாயிலாக நாகராஜன் எனும் மென்பொருள் உருவாக்குனரால் உருவாக்கப்பட்ட எழுத்துரு மாற்றி வழியாக தமிழ் உட்பட சில இந்திய மொழிகளிலும் இயங்கும் ஒரு மென்பொருளாகும். இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்வதுடன் நம் கணினியில் நிறுவிக் கொண்டால் நாம் குறிப்பிட்ட சில எழுத்துருக்களுக்கு இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.
பிற எழுத்துரு மாற்றிகள் ஒரு எழுத்துருவிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றம் செய்ய உதவுகின்றன. ஆனால் இந்த எழுத்துரு மாற்றி ஒருங்குறியிலிருந்து பிற எழுத்துருக்கு மாற்றம் செய்து கொள்ள உதவுகிறது. இதனால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

படம் – 6

எழுத்துரு மாற்றிகளின் நன்மைகள்

இது போன்ற தமிழ் எழுத்துரு மாற்றிகளால் பல நன்மைகள் நம் தமிழ் மொழிக்கு கிடைத்துள்ளன.

1. தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட இணைய தளங்கள் பல்வேறு எழுத்துருக்களைக் கொண்டு வெளிவந்தன. ஆனால் இன்று பெரும்பான்மையான இணைய தளங்கள், வலைப்பூக்கள் ஆகியவை ஒருங்குறி முறையில் செயல்பட்டு வருகின்றன. எனவே பழைய தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட தளங்களிலுள்ள செய்திகளை மீட்டுருவாக்கம் செய்ய இந்த எழுத்துரு மாற்றிகள் பெரிதும் பயன்படுகின்றன.
2. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்து தமிழ் நூல்களும் டாம், டாப், திஸ்கி எழுத்துருவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தும் ஒருங்குறிக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டன.
3. தற்போது ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் உலகில் பலவேறு பகுதியிலுள்ள இணையப் பயன்பாட்டாளர்கள் இந்த எழுத்துரு மாற்றிகளின் உதவியுடன் பல தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட தளங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படித்துத் தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

3 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்